search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    குவாலியர் விமானப்படை தளத்தில் கார்கில் போர்க்கள காட்சிகள் சித்தரிப்பு
    X

    குவாலியர் விமானப்படை தளத்தில் கார்கில் போர்க்கள காட்சிகள் சித்தரிப்பு

    கார்கில் போர் முடிந்து 20 ஆண்டுகள் நிறைவடைவதை முன்னிட்டு குவாலியர் விமானப்படை தளத்தில் கார்கில் போர்க்கள காட்சிகள் சித்தரிக்கப்பட்டு உள்ளன.
    குவாலியர்:

    காஷ்மீரின் கார்கில் பகுதியில் கடந்த 1999-ம் ஆண்டு பாகிஸ்தான் ராணுவம் ஊடுருவியது. அங்குள்ள ‘டைகர் ஹில்ஸ்’ உள்ளிட்ட பகுதிகளை ஆக்கிரமித்து இருந்த பாகிஸ்தான் வீரர்களை விரட்டியடித்து, கார்கிலை மீட்பதற்காக இந்திய பாதுகாப்பு படைகள் உடனடியாக களமிறங்கின. இதற்காக இந்திய ராணுவமும், விமானப்படையும் இணைந்து பாகிஸ்தானுடன் தீவிரமாக போரில் ஈடுபட்டன.

    ‘ஆபரேஷன் விஜய்’ என்ற பெயரில் இந்திய பாதுகாப்பு படையினர் நடத்திய இந்த போர் 2 மாதங்களுக்கும் மேலாக நீடித்தது. இறுதியில் பாகிஸ்தான் வீரர்கள் விரட்டியடிக்கப்பட்டு கார்கில் பகுதி முற்றிலும் மீட்கப்பட்டது. இந்த போர் 1999-ம் ஆண்டு ஜூலை 26-ந்தேதி முடிவுக்கு வந்தது. இந்த போர் வெற்றி தினம் ஆண்டுதோறும் அனுசரிக்கப்படுகிறது.



    கார்கில் போர் முடிவுக்கு வந்து 20 ஆண்டுகள் நிறைவடைவதையொட்டி அடுத்த மாதம் நாடு முழுவதும் பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு ஜூலை 25 முதல் 27 வரை 3 நாட்கள் இந்த வெற்றி தினம் (கார்கில் விஜய் திவாஸ்) கொண்டாடப்படுகிறது.

    கார்கில் போரின் 20-வது ஆண்டு நிறைவை முன்னிட்டு மத்திய பிரதேசம் குவாலியரில் உள்ள விமானப்படை தளத்தில் பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு நேற்று ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தன. இதற்காக கார்கில் போர்க்கள காட்சிகள் அங்கு தத்ரூபமாக சித்தரிக்கப்பட்டு இருந்தன.

    மாதிரி ‘டைகர் ஹில்ஸ்’ உருவாக்கப்பட்டு, அங்கு போர் நடந்த காட்சிகளை இந்திய விமானப்படை வீரர்கள் விளக்கினார்கள். கார்கில் போரில் முக்கிய பங்காற்றிய மிராஜ்-2000 உள்ளிட்ட விமானங்களின் பங்களிப்பு குறித்தும் விளக்கப்பட்டது. இதற்காக 5 மிராஜ்-2000 விமானங்கள், 3 மிக் 21 ரக விமானங்கள், ஒரு சுகோய்-30 எம்.கே.ஐ. விமானம் போன்றவை பயன்படுத்தப்பட்டன.

    இந்த நிகழ்ச்சியில் விமானப்படை தளபதி பி.எஸ்.தனோவா சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். மேலும் கார்கில் போரில் பங்கேற்ற வீரர்கள் (பணியில் உள்ளவர்கள் மற்றும் ஓய்வு பெற்றவர்கள்) ஏராளமானோர் கலந்து கொண்டனர். அவர்கள் கார்கில் போர் அனுபவங்களை விளக்கினார்கள்.

    கார்கில் போரில் இந்திய பாதுகாப்பு படையினர் வெளிப்படுத்திய வீரமிக்க செயல்பாடுகளை அறிந்து பார்வையாளர்கள் வியந்தனர். இந்திய விமானப்படை வீரர்கள் நிகழ்த்திய போர்க்கள மாதிரி காட்சிகளை பார்த்த பார்வையாளர்களுக்கு, கார்கில் போரை நேரில் பார்த்த உணர்வு ஏற்பட்டது.
    Next Story
    ×