search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நிதி மந்திரி நிர்மலா சீதாராமன்
    X
    நிதி மந்திரி நிர்மலா சீதாராமன்

    நாட்டின் தொழில்துறை உற்பத்தி புத்துயிர் பெறும்- நிதி மந்திரி நம்பிக்கை

    நாட்டின் தொழில்துறை உற்பத்தி புத்துயிர் பெறுவதற்கான அறிகுறிகள் பிரகாசமாக உள்ளதாக நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
    புதுடெல்லி:

    மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் இன்று டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது நாட்டின் தற்போதைய பொருளாதார சூழல், வளர்ச்சியை ஊக்குவிக்கும் நடவடிக்கைகள் குறித்து விளக்கினார். அவர் கூறியதாவது:-

    நாட்டின் பணவீக்கம் தற்போது கட்டுக்குள் உள்ளது. தொழில்துறையில் உற்பத்தி அதிகரித்து பொருளாதாரம் மீண்டு வருவதற்கான அறிகுறிகள் பிரகாசமாக தென்படுகின்றன.  

    வங்கிகள் கடன் வழங்குவதை அதிகரிப்பதற்கான  நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. ரிசர்வ் வங்கியின் வட்டி குறைப்பு பலனை நுகர்வோருக்கு வழங்க வங்கிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றன. உற்பத்திக்கு புத்துயிர் அளிப்பது தொடர்பாக வரும் 19ம் தேதி பொதுத்துறை வங்கிகளின் தலைவர்களை சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளேன்.

    ஏற்றுமதியை ஊக்குவிக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன. ஏற்றுமதி பொருட்கள் மீதான கட்டணங்களை நீக்க புதிய திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. ஏற்றுமதி துறையை ஊக்குவிக்கும் வகையில் துபாயில் நடப்பதைப் போன்று, 2020ம் ஆண்டு இந்தியாவில் மெகா ஷாப்பிங் விழா நடத்தப்படும்.

    டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த நிதி மந்திரி  நிர்மலா சீதாராமன்

    உற்பத்தி துறையில் ஏற்பட்டுள்ள சிறு சறுக்கலை சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தொழில் நடைமுறைகளை எளிதாக்க நடவடிக்கை எடுக்கப்படும். தொழில்துறைக்கு அதிக கடன்களை வழங்க பொதுத்துறை வங்கிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    வரிவிதிப்பு முறையில் சில சீர்திருத்தங்கள் கொண்டு வரப்பட உள்ளன.  குறைந்த அளவு வரி செலுத்துவோர் செய்யும் சிறு தவறுகளுக்காக தண்டிக்கப்படமாட்டார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×