என் மலர்

  செய்திகள்

  சிறையில் சசிகலாவுக்கு சலுகை: ஹவாலா மூலம் ரூ.2 கோடி வழங்கிய முக்கிய ஆவணம் சிக்கியது
  X

  சிறையில் சசிகலாவுக்கு சலுகை: ஹவாலா மூலம் ரூ.2 கோடி வழங்கிய முக்கிய ஆவணம் சிக்கியது

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சசிகலாவுக்கு சிறையில் சிறப்பு வசதிகள் செய்து கொடுக்க ரூ. 2 கோடி ஹவாலா மூலம் கைமாறியது உறுதியானது. இந்த பணம் உயர்மட்ட அதிகாரிகள் முதல் சிறை காவலர்கள் வரை வழங்கப்பட்டுள்ளதும் தற்போது தெரியவந்துள்ளது.
  பெங்களூரு:

  சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்று பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவுக்கு சிறப்பு வசதிகள் செய்து கொடுக்க சிறைத்துறை கூடுதல் டி.ஜி.பி. சத்தியநாராயணராவ் ரூ. 2 கோடி லஞ்சம் வாங்கியதாக டி.ஐ.ஜி. ரூபா குற்றம் சாட்டி இருந்தார்.  ரூபாவின் இந்த குற்றச்சாட்டு நேற்று உறுதியானது. கர்நாடக சட்டசபையில் பொது கணக்கு குழுக் கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு பொது கணக்கு குழு தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான அசோக் தலைமையில் நடந்தது.

  இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட சிறைத்துறை கூடுதல் டி.ஜி.பி. மேகரிக், டி.ஐ.ஜி. ரேவண்ணா ஆகியோர் சசிகலாவுக்கு சிறையில் சிறப்பு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டு இருந்தது உண்மை தான் என்பதை ஒப்புக்கொண்டனர்.

  சிறையில் சசிகலாவுக்கு விசே‌ஷ சமையல் அறையுடன் 5 தனி அறைகள் உள்பட சிறப்பு வசதிகள் செய்யப்பட்டு இருந்தன என்றும் அவர் தங்கி இருந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்கள் செயல்படாமல் இருந்தன என்றும் அவர்கள் கூறினார்கள்.

  இந்த நிலையில் சசிகலாவுக்கு செய்யப்பட்ட சிறப்பு வசதிகள் மற்றும் சிறை விதிமுறை மீறல்கள் குறித்து ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி வினய்குமார், பெங்களூரு மாநகர குற்றப்பிரிவு கூடுதல் கமி‌ஷனர் ரவி, மைசூரு சிறை சூப்பிரண்டு ஆனந்த ரெட்டி ஆகியோர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

  இவர்கள் முதல்கட்ட விசாரணை அறிக்கையை வருகிற திங்கட்கிழமை தாக்கல் செய்வார்கள் எனறு எதிர்பார்க்கப்படுகிறது. விசாரணைக்கு பிறகு சிறை அதிகாரிகள்மீது நடவடிக்கை எடுக்க கர்நாடக அரசு திட்டமிட்டுள்ளது.

  இந்த மாத இறுதியில் சிறைத்துறை கூடுதல் டி.ஜி.பி. சத்திய நாராயணராவ் ஓய்வு பெற உள்ளார். தற்போது சசிகலாவுக்கு சிறையில் சிறப்பு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டது உறுதியாகி உள்ளதால் அவர் சஸ்பெண்டு செய்யப்படுவார் .

  பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறை தலைமை சூப்பிரண்டாக இருந்து தற்போது காத்திருப்போர் பட்டியலில் உள்ள கிருஷ்ணகுமார் பரப்பன அக்ரஹார பெண்கள் சிறை சூப்பிரண்டாக இருந்து தற்போது தார்வாட் சிறைக்கு மாற்றப்பட்டுள்ள அனிதா ராய் ஆகியோர் மீதும் சஸ்பெண்டு நடவடிக்கை பாயும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

  இதுதவிர சிறையில் உள்ள வார்டர்கள், உதவி வார்டர்கள், பெண் சிறை காவலர்கள் ஆகியோர் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.

  சிறையில் சசிகலாவுக்கு சிறப்பு வசதிகள் செய்து கொடுக்கப்பட்ட தகவல் வெளியானதும் ஒரு முக்கிய பிரமுகர் சிறைத்துறை டி.ஐ.ஜி. ரூபாவை தொடர்பு கொண்டு பேசி உள்ளார்.

  அப்போது தங்களிடம் உள்ள ஆதாரத்தை வெளியிட வேண்டாம் என்று அந்த முக்கிய பிரமுகர் கேட்டுக் கொண்டாராம். அதற்கு அதிகாரி ரூபா ஒப்புக்கொள்ளவில்லை.

  இதுதொடர்பான பேச்சு விவரங்களை அதிகாரி ரூபா தனது செல்போனில் பதிவு செய்து வைத்துள்ளதாகவும், உயர்மட்டக் குழு விசாரணையின் போது இதை வெளியிட திட்டமிட்டுள்ளதாகவும் செய்தி உலா வருகிறது.

  கர்நாடக போலீஸ் துறை மந்திரியாக இருந்த பரமேஸ்வர் தும்கூருவை சேர்ந்தவர். இவருக்கு சொந்தமாக மருத்துவம் மற்றும் என்ஜினீயரிங் கல்லூரிகள் உள்ளன. இதுதவிர பெரிய தொழில் அதிபராகவும் உள்ளார். தினமும் கோடிக்கணக்கில் அவருக்கு வருமான வழிகள் இருக்கிறது. இதனால் அவர் சசிகலாவுக்கு சிறப்பு வசதிகள் செய்து கொடுக்க பணம் எதுவும் பெறவில்லை என்பது கர்நாடக உளவுத்துறை போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது.

  அவர் மந்திரி பொறுப்பை விட மாநில காங்கிரஸ் தலைவர் பொறுப்பில் இருக்க வேண்டும் என்று நினைத்து மந்திரி பதவியை ராஜினாமா செய்தவர்.

  இதனால் அவர் மீது ஊழல் குற்றச்சாட்டுக்கு வழியில்லை. ஆனால் அவரது உதவியாளர் பிரகாஷ் மீது உள்ள குற்றச்சாட்டு குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. கடந்த ஏப்ரல் மாதம் இரட்டை இலை சின்னத்துக்கு லஞ்சம் கொடுத்த வழக்கில் தினகரன் கைது செய்யப்பட்டார்.

  அப்போது தினகரனின் நண்பர்களில் ஒருவரான பெங்களூருவை சேர்ந்த மல்லிகார்ஜுனா என்பவரையும் டெல்லி போலீசார் பிடித்து விசாரித்தனர்.

  அவருடன் பெங்களூருவை சேர்ந்த போலீஸ் மந்திரி பரமேஸ்வரின் உதவியாளர் பிரகாஷ் அடிக்கடி போனில் பேசியது தெரிய வந்தது. இதனால் பிரகாஷை போலீசார் டெல்லி அழைத்து சென்று விசாரித்தனர்.

  அப்போது அவர் இரட்டை இலை சின்னத்துக்கு லஞ்சம் கொடுக்க பணம் கைமாறவில்லை என்றும், சசிகலாவுக்கு சிறையில் பிறப்பு வசதிகள் செய்து கொடுக்க ரூ.2 கோடி கைமாறியதாகவும் கூறினார்.

  இதைத்தொடர்ந்து அவரிடம் டெல்லி போலீசாரும் மத்திய உளவு பிரிவு மற்றும் உள்துறை அதிகாரிகளும் விசாரித்தனர்.

  இந்த விசாரணையில் சசிகலாவுக்கு சிறையில் சிறப்பு வசதிகள் செய்து கொடுக்க ரூ. 2 கோடி ஹவாலா மூலம் கைமாறியது உறுதியானது.

  இந்த 2 கோடி ரூபாயை பரமேஸ்வரின் நண்பரும், கர்நாடக மாநிலம் தும்கூரில் பிறந்து தற்போது ஆஸ்திரேலியாவில் வசித்து வரும் ஒரு முக்கிய பிரமுகர் இந்த பணத்தை பெங்களூரு மற்றும் டெல்லி வழியாக ஹவாலா மூலம் அனுப்பியது தெரியவந்தது.

  இந்த பணம் உயர்மட்ட அதிகாரிகள் முதல் சிறை காவலர்கள் வரை வழங்கப்பட்டுள்ளதும் தற்போது தெரியவந்துள்ளது. ஹவாலா பணம் பரிமாற்றம் தொடர்பான முக்கிய ஆவணமும் வங்கி கணக்கு விவரங்களும் தற்போது சிக்கி உள்ளன.

  சிறையில் சசிகலாவை பிரகாஷ் சந்தித்து பேசிய தகவலும் தற்போது வெளியாகி உள்ளது. சிறையில் சசிகலாவை பிரகாஷ் சந்தித்த தகவலை சிறைத்துறை டி.ஐ.ஜி.யாக இருந்த ரூபாவும் உறுதிப்படுத்தி உள்ளார். இதனால் அடுத்த கட்டமாக பிரகாஷ் மீது நடவடிக்கைகள் பாயும் என்று கூறப்படுகிறது.

  Next Story
  ×