search icon
என் மலர்tooltip icon

    தேர்தல் செய்திகள்

    வேலூர் மக்களவை தொகுதியில் போட்டியிட ஏ.சி.சண்முகம் மற்றும் கதிர்ஆனந்த் ஆகியோர் தாக்கல் செய்திருந்த வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நிறுத்தி வைக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
    வேலூர்:

    வேலூர் பாராளுமன்ற தொகுதி தேர்தல் வருகிற 5-ந் தேதி நடக்கிறது. 11-ந் தேதி வேட்புமனுதாக்கல் தொடங்கி நேற்றுடன் முடிவடைந்தது. மொத்தம் 50 பேர் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.

    மனுக்கள் பரிசீலனை வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டரும் தேர்தல் அலுவலவருமான சண்முகசுந்தரம் தலைமையில் இன்று நடந்தது.

    அ.தி.மு.க. சார்பில் மாவட்ட பொருளாளர் மூர்த்தி, வக்கீல்கள், தி.மு.க. வேட்பாளர் கதிர்ஆனந்த், முன்னாள் அமைச்சர் துரைமுருகன், மாவட்ட செயலாளர் நந்தகுமார் மற்றும் வக்கீல்கள் கலந்து கொண்டனர்.

    மற்றும் சுயேட்சை வேட்பாளர்களும் அவரது ஆதரவாளர்களும் பங்கேற்றனர்.

    அ.தி.மு.க. கூட்டணி வேட்பாளர் ஏ.சி. சண்முகம் வேட்புமனு பரிசீலனை செய்யப்பட்டது.

    அப்போது சுயேட்சை வேட்பாளர் ரவி என்பவர் அ.தி.மு.க. கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகம் புதிய நீதிக்கட்சியின் தலைவராக உள்ளார். அ.தி.மு.க. அடிப்படை உறுப்பினராக இல்லாத அவர் எப்படி இரட்டைஇலை சின்னத்தில் போட்டியிட முடியும். எனவே அவர் மனுவை நிராகரிக்க வேண்டும் என்றார்.

    கடந்த தேர்தலில் அவர் மனு ஏற்கபட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். அப்போது யாரும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்திருக்க மாட்டார்கள் என்று சுயேட்சை வேட்பாளர் கூறினார். இதனால் அங்கு சலசலப்பு ஏற்பட்டது. இதையடுத்து ஏ.சி.சண்முகம் மனு பரிசீலனை நிறுத்தி வைக்கபட்டதாக அறிவிக்கபட்டது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    இரட்டை இலை சின்னம்


    ஏ.சி.சண்முகம் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட முடிவு செய்தபோது அவர் அ.தி.மு.க.வில் அடிப்படை உறுப்பினராக சேர்க்கப்பட்டுள்ளார். அதற்கான உறுப்பினர் அட்டை அவருக்கு வழங்கப்பட்டுள்ளது. வேட்புமனுவில் அனைத்து விவரங்களும் சரியாக கொடுக்கப்பட்டுள்ளது.

    அவர் மனு பரிசீலனையை தள்ளி வைக்க வேண்டிய அவசியம் இல்லை என அ.தி.மு.க. நிர்வாகிகள் கூறினர்.

    ஏ.சி.சண்முகம் அ.தி.மு.க. அடிப்படை உறுப்பினர் இல்லாமல் இருந்தாலும் பரவாயில்லை அவர் கூடுதலாக ஒரு படிவம் பூர்த்தி செய்து கொடுத்தால் போதும் மனு ஏற்றுக்கொள்ளப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இந்நிலையில் தி.மு.க. வேட்பாளர் கதிர்ஆனந்த் வேட்பு மனு மீதான பரிசீலனையும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

    பணப்பட்டுவாடா புகார் இருப்பதால் கதிர் ஆனந்த் வேட்புமனுவை நிராகரிக்க வேண்டும் என சுயேட்சை வேட்பாளர் ஒருவர் எதிர்ப்பு தெரிவித்ததால் வேட்பு மனு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
    வேலூர் மக்களவை தேர்தலையொட்டி தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்களை நியமித்து எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ. பன்னீர் செல்வம் ஆகியோர் உத்தரவிட்டுள்ளனர்.
    சென்னை:

    அதிமுக ஒருங்கிணைப்பாளரும், துணை முதலமைச்சருமான ஓ. பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும்  முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    வேலூர் பாராளுமன்ற தொகுதியில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடும் ஏ.சி.சண்முகத்தை ஆதரித்து தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காக மக்களவை தொகுதிக்கு உட்பட்ட சட்டமன்ற தொகுதி வாரியாக தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்கள் நியமிக்கப்படுகிறார்கள்.  தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்களாக 209 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    ஏ.சி.சண்முகம்

    நியமிக்கப்பட்டுள்ள பொறுப்பாளர்கள் வருகிற 22-ந்தேதி காலை முதல் வேலூரில் முகாமிட்டு தேர்தல் பணியாற்ற உத்தரவிடப்பட்டுள்ளது.

    ஆம்பூர் சட்டமன்ற தொகுதி தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்களாக கே.பி. முனுசாமி மற்றும் திண்டுக்கல் சீனிவாசன் நியமனம்.

    அமைச்சர் கேசி வீரமணி , எம்எல்ஏ ரவி மேற்பார்வையில் பொறுப்பாளர்கள் தேர்தல் பணியாற்றுவார்கள்.

    இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.

    சுமார் 71 பேரை கொண்ட குழுவை திமுக நியமித்த நிலையில் அதை விட 2 மடங்கு கூடுதலாக அதிமுக நியமித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
    வேலூர் தொகுதி திமுக வேட்பாளர் கதிர் ஆனந்துக்கு தற்போது மொத்தம் ரூ.58.75 கோடி மதிப்பிலான அசையும், அசையா சொத்துக்கள் இருப்பதாக வேட்புமனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    வேலூர்:

    வேலூர் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர் கதிர் ஆனந்த், அவரது மனைவி சங்கீதா, மகள்கள் செந்தாமரை, இலக்கியா, மகன் இளவரசன் ஆகியோரது பெயர்களில் மொத்தம் ரூ.58 கோடியே 75 லட்சத்து 79 ஆயிரத்து 451 மதிப்பில் அசையும், அசையா சொத்துக்கள் இருப்பதாக அவரது வேட்பு மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    கதிர் ஆனந்த்திடம் மொத்தம் ரூ.14 கோடியே 95 லட்சத்து 59 ஆயிரத்து 870 மதிப்பிலும், அவரது மனைவியிடம் ரூ.2 கோடியே 54 லட்சத்து 32 ஆயிரத்து 618 மதிப்பிலும், மகள் செந்தாமரை பெயரில் ரூ.31 லட்சத்து 96 ஆயிரத்து 684 மதிப்பிலும் அசையும் சொத்துக்கள் உள்ளன.

    இதில் கதிர் ஆனந்த் பெயரில் கையிருப்பாக பணம் ரூ.19 லட்சத்து 30 ஆயிரத்து 16, அவரது மனைவி பெயரில் ரூ.8 லட்சத்து 83 ஆயிரத்து 879, கதிர் ஆனந்த் பெயரில் ரூ.65 லட்சத்து 25 ஆயிரத்து 437 மதிப்பிலான நகைகளும், அவரது மனைவி பெயரில் ரூ.27 லட்சத்து 18 ஆயிரத்து 637 மதிப்பிலும், மற்றவை வங்கியிருப்பு, பங்கு பத்திரங்களில் முதலீடு, காப்பீட்டு முதலீடு, நகைகளும் இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளன.

    கதிர் ஆனந்த் பெயரில் ரூ.26 கோடியே 81 லட்சத்து 25 ஆயிரத்து 618 மதிப்பிலும், அவரது மனைவி பெயரில் ரூ.14 கோடியே 12 லட்சத்து 64 ஆயிரத்து 661 மதிப்பிலும் அசையா சொத்துக்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    கதிர் ஆனந்த் மனைவி சங்கீதா

    கதிர் ஆனந்தின் மனைவி பெயரில் மட்டும் ரூ.33 லட்சத்து 7 ஆயிரத்து 588 மதிப்பிலான கடன் இருப்பதாக அவரது வேட்பு மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    கதிர் ஆனந்த் கடந்த மார்ச் மாதம் தாக்கல் செய்திருந்த வேட்புமனுவில், தனது குடும்பத்துக்கு மொத்தம் ரூ.57 கோடியே 24 லட்சத்து 94 ஆயிரத்து 163 மதிப்பில் அசையும், அசையா சொத்துக்கள் இருப்பதாக குறிப்பிட்டிருந்தார். பின்னர் 3 மாதங்களில் அவரது குடும்ப சொத்து மதிப்பு ரூ.1 கோடியே 50 லட்சத்து 80 ஆயிரத்து 288 உயர்ந்து தற்போது மொத்தம் ரூ.58 கோடியே 75 லட்சத்து 79 ஆயிரத்து 451 மதிப்பில் அசையும், அசையா சொத்துக்கள் இருப்பதாக நேற்று தாக்கல் செய்த வேட்புமனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    வேலூர் பாராளுமன்ற தொகுதியில் தி.மு.க. வேட்பாளரான கதிர் ஆனந்த் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார்.
    வேலூர்:

    வேலூர் பாராளுமன்ற தொகுதி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 11-ந்தேதி தொடங்கியது. நாளை வியாழக்கிழமை கடைசி நாளாகும்.

    அ.தி.மு.க. வேட்பாளர் ஏ.சி.சண்முகம் உள்பட 21 பேர் மனுதாக்கல் செய்துள்ளனர்.

    வேட்புமனு தாக்கல் நாளை நிறைவடைய உள்ள நிலையில் தி.மு.க. வேட்பாளர் கதிர்ஆனந்த் இன்று மனுதாக்கல் செய்தார்.  

    கடந்த 15-ந்தேதி தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடந்தது. இதில் வேலூர் தேர்தல் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

    கதிர்ஆனந்த் மீது தேர்தல் ஆணையம் மற்றும் வருமான வரித்துறையினர் தொடர்ந்த வழக்குகள் நிலுவையில் இருப்பதால் அவரது வேட்புமனு நிராகரிக்கப்பட்டால் அதற்கு பதில் பலம் வாய்ந்த மாற்று வேட்பாளர் வேட்புமனு செய்வது தொடர்பான ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது.

    கதிர்ஆனந்த் மனைவி சங்கீதா

    கடந்த முறை கதிர்ஆனந்த் மனுதாக்கல் செய்தபோது அவரது மனைவி சங்கீதா மாற்று வேட்பாளராக மனுதாக்கல் செய்தார்.  இவர் கணவருக்கு ஆதரவாக தீவிர பிரசாரமும் மேற்கொண்டார். எனவே இந்த முறையும் கதிர்ஆனந்தின் மனைவி  மாற்று வேட்பாளராக வேட்புமனு தாக்கல் செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
    வேலூர் தொகுதியில் நாளை மனுதாக்கல் நிறைவடைய உள்ள நிலையில் தேர்தல் பார்வையாளர்கள் 3 பேர் விரைவில் வருகை தர உள்ளனர்.
    வேலூர்:

    வேலூர் பாராளுமன்ற தொகுதிக்கான தேர்தல் வருகிற 5-ந்தேதி நடைபெறுகிறது. வேட்பு மனுத்தாக்கல் வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் கடந்த 11-ந் தேதி தொடங்கி நடந்து வருகிறது.

    வேட்பு மனுத்தாக்கல் செய்ய நாளை வியாழக்கிழமை கடைசி நாளாகும். 19-ந் தேதி மனுக்கள் பரிசீலனை செய்யப்படுகிறது. 22-ந் தேதி வேட்பு மனுக்கள் வாபஸ் பெற கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. அன்று மாலையே இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படுகிறது.

    இந்த தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணி கட்சி வேட்பாளராக புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம், தி.மு.க.வில் துரைமுருகன் மகன் கதிர் ஆனந்த் போட்டியிடு கின்றனர். இதுதவிர நாம் தமிழர் கட்சி, மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளர்கள் உள்பட பலர் போட்டியிடுகிறார்கள்.

    அந்தந்த கட்சி வேட்பாளர்களை ஆதரித்து கட்சித் தலைவர்கள் பிரசாரம் செய்ய உள்ளனர்.

    தேர்தல் நாள் நெருங்கி வருவதால் பிரசாரம் களை கட்டியுள்ளது. ஓட்டு எந்திரம் வாக்குச்சாவடி அமைக்கும் பணிகளில் தேர்தல் அலுவலர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

    வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப்பொருட்கள் வழங்குவதை தடுக்கும் வகையில் சட்டமன்ற தொகுதி வாரியாக 24 மணி நேரமும் இயங்கும் வகையில் பறக்கும்படை, ஒரு நிலை கண்காணிப்புக்குழுக்கள் அமைக்கப்பட்டு கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    ஏற்கனவே பண பட்டுவாடா காரணமாக வேலூர் தேர்தல் நிறுத்தப்பட்டதால் இந்த முறை பண பட்டுவாடாவை தடுக்கும் பொருட்டு பறக்கும் படை தீவிரமாக சோதனை நடத்தி கண்காணித்து வருகின்றனர். இந்த நிலையில் தேர்தல் செலவின பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    வேலுர் மாவட்டம் முழுமைக்கும் தேர்தல் செலவினங்களை கண்காணிக்கவும், வாக்காளர்களுக்கு வாக்கு சேகரிக்கும் வகையில் பணம் மற்றும் பரிசுப்பொருட்கள் வழங்குவதை தடுக்கும் வகையில் தேர்தல் செலவின பார்வையாளராக வினய்குமார்சிங், ஆர்.ஆர்.என்சுக்லா ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

    83000 30526, 83000 30527 என்ற செல்போன் எண்களில் தேர்தல் தொடர்பான புகார்களை எந்த நேரத்திலும் அவர்களிடம் தெரிவிக்கலாம்.

    முரளிகுமார்

    மேலும் வேலூர் தொகுதிக்கான சிறப்பு செலவின பார்வையாளரை தேர்தல் கமி‌ஷன் நேற்று அறிவித்தது. முன்னாள் ஐ.ஆர்.எஸ். அதிகாரியான முரளிகுமாரை சிறப்பு செலவின பார்வையாளராக நியமித்து தேர்தல் கமி‌ஷன் அறிவித்துள்ளது. இவர் ஏற்கனவே சென்னையில் வருமான வரி டைரக்டர் ஜெனரலாக பணிபுரிந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த 3 அதிகாரிகளும் வேலூருக்கு வருகை தர உள்ளனர்.

    வருகிற 20-ந்தேதிக்கு மேல் வேலூர் தொகுதியில் தேர்தல் பிரசாரம் களைகட்டும். வெளியூரில் இருந்து முக்கிய பிரமுகர்கள் வேலூர் வருகின்றனர். பண மழை பொழிய வாய்ப்பு இருக்கிறது.

    1553 வாக்குச்சாவடிகளில் பலத்த பாதுகாப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. இதற்காக 20 கம்பெனி துணை ராணுவ படை வரவழைக்க முடிவு செய்துள்ளனர்.

    இது தொடர்பாக வேலூர் போலீஸ் சூப்பிரண்டு பிரவேஷ்குமார் உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளார்.



    வேலூர் தொகுதி தேர்தல் சிறப்பு பயிற்சி வகுப்பில் பங்கேற்காத ஆசிரியர்கள் இடமாற்றம் செய்யப்படுவார்கள் என்று வேலூர் கலெக்டர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
    வேலூர்:

    வேலூர் கலெக்டர் சண்முகசுந்தரம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    வேலூர் தொகுதி பாராளுமன்ற தேர்தல் வருகிற 5-ந்தேதி நடைபெற உள்ளது. இதைத் தொடர்ந்து வாக்குச் சாவடியில் பணிபுரிவதற்கான வாக்குச்சாவடி அலுவலர்கள் மொத்தம் 7557 ஆசிரியர் மற்றும் அரசு அலுவலர்களுக்கு, தேர்தல் பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டு நேற்று முன்தினம் பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டது. வாக்குச்சாவடி அலுவலர்கள் வழங்கிய செல்போன் வாயிலாக ஆசிரியர்களுக்கு பயிற்சி வகுப்பு தொடர்பாக குறுஞ்செய்திகள் அனுப்பி வைக்கப்பட்டன.

    இந்த பயிற்சி வகுப்பில் 1233 பேர் கலந்து கொள்ளவில்லை. இவர்களுக்கு மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் கீழ் விளக்கம் கோரும் குறிப்பாணை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஏற்கத்தக்க காரணமில்லாமல் பயிற்சி வகுப்பிற்கு வராதவர்களுக்கு பணியிட மாற்றம் செய்தல் உள்ளிட்ட நடவடிக்கைகள் தனியே மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    இருப்பினும் இவர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பாக 18-ந் தேதி சிறப்பு பயிற்சி வகுப்பு நடத்திட சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான ஆணைகள் இன்று வழங்கப்பட்டன.

    இந்த சிறப்பு வகுப்புகளிலும் கலந்து கொள்ளாதவர்கள் மீது மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் கீழ் கட்டாய பணியிட மாற்றம் உள்ளிட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    வேலூர் பாராளுமன்ற தொகுதியில் இதுவரை நடந்த சோதனையில் ரூ.89 லட்சம் மதிப்பிலான தங்கம், ரூ.44 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
    வேலூர்:

    வேலூர் பாராளுமன்ற தேர்தலையொட்டி வாக்காளர்களுக்கு பணம், பரிசு பொருட்கள் கொண்டு செல்வதை தடுக்க கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 24 மணி நேரமும் பறக்கும்படையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

    மேலும் வருமான வரித்துறையினர் தனியாக குழு அமைத்து கண்காணித்து வருகின்றனர். ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்படும் பணம், பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது.

    வேலூர் வசூரில் தி.மு.க. பிரமுகர் வீட்டில் நடத்திய சோதனையில் ரூ.27 லட்சத்து 74 ஆயிரம் சிக்கியது. பரபரப்பை ஏற்படுத்தியது.

    நேற்று வரை தேர்தல் பறக்கும் படையினர் மற்றும் நிலைகண்காணிப்பு குழுக்கள் நடத்திய வாகன சோதனையின் போது உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட பணம் ரூ.44 லட்சத்து 32 ஆயிரத்து 200 பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

    மேலும் வாணியம்பாடியில் ரூ.89,41,800 மதிப்புள்ள தங்கத்தை உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்டபோது பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

    ரூ.50 ஆயிரத்துக்கு மேல் தொகையை உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச்செல்ல வேண்டாம். என்று பொதுமக்களும், வியாபார நிறுவனங்களும், வியாபாரிகளும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

    தேர்தலுக்காக பணம், பொருள் கொடுப்பது தொடர்பான புகார்களை 1800-425-3692 என்ற கட்டணமில்லா தொலைப்பேசி எண்ணில் தெரிவிக்குமாறு மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் சண்முகசுந்தரம் தெரிவித்துள்ளார்.

    வேலூர் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட இதுவரை 18 பேர் மனுத்தாக்கல் செய்துள்ளனர். வேட்பு மனுத்தாக்கல் செய்ய 18-ந் தேதி கடைசி நாளாகும்.
    வேலூர்:

    வேலூர் பாராளுமன்ற தொகுதிக்கான தேர்தல் ஆகஸ்ட் 5-ந் தேதி நடக்கிறது. இதற்கான வேட்பு மனுத்தாக்கல் வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் கடந்த 11-ந் தேதி தொடங்கியது.

    வேட்பு மனுத்தாக்கல் செய்ய 18-ந் தேதி கடைசி நாளாகும். 19-ந் தேதி மனுக்கள் பரிசீலனை செய்யப்படுகிறது. 22-ந் தேதி வேட்பு மனுக்கள் வாபஸ் பெற கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. அன்று மாலையே இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படுகிறது.

    வேட்பு மனுத்தாக்கல் தொடங்கிய முதல் நாளில் அ.தி.மு.க. கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகம் உள்பட 7 பேர் மனுத்தாக்கல் செய்தனர். 2-ம் நாளில் சுயேட்சை கட்சியினர் மனுத்தாக்கல் செய்தனர். சனி, ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் வேட்பு மனுத்தாக்கல் கிடையாது. 2 நாள் விடுமுறைக்கு பிறகு நேற்று வேட்பு மனுத்தாக்கல் வழக்கம்போல் தொடங்கியது.

    தமிழ்நாடு இளைஞர் கட்சி சார்பில் நரேஷ்குமார் தனது ஆதரவாளர்களுடன் சைக்கிளில் வந்தார். ஆனால் சைக்கிளில் உள்ளே செல்ல அனுமதி அளிக்க போலீசார் மறுத்துவிட்டனர். இதையடுத்து வெளியில் இருந்து நடந்து வந்து மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும், கலெக்டருமான சண்முகசுந்தரத்திடம் மனுத்தாக்கல் செய்தார்.

    இதேபோல் முன்னாள் தாசில்தார் செல்வராஜ் சுயேட்சையாகவும், தேசிய மக்கள் கழகம் சார்பில் திவ்யாவும், இந்திய குடியரசு கட்சி (ஆர்.பி.ஐ.) சார்பில் ஆறுமுகமும், தமிழ்நாடு ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள் சங்கம் சார்பில் பலராமனும், நாம் தமிழர் கட்சி சார்பில் தீபலட்சுமி, முற்போக்கு சமாஜ்வாடி கட்சி சார்பில் கணேசன் என மொத்தம் 6 பேர் நேற்று மனுத்தாக்கல் செய்தனர். இதுவரை 3 நாட்களில் மொத்தம் 18 பேர் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.

    தி.மு.க. வேட்பாளர் கதிர்ஆனந்த் நாளை மனுத்தாக்கல் செய்கிறார்.


    உள்ளாட்சி தேர்தலை நடத்த மாநில தேர்தல் ஆணையத்திற்கு ஆளுநர் கட்டளையிட வேண்டும் என மு.க. ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.
    சென்னை:

    தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், உள்ளாட்சி தேர்தலை நடத்த அக்டோபர் 31ம் தேதி வரை அவகாசம் வேண்டும் என்று மாநில தேர்தல் ஆணையம் மீண்டும் சுப்ரீம் கோர்ட்டில் கேட்டிருப்பது கண்டனத்திற்குரியது.

    உள்ளாட்சி தேர்தலை நடத்த சுப்ரீம் கோர்ட்டில் மீண்டும் மீண்டும் கால அவகாசம் கேட்கும் மாநில தேர்தல் ஆணையரிடம், ஆளுநர் விளக்கம் கேட்க வேண்டும்.

    அரசியல் சட்ட பிரிவின் அடிப்படையில் உள்ளாட்சி தேர்தலை நடத்த மாநில தேர்தல் ஆணையத்திற்கு ஆளுநர் உரிய கட்டளையை பிறப்பிக்க வேண்டும் என அவர் கூறியுள்ளார்.
    சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அன்பகத்தில் திமுக தலைவர் முக ஸ்டாலின் தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது.
    சென்னை:

    சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அன்பகத்தில் திமுக தலைவர் முக ஸ்டாலின் தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது. இதில் திமுக மாவட்ட செயலாளர்கள் கலந்து கொண்டனர். 

    வேலூர் மக்களவை தொகுதி தேர்தல் தொடர்பாக மாவட்ட செயலாளர்களுடன் முக ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார்.
    புதிய கல்வி கொள்கை குறித்து நடிகர் சூர்யா பேசியது வன்முறையை தூண்டும் விதமாக உள்ளது என்று எச் ராஜா கூறியுள்ளார்.

    உசிலம்பட்டி:

    உசிலம்பட்டியில் பா.ஜனதா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் தேசிய செயலாளர் எச்.ராஜா கலந்து கொண்டு பேசியதாவது:-

    கூட்டம் தொடங்குவதற்கு முன்பாக பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு மாலை அணிவித்து விட்டு வந்துள்ளேன். அவர் இருந்த போது தி.க. காரர்கள் கறுப்பு சட்டை மட்டுமல்ல, சட்டையில் கறுப்பு பட்டன் கூட வைக்க தைரியமில்லை.

    முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவிற்கு பிறகு எல்லா கட்டையும் உளுத்துப்போச்சு. நீட், ஹைட்ரோ கார்பன், நியூட்ரினோ, ஸ்டெர்லைட் என கொண்டு வந்தது தி.மு.க. - காங்கிரஸ் கூட்டணி.

    நாம் ஆட்சிக்கு வந்தவுடன் ஏதோ தமிழ் மொழிக்கு ஆபத்து என்பது போல் இந்தி திணிக்கப்படுகிறது. தமிழ்மொழிக்கு ஆபத்து என ஸ்டாலின் பேசுகிறார்.

    நான் 45 பள்ளிகளை பட்டியலிட்டேன். தி.மு.க. வினர் நடத்தும் சி.பி.எஸ்.சி. பள்ளிகளில் இந்தி, சமஸ் கிருதம் சொல்லி தரப்படுகிறது.

    இந்த பள்ளிகளில் குழந்தைகள் தமிழில் பேசினால் 50 ரூபாய் அபராதம் கட்ட வேண்டும். நீங்கள் தமிழ் விரோதிகள்.

    வேலூர் பாராளுமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெறும். சிவகங்கை, தூத்துக்குடி, நீலகிரி, மத்திய சென்னை தொகுதிகளுக்கு விரைவில் இடைத் தேர்தல் வரும்.

    இப்போது விரைவு நீதிமன்றத்தில் மக்கள் பிரதிநிதிகளின் வழக்கு விசாரிக்கப்படுகிறது. அந்த தொகுதிகளில் நிச்சயமாக எங்கள் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெறும்.

    25 முறை முன்ஜாமீன் வாங்கிய ப.சிதம்பரம் மத்திய அரசின் பட்ஜெட்டை பற்றி பேசுவதற்கு எந்த அருகதையும் இல்லை.

    தமிழ்நாட்டில் தமிழ் மக்களுக்கு தமிழ் பெயரைச் சொல்லி தமிழர்களுக்கும் இந்துக்களுக்கும் தொடர்ந்து துரோகம் செய்து வரும் தி.மு.க., தி.க. உள்ளிட்ட கட்சிகளை வேரோடு அழித்தால் தான் தமிழ்நாடு வளம் பெறும்.

    நடிகர் சூர்யா

    புதிய கல்வி கொள்கை குறித்து நடிகர் சூர்யா பேசியது வன்முறையை தூண்டும் விதமாக உள்ளது. புதிய கல்வி கொள்கைக்கான வரையறை 400 பக்கம் உள்ளது. இதில் 4 பக்கத்தை முதலில் அவர் படிக்க வேண்டும். அப்புறம் கருத்து தெரிவிக்கட்டும். தாய் மொழி, ஆங்கிலம் மற்றும் விருப்பமொழி என்றுதான் உள்ளது. இதில் எங்கு இந்தி திணிக்கப்படுகிறது.

    கனிமொழி இந்தி படிக்கும்போது ஏழை கருப்பன், சுப்பன் மகன் இந்தி படிக்க கூடாதா? இந்தி படிக்க கூடாது என கூறும் தி.மு.க.வினர் வீடுகளின் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்துவோம்.

    அனைத்து மத்திய அரசு திட்டங்களையும் எதிர்ப்பதற்கு காரணம் ஏழைகளுக்கு நலன் ஏற்பட்டு விடக்கூடாது என்பது தான்.

    மேற்கண்டவாறு அவர் பேசினார்.

    பாரதிய ஜனதா கட்சியின் தேசிய அமைப்பு செயலாளராக 13 ஆண்டுகள் பொறுப்புவகித்த ராம்லால் மீண்டும் ஆர்.எஸ்.எஸ்.க்கு சென்றதால் அந்த பதவியில் பி.எல்.சந்தோஷ் இன்று நியமிக்கப்பட்டுள்ளார்.
    புதுடெல்லி:

    மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா கட்சியின் தேசிய அமைப்பு செயலாளராக 13 ஆண்டுகள் பொறுப்புவகித்த ராம்லால் தாய்க்கழகமான ஆர்.எஸ்.எஸ். இயக்கத்துக்கு நேற்று மீண்டும் திரும்பிச் சென்றதால் அந்த பதவி காலியாக இருந்தது.

    இந்நிலையில், அந்த பொறுப்பில் பி.எல்.சந்தோஷ் இன்று நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை அக்கட்சியின் தேசிய தலைவரும் மத்திய மந்திரியுமான அமித் ஷா இன்று பிறப்பித்தார். 
    அமித் ஷா
    இந்த பதவியில் நியமிக்கப்பட்டுள்ள பி.எல்.சந்தோஷ் இதற்கு முன்னர் 8 ஆண்டுகள் கர்நாடக மாநில பாஜக பொதுச் செயலாளராகவும், பின்னர் 2014-ம் ஆண்டில் இருந்து தமிழ்நாடு உள்ளிட்ட தென்மாநிலங்களின் பாஜக மேலிடப் பொறுப்பாளராகவும் பணியாற்றியுள்ளார். 

    தற்போது அக்கட்சியின் தேசிய இணை பொதுச் செயலாளராக இருந்த பி.எல்.சந்தோஷுக்கு இந்த பதவி உயர்வை அமித் ஷா அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
    ×