search icon
என் மலர்tooltip icon

  செய்திகள்

  மழை வெள்ளத்தில் சிக்கிய மக்களை 3 படகுகள் மூலம் ராணுவ வீரர்கள் மீட்டு செல்லும் காட்சி.
  X
  மழை வெள்ளத்தில் சிக்கிய மக்களை 3 படகுகள் மூலம் ராணுவ வீரர்கள் மீட்டு செல்லும் காட்சி.

  குடகில் நிலச்சரிவு-வெள்ளப்பெருக்கில் சிக்கி ஒரே நாளில் 9 பேர் பலி

  கர்நாடகத்தில் பெய்து வரும் தொடர் கனமழையால் குடகு மாவட்டத்தில் ஒரே நாளில் மழைக்கு 9 பேர் பலியானார்கள். மேலும் 8 பேரை காணவில்லை.
  பெங்களூரு :

  கர்நாடகத்தில் தென்மேற்கு பருவமழை கடந்த 10 நாட்களுக்கும் மேலாக வெளுத்து வாங்கி வருகிறது.

  தொடக்கத்தில் 2 மாதங்கள் முழுமையான அளவில் மழை பெய்யாத நிலையில் ஆகஸ்டு மாதம் தொடங்கியதில் இருந்து கனமழை கொட்டி வருகிறது. வட கர்நாடகத்தில் பெய்த கனமழையால் பெரும்பாலான அணைகள் நிரம்பிவிட்டன.

  மராட்டிய மாநிலத்தில் உள்ள கொய்னா அணையில் இருந்து அதிகளவில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் பெலகாவியில் ஓடும் கிருஷ்ணா ஆற்றில் அபாய கட்டத்தை தாண்டி வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. கர்நாடகத்தில் மழைக்கு நேற்று முன்தினம் வரை 10 பேர் மரணம் அடைந்தனர். இதில் பெலகாவியை சேர்ந்தவர்கள் மட்டும் 6 பேர் ஆவார்கள். வட கர்நாடகத்தில் மழையின் தாக்கம் இன்னும் குறையவில்லை. இதனால் அந்த பகுதியில் நூற்றுக்கணக்கான கிராமங்கள் தண்ணீர் தத்தளித்து வருகின்றன.

  அந்த கிராமங்களை சேர்ந்த மக்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டு, நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். கனமழையால், அம்பேவாடி என்ற கிராமம் தண்ணீரில் மூழ்கியது. அந்த கிராமங்களை சேர்ந்த மக்கள், தண்ணீரில் தத்தளித்தப்படி தப்பி வந்து நிவாரண முகாம்களில் தஞ்சம் அடைந்துள்ளனர்.

  முதல்-மந்திரி எடியூரப்பா நேற்று முன்தினம் பெலகாவி மாவட்டத்தில் சுற்றுப்பயணம் செய்து, மழையால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளை நேரில் ஆய்வு செய்தார். நிவாரண பணிகளை விரைவுபடுத்தும்படி அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார். இந்த நிலையில் எடியூரப்பா நேற்று பாகல்கோட்டை மாவட்டத்தில் சுற்றுப்பயணம் செய்தார்.

  அங்கு ஹெலிகாப்டரில் பறந்து சென்று, மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்தார். இந்த நிலையில் அதே மாவட்டத்தில் உள்ள மல்லபிரபா ஆற்றின் குறுக்கே அமைக்கப்பட்டிருந்த ஒரு பாலம், சீறிப்பாய்ந்த வெள்ளத்தில் சிக்கி உடைந்து விழுந்தது. மேலும் அங்கு பாதாமி தாலுகாவில் உள்ள வரலாற்று சிறப்பு மிக்க சுற்றுலா தலமான பட்டதகல்லு கிராமம் வெள்ளத்தில் மூழ்கியது. மல்லபிரபா ஆறு, கிருஷ்ணா ஆற்றின் துணை ஆறு ஆகும்.

  அந்த மல்லபிரபா ஆற்றில் தற்போது அபாய மட்டத்தை மீறி வெள்ளம் பாய்ந்தோடுகிறது. இதனால் அந்த ஆற்றின் படுகையில் உள்ள கிராமங்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளன. அங்கிருந்து மக்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு தேவையான உணவு, உடை, மருத்துவ வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன.

  இந்த நிலையில் கொய்னா அணையில் இருந்து நேற்று 4 லட்சம் கனஅடி நீர் பெலகாவி கிருஷ்ணா ஆற்றிற்கு வந்து கொண்டிருந்தது. அதே அளவுக்கு தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. கிருஷ்ணா அணையின் மேல் பகுதியில் அதாவது மராட்டிய மாநில எல்லையில் மழை குறைந்துள்ளதால், கிருஷ்ணா ஆற்றிற்கு வரும் தண்ணீரின் அளவு படிப்படியாக குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

  கதக் மாவட்டத்திலும் கனமழை பெய்து வருகிறது. மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்ய அந்த மாவட்டத்தை சேர்ந்த காங்கிரஸ் மூத்த தலைவர் எச்.கே.பட்டீல் எம்.எல்.ஏ. அங்கு சென்றார். அப்போது அவரது காரை வெள்ளம் சூழ்ந்ததால் அவர் அங்கிருந்து நகர முடியாத நிலை ஏற்பட்டது. இதுபற்றி அவர் முதல்-மந்திரி எடியூரப்பாவை செல்போனில் தொடர்பு கொண்டு பேசி, தனது நிலை குறித்து தெரிவித்தார்.

  எடியூரப்பா உத்தரவின்பேரில் கதக் போலீசார் விரைந்து வந்து எச்.கே.பட்டீலை மீட்டு அந்த வழியாக வந்த ஒரு சரக்கு ரெயிலை நிறுத்தி, அதில் எச்.கே.பட்டீலை ஏற்றி விட்டனர். இதனால் அவர் ஆபத்தில் இருந்து தப்பித்து வந்தார். இந்த சம்பவத்தால் எச்.கே.பட்டீல் அதிர்ச்சி அடைந்தார்.

  தார்வார், கதக் உள்ளிட்ட மாவட்டங்களில் நேற்று முன்தினம் இரவு கனமழை கொட்டியது. சிவமொக்காவில் ஜோக் நீர்வீழ்ச்சி அருகே மண்சரிவு ஏற்பட்டது. குடகு மாவட்டம் பாகமண்டலா அருகே உள்ள கோரங்காலாவில் நிலச்சரிவு ஏற்பட்டு, 5 பேர் மண்ணில் புதைந்து மரணம் அடைந்தனர். இதில் யஷ்வந்த், பாலகிருஷ்ணா, யமுனா, முத்தையா ஆகிய 4 பேரின் உடல்களை மீட்பு குழுவினர் மீட்டனர். ஒருவரின் உடலை தேடும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது. மேலும் கோரங்காலாவில் உள்ள தரைமட்ட பாலத்தை மோட்டார் சைக்கிளில் சென்ற 2 பேர் கடக்க முயன்றனர். அப்போது பாலம் உடைந்து விழுந்து மோட்டார் சைக்கிளுடன் அவர்கள் இருவரும் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டனர்.

  அவர்களின் கதி என்ன ஆனது என்று தெரியவில்லை. அவர்களும் மரணம் அடைந்திருக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது. மேலும் விராஜ்பேட்டை தாலுகா தோரா என்ற இடத்திலும் மலை பகுதியில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டு, வீடுகள் மீது விழுந்து அமுக்கின. இதில் 10-க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து நாசமானது. இந்த விபத்தில் மமதா (வயது 40), லிகிதா (15) ஆகிய 2 பெண்கள் பலியாகினர். மேலும் 8 பேரை காணவில்லை. அவர்களை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இந்த பகுதியில் வசித்து வந்த 300 பேரை உடனடியாக மீட்பு குழுவினர் மீட்டு முகாம்களில் தங்கவைத்துள்ளனர்.

  கர்நாடகத்தில் நேற்று ஒரே நாளில் மழைக்கு 9 பேர் மரணம் அடைந்தனர். இதன் மூலம் கர்நாடகத்தில் மழைக்கு மரணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 19 ஆக அதிகரித்துள்ளது. காவிரி ஆற்று படுகையில் அமைந்துள்ள பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.

  இதனால் கே.ஆர்.எஸ்., கபினி, ஹாரங்கி, ஹேமாவதி ஆகிய 4 அணைகளுக்கும் மிக அதிகளவில் நீர்வரத்து உள்ளது. இதனால் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. 124 அடி கொள்ளளவு கொண்ட கே.ஆர்.எஸ். அணையின் நீர்மட்டம் 100 அடியை தாண்டியுள்ளது. இதே அளவுக்கு நீர்வரத்து இருந்தால், அடுத்த சில நாட்களில் அந்த அணை நிரம்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

  கபினி அணையில் இருந்து சுமார் 1.50 லட்சம் கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் கபிலா ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. இந்த நீர் காவிரியில் கலந்து தமிழகத்துக்கு செல்கிறது. இதனால் காவிரி ஆற்றிலும் வெள்ளம் கரைபுரண்டு செல்கிறது. அதேபோல் ஹேமாவதி அணைக்கு 1 லட்சம் கனஅடிக்கும் மேல் நீர் வந்து கொண்டிருக்கிறது. அந்த அணையின் பாதுகாப்பை கருதி அதே அளவுக்கு தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. தட்சிண கன்னட மாவட்டத்தில் பெய்த கனமழையால் பல்வேறு பகுதிகள் தண்ணீரில் மிதக்கின்றன. கனமழை காரணமாக சார்மாடி காட், சக்லேஷ்புரா, மடிகேரி நெடுஞ்சாலை மூடப்பட்டது.

  கர்நாடகத்தில் வெள்ளத்தில் சிக்கிய 1 லட்சத்து 24 ஆயிரத்து 291 பேர் மீட்கப்பட்டுள்ளனர். இதில் நேற்று ஒரே நாளில் 80 ஆயிரம் பேர் மீட்கப்பட்டு, பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்து செல்லப்பட்டனர். கர்நாடகத்திற்கு கூடுதலாக 9 தேசிய பேரிடர் மீட்பு குழு வந்துள்ளது. இதில் 5 குழுக்கள், பெலகாவிக்கும், 2 குழுக்கள் குடகு மாவட்டத்திற்கும் அனுப்பி வைக்கப்பட்டது. சிவமொக்கா மற்றும் உத்தர கன்னட ஆகிய மாவட்டங்களுக்கு தலா ஒரு குழுவும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

  இந்திய விமானப்படைக்கு சொந்தமான 2 ஹெலிகாப்டர்கள் மீட்பு பணிக்கு வந்துள்ளன. இன்னும் ஒரு ஹெலிகாப்டர் ராய்ச்சூருக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது. கனமழை காரணமாக 1,410 கிலோ மீட்டர் நீளத்திற்கு சாலைகள் சேதம் அடைந்துள்ளன. 21 பாலங்கள் உடைந்துள்ளன. 4 ஆயிரத்து 19 அரசு கட்டிடங்களும், 92 தண்ணீர் விநியோக கட்டிடங்கள், 2,575 மின் கம்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

  சாலைகளில் வெள்ளம் தேங்கியதால் பெலகாவி வழியாக மராட்டிய மாநில செல்லும் பஸ்கள் நேற்றும் ரத்து செய்யப்பட்டன. அதே போல் மழையால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் நிலச்சரிவு, வெள்ளம் காரணமாக ரெயில்களின் சேவை ரத்து செய்யப்பட்டது.
  Next Story
  ×