search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விஜி சித்தார்த்தா
    X
    விஜி சித்தார்த்தா

    மாயமான கர்நாடகா முன்னாள் முதல் மந்திரி மருமகன் சித்தார்த்தா உடல் கண்டெடுப்பு

    கர்நாடக முன்னாள் முதல் மந்திரியின் மருமகனும், பிரபல கபே காபி டே ஓட்டல் அதிபருமான சித்தார்த்தா நேற்று மாயமானார். நீண்ட தேடுதலுக்கு பின்னர் அவரது உடல் இன்று கண்டெடுக்கப்பட்டது.
    மங்களூர்:

    கர்நாடக முன்னாள் முதல்-மந்திரி எஸ்.எம். கிருஷ்ணாவின் மூத்த மருமகன் சித்தார்த்தா (வயது 60). சிக்மகளூரை சேர்ந்த இவர் பிரபல தொழிலதிபர் ஆவார்.

    ‘கேப் காபி டே’ என்ற சங்கிலி தொடர் காபி கடையை நாடு முழுவதும் நடத்தி வந்தார். இவருக்கு 12 ஆயிரம் ஏக்கருக்கு மேல் காபி தோட்டம் உள்ளது.

    மேலும் பல்வேறு நிறுவனங்களும் அவருக்கு சொந்தமாக இருக்கின்றன. ரூ.25 ஆயிரம் கோடி சொத்துக்கு அதிபதியாக இருந்து வந்தார்.

    நேற்று முன்தினம் காலை 8 மணிக்கு பெங்களூரு வீட்டில் இருந்து அலுவலகத்துக்கு சென்றார். 12.30 மணியளவில் ஹாசன் மாவட்டத்தில் உள்ள சக்லேஸ் பூருக்கு காரில் புறப்பட்டு சென்றார். டிரைவர் பசவ ராஜ் பட்டேல் காரை ஓட்டினார்.

    ஆனால் இடையில் சக்லேஸ்பூருக்கு செல்லும் திட்டத்தை கைவிட்ட அவர் காரை மங்களூருக்கு ஓட்டி செல்லும்படி கூறினார்.மாலை 6 மணியளவில் கார் மங்களூர் சென்றடைந்தது.

    அங்குள்ள புறநகர் பகுதியில் நேத்ராவதி ஆறு ஓடுகிறது. அந்த இடத்திற்கு சென்றதும் டிரைவரிடம் காரை நீ மறுமுனைக்கு ஓட்டி செல். நான் ஆற்றின் பாலம் வழியாக நடந்து வருகிறேன் என்று கூறிவிட்டு சென்றார்.

    ஆற்றின் இயற்கை காட்சிகளை ரசிப்பதற்காக அவர் பாலத்தில் நடந்து வர விரும்புவதாக டிரைவர் நினைத்தார். இதனால் மறுமுனைக்கு சென்று அங்கு காரை நிறுத்தினார்.

    நீண்ட நேரம் ஆகியும் அவர் மறுபக்கம் வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த டிரைவர் பசவராஜ் பட்டேல், சித்தார்த்தாக்கு போன் செய்தார். ஆனால் போன் இணைப்பு துண்டிக்கப்பட்டிருந்தது. இரவு 8 மணி வரை அங்கும் இங்கும் தேடினார்.

    உடனே சித்தார்த்தாவின் மகன் அமர்தியா ஹெக்டேவுக்கு போன் செய்து தகவலை தெரிவித்தார். உடனே மங்களூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் அவரை தேடினார்கள்.

    சித்தார்த்தா உடல் கண்டெடுப்பு


    பாலத்தில் நடந்து வந்தவர் மாயமாகி இருப்பதால் அவர் ஆற்றில் குதித்து தற்கொலை செய்திருக்கலாம் என கருதப்பட்டது. எனவே ஆற்றில் தேடினார்கள். அவரை கண்டுபிடிக்க முடியவில்லை.

    நேற்று முழுவதும் தேடுதல் வேட்டை நடந்தது. உள்ளூர் மீனவர்கள், போலீசார், தீயணைப்பு படையினர், கடலோர காவல் படையினர், பேரிடர் மீட்பு படையினர் என ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தேடினார்கள். தேடுதலுக்கு கடலோர காவல்படை ஹெலிகாப்டரும் பயன்படுத்தப்பட்டது.

    நேற்று இரவு 10 மணி வரை தேடுதல் பணி நடந்தது. ஆனாலும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை.

    இன்று காலை மறுபடியும் தேடுதலை தொடங்கியபோது காலை 6.30 மணியளவில் அங்குள்ள கொய்க்பசார் என்ற இடத்தில் உள்ள ஐஸ் பேக்டரி அருகே சித்தார்த்தாவின் உடல் மிதந்தது. அவர் ஆற்றில் குதித்த இடத்தில் இருந்து 1½ கிலோ மீட்டர் தூரத்தில் உடல் மிதந்தது. மீட்பு படையினர் அங்கு சென்று உடலை மீட்டு வந்தனர்.

    பின்னர் அவரது உடல் வென்லாக் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அங்கு இன்று காலை பிரேத பரிசோதனை நடந்தது. அவரது உடல் சொந்த ஊரான சிக்மகளூருக்கு கொண்டு செல்லப்பட இருக்கிறது.

    நேற்று முன்தினம் மாயமாகி இருந்த நிலையில் நேற்று மாலை வரை அவரது உடல் கிடைக்காததால் ஒருவேளை அவர் உயிரோடு இருக்க வாய்ப்பு இருப்பதாக கருதப்பட்டது.

    இன்று காலை அவரது உடல் கிடைத்ததையடுத்து அவர் தற்கொலை செய்தது உறுதியானது. இது அவரது குடும்பத்தினரையும், உறவினர்களையும் மிகுந்த சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.

    சித்தார்த்தா தற்கொலை செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் தான் மங்களூருக்கு வந்துள்ளார். அவர் எழுதி வைத்திருந்த கடிதம் ஒன்று கண்டெடுக்கப்பட்டது. அதில், தொழிலில் ஏற்பட்ட பெரிய நஷ்டம் காரணமாக நான் இந்த முடிவை எடுத்திருக்கிறேன் என்று குறிப்பிட்டிருந்தார்.

    அவர் நடத்தி வந்த நிறுவனங்களுக்காக அதிக அளவில் கடன் வாங்கி இருந்தார். அவற்றை சரியான நேரத்தில் திருப்பி செலுத்த முடியவில்லை. மேலும் தொழிலில் பல்வேறு வகையில் நஷ்டமும் ஏற்பட்டு வந்தது.

    இந்த நிலையில் அவர் வரி ஏய்ப்பு செய்ததாக வருமான வரித்துறை அவருடைய சொத்துக்களையும், வங்கி கணக்குகளையும் முடக்கினார்கள். இதனால் கடும் நெருக்கடிக்கு ஆளான அவர் தொழிலை தொடர்ந்து நடத்த முடியாமல் கஷ்டப்பட்டு வந்தார்.

    இதிலிருந்து மீள முடியாது என்ற நிலை இருந்ததால் அவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். சித்தார்த்தா கடந்த 37 ஆண்டுகளாக சிறப்பாக தொழில் செய்து வந்தார். பெரும்பாலும் அவரது நிறுவனங்கள் லாபத்தில் தான் இயங்கி வந்தன. ஆனாலும் இவ்வளவு கடன் எப்படி ஏற்பட்டது, எப்படி தொழில் முடங்கியது என்பது மர்மமாக உள்ளது.

    சித்தார்த்தா நிறுவனத்தில் மட்டும் சுமார் 30 ஆயிரம் பேர் வேலை வாய்ப்பு பெற்றிருக்கிறார்கள். அவர் இறந்தது மூலம் அவருடைய நிறுவனங்கள் முடங்கும் நிலை உருவாகி உள்ளது.

    இதனால் 30 ஆயிரம் பேர் வேலை வாய்ப்பும் கேள்விக் குறியாக அமைந்துள்ளது.
    Next Story
    ×