search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மும்பையில் கனமழை
    X
    மும்பையில் கனமழை

    மும்பையில் கனமழை - பஸ், ரெயில், விமான சேவை பாதிப்பு

    மும்பையில் கனமழை காரணமாக பஸ், ரெயில், விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் அதிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
    மும்பை:

    தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்ததை தொடர்ந்து மும்பை மற்றும் புறநகர் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.

    தொடர்ந்து பெய்து வரும் மழையால் சியான், மதுங்கா, டாஹிம், அந்தேரி, மலாட் மற்றும் தஹிகார் பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.

    கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் புறநகர் பகுதிகளில் 8 இடங்களில் 100 மில்லி மீட்டருக்கும் அதிகமாக மழை பதிவாகி உள்ளது. இதனால் பொதுமக்கள் மிகவும் அவதிக்குள்ளாகினர்.

    இடைவிடாது மழை பெய்து வரும் நிலையில் அடுத்த 24 மணி நேரத்தில் அதிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

    குறிப்பாக கொங்கன், மும்பை நகரம், தகானு, அலிவா மற்றும் ரத்தின கிரி பகுதிகளில் கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் யாரும் வெளியில் வரவேண்டாம் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

    கனமழையால் பந்த்ரா, அந்தேரி, வித்யாவிகார், செம்பூர், ஐரோலி மற்றும் நேருல் பகுதிகளில் சாலைகள் வெள்ளத்தில் மிதக்கின்றன. வெஸ்டர்ன் எக்ஸ்பிரஸ் நெடுஞ்சாலை உள்பட முக்கிய சாலைகள் கடும் போக்குவரத்து நெரிசலில் சிக்கி உள்ளது. இதனால் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து விமானங்கள் சுமார் 30 நிமிடங்கள் தாமதமாக புறப்படுகின்றன.

    வெள்ளப்பெருக்கு காரணமாக வெஸ்டர்ன் எக்ஸ்பிரஸ் நெடுஞ்சாலையில் 2½ மணி நேரம் போக்குவரத்து நெரிசலில் சிக்கிய பிறகே விமான நிலையத்தை அடைய வேண்டியது உள்ளது.

    சயான், செம்பூர் உள்ளிட்ட புறநகர் பகுதிகளில் தண்டவாளத்தில் மழை வெள்ளம் சூழ்ந்துள்ளதால் ரெயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. உள்ளூர் ரெயில்களும் சற்று தாமதமாக இயங்கி வருகின்றன.

    மும்பையில் தொடர்ந்து பெய்யும் கனமழையால் வானிலை மோசமாக காணப்படுகிறது. இதனால் 17 விமானங்கள் திருப்பி விடப்பட்டுள்ளன. மேலும் 11 விமான சேவைகள் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

    கடந்த 2005-ம் ஆண்டு ஜூலை 26-ந்தேதி பெய்த கன மழை கடும் வெள்ளசேதத்தை ஏற்படுத்தி இருந்தது. நேற்று இடைவிடாமல் பெய்த மழை, 14 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட வெள்ளப்பெருக்கை நினைவுபடுத்தியதாக பலரும் தங்களது டுவிட்டர் பதிவில் தெரிவித்து வருகின்றனர். அதோடு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள புகைப்படங்களையும் பதிவு செய்து வருகின்றனர்.
    Next Story
    ×