search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜனாதிபதி, பிரதமர்
    X
    ஜனாதிபதி, பிரதமர்

    ஜெய்பால் ரெட்டி மறைவுக்கு: ஜனாதிபதி-பிரதமர் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல்

    முன்னாள் மத்திய மந்திரி ஜெய்பால் ரெட்டி மறைவுக்கு ஜனாதிபதி, பிரதமர் மற்றும் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

    ஐதராபாத்:

    காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய மந்திரியுமான ஜெய்பால் ரெட்டி இன்று ஐதராபாத்தில் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 77.

    சில நாட்களாக கடும் காய்ச்சலால் அவதிப்பட்டு வந்த அவர் ஐதராபாத் கச்சிபவுலியில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.

    அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை 1.30 மணிக்கு உயிரிழந்தார்.

    ஜெய்பால் ரெட்டி 1½ வயதில் போலியோவால் பாதிக்கப்பட்டு கால் செயல் இழந்தது. இதனால் அவர் ஊன்றுக்கோல் உதவியுடன் நடந்து வந்தார்.

    ஜெய்பால்ரெட்டி பாராளுமன்ற தேர்தலில் 5 முறை வெற்றி பெற்று எம்பி. ஆனார். மேல்-சபை எம்.பி.யாக 2 முறை தேர்வு செய்யப்பட்டார். 4 முறை எம்.எல்.ஏ.வாக இருந்துள்ளார்.

    உஸ்மானியா பல்கலைக் கழகத்தில் மாணவர் தலைவராக இருந்த ஜெய்பால் ரெட்டி அதன்பின் அரசியலில் குதித்து 1970-ம் ஆண்டு காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு எம்.எல்.ஏ. ஆனார்.

    பின்னர் ஜனதா தளம் கட்சியில் இணைந்த அவர் குஜ்ரால் மந்திரிசபையில் தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை மந்திரியாக பதவி வகித்தார்.

    ஜெய்பால் ரெட்டி மறைவுக்கு தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

    ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தனது டுவிட்டர் பக்கத்தில், “ஜெய்பால் ரெட்டி மறைவு செய்தியை கேட்டு வருத்தமுற்றேன். அவர் திறமைவாய்ந்த எம்.பி.யாக திகழ்ந்தார். அவர் சிந்தனைமிக்க அரசியல்வாதியாக இருந்தார். அவரது குடும்பத்தினர், ஆதரவாளர்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன்.

    பிரதமர் மோடி கூறும் போது, “ஜெய்பால் ரெட்டி பொதுவாழ்வில் பல ஆண்டு அனுபவம் பெற்றவர். அவர் தெளிவான பேச்சுக்கும், சிறந்த நிர்வாகத்துக்கும் பெரிதும் மதிக்கப்பட்டவர். அவரது மறைவு வருத்தம் அளிக்கிறது.

    இந்த நேரத்தில் அவரது குடும்பத்தினருக்கும், ஆதரவாளர்களுக்கும் இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.

    ராகுல்காந்தி கூறுகையில், “ஜெய்பால்ரெட்டி சிறந்த பாராளுமன்ற வாதியாகவும், தெலுங்கானா மாநிலத்துக்காக சிறந்த மகனாக விளங்கினார். அவர் தனது முழு வாழ்க்கையையும் பொது வாழ்வுக்காக அர்ப் பணித்தார்” என்றார்.

    தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறி இருப்பதாவது:-

    காங்கிரஸ் முன்னாள் மத்திய அமைச்சர் ஜெய்பால் ரெட்டி திடீரென்று மறைவை எய்தினார் என்ற வேதனைச் செய்தி கேட்டு அதிர்ச்சி அடைந்தேன். மறக்க முடியாத அந்த மாமனிதரின் மறைவிற்கு தி.மு.க. சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    ஜெய்பால் ரெட்டியை இழந்து தவிக்கும் அவரது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், காங்கிரஸ் பேரியக்கத் தொண்டர்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபத்தையும், ஆறு தலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    Next Story
    ×