search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஐக்கிய ஜனதா தளம்
    X
    ஐக்கிய ஜனதா தளம்

    கட்சியில் இருந்து விலகப்போவதாக 20 ஐக்கிய ஜனதா தளம் எம்.எல்.ஏ.க்கள் மிரட்டல்

    ஐக்கிய ஜனதாதளம் கட்சியை சேர்ந்த சுமார் 20 எம்.எல்.ஏ.க்கள் கட்சியை விட்டு விலகப்போவதாக மிரட்டல் விடுத்துள்ளனர். இது தேவேகவுடாவுக்கும், குமாரசாமிக்கும் பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

    பெங்களூர்:

    கர்நாடக சட்ட சபைக்கு கடந்த ஆண்டு நடந்த தேர்தலில் எந்த கட்சிக்கும் மெஜாரிட்டி கிடைக்காத நிலையில் 37 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றிருந்த மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி காங்கிரசுடன் சேர்ந்து ஆட்சி அமைத்தது.

    மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சித் தலைவர் தேவேகவுடாவின் மகன் குமாரசாமி முதல்-மந்திரியாக பதவி ஏற்றார். ஆனால் காங்கிரஸ் கொடுத்த இடையூறு காரணமாக கடந்த ஜூலை மாதம் அவர் பதவியை இழந்தார்.

    குமாரசாமி 2018-ம் ஆண்டு மே மாதம் 23-ந்தேதி முதல் கடந்த ஜூலை மாதம் 23-ந்தேதி வரை 14 மாதங்கள் மட்டுமே முதல்-மந்திரியாக இருக்க முடிந்தது. அவரது அணுகுமுறை பிடிக்காமல் ஐக்கிய ஜனதாதளம் கட்சி எம்.எல்.ஏ.க்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.

    அதனால்தான் கடந்த ஜூலை மாதம் அவரது ஆட்சியை கவிழ்க்க முயற்சி நடந்தபோது 3 ஐக்கிய ஜனதா தளம் எம்.எல்.ஏ.க்கள் தாமாக முன்சென்று ஆதரவு கொடுத்தனர். அவர்களை போன்று மற்ற எம்.எல்.ஏ.க்களும் அதிருப்தியில் இருப்பது தெரியவந்துள்ளது.

    இந்தநிலையில் ஐக்கிய ஜனதாதளம் கட்சியை சேர்ந்த சுமார் 20 எம்.எல்.ஏ.க்கள் கட்சியை விட்டு விலகப்போவதாக திடீர் மிரட்டல் விடுத்துள்ளனர். அவர்கள் குமாரசாமி மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறி வருகிறார்கள்.

     

    குமாரசாமி

    இதுகுறித்து அதிருப்தி எம்.எல்.ஏ.க்களில் ஒருவர் கூறுகையில், ‘‘ தேவேகவுடாவுடன் எங்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லை. ஆனால் கட்சி அவரது கட்டுப்பாட்டில் இல்லை. அவரது மகன்கள் கட்சியை சீர்குலைத்து வருகிறார்கள். எனவே கட்சியில் இருந்து விலகுவதை தவிர வேறு வழியில்லை’’ என்றார்.

    ஐக்கிய ஜனதாதளம் அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் 20 பேரில் சுமார் 10 பேர் பா.ஜனதா பக்கம் சேர பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள். சிலர் காங்கிரஸ் கட்சிக்கு செல்ல பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள்.

    இது தேவேகவுடாவுக்கும், குமாரசாமிக்கும் பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. நேற்று தேவேகவுடா அதிருப்தி எம்.எல்.ஏ.க்களை தனது வீட்டுக்கு அழைத்து பேசினார்.

    அவர் அதிருப்தி எம்.எல்.ஏ.க்களை நீண்ட நேரம் சமரசம் செய்து பேசினார். இதனால் சில எம்.எல்.ஏ.க்கள் மனம் மாறி இருப்பதாக கூறப்படுகிறது.

    இதையடுத்து தேவேகவுடா நேற்று பெங்களூரில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர், ‘ஐக்கிய ஜனதாதளம் கட்சியில் இருந்து ஒரு எம்.எல்.ஏ. கூட விலகமாட்டார்’ என்று தெரிவித்தார்.

    ஆனால் குமாரசாமி மீது அதிருப்தி நிலவுவதால் ஐக்கிய ஜனதாதளம் கட்சி எம்.எல்.ஏ.க்கள் தொடர்ந்து குற்றச்சாட்டுகளை கூறி வருகிறார்கள். இதனால் கர்நாடகாவில் 17 தொகுதி இடைத்தேர்தலுக்கு முன்பே ஐக்கிய ஜனதாதளம் கட்சி எம்.எல்.ஏ.க்களில் பெரும்பாலானவர்கள் வேறு கட்சிகளுக்கு ஓடிவிடுவார்கள் என்று பரபரப்பாக பேசப்படுகிறது

    Next Story
    ×