search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாஜக
    X
    பாஜக

    காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து நீக்கம் - விழிப்புணர்வு பிரசாரம் நடத்துகிறது பா.ஜனதா

    காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து நீக்கம் குறித்து வருகிற 1 முதல் 30-ந் தேதி வரை நாடு முழுவதும் பா.ஜனதா கட்சியினர் விழிப்புணர்வு பிரசாரத்தில் ஈடுபடுகின்றனர்.
    புதுடெல்லி:

    அரசியல் சாசனம் 370-வது பிரிவின் கீழ் காஷ்மீருக்கு வழங்கப்பட்டு இருந்த சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு சமீபத்தில் நீக்கியது. இந்த நடவடிக்கையின் முக்கியத்துவம் குறித்து நாட்டு மக்களுக்கு விளக்குவதற்கு ஆளும் பா.ஜனதா முடிவு செய்துள்ளது. எனவே இது தொடர்பாக அனைத்து மாநிலங்களிலும் விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ள அந்த கட்சி திட்டம் வகுத்து உள்ளது.

    அதன்படி அடுத்த மாதம் (செப்டம்பர்) 1-ந் தேதி முதல் 30-ந் தேதி வரை இந்த பிரசாரத்தை பா.ஜனதாவினர் நடத்துகின்றனர். இதில் நாடு முழுவதும் 35 பெரிய நகரங்கள் மற்றும் 370 சிறிய நகரங்கள் தேர்வு செய்யப்பட்டு உள்ளன. காஷ்மீரிலும் பள்ளத்தாக்கு பகுதியில் 4 இடங்கள் உள்பட மொத்தம் 9 இடங்களில் இந்த பிரசாரம் நடக்கிறது.

    இந்த கூட்டங்களில் மத்திய மந்திரிகள், பா.ஜனதா ஆளும் மாநில முதல்-மந்திரிகள், துணை முதல்-மந்திரிகள், எம்.பி.க்கள், மாநிலங்களை சேர்ந்த மூத்த தலைவர்கள் பங்கேற்று 370-வது பிரிவு நீக்கம் குறித்து மக்களுக்கு விளக்குகின்றனர். இதில் சில கூட்டங்களில் பா.ஜனதா தலைவர் அமித்ஷா மற்றும் செயல் தலைவர் ஜே.பி.நட்டா ஆகியோரும் பங்கேற்பார்கள் என தெரிகிறது.

    இந்த பிரசார திட்டத்தை மத்திய மந்திரிகளான தர்மேந்திர பிரதான், கஜேந்திர சிங் செகாவத் ஆகியோர் நேற்று டெல்லியில் செய்தியாளர்களிடம் விளக்கினர்.

    இது தொடர்பாக தர்மேந்திர பிரதான் கூறும்போது, ‘நாட்டின் ஒருமைப்பாட்டுக்கு அரசியல் சட்டத்தின் 370-வது பிரிவு நல்லதல்ல என பா.ஜனதாவின் அனைத்து தலைமுறை தலைவர்களும் நம்புகின்றனர். இந்த பிரிவானது இந்திய ஒற்றுமைக்கு எதிரானது. எனவே இதை ரத்து செய்து வரலாற்று சிறப்புமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு இருக்கிறது’

    காஷ்மீர் தலைமை செயலகத்தில் தற்போது தேசிய கொடி ஏற்றப்பட்டு இருப்பதை சமூக வலைத்தளங்கள் மூலமாக பார்த்ததாக தெரிவித்த பிரதான், இந்திய சுதந்திரத்துக்கு பின் நாட்டின் அனைத்து பாகுபாடுகளும் நீங்கி ஒன்றிணைந்த ஒரு சில தருணங்களில், காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்ட தருணமும் ஒன்று எனவும் கூறினார்.

    பிரதமர் மோடி

    இதைப்போல கஜேந்திர சிங் செகாவத் கூறுகையில், ‘கடந்த 3 தலைமுறைகளாக மக்களிடம் ஒருவித வலி காணப்பட்டது. அதாவது ஒரே நாடு-ஒரே அரசியல்சாசன கனவு எப்போது நனவாகும்? என்ற ஏக்கம் நிறைந்திருந்தது. ஆனால் பிரதமர் மோடியின் உறுதியான விருப்பத்தால் அந்த கனவு தற்போது நனவாகியுள்ளது’ என்று தெரிவித்தார்.
    Next Story
    ×