search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    காஷ்மீர் மாநிலத்தில் கூடுதலாக 28 ஆயிரம் ராணுவ வீரர்கள் குவிப்பு

    காஷ்மீர் மாநிலத்துக்கு கூடுதலாக 28 ஆயிரம் பாதுகாப்பு படையினர் அனுப்ப முடிவு செய்யப்பட்டது. அதன்படி கூடுதல் ராணுவ வீரர்கள் காஷ்மீரில் குவிக்கப்பட்டு வருகிறார்கள்.
    ஸ்ரீநகர்:

    இந்திய அரசியலமைப்பு சட்ட பிரிவு 35ஏ மற்றும் 370 ஆகிய பிரிவுகளின் கீழ் காஷ்மீர் மாநிலத்துக்கு சில சிறப்பு அந்தஸ்துகள் வழங்கப்பட்டுள்ளன.

    இந்த சிறப்பு அந்தஸ்துகளை ரத்து செய்ய மத்திய அரசு ஆலோசித்து வருகிறது. விரைவில் இதில் அதிரடி முடிவு எடுக்கப்படும் என்று தெரிகிறது.

    சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்தால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று காஷ்மீர் மாநில அரசியல் கட்சித் தலைவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். ஆனால் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா, இந்த எச்சரிக்கைகளை கண்டு கொள்ளவில்லை. காஷ்மீர் நிலவரம் பற்றி தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறார்.

    இந்த நிலையில் கடந்த வாரம் 10 ஆயிரம் ராணுவ வீரர்கள் காஷ்மீருக்கு கூடுதலாக அனுப்பி வைக்கப்பட்டனர். இதனால் மக்கள் மத்தியில் பீதி ஏற்பட்டது. இதையடுத்து அமர்நாத் யாத்திரைக்கு பாதுகாப்பை அதிகரிக்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக பாதுகாப்பு படை சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.

    இந்த நிலையில் நேற்று காஷ்மீர் மாநிலத்துக்கு கூடுதலாக 28 ஆயிரம் பாதுகாப்பு படையினர் அனுப்ப முடிவு செய்யப்பட்டது. அதன்படி கூடுதல் ராணுவ வீரர்கள் காஷ்மீரில் குவிக்கப்பட்டு வருகிறார்கள். இது காஷ்மீர் மாநில மக்களிடம் கடும் பதட்டத்தையும் பீதியையும் ஏற்படுத்தி இருக்கிறது.

    தற்போது காஷ்மீரில் அமர்நாத் புனித பாத யாத்திரை 4-ந்தேதி வரை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் கூடுதல் படைகளை குவிப்பது ஏன் என்ற கேள்வி எழுந்தது. படை குவிப்புக்கு விடை கிடைக்காததால் மக்கள் அத்தியாவசிய பொருட்களை அதிக அளவில் வாங்கி இருப்பு வைக்கத் தொடங்கியுள்ளனர்.

    காஷ்மீர் மாநிலத்தில் தற்போது ஜனாதிபதி ஆட்சி அமலில் உள்ளது. இந்த ஆண்டு இறுதியில் அங்கு சட்டசபை தேர்தலை நடத்தி ஆட்சியை கைப்பற்ற வேண்டும் என்பதில் பா.ஜ.க. தீவிரமாக உள்ளது. அதன் ஒரு பகுதியாகத்தான் படை குவிப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாக கூறப்படுகிறது.

    கடந்த 10 நாட்களில் காஷ்மீருக்குள் சென்றுள்ள கூடுதல் 38 ஆயிரம் ராணுவ வீரர்களும் காஷ்மீரின் தென் மாவட்ட பகுதிகளில் ரோந்து சுற்றும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். முக்கிய நகரங்களின் நுழைவு பகுதிகள் அனைத்தும் பாதுகாப்புப் படையினரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

    காஷ்மீர் நிலவரம் பற்றி சமீபத்தில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜீத் தோவல் 2 நாட்கள் அங்கு தங்கி இருந்து ஆய்வு செய்தார். அப்போது காஷ்மீரின் வட மாவட்ட பகுதிகளில் பாதுகாப்பு படையினரின் எண்ணிக்கை போதாது என்று கூறப்பட்டது.

    இதைத் தொடர்ந்தே பாதுகாப்பு படை வீரர்கள் கூடுதலாக காஷ்மீருக்குள் கொண்டு வரப்பட்டுள்ளனர். இவர்களில் 70 சதவீதம் பேர் துணை நிலை ராணுவ படையைச் சேர்ந்தவர்கள்.

    ஏற்கனவே அமர்நாத் யாத்திரைக்கு பாதுகாப்பு கொடுக்க 40 ஆயிரம் ராணுவத்தினர் குவிக்கப்பட்டிருந்தனர். இந்த நிலையில் மேலும் 38 ஆயிரம் வீரர் குவிக்கப்படுவதை காஷ்மீர் மாநில மக்கள் சந்தேக கண்ணுடன் பார்க்கிறார்கள்.

    இந்திய ராணுவ தலைமை தளபதி பிபின்ராவத் நேற்று காஷ்மீர் மாநிலத்துக்கு சென்று கூடுதல் வீரர்கள் எங்கெங்கு குவிக்கப்பட்டுள்ளனர் என்பது பற்றி ஆய்வு செய்தார். இதற்கிடையே காஷ்மீர் முன்னாள் முதல்- மந்திரி உமர்அப்துல்லா நேற்று முன்தினம் மோடியை சந்தித்து படை குவிப்பு குறித்து பேசினார்.

    இதையடுத்து தெற்கு காஷ்மீரில் வழிபாட்டு தலங்களில் நிறுத்தப்பட்டிருந்த ராணுவ வீரர்கள் திரும்பப் பெறப்பட்டுள்ளனர். ஆனால் முக்கிய இடங்களில் ராணுவ வீரர்கள் தொடர்ந்து கண்காணிப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
    Next Story
    ×