search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பரூக் அப்துல்லா மற்றும் பிரதமர் மோடி
    X
    பரூக் அப்துல்லா மற்றும் பிரதமர் மோடி

    வீட்டுக்காவலில் உள்ள பரூக் அப்துல்லாவிற்கு பிறந்தநாள் வாழ்த்து கடிதம் அனுப்பிய பிரதமர் மோடி

    காஷ்மீரில் பொது பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு வீட்டுக்காவலில் உள்ள பரூக் அப்துல்லாவிற்கு பிரதமர் மோடி பிறந்தநாள் வாழ்த்து கடிதம் அனுப்பியுள்ளார்.
    ஸ்ரீநகர்:

    காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து கடந்த ஆகஸ்ட் 5-ம் தேதி ரத்து செய்யப்பட்டது. அதற்கு முன்னதாக ஆகஸ்ட் 4-ம் தேதி இரவே அங்குள்ள முக்கிய அரசியல் தலைவர்கள் பரூக் அப்துல்லா, உமர் அப்துல்லா, மெகபூபா முப்தி உள்பட பலர் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டனர்.

    இதைதொடர்ந்து, ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல் மந்திரியும், மாநிலங்களவை உறுப்பினருமான பரூக் அப்துல்லா கடந்த செப்டம்பர் 16-ம் தேதி பொது பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். 

    இந்த சட்டத்தின் மூலம் அவரை விசாரணை எதுவும் இன்றி இரண்டு ஆண்டுகள் காவலில் வைத்திருக்க முடியும். இதற்கிடையில்,  கடந்த 21-ம் தேதி பரூக் அப்துல்லா தனது 82-வது வயதில் அடியெடுத்து வைத்தார்.

    இந்நிலையில், பிரதமர் மோடி வீட்டுக்காவலில் உள்ள பரூக் அப்துல்லாவிற்கு பிறந்த நாள் வாழ்த்து செய்தி அனுப்பியுள்ளார். ஸ்ரீநகரில் உள்ள பரூக் அப்துல்லாவின் வீட்டு முகவரிக்கு கடிதம் அனுப்பியுள்ள பிரதமர் மோடி அவர் ஆரோக்கியமாக பல ஆண்டுகள் வாழ பிரார்த்திப்பதாக தெரிவித்துள்ளார். 

    பிரதமர் மோடி பரூக் அப்துல்லாவிற்கு பிறந்தநாள் வாழ்த்து அனுப்பியுள்ள தகவலை ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டுக் கட்சியினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.

    இதற்கிடையில், வீட்டுக்காவலில் உள்ள பரூக் அப்துல்லாவிற்கு மேற்கு வங்காள முதல் மந்திரி மம்தா பானர்ஜியும் பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×