search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சந்திரபாபு நாயுடு
    X
    சந்திரபாபு நாயுடு

    சந்திரபாபு நாயுடு வீட்டை ஆளில்லா விமானம் மூலம் படம் பிடித்த அதிகாரிகள்

    வெள்ள பாதிப்பை அறிய சந்திரபாபு நாயுடு வீட்டை ஆளில்லா விமானம் மூலம் படம் பிடித்த அதிகாரிகளை கண்டித்து தொண்டர்கள் தர்ணா போராட்டம் நடத்தினார்கள்.
    நகரி:

    ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு அமராவதியில் கிருஷ்ணா நதிகரையோரத்தில் உள்ள வீட்டில் வசித்து வருகிறார்.

    லிங்கனேரி ரமேஷ் என்பவருக்கு சொந்தமான இந்த பங்களாவில் 4 ஆண்டுகளாக வாடகைக்கு இருந்து வருகிறார்.

    இந்த நிலையில் மழை காரணமாக கிருஷ்ணா நதியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.

    இதனால் நதியோரத்தில் உள்ள சந்திரபாபு நாயுடு பங்களாவில் தண்ணீர் புகுந்தது. தரை தளத்தில் இருந்த அனைத்து பொருட்களையும் முதல் மாடிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வெள்ளம் அதிகளவு வந்ததால் சந்திரபாபு நாயுடு வீட்டை விட்டு வெளியேறி விமானம் மூலம் ஐதராபாத்துக்கு சென்றார்.

    அவரது வீட்டில் ஊழியர்கள், பாதுகாவலர்கள் மட்டும் தங்கி இருக்கின்றனர்.

    கிருஷ்ணா நதி கரையோரத்தில் உள்ள பல வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. அங்கிருந்த பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்னர்.

    இந்த நிலையில் சந்திரபாபு நாயுடு வீடு மற்றும் அந்த பகுதியில் கிருஷ்ணா நதிக்கரையோர வீடுகளில் வெள்ளத்தின் பாதிப்பை அறிவதற்காக அந்த பகுதிகளை ஆளில்லா விமானம் மூலம் அதிகாரிகள் படம் பிடித்தனர்.

    அங்கு தங்கியிருக்கும் பாதுகாவலர்களையும், ஊழியர்களையும் பத்திரமாக வெளியேற்றுவதற்காக மாநில மந்திரிகள் சத்திய நாராயணா, அனில்குமார் யாதவ், வெல்லம்பள்ளி ஸ்ரீனிவாஸ் ஆகியோரும், அதிகாரிகள் மற்றும் போலீசாரும் அங்கு சென்றனர்.

    இதை அறிந்ததும் முன்னாள் மந்திரி உமா மகேஸ்வரராவ் மற்றும் தெலுங்கு தேசம் கட்சி தொண்டர்கள் அங்கு விரைந்து சென்றனர். அவர்கள் சந்திரபாபு நாயுடு வீட்டை படம் பிடிக்க எதிர்ப்பு தெரிவித்தனர்.

    இசட் பிளஸ் பாதுகாப்பில் உள்ள முன்னாள் முதல்-மந்திரியின் வீட்டை எப்படி படம் பிடிக்கலாம் என்று கேட்டு தர்ணா போராட்டம் நடத்தினார்கள்.

    வெள்ள பாதிப்பை அறியவே கேமராவால் படம் பிடிப்பதாகவும், சந்திரபாபு நாயுடுவின் வீட்டில் உள்ள ஊழியர்களை பத்திரமாக வெளியேற்றி பாதுகாப்பான இடத்துக்கு அழைத்து செல்வதற்காக வந்திருப்பதாகவும் தெரிவித்தனர்.

    இதனை தெலுங்கு தேசம் கட்சித் தொண்டர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.

    Next Story
    ×