search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    குடியரசு தினவிழாவை சீர்குலைக்க சதி - 2  பயங்கரவாதிகள் கைது
    X

    குடியரசு தினவிழாவை சீர்குலைக்க சதி - 2 பயங்கரவாதிகள் கைது

    குடியரசு தினவிழாவை சீர்குலைக்க சதி திட்டம் தீட்டியிருந்த 2 பயங்கரவாதிகளை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #RepublicDay

    புதுடெல்லி:

    டெல்லியில் நாளை குடியரசு தின விழா கொண்டாட்டங்கள் நடைபெறுகிறது. இதில் பயங்கரவாதிகள் புகுந்து நாச வேலையில் ஈடுபடலாம் என்று கருதி டெல்லி போலீசார் கடந்த சில நாட்களாகவே தீவிர சோதனை நடத்தி கண்காணித்து வருகிறார்கள்.

    சமீபத்தில் மத்திய டெல்லியின் ராஜ்கத் பகுதியில் பயங்கரவாதி பதுங்கி இருப்பதாக போலீசுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அந்த பகுதியில் போலீசாரும் பாதுகாப்பு படையினரும் சுற்றி வளைத்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

    அப்போது ஒரு பயங்கரவாதி பிடிபட்டான். அவன் பெயர் அப்துல் லத்தீப் கானாய் என்ற உமைல் என்ற திலாவர். போலீசார் அவனை கைது செய்து ரகசிய இடத்துக்கு கொண்டு சென்று விசாரணை நடத்தினார்கள்.

    இதில் டெல்லியில் நாளை நடைபெறும் குடியரசு தின விழாவை சீர்குலைக்கும் சதித்திட்டத்துடன் பதுங்கி இருந்ததாக திடுக்கிடும் தகவல் வெளியானது. காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் சமீபத்தில் கையெறி குண்டுகளை வீசி பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினார்கள். இந்த தாக்குதல் சம்பவத்துக்கு மூளையாக செயல்பட்டது தற்போது பிடிபட்ட லத்தீப் என்பதும் தெரிய வந்தது.

    ஸ்ரீநகரில் கையெறி குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியது போல் டெல்லி குடியரசு தின விழாவிலும் கையெறி குண்டுகளை வீசி தாக்குதல் நடத்த திட்டமிட்டு இருந்ததாக போலீஸ் விசாரணையின் போது தெரிவித்தான்.

    பயங்கரவாதி லத்தீப்பிடம் இருந்து சில ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன. மேலும் டெல்லி தாக்குதலுக்காக காஷ்மீரில் கையெறி குண்டுகளை பதுக்கி வைத்திருப்பதாக தெரிவித்தான். அதன்பேரில் போலீசார் காஷ்மீருக்கு விரைந்து சென்று 2 கையெறி குண்டுகளை கைப்பற்றினார்கள்.

    இது தொடர்பாக காஷ்மீரின் பந்திபோராவைச் சேர்ந்த மற்றொரு பயங்கரவாதி ஹிலால் என்பவனையும் போலீசார் கைது செய்தனர். இவன் டெல்லி வந்து பல இடங்களுக்கு சென்று தாக்குதல் நடத்துவதற்கு நோட்டமிட்டு சென்றுள்ளான்.

    பயங்கரவாதி லத்தீப் கைது செய்யப்பட்ட தகவல் காஷ்மீர் போலீஸ் அதிகாரிகளுக்கும் தெரிவிக்கப்பட்டது. இவன் கைது செய்யப்பட்டதன் மூலம் டெல்லி குடியரசு தின கொண்டாட்டத்தை சீர்குலைக்க நடந்த சதி திட்டம் முறியடிக்கப்பட்டது.

    இதற்கிடையே கேரள மாநிலம் கோழிக்கோடில் கடந்த 2006-ம் ஆண்டு இரட்டை குண்டுவெடிப்பு நடந்தது. இது தொடர்பாக 2-வது முக்கிய குற்றவாளியான முகமத் அசார் என்பவன் டெல்லி சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டான்.

    சவுதி அரேபியாவில் பதுங்கி இருந்த இவன் டெல்லி திரும்பிய போது அதிகாரிகள் விசாரணையின் போது குண்டு வெடிப்பில் தேடப்பட்டவன் என்பதை கண்டுபிடித்தனர். இவன் தலைச்சேரியை சேர்ந்தவன்.

    கடந்த 2003-ம் ஆண்டு கேரளாவின் மராட் பகுதியில் நடந்த படுகொலைகள் தொடர்பான குற்றவாளிகளுக்கு ஜாமீன் மறுக்கப்பட்டதால் கோழிக்கோடில் வெடிகுண்டு தாக்குதலில் ஈடுபட்டதாக அசார் தெரிவித்துள்ளான். இவனும் மற்ற இரு குற்றவாளிகளான யூசுப், நசீர் ஆகியோர் சேர்ந்து இந்த தாக்குதலில் ஈடுபட்டனர்.

    2006 மார்ச் மாதம் 3-ந் தேதி கோழிக்கோடில் கேரள அரசு போக்குவரத்து கழக பஸ் நிலையத்தில் ஒரு குண்டும், கால்வாயில் மற்றொரு குண்டும் வெடித்தது. இதில் 2 பேருக்கு மட்டும் காயம் ஏற்பட்டது. இந்த குண்டு வெடிப்பு பற்றி தேசிய புலனாய்வு அமைப்பு அதிகாரிகள் விசாரணை நடத்தியதில் 2-வது குற்றவாளி சிக்கியுள்ளான். #RepublicDay

    Next Story
    ×