search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முன்னாள் டி.ஜி.பி. சத்தியநாராயணராவ் மீது கர்நாடக அரசு எடுத்த நடவடிக்கை என்ன?: பொதுகணக்கு குழு கேள்வி
    X

    முன்னாள் டி.ஜி.பி. சத்தியநாராயணராவ் மீது கர்நாடக அரசு எடுத்த நடவடிக்கை என்ன?: பொதுகணக்கு குழு கேள்வி

    முன்னாள் டி.ஜி.பி. சத்திய நாராயணராவ் மீது டி.ஐ.ஜி ரூபா கொடுத்த புகார் அடிப்படையில் இதுவரை கர்நாடக அரசு என்ன நடவடிக்கை? எடுத்துள்ளது என்று கர்நாடக சட்டமன்ற பொதுகணக்கு குழு கேள்வி எழுப்பி உள்ளது.
    பெங்களூரு:

    பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் சசிகலாவுக்கு சிறப்பு வசதிகள் செய்து கொடுக்க கூடுதல் டி.ஜி.பி. சத்தியநாராயண ராவ் ரூ.2 கோடி லஞ்சம் வாங்கியதாக டி.ஐ.ஜி. ரூபா குற்றம்சாட்டி இருந்தார்.



    அதற்கான வீடியோ ஆதாரங்கள் வெளியாகி கர்நாடக மாநிலத்திலும், தமிழகத்திலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    சிறப்பு சலுகைகள் வழங்கியதற்காக முன்னாள் டி.ஜி.பி சத்தியநாராயணராவிற்கு லஞ்சம் கொடுத்ததாக எழுந்த குற்றச்சாட்டை அடுத்து டி.ஐ.ஜி. ரூபா மற்றும் தலைமை சிறை கண்காணிப்பாளர் கிருஷ்ணகுமார், சிறை கண்காணிப்பாளர் அனிதா ராய் ஆகியோர் பணியிடமாற்றம் செய்யப்பட்டனர். இதில் ரூபாவை தவிர மற்ற 3 பேர் மீதும் முறைகேடு குற்றச்சாட்டு புகார் உள்ளது.

    சிறை விதிமீறல்கள் மற்றும் முன்னாள் டி.ஜி.பி. சத்தியநாராயணராவ் லஞ்சம் பெற்ற புகார் குறித்து கர்நாடக ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி வினய்குமார் தலைமையில் பெங்களூரு மாநகர குற்றப்பிரிவு கூடுதல் கமி‌ஷனர் ரவி, மைசூர் சிறை சூப்பிரண்டு ஆனந்த் ரெட்டி ஆகியோர் தலைமையிலான உயர்மட்ட குழுவினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அவர்கள் நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) விசாரணை அறிக்கையை தாக்கல் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    உயர்மட்ட விசாரணைக் குழுவினர் இதுவரை சத்திய நாராயணராவ் மற்றும் அவர் மீது புகார் கூறிய ரூபாவிடம் விசாரணை நடத்தவில்லை. ஜெயிலில் அரங்கேறிய விதிமுறை மீறல் குறித்தும் சசிகலாவுக்கு அளிக்கப்பட்ட சிறப்பு சலுகைகள் குறித்தும் விசாரணை நடத்தி உள்ளனர்.

    உயர்மட்டக்குழு தாக்கல் செய்யும் அறிக்கையில் இந்த விவரங்கள் இடம் பெற்றுள்ளதாக தெரிகிறது.

    இந்த நிலையில் முன்னாள் டி.ஜி.பி. சத்திய நாராயணராவ் மீது டி.ஐ.ஜி ரூபா கொடுத்த புகார் மீது இதுவரை கர்நாடக அரசு என்ன நடவடிக்கை? எடுத்துள்ளது என்று கர்நாடக சட்டமன்ற பொதுகணக்கு குழு கேள்வி எழுப்பி உள்ளது.

    மேலும் கர்நாடக அரசு எடுத்துள்ள நடவடிக்கை குறித்த அறிக்கையை 15 நாட்களுக்குள் கர்நாடக சட்டமன்ற பொதுக்கணக்கு குழுவில் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் அந்த குழு கூறி உள்ளது.

    இதுகுறித்து கர்நாடக சட்டமன்ற பொதுக்கணக்கு குழு தலைவர் அசோக் கூறியதாவது:-

    சசிகலாவுக்கு சலுகைகள் வழங்கிய விவகாரத்தில் டி.ஜி.பி. சத்தியநாராயண ராவ் ரூ.2 கோடி லஞ்சம் வாங்கியதாக அவர் மீது டி.ஐ.ஜி. ரூபா புகார் கூறி உள்ளார். இந்த புகார் சாதாரணமாக எடுத்துக் கொள்ளக்கூடாது

    டி.ஐ.ஜி. ரூபா கூறிய புகார் மீது கர்நாடக அரசு இதுவரை எந்தவித நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றும், அவை எந்த அளவிற்கு உள்ளது என்றும் கர்நாடக சட்ட மன்ற பொதுக்கணக்கு குழு முன்னிலையில் 15 நாட்களுக்குள் சமர்ப்பிக்க வேண்டும். அவ்வாறு கர்நாடக அரசு சமர்ப்பிக்க தவறினால் கர்நாடக சட்டமன்ற பொதுக்கணக்கு குழு உறுப்பினர்கள் பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறைக்கு சென்று ஆய்வு நடத்துவார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதனால் சசிகலா விவகாரம் மேலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ஊழல் புகாரில் சிக்கி உள்ள சத்தியநாராயணராவ் வருகிற 31-ந்தேதி (திங்கட்கிழமை) ஓய்வுபெற இருக்கிறார். அவரிடம் விசாரணை நடத்தக்கூடாது என மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையாவிடம் வலியுறுத்தி உள்ளதாக கூறப்படுகிறது.

    இதனால் சத்திய நாராயணராவ் ஓய்வு பெறும் நாளில் சஸ்பெண்ட் ஆவாரா? என்பது கேள்விக்குறியாக உள்ளது.
    Next Story
    ×