search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    குமார் - பொன்னுசாமி - திருமலை
    X
    குமார் - பொன்னுசாமி - திருமலை

    திருப்பதியில் செம்மரம் கடத்திய தமிழக வாலிபர்கள் 3 பேருக்கு 11 ஆண்டு ஜெயில்

    திருப்பதியில் செம்மர கடத்தலில் ஈடுபட்ட தமிழக வாலிபர்கள் 3 பேருக்கும் தலா 11 ஆண்டுகள் ஜெயில் தண்டனையும், ரூ.6 லட்சம் அபராதமும் வழங்கி நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.
    திருமலை:

    ஆந்திர மாநிலம் திருப்பதி, கடப்பா உள்ளிட்ட சேஷாசலம் வனப்பகுதிகளில் விலை உயர்ந்த செம்மரங்கள் செழித்து வளர்ந்துள்ளன. இந்த செம்மரத்திற்கு வெளிநாடுகளில் அமோக வரவேற்பு உள்ளது.இதனால் செம்மரங்களை கும்பல் வெட்டி கடத்தி வருகின்றனர்.

    திருப்பதி சேஷாசலம் மலைத்தொடரில் அரக்கம்பாடி வனப்பகுதிக்குட்பட்ட முகுராலதிப்பா என்ற இடத்தில் செம்மர கடத்தல் தடுப்புப்பிரிவு அதிரடிப்படை துணை வனசரகர் சங்கரய்யா தலைமையிலான போலீசார் கடந்த 2016-ம் ஆண்டு ரோந்து சென்றனர்.

    அப்போது செம்மரங்களை வெட்டி வாகனத்தில் ஏற்றிக் கொண்டிருந்த 3 பேரை சுற்றி வளைத்து பிடித்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் தாலுகா வெண்டனூரை சேர்ந்த பொன்னுசாமி (39), கொட்டூர் கொல்லை கிராமத்தை சேர்ந்த திருமலை (29), தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டி தாலுகா சித்தேரி கிராமத்தை சேர்ந்த குமார் (27) என தெரியவந்தது.

    இதையடுத்து 3 பேரையும் கைது செய்தனர். இந்த வழக்கின் விசாரணை திருப்பதி கோர்ட்டில் நீதிபதி ஏடு கொண்டலு முன்னிலையில் நடந்தது. வழக்கின் விசாரணை முடிந்து நேற்று இறுதி தீர்ப்பு வழங்கப்பட்டது.

    அப்போது செம்மர கடத்தலில் ஈடுபட்ட 3 பேருக்கும் தலா 11 ஆண்டுகள் ஜெயில் தண்டனையும், ரூ.6 லட்சம் அபராதமும் வழங்கி தீர்ப்பு கூறினார்.

    மேலும் அபராத தொகை கட்ட தவறினால் கூடுதலாக 2 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டுமென கூறப்பட்டது.

    செம்மரம் வெட்டி கடத்துவது கொலை குற்றத்திற்கு சமமானது என கருதி 11 ஆண்டு ஜெயில் தண்டனை வழங்கி உள்ளதாக கூறப்படுகிறது.

    செம்மர கடத்தல் கும்பலை சேர்ந்தவர்களுக்கு அதிகபட்சமாக 11 ஆண்டு ஜெயில் தண்டனை வழங்கப்பட்டது இதுவே முதல் முறை.

    Next Story
    ×