search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரெயில்களில் ஓசி பயணம்- பரிசோதிக்கும் அதிகாரி
    X
    ரெயில்களில் ஓசி பயணம்- பரிசோதிக்கும் அதிகாரி

    ரெயில்களில் ‘ஓசி’ பயணம்- ரூ.1377 கோடி அபராதம் வசூல்

    ரெயில்களில் டிக்கெட் எடுக்காமல் பயணம் செய்தவர்களிடம் இருந்து கடந்த 3 ஆண்டுகளில் ரூ.1,377 கோடி அபராதம் வசூல் செய்யப்பட்டுள்ளது.
    புதுடெல்லி :

    ரெயில்களில் டிக்கெட் எடுக்காமல் ‘ஓசி’யில் பயணம் செய்து பிடிபடுபவர்களிடம் டிக்கெட் கட்டணத்துடன் குறைந்தபட்சம் ரூ.250 அபராதம் வசூலிக்கப்படுகிறது.

    அபராதத்தை செலுத்த மறுத்தாலோ அல்லது அபராதம் செலுத்த பணம் இல்லாவிட்டாலோ அத்தகைய நபர்கள் ரெயில்வே பாதுகாப்பு படையிடம் ஒப்படைக்கப்படுவார்கள். அவர்கள் ரெயில்வே சட்டத்தின் 137-வது பிரிவின்படி, வழக்கு பதிவு செய்து, அந்த பயணிகளை கோர்ட்டில் ஆஜர்படுத்துவார்கள். மாஜிஸ்திரேட், ஆயிரம் ரூபாய் அபராதம் அல்லது 6 மாதம்வரை ஜெயில் தண்டனை விதித்து உத்தரவிடுவார்.

    இதற்கிடையே, 2016-2017-ம் ஆண்டுக்கான ரெயில்வே நிதி அறிக்கையை ஆய்வு செய்த பாராளுமன்ற ரெயில்வே மரபு குழு, ரெயில்களில் டிக்கெட் எடுக்காமல் பயணம் செய்பவர்களால் வருவாய் இழப்பு ஏற்படுவதாக கவலை தெரிவித்தது.

    இதைத்தொடர்ந்து, டிக்கெட் பரிசோதனையை தீவிரப்படுத்துமாறு அனைத்து ரெயில்வே மண்டலங்களுக்கும் ரெயில்வே வாரியம் உத்தரவிட்டது. ஒவ்வொரு டிக்கெட் பரிசோதகருக்கும் அபராதம் வசூலில் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

    ரெயில்களில் ஓசி பயணம்

    இந்நிலையில், அபராத வசூல் குறித்து தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் மத்தியபிரதேசத்தை சேர்ந்த ஒருவர் கேட்ட கேள்விக்கு ரெயில்வே பதில் அளித்துள்ளது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    2016-2017 நிதியாண்டில், ரெயில்களில் ‘ஓசி’ பயணம் செய்தவர்களிடம் இருந்து ரூ.405 கோடியே 30 லட்சம் அபராதமாக வசூலிக்கப்பட்டது. 2017-2018-ம் நிதியாண்டில் ரூ.441 கோடியே 62 லட்சமும், 2018-2019-ம் நிதியாண்டில் ரூ.530 கோடியே 6 லட்சமும் அபராதமாக வசூலிக்கப்பட்டது. ஆக மொத்தம் 3 ஆண்டுகளில், ரூ.1,377 கோடி வசூலாகி உள்ளது. இது, முந்தைய 3 ஆண்டுகளை விட 31 சதவீதம் அதிகம் ஆகும்.

    கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் இருந்து கடந்த ஜனவரி மாதம்வரை, டிக்கெட் இன்றி பயணம் செய்த 89 லட்சம் பயணிகள் பிடிபட்டுள்ளனர்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    Next Story
    ×