search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டெல்லி முதல்-மந்திரி கெஜ்ரிவால்
    X
    டெல்லி முதல்-மந்திரி கெஜ்ரிவால்

    டெல்லியில் 15 லட்சம் வாகனங்கள் ஓடவில்லை: முதல்-மந்திரி கெஜ்ரிவால் தகவல்

    டெல்லியில் அரசின் வாகன கட்டுப்பாட்டு திட்டத்தால் 15 லட்சம் கார்கள் இயங்கவில்லை என்று முதல்-மந்திரி கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
    • காற்று மாசை கட்டுப்படுத்த டெல்லியில் வாகன கட்டுப்பாட்டு திட்டம்
    •  வாகன கட்டுப்பாடு திட்டத்தில் டெல்லியில் 15 லட்சம் வாகனங்கள் இயங்கவில்லை
    • இந்த வி‌ஷயத்தில் பா.ஜனதா அரசியல் செய்வதாக கெஜ்ரிவால் குற்றச்சாட்டு

    புதுடெல்லி:

    டெல்லியில் காற்று மாசு மிகவும் அதிகமாக உள்ளது. காற்று மாசுவை கட்டுப்படுத்த அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

    இந்த நிலையில் வாகன கட்டுப்பாடு திட்டத்தில் டெல்லியில் 15 லட்சம் வாகனங்கள் இயங்கவில்லை என்று முதல் - மந்திரி கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    டெல்லியில் காற்று மாசு அபாய அளவில் உள்ளது. இந்த மாசுவை தடுக்க டெல்லி அரசு அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருகிறது.

    இதற்கு டெல்லி மக்கள் ஆதரவு அளித்தனர். பக்கத்து மாநிலங்களில் பயிர்க்கழிவுகள் எரிக்கப்படுவதால் டெல்லியில் சில நாட்களாக காற்று மாசு மிகவும் அதிகரித்துள்ளது.

    டெல்லியில் 30 லட்சம் கார்கள் பயன்பாட்டில் உள்ளன. அரசின் வாகன கட்டுப்பாட்டு திட்டத்தால் 15 லட்சம் கார்கள் இயங்கவில்லை. வருகிற 15-ந்தேதிவரை 15 லட்சம் கார்களே டெல்லி சாலைகளில் பயணிக்கும்.

    இது காற்று மாசுவை பெருமளவில் குறைக்க உதவும். இந்த வாகன கட்டுப்பாட்டு திட்டத்துக்கு மக்கள் முழு ஆதரவு அளித்து உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

    கோப்புப்படம்

    டெல்லியில் டெங்கு நோயின் தாக்கத்தை குறைத்தது போல இந்த வாகன கட்டுப்பாட்டு திட்டம் மூலம் காற்று மாசுவின் அளவையும் டெல்லி அரசு குறைத்து விடும். இந்த வி‌ஷயத்தில் பா.ஜனதா அரசியல் செய்வது துரதிருஷ்டவசமானது.

    டெல்லியில் வாழும் 2 கோடி மக்கள் இந்த வாகன கட்டுப்பாட்டு திட்டத்தை ஆதரிக்கும் போது சில பா.ஜனதா தலைவர்கள் இதை குழப்பும் வகையில் நடந்து கொள்வது தவறாகும்.

    இந்த திட்டம் சரியான முறையில் அமல்படுத்தப்பட்டுள்ளதா என்பது குறித்து ஆய்வு செய்வேன். பஸ் சேவைகள் குறைவாக உள்ள வழித்தடங்களில் சேவைகள் அதிகரிக்கப்படும்.

    இவ்வாறு கெஜ்ரிவால் கூறியுள்ளார்.
    Next Story
    ×