search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பிரதமர் நரேந்திர மோடி
    X
    பிரதமர் நரேந்திர மோடி

    தவறான கொள்கைகளால் நாட்டை நாசப்படுத்தியது காங்கிரஸ் - மோடி பாய்ச்சல்

    காஷ்மீருக்கு தற்காலிகமாக வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை நீக்காமல் போனது உள்ளிட்ட தவறான கொள்கைகளால் காங்கிரஸ் கட்சி நாட்டை நாசப்படுத்தி விட்டதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
    சண்டிகர்:

    அரியானா மாநில சட்டசபைக்கு வரும் 21-ம் தேர்தல் நடைபெறும் நிலையில் அம்மாநிலத்தில் இன்றுடன் பிரசாரம் ஓய்கிறது.

    இந்நிலையில், சிர்சா மாவட்டத்தில் இன்று நடைபெற்ற பாஜக பிரசார கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று பேசினார்.

    காஷ்மீருக்கு தற்காலிகமாக வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை நீக்காமல் போனது உள்ளிட்ட தவறான கொள்கைகளால் காங்கிரஸ் கட்சி நாட்டை நாசப்படுத்தி விட்டதாக பிரதமர் மோடி குற்றம்சாட்டினார்.

    அரசியலமைப்பு சட்டத்தின் 370-வது பிரிவின்படி முன்னர் காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து தற்காலிகமான ஒரு ஏற்பாடுதான். ஆனால், இந்த தற்காலிக சலுகை தொடர்பாக கடந்த 70 ஆண்டுகாலமாக காங்கிரஸ் கட்சி எதுவுமே செய்யவில்லை.

    டெல்லியில் இருந்த தூங்குமூஞ்சி அரசாங்கத்தால் காஷ்மீர் நிலைமை மேலும் மோசமடைந்தது. நம்மிடம் இருந்த ஒருபகுதி பறிக்கப்பட்டது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் என்ற பகுதி உருவானது.

    பின்னர், சூஃபி கலாச்சாரம் ஒழிக்கப்பட்டது. ஜம்மு-லடாக் பகுதிகளுக்கு இடையிலான ஆட்சியாளர்களின் பாரபட்சமான போக்கு தொடங்கியது. ஜம்மு, லடாக், கார்கில் பகுதிகளுக்கு இடையில் பாரபட்சக் கோடுகள் வரையப்பட்டன.

    அரியானா பிரசாரத்தில் பிரதமர் மோடி

    காஷ்மீர் பண்டிதர்கள் கொல்லப்பட்டனர். அவர்களின் மகள்கள் கற்பழிக்கப்பட்டனர்.  இதனால் 4 லட்சம் காஷ்மீர் பண்டிதர்கள் தங்களது இருப்பிடங்களை விட்டு வெளியேறும் நிலை ஏற்பட்டது.

    என்னை நீங்கள் ஐந்தாண்டுகளுக்கு நிரந்தரமான பதவியில் அமர்த்தியுள்ளபோது இந்த தற்காலிக ஏற்பாட்டை நான் இன்னும் அனுமதிக்க வேண்டும்? எனவே, இந்த தற்காலிக ஏற்பாட்டுக்கு நான் முற்றுப்புள்ளி வைத்தேன்.

    இதேபோல், இந்தியா-பாகிஸ்தான் பிரிவினையின்போது கர்தார் சாஹிப் குருத்வாராவை இந்தியாவுடன் இணைத்துக்கொள்ள முடியாமல் போன தவறுக்காக கடந்த 70 ஆண்டுகளாக இந்தியாவில் உள்ள சீக்கிய பக்தர்கள் இங்கிருந்தவாறு கர்தார் சாஹிப் குருத்வாராவை தொலைநோக்கி கருவிகள் மூலம் பார்த்து தரிசனம் செய்யும் நிலை ஏற்பட்டது.

    இப்படி தவறான பல கொள்கைகளால் நமது நாட்டை காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நாசப்படுத்தி விட்டதாக பிரதமர் மோடி குற்றம்சாட்டினார்.
    Next Story
    ×