search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    2 நீதிபதிகள் நியமனத்தை நிறுத்தி வைத்த மத்திய அரசு
    X

    2 நீதிபதிகள் நியமனத்தை நிறுத்தி வைத்த மத்திய அரசு

    சீனியாரிட்டி பின்பற்றப்படவில்லை என்ற தகவல் வந்ததை அடுத்து 2 நீதிபதிகள் நியமனத்தை மத்திய அரசு நிறுத்தி வைத்துள்ளது.

    புதுடெல்லி:

    சுப்ரீம் கோர்ட்டு, ஐகோர்ட்டு நீதிபதிகளை நியமனம் செய்வதற்காக சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி தலைமையில் ‘கொலேஜியம்’ என்ற குழு செயல்பட்டு வருகிறது.

    இந்த குழுவின் செயல்பாடுகள் சரியில்லை என ஏற்கனவே புகார் கூறப்பட்டு வந்தது. விதிமுறைகளை மீறி நீதிபதிகள் ‘கொலேஜியம்’ தேர்வு செய்வதாக குற்றம்சாட்டப்பட்டு வந்தது.

    சமீபத்தில் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் செலாம்மேஸ்வர், ரஞ்சன் கோகாய், மதன் லோகூர், குரியர் ஜோசப் ஆகியோர் கூட்டாக நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர்.

    அப்போது அவர்கள் நீதிபதிகள் நியமனம் தொடர்பாக குற்றச்சாட்டுகளை கூறினார்கள். மேலும் வழக்குகளை நீதிபதிகளுக்கு ஒதுக்கீடு செய்வதிலும் பல்வேறு தவறுகள் நடப்பதாக புகார் தெரிவித்தனர். தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராதான் இதற்கு காரணம் எனவும் அவர்கள் தெரிவித்தனர்.

    தலைமை நீதிபதி குறித்து மற்ற நீதிபதிகள் புகார் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. பின்னர் தலைமை நீதிபதி- நீதிபதிகள் இடையே சமரச பேச்சு நடத்தப்பட்டது. இதனால் இந்த பிரச்சினைக்கு தற்காலிகமாக முற்றுப் புள்ளி விழுந்தது.

    இந்த நிலையில் விதி முறைகளை மீறியும், சீனியாரிட்டியை புறக்கணித்து விட்டு 2 நீதிபதிகளை ‘கொலேஜியம்’ நியமனம் செய்துள்ளது.

    அதாவது உத்தரகாண்ட் ஐகோர்ட்டு தலைமை நீதிபதி கே.எம். ஜோசப் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதியாகவும், பஞ்சாப், அரியானா ஐகோர்ட்டு நீதிபதி சூரியகாந்த் இமாச்சலபிரதேச தலைமை நீதிபதியாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    இவர்களை நியமித்து ‘கொலேஜியம்’ அமைப்பு மத்திய அரசுக்கு சிபாரிசு செய்தது. ஆனால், இந்த நியமனத்தில் சீனியாரிட்டி பின்பற்றப்படவில்லை என்ற தகவல் வந்ததை அடுத்து மத்திய அரசு இருவரின் நியமனத்தையும் நிறுத்தி வைத்துள்ளது.

    அதிலும் கே.எம். ஜோசப் மிகவும் ஜூனியர் என்றும், அவருக்கு சீனியர்கள் பலர் இருந்தும் புறக்கணித்து விட்டு இவரை நியமித்து விட்டதாகவும் கூறப்படுகிறது.

    நீதிபதிகள் நியமனம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு ஏற்கனவே 2 தீர்ப்புகளை வழங்கி உள்ளது. அந்த தீர்ப்பையும் மீறி கே.எம். ஜோசப்பை நீதிபதியாக நியமித்து இருக்கிறார்கள்.

    ஜோசப் மொத்தம் உள்ள ஐகோர்ட்டு தலைமை நீதிபதிகள் 24 பேர் சீனியாரிட்டி வரிசையில் 12-வது இடத்தில் இருக்கிறார்.

    அகில இந்திய நீதிபதிகள் சீனியாரிட்டி வரிசையில் 45-வது இடத்தில் இருக்கிறார். அவருக்கு சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி பதவி வழங்கியது கடுமையான விதி மீறல் என்று கூறப்பட்டுள்ளது.

    இவர்கள் இருவரையும் நீதிபதிகளாக நியமித்து ஒரு மாதம் 20 நாட்கள் ஆகிறது. மத்திய அரசு நியமனத்தை முடக்கி வைத்திருப்பதால் அவர்கள் அந்த பதவிக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

    Next Story
    ×