search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஹர்ஷவர்தன்
    X
    ஹர்ஷவர்தன்

    ‘ஆயுஷ்மான் பாரத்’ திட்டம் மூலம் 10¾ கோடி குடும்பங்கள் பயனடைந்துள்ளன - மத்திய அரசு

    ஆயுஷ்மான் பாரத் திட்டம் மூலம் 10¾ கோடி ஏழை குடும்பங்கள் பலனடைந்துள்ளதாக மத்திய அரசு கூறியுள்ளது.
    புதுடெல்லி:

    ஏழை குடும்பங்களும் உயர்தர மருத்துவ சிகிச்சையை பெறும் நோக்கில் ஆயுஷ்மான் பாரத் என்ற திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டம் மூலம் ரூ.5 லட்சம் வரையிலான மருத்துவ சிகிச்சைகளை இலவமாக பெற முடியும்.

    இந்த திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து பாராளுமன்ற மக்களவையில் நேற்று கேள்வி நேரத்தின் போது மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை மந்திரி ஹர்ஷவர்தன் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் சிகிச்சை அளிக்க, கடந்த 23-ந் தேதி வரை 16,039 மருத்துவமனைகள் அங்கீகாரம் பெற்று உள்ளன. இதில் 8,059 மருத்துவமனைகள் தனியாருக்கு சொந்தமானவை ஆகும்.

    மத்திய அரசு

    இந்த திட்டத்தின் மூலம் சுமார் 10.74 கோடி ஏழை குடும்பங்கள் பலனடைந்து உள்ளன. இந்த திட்டத்தில் கூடுதல் குடும்பங்களை சேர்க்க மாநிலங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.

    இந்த திட்டத்தை செயல்படுத்தும் முறை குறித்து மாநிலங்களே முடிவு செய்து கொள்ளலாம். அதாவது காப்பீட்டு முறையிலோ அல்லது டிரஸ்ட் வழியாகவோ அல்லது இரண்டும் கலந்த முறையிலோ செயல்படுத்திக்கொள்ளலாம்.

    இவ்வாறு ஹர்சவர்தன் கூறினார்.

    தொடர்ந்து அவர் கூறுகையில், நாட்டில் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் இறப்பு விகிதம் குறைந்திருப்பதாக தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் கூறியதாவது:-

    குழந்தைகள் நலனை பேணவும், பச்சிளம் குழந்தைகள் மற்றும் 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளின் இறப்பு விகிதத்தை குறைப்பதற்காகவும் தேசிய சுகாதார திட்டத்தின் கீழ் குழந்தைகள் நலத்திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. இதன் மூலம் கடந்த 10 ஆண்டுகளில் 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளின் இறப்பு விகிதம் குறைந்து உள்ளது.

    அதன்படி கடந்த 2008 முதல் 2017-ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் 1000 குழந்தைகளுக்கு 37 பேர் என்ற நிலைக்கு சுருங்கி இருக்கிறது. இது முந்தைய காலகட்டத்தில் 67 ஆக இருந்தது. இதைப்போல இந்த காலகட்டத்தில் பச்சிளம் குழந்தைகளின் இறப்பு விகிதமும் 53-ல் இருந்து 33 ஆக குறைந்தது.

    குழந்தை இறப்பு விகிதத்தில் மிகவும் பின்தங்கிய மாநிலங்களாக மத்திய பிரதேசம், அசாம், சத்தீஷ்கார், ஒடிசா ஆகியவை அடையாளம் காணப்பட்டு உள்ளன.

    இவ்வாறு ஹர்சவர்தன் கூறினார்.
    Next Story
    ×