search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரெயில்வே துறை
    X
    ரெயில்வே துறை

    ரெயில்களில் பயணிகள் கட்டண வருவாய் ரூ.400 கோடி சரிவு

    ரெயில்களில் பயணிகள் கட்டணம் மூலம் கிடைக்கும் வருவாய் ரூ.400 கோடி குறைந்துள்ளது. அதே சமயத்தில், சரக்கு கட்டண வருவாய் ரூ.2 ஆயிரத்து 800 கோடி அதிகரித்துள்ளது.
    புதுடெல்லி:

    மத்தியபிரதேசத்தை சேர்ந்த சந்திரசேகர் கவுர் என்பவர் தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம், ரெயில்வேக்கு கிடைத்த கட்டண வருமானம் குறித்து கேள்வி எழுப்பி இருந்தார்.

    அதற்கு ரெயில்வே நிர்வாகம் பதில் அளித்துள்ளது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    இந்த நிதியாண்டில், ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரையிலான முதலாவது காலாண்டில், ரெயில்களில் பயணிகள் கட்டணம் மூலம் ரூ.13 ஆயிரத்து 398 கோடியே 92 லட்சம் வருவாய் கிடைத்தது.

    2-வது காலாண்டில் (ஜூலை-செப்டம்பர்) இந்த வருவாய் ரூ.13 ஆயிரத்து 243 கோடியே 81 லட்சமாக குறைந்தது. 3-வது காலாண்டில் (அக்டோபர்-டிசம்பர்) ரூ.12 ஆயிரத்து 844 கோடியே 37 லட்சமாக சரிந்துள்ளது. அதாவது, முந்தைய காலாண்டை விட வருவாய் சுமார் ரூ.400 கோடி வீழ்ச்சி அடைந்துள்ளது.

    அதே சமயத்தில், சரக்கு கட்டண வருவாய் அதிகரித்துள்ளது. நடப்பு நிதியாண்டின் முதலாவது காலாண்டில், சரக்கு கட்டண வருவாய் ரூ.29 ஆயிரத்து 66 கோடியே 92 லட்சமாக இருந்தது. 2-வது காலாண்டில், ரூ.25 ஆயிரத்து 165 கோடியே 13 லட்சமாக சரிந்தது. ஆனால், 3-வது காலாண்டில் ரூ.28 ஆயிரத்து 32 கோடியே 80 லட்சமாக அதிகரித்துள்ளது. இது, முந்தைய காலாண்டை விட சுமார் ரூ.2 ஆயிரத்து 800 கோடி அதிகமாகும்.

    சரக்கு கட்டணத்தில் ஏற்பட்ட வீழ்ச்சியை சரிக்கட்ட ரெயில்வே நிர்வாகம் எடுத்த நடவடிக்கைகள் காரணமாக வருவாய் உயர்ந்துள்ளதாக அதில் கூறப்பட்டுள்ளது.

    நிர்மலா சீதாராமன்

    இதற்கிடையே, மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன், 2020-2021 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை பிப்ரவரி 1-ந் தேதி தாக்கல் செய்கிறார். அதன் ஒரு அங்கமாக, ரெயில்வே பட்ஜெட்டும் இடம்பெறுகிறது.

    ரெயில்வே பட்ஜெட்டில், ரெயில்வேக்கான மூலதன செலவினத்துக்கு அதிக நிதி ஒதுக்கப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. தேஜஸ், வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் பிரிவில் புதிய ரெயில்கள் அறிவிக்கப்படும் என்று தெரிகிறது.

    புத்தாண்டு தினத்தில் இருந்து பயணிகள் கட்டணம் ஒரு காசில் இருந்து 4 காசுவரை உயர்த்தப்பட்டது. இருப்பினும், ரெயில்வே பட்ஜெட்டில், சரக்கு ரெயில் கட்டணம் குறைக்கப்படும் என்று தெரிகிறது.

    இதுகுறித்து ரெயில்வே வாரிய தலைவர் வினோத் யாதவ் கூறுகையில், ‘‘சரக்கு கட்டணம் ஏற்கனவே அதிகமாக உள்ளது. இன்னும் நிறைய சரக்குகளை சாலைமார்க்கத்தில் இருந்து ரெயில்வேக்கு இழுக்க விரும்புகிறோம். எனவே, சரக்கு கட்டணத்தை குறைப்போம்‘‘ என்றார்.

    ரெயில் நிலையங்களை நவீனமயமாக்குதல், பயணிகளுக்கு சிறப்பான வசதிகளை செய்து தருதல் உள்ளிட்ட பணிகளில் தனியாரின் பங்களிப்பை அதிகரிப்பது பற்றி ரெயில்வே பட்ஜெட்டில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    Next Story
    ×