search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மாநிலங்களவை உறுப்பினரை ‘பாடி கார்ட்’ என்பதா?: துணை சபாநாயகரை கண்டித்து காங்கிரஸ் எம்.பி.க்கள் அமளி
    X

    மாநிலங்களவை உறுப்பினரை ‘பாடி கார்ட்’ என்பதா?: துணை சபாநாயகரை கண்டித்து காங்கிரஸ் எம்.பி.க்கள் அமளி

    மாநிலங்களவையில் தனது இருக்கைக்கு அருகே முற்றுகையிட்ட எம்.பி.யை ‘பாடி கார்ட்’ என்று குறிப்பிட்ட துணை சபாநாயகர் குரியனை கண்டித்து காங். எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டனர்.
    புதுடெல்லி:

    மாநிலங்களவையில் தனது இருக்கைக்கு அருகே முற்றுகையிட்ட எம்.பி.யை ‘பாடி கார்ட்’  என்று குறிப்பிட்ட துணை சபாநாயகர் குரியனை கண்டித்து காங். எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டனர்.

    பாராளுமன்றத்தில் நேற்று தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் ஆந்திர மாநிலம் புறக்கணிக்கப்பட்டதாக அம்மாநில முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு வேதனை தெரிவித்துள்ளார்.

    இந்நிலையில்,  பாராளுமன்ற மாநிலங்களவையில் இன்றைய கேள்வி நேரத்தின்போது, கடந்த 2014-ம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட ஆந்திர மாநிலம் தொடர்பான மறு கட்டமைப்பு சட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து ஆந்திர மாநில காங்கிரஸ் எம்.பி., கே.வி.பி. ராமச்சந்திரா ராவ் என்பவர், துணை சபாநாயகர் பி.ஜே. குரியன் அமர்ந்திருந்த நாற்காலிக்கு அருகே ‘ஆந்திரப் பிரதேசத்தை காப்பாற்றுங்கள்’ என்ற பதாகையுடன் நின்றபடி போராட்டத்தில் ஈடுபட்டார்.

    கே.வி.பி. ராமச்சந்திரா ராவை அவரது இருக்கையில் சென்று அமருமாறு சபாநாயகர் குரியன் கேட்டுக் கொண்டார். ஆனால், நின்ற இடத்தைவிட்டு நகராமல் கே.வி.பி. ராமச்சந்திரா ராவ் தனது போராட்டத்தை தொடர்ந்தார்.

    இதைகண்டு எரிச்சல் அடைந்த கர்நாடக மாநில காங்கிரஸ் எம்.பி., பி.கே.ஹரிபிரசாத், கே.வி.பி. ராமச்சந்திரா ராவை அவரது இருக்கையில் சென்று அமருமாறு துணை சபாநாயகர் உத்தரவிட வேண்டும் என கூறினார். இதனால், எரிச்சலடைந்த துணை சபாநாயகர் குரியன், அவர் எனது  ‘பாடி கார்ட்’ (மெய்க்காப்பாளர்) ஆக காலையில் இருந்து நின்று கொண்டிருக்கிறார். இருந்துவிட்டு போகட்டும் என கூறினார்.


    துணை சபாநாயகர் குரியனின் இந்த கருத்தை கேட்டு அவையில் இருந்த காங்கிரஸ் எம்.பி.க்கள் ஆவேசம் அடைந்தனர். அவையின் உறுப்பினரை துணை சபாநாயகர் ‘பாடி கார்ட்’  என்று குறிப்பிட்டிருக்க கூடாது என அவர்கள் கூச்சலிட்டு எதிர்ப்பு தெரிவித்தனர்.

    இதற்கு பதிலளித்த துணை சபாநாயகர் குரியன், ‘இவ்விவகாரம் தொடர்பாக முறைப்படி எவ்வித முன் நோட்டீஸ் அளிக்காமல் காங்கிரஸ் எம்.பி., கே.வி.பி. ராமச்சந்திரா ராவ் துணை சபாநாயகரின் இருக்கை அருகே இன்று காலை மறியல் செய்தார். அவரது இடத்துக்கு சென்று அமருமாறு நான் கூறியும் ஒழுக்கமற்ற முறையில் அவர் நடந்து கொண்டார். இவரைப் போன்றவர்களை இங்கு அனுப்பியதற்காக மக்கள் வருத்தம் அடைவார்கள்’ என்று கூறினார்.

    இதன் பின்னரும், இதர காங்கிரஸ் எம்.பி.க்கள் வலியுறுத்தியும் தனது இருக்கைக்கு திரும்பாத கே.வி.பி. ராமச்சந்திரா ராவ், தொடர்ந்து துணை சபாநாயகரின் இருக்கை அருகே பதாகையுடன் நின்று கொண்டிருந்தார். #tamilnews
    Next Story
    ×