search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கன்யா சுமங்கலா திட்டம்
    X
    கன்யா சுமங்கலா திட்டம்

    தொட்டில் முதல் கல்லூரி வரை பெண்களுக்கு நிதியுதவி திட்டம் - உ.பி. முதல்வர் தொடங்கி வைத்தார்

    உத்தர பிரதேசம் மாநிலத்தில் பெண் குழந்தைகள் பிறந்ததில் இருந்து கல்லூரி படிப்பு வரை நிதியுதவி அளிக்கும் ’கன்யா சுமங்கலா’ திட்டத்தை முதல்வர் யோகி ஆதித்யாநாத் இன்று தொடங்கி வைத்தார்.
    லக்னோ:

    உத்தர பிரதேசம் மாநிலத்தில் பெண் குழந்தைகளின் நலனை பேணிக்காக்கும் வகையில் நிதியுதவி அளிக்கும் ’கன்யா சுமங்கலா’ திட்டம் நிதிநிலை அறிக்கையில் அறிமுகப்படுத்தப்பட்டது.

    இந்த திட்டத்தின்கீழ் பெண் குழந்தைகள் பிறந்ததும் 2 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும். பின்னர், ஒரு வயதுக்குள் அனைத்து வகையான தடுப்பூசிகள் போட்ட பின்னர் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும்.

    பள்ளியில் சேரும்போது முதல் வகுப்பின்போது 2 ஆயிரம் ரூபாய், 6-ம் வகுப்பில் சேரும்போது 2 ஆயிரம் ரூபாய், 9-ம் வகுப்பு செல்லும்போது 3 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும். பள்ளிக்கல்வியை நிறைவு செய்து கல்லூரி அல்லது பட்டயப்படிப்பில் சேரும்போது 5 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும்.

    கன்யா சுமங்கலா

    ஆக மொத்தத்தில் பிறந்தது முதல் கல்லூரி பருவம் வரை பெண் குழந்தைகளுக்கு 15 ஆயிரம் ரூபாய் நிதியுதவி அளிக்கும் வகையில் இந்த ’கன்யா சுமங்கலா’ திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

    இந்த திட்டத்தில் இணைய 2.82 லட்சம் பெண்கள் இதுவரை விண்ணப்பித்துள்ள நிலையில் பிறந்த குழந்தைகளுக்கான முதல் தவணை தொகையான 2 ஆயிரம் ரூபாய்க்கான காசோலைகளை பயனாளிகளுக்கு வழங்கி லக்னோ நகரில் இன்று நடைபெற்ற விழாவில் உ.பி. முதல் மந்திரி யோகி ஆதித்யாநாத்  ’கன்யா சுமங்கலா’ திட்டத்தை தொடங்கி வைத்தார்.

    இவ்விழாவில் மத்திய மகளிர் நல்வாழ்வுத்துறை மந்திரி ஸ்மிருதி இரானி, உ.பி. கவர்னர் ஆனந்திபென் பட்டேல், துணை முதல் மந்திரி தினேஷ் சர்மா மற்றும் மந்திரிகள், அரசு உயரதிகாரிகள் பங்கேற்றனர்.

    மந்திரிகள், கலெக்டர்கள் முன்னிலையில் அம்மாநிலத்தில் உள்ள 75 மாவட்டங்களிலும் இந்த திட்டம்  இன்று நடைமுறைப்படுத்தப்பட்டது.
    Next Story
    ×