search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆதரவு எம்எல்ஏக்களின் கடிதங்களை நாளை தாக்கல் செய்ய எடியூரப்பாவுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு
    X

    ஆதரவு எம்எல்ஏக்களின் கடிதங்களை நாளை தாக்கல் செய்ய எடியூரப்பாவுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு

    கர்நாடகா முதல்வராக இன்று பதவி ஏற்கும் எடியூரப்பா ஆதரவு எம்எல்ஏக்களின் கடிதங்களை நாளை காலை 10:30 மணிக்குள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. #KarnatakaElection #KarnatakaCMRace #Yeddyurappa
    புதுடெல்லி:

    கர்நாடகாவில் பாஜகவை ஆட்சியமைக்க கவர்னர் அழைப்பு விடுத்துள்ளார். ஆளுநரின் இந்த முடிவை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் உச்சநீதிமன்றத்தில் நேற்றிரவு மனுதாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவை இரவிலேயே விசாரிக்க காங்கிரஸ் கோரிக்கை விடுத்தது. 

    இதையடுத்து காங்கிரஸ் தாக்கல் செய்த மனுவை இரவே விசாரிக்க தலைமை நீதிபதி ஒப்புதல் அளித்துள்ளார். நள்ளிரவு 1.45 மணிக்கு ஏ.கே.சிக்ரி, அஷோக் பூஷண், எஸ்.ஏ.பாப்டே ஆகிய 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு முன்னிலையில் காங்கிரஸ் மனுவின் விசாரணை தொடங்கியது. உச்சநீதிமன்ற அறை எண் 6-ல் விசாரணை நடைபெற்றது.  உச்சநீதிமன்றம் வந்துள்ளார்.

    ஆளுநர் சார்பில் மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் கே.கே.வேணுகோபால், வழக்கறிஞர் துஷார் மேத்தா, பாஜக தரப்பில் வழக்கறிஞர் முகுல் ரோஹத்கி ஆகியோர் வாதாடினர். காங்கிரஸ் சார்பில் வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி வாதாடினார்.

    காங்கிரஸ் வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி பல்வேறு வாதங்களை முன்வைத்தார். ஒரு மணி நேரத்துக்கும் மேலாக வாதிட்ட சிங்வியின் வாதத்தை முடித்துக்கொள்ளுமாறு நீதிபதிகள் அறிவுறுத்தினர். இதையடுத்து அவர் தனது வாதத்தை முடித்துக்கொண்டார். அதன்பின் வழக்கறிஞர் கே.கே.வேணுகோபால் மற்றும் பா.ஜ.க. வழக்கறிஞர் முகுல் ரோஹத்கி தங்கள் தரப்பு வாதங்களை முன்வைத்தனர்.

    இதையடுத்து எடியூரப்பா முதல்வராக பதவி ஏற்பதற்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்தது. அனைத்து தரப்பினருக்கும் நோட்டிஸ் அனுப்பி விசாரணை நடத்தப்படும் என நீதிபதிகள் தெரிவித்தனர். 

    பதவியேற்பை மாலை 4:30 மணி வரை ஒத்திவைக்க வேண்டும் எனவும், ஆதரவளிக்கும் எம்.எல்.ஏ.க்களின் பட்டியலை அளிக்க எடியூரப்பாவிற்கு உத்தரவிட வேண்டும் எனவும் சிங்வி வேண்டுகோள் விடுத்தார். 

    ஆளுநரின் முடிவில் நீதிமன்றம் தலையிட முடியாது என கே.கே.வேணுகோபால் மற்றும் முகுல் ரோஹத்கி வாதாடிய நிலையில், ஆளுநரின் செயல்பாடுகள் நீதிமன்றத்தின் ஆய்வில் கீழ்தான் வரும் என நீதிபதி பாப்டே கூறினார். 

    சுமார் 3 மணிநேரத்திற்கும் மேலாக நடைபெற்ற விசாரணைக்கு பின்னர் உச்ச நீதிமன்ற நீதிபதி ஏ.கே.சிக்ரி தீர்ப்பை வாசித்தார். ஆளுநரின் முடிவில் தலையிடவோ, விளக்கம் கேட்டு அவருக்கு நோட்டீஸ் அனுப்பவோ முடியாது. எடியூரப்பா கர்நாடகா முதல்வராக பதவி ஏற்க தடையில்லை. மே 15-ம் தேதி ஆளுநரிடம் தாக்கல் செய்த ஆதரவு எம்.எல்.ஏ.க்களின் கடிதங்களின் நகல்களை நாளை காலை 10:30 மணிக்குள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும். அடுத்தகட்ட விசாரணை நாளை காலை 10:30 மணிக்கு எடுத்துக்கொள்ளப்படும், என நீதிபதி சிக்ரி தெரிவித்தார். #KarnatakaElection #KarnatakaCMRace #Yeddyurappa
    Next Story
    ×