search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மன்மோகன்சிங்
    X
    மன்மோகன்சிங்

    பா.ஜனதாவுக்கு மட்டும் ரூ.437 கோடி தேர்தல் நிதி கிடைத்தது எப்படி? - மன்மோகன்சிங்

    ஒரே வருடத்தில் பா.ஜனதாவுக்கு மட்டும் ரூ.437 கோடி தேர்தல் நிதி கிடைத்தது எப்படி? என்று மன்மோகன்சிங் கேள்வி எழுப்பியுள்ளார்.

    புதுடெல்லி:

    மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா கட்சியின் நன்கொடை நிதி கடந்த சில ஆண்டுகளாக கணிசமாக அதிகரித்து வருகிறது.

    இந்நிலையில் 2017- 2018-ம் ஆண்டில் கட்சிகள் பெற்ற தேர்தல் நன்கொடை குறித்த ஆய்வறிக்கை ஒன்று வெளியிடப்பட்டது. இந்த அறிக்கையில் பிரதான கட்சிகள் பெற்ற மொத்த தேர்தல் நிதி ரூ.469.89 கோடி என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதில் காங்கிரஸ், பகுஜன் சமாஜ், தேசியவாத காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் ஆகிய தேசிய அந்தஸ்து பெற்ற 6 கட்சிகள் பெற்ற மொத்த தேர்தல் நிதி ரூ.32.83 கோடி ஆகும்.

    ஆனால் பா.ஜனதாவுக்கு மட்டும் ரூ.437.04 கோடிநிதி வழங்கப்பட்டுள்ளது. இது மற்ற 6 தேசிய கட்சிகள் பெற்ற ஒட்டு மொத்த தேர்தல் நிதியை போல 13 மடங்கு அதிகம் ஆகும்.

    தேர்தல் நிதி பத்திரம் அறிமுகத்தால் அதிக பலனை அடைந்திருப்பது பா.ஜனதா மட்டுமே. பெரிய நிறுவனங்கள் அரசியல் கட்சிகளுக்கு அளித்த ரூ.958.1 கோடி நிதியில் பா.ஜனதாவுக்கு மட்டும் ரூ.915.5 கோடி கிடைத்துள்ளது. காங்கிரஸ் கட்சிக்கு ரூ.55.3 கோடி மட்டுமே கிடைத்துள்ளது. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

    பாஜக

    இந்நிலையில் மறைந்த இந்திய கம்யூனிஸ்டு கட்சி மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான இந்திரஜித் குப்தாவின் நூற்றாண்டு பிறந்த நாள் கூட்டம் டெல்லியில் நடந்தது. இதில் முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் கலந்து கொண்டு பேசுகையில் தேர்தல் நிதி சர்ச்சையை குறிப்பிட்டு பா.ஜனதாவை சாடினார். அவர் பேசியதாவது:-

    சிறந்த பாராளுமன்ற வாதியாக திகழ்ந்த இந்திரஜித் குப்தாவின் நினைவுகளை அசை போடுகிறேன். அதிலும் குறிப்பாக அவர் தேர்தல் செலவினங்களுக்கு அரசே நிதி வழங்க வேண்டியதன் அவசியத்தை அடிக்கடி வலியுறுத்துவார்.

    இன்று ஒரே ஒரு கட்சிக்கு 90 சதவீத தேர்தல் நன்கொடை குவிகிறது. எனவே தேர்தல் நிதி குறித்த ஆலோசனைகளை முன்னெடுக்க வேண்டிய நேரம் வந்து விட்டது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    Next Story
    ×