search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பீகாரில் நிதிஷ்குமாருக்கு எதிராக சரத்யாதவ் பிரசார பயணம்
    X

    பீகாரில் நிதிஷ்குமாருக்கு எதிராக சரத்யாதவ் பிரசார பயணம்

    ஐக்கிய ஜனதா தளம் கட்சிக்கு செல்வாக்குமிக்க 7 மாவட்டங்களில் சரத்யாதவ் சுற்றுப் பயணம் செய்து நிதிஷ் குமாருக்கு எதிராக பிரசாரம் செய்கிறார்.

    பாட்னா:

    பீகாரில் முதல்-மந்திரி நிதிஷ்குமார் லல்லுபிரசாத் கட்சியுடனான கூட்டணியை முறித்துக் கொண்டு பா.ஜனதாவுடன் சேர்ந்து கூட்டணி ஆட்சி அமைத்தார்.

    இதற்கு ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் மூத்த தலைவர் சரத்யாதவ் எதிர்ப்பு தெரிவித்தார். அவரது எதிர்ப்பையும் மீறி நிதிஷ் குமார் பா.ஜனதாவுடன் இணைந்தார். இதனால் அதிருப்தியில் இருக்கும் சரத்யாதவ் தனிக்கட்சி தொடங்க திட்டமிட்டுள்ளார்.

    அவர் லல்லுபிரசாத் யாதவுடன் இணைந்து செயல்பட திட்டமிட்டுள்ளார். அதனால் சரத்யாதவை கட்சியில் இருந்து நீக்கவும் ஐக்கிய ஜனதா தளம் திட்டமிட்டுள்ளது.

    இதற்கிடையே சரத்யாதவ் நிதிஷ்குமாருக்கு எதிராக பீகாரில் 3 நாள் பிரசார பயணத்தை நேற்று பாட்னாவில் தொடங்கினார். அவரை ஏராளமான ஐக்கிய ஜனதா தளம் தொண்டர்களும், ராஷ்டீரிய ஜனதா தளம் தொண்டர்களும் வரவேற்றனர்.

    அவர்கள் மத்தியில் பேசிய சரத்யாதவ் அங்கிருந்து ஹாஜிபூர் புறப்பட்டுச் சென்றார். இன்று ஹாஜிபூரில் பிரமாண்ட பொதுக் கூட்டம் நடக்கிறது. இதில் நிதிஷ்குமாரின் முடிவை கண்டித்து சரத்யாதவ் சிறப்புரையாற்றுகிறார்.

    தொடர்ந்து ஐக்கிய ஜனதா தளம் கட்சிக்கு செல்வாக்குமிக்க 7 மாவட்டங்களில் சரத்யாதவ் சுற்றுப் பயணம் செய்து நிதிஷ் குமாருக்கு எதிராக பிரசாரம் செய்கிறார்.

    இதற்கிடையே நிதிஷ் குமாருக்கு எதிராக சரத்யாதவ் வெளிப்படையாக கருத்து தெரிவித்து வருவதால் அவர் மீது கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டதாக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படுகிறது. அதன் பிறகு அவர் கட்சியில் இருந்து நீக்கப்படுவார் என்று ஐக்கிய ஜனதா தளம் மூத்த தலைவர்கள் தெரிவித்தனர்.

    இதற்கு பதில் அளித்து சரத்யாதவ் கூறியதாவது:-

    பீகார் மக்கள் மகா கூட்டணிக்குத்தான் வாக்களித்தனர். பா.ஜனதாவும், ஐக்கிய ஜனதா தளம் ஒருவரையொருவர் எதிர்த்து போட்டியிட்டனர். தேர்தல் வாக்குறுதிகளும் வெவ்வேறு விதமாக வெளியிடப்பட்டன. ஆனால் இடையில் பா.ஜனதாவும், ஐக்கிய ஜனதா தளமும் கூட்டணி ஆட்சி அமைத்துள்ளன. கடந்த 70 ஆண்டுகளில் ஜனநாயகத்தில் இது போன்ற ஒரு நிகழ்வு நடந்தது இல்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×