search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பஞ்சாப் நேஷனல் வங்கி முறைகேடு - நிரவ் மோடி உறவினரின் ரூ.1,217 கோடி சொத்து முடக்கம்
    X

    பஞ்சாப் நேஷனல் வங்கி முறைகேடு - நிரவ் மோடி உறவினரின் ரூ.1,217 கோடி சொத்து முடக்கம்

    பஞ்சாப் நேஷனல் வங்கி முறைகேட்டில் ஈடுபட்டுள்ள நிரவ் மோடி உறவினரின் 41 சொத்துக்களை அமலாக்கத்துறையினர் இன்று முடக்கினர். இதன் மதிப்பு ரூ.1,217 கோடியாகும்.
    புதுடெல்லி:

    பஞ்சாப்  நேஷனல் வங்கியில் வைர வியாபாரி நிரவ் மோடி ரூ.12,717 கோடி மோசடி செய்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.



    இந்த மோசடி தொடர்பாக சி.பி.ஐ. அமலாக்கத்துறை ஆகியவை  விசாரித்து வருகிறது.

    இந்த மோசடியில் தொடர்புடைய நிரவ்மோடி அவரது மனைவி அமீ மோடி, சகோதரர் நிஷால் உறவினர் மெகுல் சோக்ஷி ஆகிய 4 பேர் வெளிநாடு  தப்பிவிட்டனர். அவர்களை கைது செய்ய சர்வதேச போலீஸ்  உதவி மூலம் சி.பி.ஐ. நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த மோசடி தொடர்பாக வங்கி அதிகாரிகள், நிரவ்மோடி நிறுவனத்தினர்  பலர் கைதாகி உள்ளனர்.

    நிரவ் மோடியின் அனைத்து  சொத்துக்களையும் அமலாக்கத்துறை முடக்கி உள்ளது. வெளிநாட்டு சொத்துக்களையும் முடக்க நடவடிக்கை எடுத்து வருகிறது. வங்கி கணக்குகள் முடக்கப்பட்டன. சொகுசு கார்கள், இறக்குமதி செய்யப்பட்ட கடிகாரம் என பல பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

    இதற்கிடையே நிரவ் மோடி உறவினர் மெகுல் சோக்ஷியின் சொத்துக்களை முடக்கி அமலாக்கத்துறையினர் நடவடிக்கை எடுத்து உள்ளனர்.

    நிரவ் மோடியின் மாமாவான மெகுல் சோக்ஷி கீதாஞ்சலி ஜெம்ஸ் கம்பெனிகளின்  ஊக்குவிப்பவராக இருக்கிறார். அவரது 41 சொத்துக்களை அமலாக்கத்துறையினர் இன்று முடக்கினர். இதன் மதிப்பு ரூ.1,217 கோடியாகும்.

    சட்டவிரோத பண பரிவர்த்தனை தடுப்பு சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறையினர் இந்த அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டனர்.
    மும்பையில் உள்ள 15 பிளாட், 17 அலுவலகம், கொல்கத்தாவில் உள்ள வணிக வளாகம், மும்பை கடற்கரையில் உள்ள 4 ஏக்கர் பண்ணை வீடு ஆகியவை இதில் அடங்கும்.

    மராட்டிய மாநிலம் நாசிக், நாக்பூர்,  பான்வெல் மற்றும் விழுப்புரம் ஆகிய நகரங்களில் உள்ள 231 ஏக்கர் நிலங்களும் முடக்கப்பட்ட சொத்துக்களில் அடங்கும்.

    ஐதராபாத் ரங்கா ரெட்டி மாவட்டத்தில் உள்ள 170 ஏக்கர் பூங்காவும் முடக்கப்பட்டது. இதன் மதிப்பு ரூ.500 கோடியாகும். போனி விலா, சாந்தா குரூஸ் பகுதியில் உள்ள 4 பிளாட், வணிக வளாகமும் முடக்கப்பட்ட சொத்துக்கள் ஆகும். #tamilnews
    Next Story
    ×