search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நிர்பயா வழக்கில் தூக்குத் தண்டனை பெற்ற குற்றவாளிகள்
    X
    நிர்பயா வழக்கில் தூக்குத் தண்டனை பெற்ற குற்றவாளிகள்

    நிர்பயா வழக்கில் அடுத்தடுத்த தடைகள்... கருணை மனு நிராகரிப்பை எதிர்த்து குற்றவாளி மனு தாக்கல்

    நிர்பயா வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகளுக்கு தண்டனையை நிறைவேற்றுவதில் அடுத்தடுத்து சட்ட ரீதியான தடைகளை உருவாக்கி வருகின்றனர்.
    புதுடெல்லி:

    நிர்பயா வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட 4 குற்றவாளிகளுக்கும் பிப்ரவரி 1-ம் தேதி தண்டனையை நிறைவேற்ற உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்கான பணிகள் நடைபெற்று வரும் நிலையில், குற்றவாளிகளில் அக்சய் குமார் சிங், பவன் குமார் சிங் ஆகியோர் சார்பில் டெல்லி பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றத்தில் புதிய மனு  தாக்கல் செய்யப்பட்டது. 

    கருணை மனு மற்றும் மறுசீராய்வு மனுக்கள் தாக்கல் செய்வதற்கு போதிய ஆவணங்களை டெல்லி திகார் சிறை நிர்வாகம் வழங்காமல் தாமதிப்பதாக கூறி இந்த மனுவை அவர்கள் தாக்கல் செய்திருந்தனர். அந்த மனுக்களை நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

    உச்ச நீதிமன்றம்

    இந்நிலையில், குற்றவாளிகளில் ஒருவரான முகேஷ் குமார் சிங், தனது கருணை மனுவை ஜனாதிபதி நிராகரித்ததை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் புதிய மனுவை தாக்கல் செய்துள்ளார். 

    முகேஷ் குமார் சிங்கின் கருணை மனுவை ஜனாதிபதி கடந்த 17-ம் தேதி நிராகரித்து உத்தரவிட்டார். இது தொடர்பாக நீதித்துறை மறுஆய்வு செய்யக்கோரி இந்த மனுவை, அவரது வழக்கறிஞர் விருந்தா குரோவர் தாக்கல் செய்துள்ளார். 

    சத்ருகன் சவுகான் வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் அடிப்படையில், கருணை மனுவை நிராகரித்த விதம் குறித்து நீதித்துறை மறுஆய்வுக்காக 32வது சட்டப்பிரிவின் மனு தாக்கல் செய்யப்பட்டிருப்பதாக வழக்கறிஞர் விருந்தா குரோவர் கூறியுள்ளார்.

    இந்த மனு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு ஏற்கப்படுவது சந்தேகம்தான். ஆனால், இதுபோன்று அடுத்தடுத்த மனுக்களை தாக்கல் செய்வதன் மூலம், தண்டனையை நிறைவேற்ற விடாமல், சட்ட ரீதியான தடைகளை ஏற்படுத்த முயற்சிப்பதாகவே தெரிகிறது.  

    4 குற்றவாளிகளில் முகேஷ் மட்டுமே கருணை மனு தாக்கல் செய்து, அது நிராகரிக்கப்பட்டுள்ளது. மற்ற மூவரும் அந்த வாய்ப்பை இன்னும் பயன்படுத்தவில்லை. அவர்களில் 2 பேருக்கு மறுசீராய்வு மனு தாக்கல் செய்வதற்கான சட்ட வாய்ப்பும் உள்ளது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×