search icon
என் மலர்tooltip icon

    தேர்தல் செய்திகள்

    வேலூர் பாராளுமன்ற தொகுதி தேர்தலில் தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்கள் பிரசாரம் செய்ய உள்ளனர்.
    சென்னை:

    இந்திய கம்யூனிஸ்டு மாநில செயற்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    வேலூர் பாராளுமன்ற தொகுதி தேர்தலில் தி.மு.க. சார்பில் போட்டியிடும் கதிர்ஆனந்த் வெற்றி பெறச் செய்திட உரிய அனைத்து முயற்சிகளையும் இந்திய கம்யூனிஸ்டு கட்சி மேற்கொண்டுள்ளது.

    வேலூர் தொகுதிக்குட்பட்ட ஆறு சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் மாவட்டக்குழு உறுப்பினர்கள், ஒன்றிய, நகர, பேரூர் செயலாளர்கள் உள்ளிட்ட உள்ளிட்ட தேர்தல் பணிக்குழுக்கள் அமைக்கப்பட்டு, தி.மு.க. மற்றும் தோழமை கட்சி தோழர்களுடன் இணைந்து பணியாற்றி வருகின்றனர்.

    இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்களும் தேர்தல் பிரசாரத்தில் பங்கேற்க உள்ளனர்.

    இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் டி.ராஜா எம்.பி. வருகிற 30-ந்தேதி மாலை ஆம்பூரில் நடைபெறும் மாபெரும் பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு சிறப்புரையாற்ற உள்ளார்.

    இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர், தேசியக்குழு உறுப்பினர், விடுதலை போராட்ட வீரர் தோழர் ஆர்.நல்லகண்ணு 31-ந்தேதி வேலூரில் நடைபெறும் மாபெரும் பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்ற உள்ளார்.

    இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர், தேசியக்குழு உறுப்பினர், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தா.பாண்டியன் வருகிற ஆகஸ்டு 1-ந்தேதி மாலை வாணியம்பாடியில் நடைபெறும் மாபெரும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு சிறப்புரையாற்ற உள்ளார்.

    மாநில செயலாளர் முத்தரசன் வரும் 26-ந்தேதி மாலை 4 மணி முதல் மேல்பட்டி, பேரணம்பட்டு, குடியாத்தம், மெத்தேரி மற்றும் கே.வி.குப்பம் ஆகிய பகுதிகளில் வேன் மூலம் பிரசாரம் செய்திட உள்ளார்.

    வேலூர் பாராளுமன்றத்தேர்தலில் பா.ஜ.க. தேசிய தலைவர்கள் பிரசாரம் செய்வார்கள் என்று துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.
    புதுடெல்லி:

    மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமனை, தமிழக துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் டெல்லியில் நேற்று சந்தித்தார்.

    அப்போது தமிழக நிதி மேலாண்மை மற்றும் தமிழகத்துக்கு தேவையான நிதி உதவி குறித்த கோரிக்கை மனுவை அவர் வழங்கினார். அப்போது தமிழக அரசின் நிதித்துறை முதன்மை செயலாளர் ச.கிருஷ்ணன் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் உடனிருந்தனர்.

    பின்னர் தமிழ்நாடு இல்லத்தில் ஓ.பன்னீர்செல்வம் நிருபர்களிடம் கூறியதாவது:-

    மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவை சந்தித்தது மரியாதை நிமித்தமானது. நிதி மந்திரி நிர்மலா சீதாராமனை சந்தித்து தமிழக நலனுக்காக நிதி தொடர்பாக பேசினேன். அவரும் பல்வேறு ஆலோசனை மற்றும் வழிமுறைகளை கூறியிருக்கிறார். மேலும் வளர்ச்சி திட்டங்களுக்கு தேவையான நிதியை கேட்டுள்ளேன். அதை கொடுப்பதாக அவர் உறுதி அளித்துள்ளார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அதனைத்தொடர்ந்து நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-

    கேள்வி:- அ.தி.மு.க.வில் இணக்கமான சூழ்நிலை இல்லை என்றும், அதனால் சில குறைகளை கூறவே அமித்ஷாவை நீங்கள் சந்தித்ததாகவும் கூறப்படுகிறதே?

    பதில்:- அதுபோன்ற எந்த பிரச்சினையும் இல்லை. மேலும் குறைகூறும் குணம் என்னிடம் அறவே இல்லை.

    கேள்வி:- வேலூர் பாராளுமன்ற தொகுதி தேர்தல் பிரசாரத்தில் பா.ஜ.க. தலைவர்கள் பங்கேற்கிறார்களா?

    பதில்:- வேலூர் பாராளுமன்ற தேர்தலில் எங்களுடன் கூட்டணியில் உள்ள அனைத்து கட்சி தலைவர்களும் பிரசாரம் செய்வார்கள். பா.ஜ.க. தேசிய அளவிலான தலைவர்களும் பிரசாரம் செய்ய வருவார்கள்.

    கேள்வி:- உங்கள் மகன் ரவீந்திரநாத்குமாருக்கு பதவி வழங்குவதில் உங்கள் தலையீடு இருந்ததாக கூறப்படுகிறதே?

    பதில்:- எனது மகனாக இருந்தாலும் மக்களிடம் ஆதரவும், தகுதியும், திறமையும் இருந்தால் அரசியலில் நீடிப்பார். ரவீந்திரநாத்குமாருக்கு பதவி வழங்க வேண்டும் என எந்த ஒரு பேச்சும் பேசவில்லை, மேலும் பதவி என்பது ஒருவரை தேடி வரவேண்டியது.

    கேள்வி:- சென்னை-சேலம் 8 வழி சாலை திட்டம் குறித்து என்ன நினைக்கிறீர்கள்?

    பதில்:- உள்கட்டமைப்பை மேம்படுத்த வேண்டுமென்றால் இது போன்ற சாலை திட்டம் தேவை. மக்களுக்கு வளர்ச்சி தேவையா? இல்லையா?. தமிழகத்தில் மக்களுக்கு எதிரான எந்த ஒரு திட்டத்தையும் செயல்படுத்த மாட்டோம். உயர் மின்கோபுரம் அமைக்கும் திட்டத்தை மாற்று வழியில் செயல்படுத்துவோம். மக்களுக்கு எதிரான எந்த திட்டமாக இருந்தாலும் அவர்களின் எதிர்ப்பு இருந்தால் நிறைவேற்றமாட்டோம்.

    இவ்வாறு ஓ.பன்னீர்செல்வம் பதில் அளித்தார்.
    வேலூர் தேர்தலில் அ.தி.மு.க. வாக்குகளை மு.க.ஸ்டாலின் குறிவைத்து காய்களை நகர்த்தி வருகிறார் என்பது அவரது பேச்சில் இருந்து வெளிப்பட்டுள்ளது.
    சென்னை:

    தமிழகம் திராவிட கட்சிகளின் கட்டுப்பாட்டில் வந்து 50 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. தி.மு.க., அ.தி.மு.க. என்று இரண்டு இயக்கங்கள். கருணாநிதி, எம்.ஜி.ஆர். என்ற செல்வாக்கு பெற்ற இரு தலைவர்கள்.

    இருவரும் அரசியல் ரீதியாக எதிரும் புதிருமாக செயல்பட்டு வந்தபோதிலும் இருவரும் ஒருவருக்கொருவர் நட்பு பாராட்டினார்கள். அரசியலில் அவ்வப்போது கருணாநிதி அதை நினைவுபடுத்துவார்.

    அதாவது திராவிட சிந்தனையுடன் மக்கள் இருக்க வேண்டும். வாக்குகள் திராவிட கட்சிகளை விட்டு நழுவிவிடக்கூடாது என்பதற்காக கருணாநிதி கவனமுடன் செயல்பட்டார் என்பது தெரிந்ததே.

    இப்போது தந்தையின் பாணியை மு.க.ஸ்டாலினும் கையில் எடுத்து இருக்கிறார். சமீபத்தில் தேனியில் தி.மு.க. பொதுக்கூட்டம் நடந்தது. அ.தி.மு.க.வில் ஜெயலலிதாவின் நம்பிக்கையை பெற்றவராகவும், அதன்பிறகு அ.ம.மு.க.வில் டி.டி.வி தினகரனின் நம்பிக்கைக்கு உரியவராகவும் திகழ்ந்த தங்க தமிழ்செல்வன் தி.மு.க.வில் ஐக்கியமானார்.

    ஜெயலலிதா

    அவரது ஏற்பாட்டில் தான் தேனியில் தி.மு.க. பொதுக்கூட்டமும் நடத்தப்பட்டது. அந்த கூட்டத்தில் பேசிய மு.க.ஸ்டாலின் ஜெயலலிதாவை நினைவு கூர்ந்தார்.

    நீட் தேர்வு பிரச்சினையில் அவர் உயிரோடு இருக்கும் வரை அதை எதிர்த்தார். எதிர்க்க வேண்டிய நேரத்தில் அவர் மத்திய அரசை எதிர்க்க தவறவில்லை என்பதை மு.க.ஸ்டாலின் சுட்டிக்காட்டினார்.

    இது அ.தி.மு.க.வினரை குறிவைத்து வீசிய தூண்டில், அ.தி.மு.க.வை பொறுத்தவரை ஜெயலலிதா மறைவுக்கு பிறகு ஏற்பட்ட குழப்பங்களும், பிளவுகளும் அந்த கட்சி தொண்டர்களை தடுமாற வைத்திருக்கிறது.

    இந்த நேரத்தில் அ.தி.மு.க.வினரின் வாக்குகளை தங்கள் பக்கம் இழுப்பதற்கான முயற்சியாகத்தான் மு.க.ஸ்டாலின் ஜெயலலிதாவை பாராட்டியும், அந்த கட்சிக்காக உழைத்தவர்களை பாராட்டியும் பேசி இருக்கிறார்.

    மொழி, கலாச்சாரம் காக்க திராவிட உணர்வு கொண்டவர்கள் அனைவரும் தாய்க்கழகமான தி.மு.க.வுக்கு வர வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளார்.

    வேலூர் தொகுதியில் கணிசமான அளவில் இஸ்லாமியர் வாக்குகள் உள்ளது. இஸ்லாமிய சமூகத்தை சேர்ந்த நிலோபர் கபில் அமைச்சராகவும், முகமதுஜான் எம்.பி.யாகவும் இருக்கிறார். எனவே அ.தி.மு.க. வாக்குகளை குறிவைத்தே மு.க.ஸ்டாலின் காய்களை நகர்த்தி வருவது தெரிகிறது.

    வேலூர் பாராளுமன்ற தொகுதியில் பதற்றமான 179 வாக்குச்சாவடிகளை கண்காணிக்க 215 நுண்பார்வையாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். மேலும் அவை கண்காணிப்பு கேமராக்கள் மூலமாகவும் கண்காணிக்கப்பட உள்ளது.
    வேலூர்:

    வேலூர் தொகுதி பாராளுமன்ற தேர்தல் வருகிற 5-ந் தேதி நடக்கிறது. மாவட்ட நிர்வாகம் சார்பில் இதுவரை செய்யப்பட்டுள்ள தேர்தல் பணிகள் குறித்து மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான சண்முகசுந்தரம் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    வேலூர் பாராளுமன்ற தொகுதியில் 105 மூன்றாம் பாலினத்தவர்கள் உள்பட 14 லட்சத்து 32 ஆயிரத்து 555 வாக்காளர்கள் உள்ளனர். கடந்த வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றிருந்த 95 பேர் இறப்பு காரணமாக நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். புதிதாக 5,564 பேர் சேர்க்கப்பட்டுள்ளனர். 715 வாக்குச்சாவடி மையங்களில் 1,553 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

    அதில், 179 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை. அந்த வாக்குச்சாவடிகளை கண்காணிக்க 215 நுண்பார்வையாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். மேலும் அவை கண்காணிப்பு கேமராக்கள் மூலமாகவும் கண்காணிக்கப்பட உள்ளது. வாக்குச்சாவடிகளில் 7,552 அலுவலர்கள் பணிபுரிய உள்ளனர். அவர்களுக்கு, முதல்நிலை பயிற்சி முடிக்கப்பட்டு, 2, 3-ம் கட்ட பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

    வேலூர் பாராளுமன்ற தொகுதியில் 28 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். அவர்களுக்கான சின்னங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தேர்தலில் 1,919 கட்டுப்பாட்டுக் கருவி, 3,853 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், யாருக்கு வாக்களித்தோம் என்று உறுதி செய்யும் 2,099 வி.வி.பேட் எந்திரங்களும் பயன்படுத்தப்பட உள்ளன. வாக்குப்பதிவு எந்திரங்கள் கணினி குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டு ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிகளுக்கும் அனுப்பி வைக்கப்பட உள்ளது.

    வேலூர் மாவட்டம் முழுவதும் 75 பறக்கும்படைகள், 39 நிலை கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு, இந்த குழுவினர் முறைகாக பணியாற்றுகிறார்களா? என்று ஜி.பி.எஸ். கருவி மூலம் கண்காணிக்கப்படுகிறார்கள். தேர்தல் கட்டுப்பாட்டு அறைக்கு இதுவரை 48 புகார்கள் வந்துள்ளன.

    அதில், 22 புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 3 புகார்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    தேர்தல் பாதுகாப்பு பணியில் மத்திய பாதுகாப்பு படையினர் ஈடுபடுத்தப்பட உள்ளனர். தேர்தலில் 1,034 போலீசார் தங்கள் வாக்குகளை தபால் மூலம் பதிவு செய்ய உள்ளனர். இந்திய ராணுவம் மற்றும் பாதுகாப்பு படையில் பணியாற்றும் 6,038 பேர் தங்கள் வாக்குகளை இ.டி.பி.பி.எஸ். என்ற எலக்ட்ரானிக்கல் டிரான்ஸ்மிட்டன் போஸ்டல் பேலட் சிஸ்டம் மூலம் செலுத்த உள்ளனர்.

    தேர்தல் பிரசாரத்துக்கு வரும் நட்சத்திர பேச்சாளர்கள், வெளியூர் பிரமுகர்களை கண்காணிக்க பறக்கும்படை மற்றும் வீடியோ கண்காணிப்பு குழுவினருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. தேர்தல் நேர்மையாகவும், நடுநிலையோடும் நடத்திட மாவட்ட நிர்வாகம் அனைத்து ஏற்பாடுகளையும் தீவிரமாக செய்து வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    வேலூரில் முறையான ஆவணங்கள் இன்றி எடுத்துச்சென்றதாக ரூ.2 கோடியே 38 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார்.
    சென்னை:

    தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு சென்னை தலைமை செயலகத்தில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    வேலூர் பாராளுமன்ற தொகுதி தேர்தலுக்கான பணிகளை தமிழக தேர்தல் அதிகாரிகள் சிறப்பாக செய்து வருகிறார்கள். அங்கு மொத்தம் உள்ள 1,553 வாக்குப்பதிவு மையங்களில் 179 வாக்குப்பதிவு மையங்கள் பதற்றமானவையாக கண்டறியப்பட்டுள்ளது. அந்த வாக்குப்பதிவு மையங்களில் கூடுதல் பாதுகாப்பு மற்றும் சிறப்பு கவனம் செலுத்தப்படும். மேலும் 850 வாக்குப்பதிவு மையங்களில் முழுவதும் வெப்கேமரா பொருத்தப்பட்டு, சென்னையில் இருந்தே கண்காணிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும். மற்ற வாக்குப்பதிவு மையங்களில் வீடியோ கேமரா மூலம் வாக்குப்பதிவு கண் காணிக்கப்படும்.

    வேலூர் பாராளுமன்ற தொகுதிக்கு 10 கம்பெனி துணை ராணுவ வீரர்களை அனுப்ப இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. ஆனால் கூடுதலாக 10 கம்பெனி துணை ராணுவ வீரர்களை அனுப்பவேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளோம். கூடுதல் துணை ராணுவ வீரர்களை அனுப்பவில்லை என்றால், மாநில போலீசாரை கூடுதலாக பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்துவதற்கு நாங்கள் திட்டமிட்டுள்ளோம்.

    வேலூரில் 75 பறக்கும் படை, 39 கண்காணிப்பு குழு, 12 வீடியோ கண்காணிப்பு குழுவினர் சோதனையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதன்மூலம் வாகனங்களில் ரூ.50 ஆயிரத்துக்கும் அதிகமாக ரொக்க பணம் முறையான ஆவணங்கள் இல்லாமல் எடுத்துச் செல்பவர்களிடம் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது. இதுபோன்று ஆவணங்கள் இல்லாமல் எடுத்துச் சென்றதாக ரூ.2 கோடியே 38 லட்சம் பணமும், ரூ.89.41 லட்சம் மதிப்புள்ள 2.980 கிலோ தங்கமும் கைப்பற்றப்பட்டுள்ளது.

    மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் மூலம் வாக்குப்பதிவு நடைபெறும். வேலூர் தொகுதியில் வாக்காளர்கள் பெயர் சேர்க்கை முடிந்துவிட்டது. இதையடுத்து இறுதி வாக்காளர் பட்டியல் இன்னும் ஓரிரு நாட்களில் வெளியிடப்படும். ‘பூத் சிலிப்’ தேர்தல் நடைபெறுவதற்கு 7 நாட்களுக்கு முன்பு வழங்கப்படும். ‘பூத் சிலிப்’ வழங்கினாலும், வாக்காளர் அடையாள அட்டை அல்லது தேர்தல் ஆணையம் அனுமதித்துள்ள 11 ஆவணங்களை காட்டி வாக்களிக்க அனுமதிக்கப்படுவார்கள். வாக்குப்பதிவு ஆகஸ்டு 5-ந்தேதி காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரையிலும் நடைபெறும்.

    வேலூர் பாராளுமன்ற தேர்தலையொட்டி கூடுதல் தமிழக தலைமை தேர்தல் அதிகாரியாக ராஜாராமன் நியமிக்கப்பட்டுள்ளார். தமிழகத்தில் தற்போது காலியாக உள்ள நாங்குநேரி, விக்கிரவாண்டி ஆகிய 2 சட்டமன்ற தொகுதிகளுக்கு தேர்தல் நடத்துவது குறித்து இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிடும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    வேலூர் பாராளுமன்ற தொகுதி தேர்தலுக்கான இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இந்த தொகுதியில் 28 பேர் போட்டியிடுகின்றனர்.
    வேலூர்:

    தமிழகத்தில் பாராளுமன்ற பொதுத்தேர்தல் கடந்த மார்ச், ஏப்ரல் மாதங்களில் நடைபெற்றது. இதில் வேலூர் தொகுதி தவிர அனைத்து தொகுதிகளிலும் தேர்தல் நடைபெற்றது. காட்பாடியில் ரூ.11 கோடி கைப்பற்றப்பட்டதை அடுத்து வேலூர் பாராளுமன்ற தொகுதி தேர்தல் ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து வேலூர் பாராளுமன்ற தொகுதி தேர்தல் அடுத்த மாதம் 5-ந் தேதி (திங்கட்கிழமை) நடைபெறும் என தேர்தல் கமிஷன் அறிவிப்பு வெளியிட்டது. அதைத் தொடர்ந்து வேட்புமனு தாக்கல் கடந்த 11-ந் தேதி தொடங்கியது. கடந்த 18-ந் தேதி வேட்புமனு தாக்கல் முடிவடைந்தது.

    கதிர் ஆனந்த் - ஏசி சண்முகம்

    இந்த தேர்தலில் போட்டியிடுவதற்காக மொத்தம் 50 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. மனுக்கள் மீதான பரிசீலனை கடந்த 19-ந் தேதி கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான சண்முகசுந்தரம் தலைமையில் நடந்தது. பரிசீலனை முடிவில் அ.தி.மு.க. கூட்டணி கட்சி வேட்பாளர் ஏ.சி.சண்முகம், தி.மு.க. வேட்பாளர் கதிர் ஆனந்த் ஆகியோர் மனுக்கள் உள்பட 31 வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டது. கூடுதல் மனுக்கள், மாற்று வேட்பாளர் மனுக்கள், குறைபாடு கண்டறியப்பட்ட மனுக்கள் என 19 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.

    வேட்புமனுக்கள் திரும்ப பெற கடைசி நாளான நேற்று சுயேச்சை வேட்பாளர்களான ஜே.அசேன், ஏ.ஜி.சண்முகம், தனலட்சுமி ஆகிய 3 பேர் தங்களது மனுக்களை ‘வாபஸ்’ பெற்றுக்கொண்டனர். அதைத் தொடர்ந்து 28 பேர் கொண்ட இறுதி வேட்பாளர் பட்டியல் மாலையில் வெளியிடப்பட்டது.

    அதன்படி களத்தில் உள்ள வேட்பாளர்கள் பெயர் விவரம் வருமாறு:-

    1. ஏ.சி.சண்முகம் (புதிய நீதிக்கட்சி)- அ.தி.மு.க.

    2. டி.எம். கதிர் ஆனந்த் - தி.மு.க.

    3. தீபலட்சுமி- நாம் தமிழர் கட்சி.

    4. ஜி.எஸ்.கணேசன்யாதவ்- பிரகதிஷில் சமாஜ்வாடி (லோகியா).

    5. வி.சேகர்- ஆல்பென்ஷினர்ஸ் பார்ட்டி.

    6. ச.திவ்யா- தேசிய மக்கள் கழகம்.

    7. நரேஷ்குமார்- தமிழ்நாடு இளைஞர் கட்சி.

    8. பேராயர் காட்பிரே நோபுள்- தேசிய மக்கள் சக்தி கட்சி.

    9. மோகனம்-மறுமலர்ச்சி ஜனதா கட்சி.

    10. விஜய் பவுல்ராஜா- ரிபப்ளிக்கன் சேனா.

    மேலும் 18 சுயேச்சைகள் உள்பட மொத்தம் 28 பேர் போட்டியிடுகின்றனர்.

    இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டதை தொடர்ந்து வேலூர் பாராளுமன்ற தேர்தல் சூடு பிடிக்கத்தொடங்கி உள்ளது.

    பா.ஜனதாவில் சேருமாறு திரிணாமுல் காங்கிரஸ் தலைவர்களை மத்திய விசாரணை முகமைகள் மிரட்டுகிறது என மம்தா பானர்ஜி குற்றம் சாட்டியுள்ளார்.
    2019 பாராளுமன்றத் தேர்தலுக்கு பின்னர் மேற்கு வங்காளத்தில் பா.ஜனதாவில் பிற கட்சியை சேர்ந்த அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் சேர்வது தொடர்கிறது. இந்நிலையில் அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி குற்றச்சாட்டு ஒன்றை முன்வைத்துள்ளார். திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள் மற்றும் எம்.பி., எம்.எல்.ஏ.க்களை மத்திய விசாரணை முகமைகள் மிரட்டுகிறது, பா.ஜனதாவில் இணையவில்லை என்றால் நிதி மோசடி வழக்கில் சிக்க வைக்கப்படுவீர்கள் என மிரட்டப்படுகிறார்கள் என மம்தா பானர்ஜி குற்றம் சாட்டியுள்ளார். மேலும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினருக்கு பணம் கொடுத்தும் பா.ஜனதா ஆள்சேர்க்க முயற்சிக்கிறது எனவும் குற்றம் சாட்டியுள்ளார். 

    தேர்தலுக்கு பின்னர் மாநிலத்தில் நடைபெற்ற மிகப்பெரிய அரசியல் பொதுக்கூட்டத்தில் பேசிய மம்தா பானர்ஜி, திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் பா.ஜனதாவில் சேர்வதற்கு 2 கோடி ரூபாய் பணமும்,  ஒரு பெட்ரோல் பங்கும் வழங்கப்படுகிறது. கர்நாடகாவைப் போலவே, எல்லா இடங்களிலும் பா.ஜனதா குதிரை பேரத்தில் ஈடுபட்டு வருகிறது. பா.ஜனதா மாதிரியை இங்கே பிரதிபலிக்க முயற்சிக்கிறது.
    பாஜக
    மத்திய அரசு நாட்டின் கூட்டாட்சி கட்டமைப்பை அழிக்க முயற்சி செய்கிறது. பா.ஜனதா ஒரு விசித்திரமான முறையில் செயல்பட்டு வருவதாகவும், அதன் அரசு இரண்டு ஆண்டுகளுக்கு மேல் நீடிக்காது. அவர்கள் (பா.ஜனதா) எந்த முன் தகவலும் ஆலோசனையும் இன்றி மசோதாக்களை கொண்டு வருகிறார்கள்...  பாராளுமன்றம் சுமூகமாக நடப்பதற்காக எதிர்க்கட்சிகளுக்குதான் பாராட்டு தெரிவிக்க வேண்டும், அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு அல்ல எனக் கூறியுள்ளார். 
    வேலூர் தொகுதியில் போட்டியிடும் ஏ.சி.சண்முகத்தை ஆதரித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வருகிற 24-ந்தேதி பிரசாரம் செய்ய உள்ளார்.
    சென்னை:

    வேலூர் பாராளுமன்ற தொகுதி தேர்தல் அடுத்த மாதம் 5-ந்தேதி நடைபெறுகிறது.

    இதில் அ.தி.மு.க. சார்பில் புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம், தி.மு.க. சார்பில் கதிர் ஆனந்த் ஆகியோர் போட்டியிடுகிறார்கள். இதையொட்டி தேர்தல் பிரசாரம் சூடு பிடிக்க தொடங்கி உள்ளது.

    அனைத்து அரசியல் கட்சியினரும் பிரசாரத்துக்கு செல்ல ஆயத்தமாகி வருகின்றனர். சட்டசபை கூட்டம் நடந்ததால் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் அங்கு செல்ல முடியாமல் இருந்தனர். இன்றுடன் சட்டசபை கூட்டம் முடிவடைகிறது.

    எனவே அ.தி.மு.க. அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் நாளை முதல் வேலூர் தொகுதியில் முகாமிட்டு பிரசாரம் செய்ய உள்ளனர்.

    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று இரவு தனது சொந்த ஊரான சேலம் செல்கிறார். திங்கட்கிழமை அவர் சென்னை திரும்புகிறார்.

    24-ந் தேதி (புதன்கிழமை) வேலூர் செல்லும் அவர் அங்கு ஒருநாள் பிரசாரம் செய்து அ.தி.மு.க. வேட்பாளருக்கு ஆதரவு திரட்ட உள்ளார். மேலும் அ.தி.மு.க. நிர்வாகிகளுக்கு சில ஆலோசனைகளையும் அவர் வழங்குகிறார்.

    பின்னர் 29-ந் தேதி மீண்டும் அவர் வேலூர் சென்று பிரசாரம் செய்ய உள்ளார். இதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது.

    ஓ பன்னீர் செல்வம்

    துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் 29-ந் தேதி முதல் 4 நாட்கள் வேலூர் தொகுதியில் முகாமிட்டு பிரசாரம் செய்ய உள்ளார்.

    தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் 26-ந் தேதி வேலூர் தொகுதியில் பிரசாரத்தை தொடங்க உள்ளார். இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினும் அங்கு பிரசாரம் செய்ய உள்ளார்.

    தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் நாளை முதல் அவரவர்களுக்கு ஒதுக்கப்பட்ட பகுதிகளுக்கு சென்று பிரசாரம் செய்ய உள்ளனர்.
    இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தற்போதைய தேசிய பொதுச்செயலாளராக சுதர்சன் ரெட்டி உள்ளார். இவர் பொறுப்பில் இருந்து விலக இருப்பதால் டி.ராஜா பொதுச்செயலாளர் ஆகிறார்.

    சென்னை:

    இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தற்போதைய தேசிய பொதுச்செயலாளரான சுதர்சன் ரெட்டி தனது உடல் நிலையை காரணம் காட்டி பொறுப்பில் இருந்து விலக முடிவு செய்தார்.

    நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி படுதோல்வியை சந்தித்தை அடுத்து பதவி விலகும் விருப்பத்தை கட்சியில் தெரிவித்தார். இந்த நிலையில் அக்கட்சியின் தேசிய நிர்வாகக்குழு கூட்டம் புதுடெல்லியில் நடந்தது.

    இக்கூட்டத்தில் கட்சியின் அடுத்த பொதுச்செயலாளராக யாரை நியமிக்கலாம் என ஆலோசிக்கப்பட்டது. இதில் தற்போதைய தேசிய செயலாளரான டி.ராஜா, கேரளத்தை சேர்ந்த பினோய் விஸ்வம், மூத்த தலைவர் அமர்ஜெத் கவுர், அதுல்குமார் அஞ்சன் ஆகியோரின் பெயர்கள் பரிசீலிக்கப்பட்டன.

    கூட்ட முடிவில் டி.ராஜாவை கட்சியின் பொதுச்செயலாளராக நியமிப்பது என்று ஒரு மனதாக முடிவு செய்யப்பட்டது. டெல்லியில் இன்றும், நாளையும் நடைபெறும் கட்சியின் தேசிய குழுக்கூட்டத்துக்குப் பிறகு, டி.ராஜாவின் தேர்வு குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட உள்ளது.


    டி.ராஜா வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே உள்ள சித்தாத்தூர் கிராமத்தில் பிறந்தவர். மாநிலங்களவை எம்.பி.யான இவர் கட்சியின் தேசிய செயற்குழுவில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக அங்கம் வகித்து வருகிறார். இவர் அனைத்து இந்திய இளைஞர் பெருமன்றத்தின் தமிழ்நாடு மாநில செயலாளராகவும் பதவி வகித்துள்ளார். பின்னர் அம்மன்றத்தின் அகில இந்திய பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார்.

    இவரது மனைவி ஆனி கேரளத்தை சேர்ந்தவர். அவர் இந்திய மாதர் தேசிய சம்மேளனத்தின் பொதுச் செயலாளராக உள்ளார். இவர்களுக்கு அபரஜிதா என்ற மகள் உள்ளார்.

    காங்கிரசுக்கு தலைமை இல்லாமல் இருப்பது பா.ஜனதாவுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது என்று சேலத்தில் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் பேசியுள்ளார்.

    சேலம்:

    சேலம் மாவட்ட காமராஜ் அறக்கட்டளை சார்பில் காமராஜரின் 117-வது பிறந்த நாள் விழா சேலம் தமிழ்சங்கத்தில் நடந்தது. விழாவுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தலைமை தாங்கினார்.

    விழாவில் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் பேசியதாவது:-

    காங்கிரஸ் கட்சி தலைவராக ராகுல்காந்தி தொடர வேண்டும் என்று நிர்வாகிகள் தொண்டர்கள் விரும்புகின்றனர். அப்படி இல்லாவிட்டால் சோனியாக காந்தி, ராகுல்காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோரில் ஒருவராவது கட்சி தலைவராக பொறுப்பேற்க வேண்டும்.

    ராகுல் காந்தி

    காமராஜரை போன்று ஒரு சிறந்த முதல்-அமைச்சர் இனி மேல் வர முடியாது. விவசாயிகள் நலனுக்காகவும், குடிநீர் கிடைக்க வேண்டும் என்பதற்காகவும் பல அணைகளை கட்டியவர் காமராஜர். தமிழகத்தில் தற்போது லஞ்சம் வாங்குவது அதிகரித்து விட்டது. காமராஜர் பெயரை சொல்லாமல் யாரும் ஆட்சியை நடத்த முடியாது. காமராஜரை கொல்ல முயன்றவர்கள் அவரின் பெயரை உச்சரிக்க தகுதியில்லாதவர்கள். காங்கிரசுக்கு தலைமை இல்லாமல் இருப்பது பா.ஜனதாவுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    மோசடி செய்து தேர்தலில் மோடி வெற்றி பெற்றுள்ளார். காங்கிரஸ் ஆட்சியில் செய்த பல திட்டங்களால் தான் தற்போது பொருளாதாரத்தில் முன்னேறி இருக்கிறோம். உருக்காலையை ஏலத்திற்கு விட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ரெயில்வேயையும் தனியார் மயமாக்கி விடுவார்கள். காங்கிரஸ் கட்சி தலைவராக ராகுல்காந்தி, பிரியங்கா காந்தி ஆகிய இருவரும் பொறுப்பேற்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    புதிய நீதிகட்சி தலைவராக இருந்தாலும் அதிமுகவில் உறுப்பினராக உள்ளேன் என்று வேலூர் தொகுதி அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகம் கூறினார்.
    குடியாத்தம்:

    வேலூர் தொகுதி அ.தி.மு.க. கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகம் குடியாத்தம் பிச்சனூர் பகுதியில் பிரசாரத்தில் ஈடுபட்டு கொண்டிருந்தார்.

    அப்போது, அவரது வேட்புமனு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்தது. இதனையடுத்து ஏ.சி.சண்முகம் பிரசாரத்தை உடனடியாக நிறுத்திவிட்டு கட்சியினருடன் ஆலோசனை நடத்தினார். அதை தொடர்ந்து சிறிது நேரத்தில் அவரது மனு ஏற்கப்பட்டதாக கூறப்பட்டது. இதைதொடர்ந்து அவர் பிரசாரத்தில் ஈடுபட்டார்.

    நான் புதிய நீதிக்கட்சி தலைவராக இருந்தாலும் அ.தி.மு.க. உறுப்பினர் என்பதற்கான அடையாள அட்டை வேட்புமனுவில் கொடுத்துள்ளேன். துரைமுருகன் கூட்டத்தினர் சலசலப்பை உண்டாக்க முயற்சி செய்கிறார்கள். எப்படியாவது தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கத்தில் மேடை, மேடையாக அழுகிறார், அதற்காக நாடகம் ஆடுகிறார்.

    தேர்தலையொட்டி அவரது மகனை லாரி ஏற்றி கொல்ல சதி செய்யப்பட்டதாக கற்பனையாக பொய் சொல்கிறார்.

    இதன் மூலம் மக்கள் மத்தியில் அனுதாபம் ஏற்பட வேண்டும் என நினைக்கிறார். நாங்கள் ஜனநாயக ரீதியாக மக்களை சந்தித்து வெற்றி பெறுவோம். தோல்லி பயத்தால் துரைமுருகன் நாடகம் ஆடி பொய் பிரசாரம் செய்து வருகிறார் என்றார்.
    வேலூர் பாராளுமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ஏ.சி.சண்முகத்திற்கு ரூ.193 கோடியே 95 லட்சத்து 71 ஆயிரத்து 347.85 மதிப்பிலான சொத்துகள் இருப்பதாக வேட்புமனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
    வேலூர்:

    வேலூர் பாராளுமன்ற தொகுதிக்கு 5-ந் தேதி தேர்தல் நடக்கிறது. அ.தி.மு.க. சார்பில் ஏ.சி.சண்முகம், தி.மு.க. சார்பில் கதிர் ஆனந்த் போட்டியிடுகின்றனர்.

    வேலூர் தொகுதியில் அ.தி.மு.க. கூட்டணி சார்பில் போட்டியிடும் புதிய நீதிக் கட்சித் தலைவர் ஏ.சி.சண்முகம், அவரது மனைவி லலிதா லட்சுமி ஆகியோர் பெயரில் மொத்தம் ரூ.193 கோடியே 95 லட்சத்து 71 ஆயிரத்து 347.85 மதிப்பில் அசையும், அசையா சொத்துகள் இருப்பதாக வேட்புமனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    வேலூர் தொகுதி

    ஏ.சி.சண்முகம் பெயரில் மொத்தம் ரூ. 28 கோடியே 49 லட்சத்து ஒரு ஆயிரத்து 470.63 மதிப்பிலும், அவரது மனைவி பெயரில் ரூ. 22 கோடியே 81 லட்சத்து 61 ஆயிரத்து 501.22 மதிப்பிலும் அசையும் சொத்துகள் உள்ளன.

    இதில், ஏ.சி.சண்முகம் பெயரில் கையிருப்பு ரொக்கம் ரூ. 8,92,470, வங்கியிருப்பு ரூ. 79,19,627.63, பங்கு பத்திரங்களில் முதலீடு ரூ.24 கோடியே 89 லட்சத்து 6 ஆயிரத்து 680, இதர முதலீட்டின் மீதான வருவாய் ரூ. 1 கோடியே 93 லட்சத்து 16 ஆயிரத்து 193, நகைகள் ரூ. 78 லட்சத்து 66 ஆயிரத்து 500, அவரது மனைவி பெயரில் கையிருப்பு ரொக்கம் ரூ. 9,21,230, வங்கியிருப்பு ரூ. 1 கோடியே 11 லட்சத்து 29 ஆயிரத்து 543.22, பங்கு பத்திரங்களில் முதலீடு ரூ.16 கோடியே 96 லட்சத்து 3 ஆயிரத்து 614, காப்பீட்டு முதலீடு ரூ.10 லட்சத்து 45 ஆயிரம், இதர முதலீட்டின் மீதான வருவாய் ரூ. 3 கோடியே 23 லட்சத்து 40 ஆயிரத்து 014, நகைகள் ரூ. 1 கோடியே 31 லட்சத்து 22 ஆயிரத்து 100 அடங்கும்.

    விவசாய நிலங்கள் இனங்களில் ஏ.சி.சண்முகம் பெயரில் சென்னை, திருவண்ணாமலை, வேலூர், திருப்பூர், திருச்சி, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களிலும், பெங்களூரு உள்ளிட்ட பகுதிகளில் மொத்தம் ரூ. 39 கோடியே 80 லட்சத்து 79 ஆயிரத்து 600 மதிப்பிலும், அவரது மனைவி பெயரில் ரூ. 26 கோடியே 56 லட்சத்து 30 ஆயிரத்து 138 மதிப்பிலும் அசையா சொத்துகள் உள்ளன.

    விவசாய நிலங்கள் அல்லாத இனங்களில் ஏ.சி.சண்முகம் பெயரில் மொத்தம் ரூ. 41 கோடியே 60 லட்சத்து 32 ஆயிரம் மதிப்பிலும், அவரது மனைவி பெயரில் ரூ. 34 கோடியே 67 லட்சத்து 66 ஆயிரத்து 638 மதிப்பிலும் அசையா சொத்துகள் உள்ளன.

    ஏ.சி.சண்முகம் பெயரில் ரூ. 12 கோடியே 76 லட்சத்து 61ஆயிரத்து 948 மதிப்பிலும், அவரது மனைவி பெயரில் ரூ.11 கோடியே 91 லட்சம் கடன் இருப்பதாகவும் அவரது வேட்புமனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    வேலூர் பாராளுமன்ற தொகுதிக்கு கடந்த ஏப்ரல் 18ஆம் தேதி நடக்க இருந்த தேர்தலையொட்டி ஏ.சி.சண்முகம் மார்ச் 22ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்திருந்தார். அப்போது அவரது வேட்புமனுவில் தனது குடும்ப சொத்து மதிப்பாக மொத்தம் ரூ. 191 கோடியே 21 லட்சத்து 69 ஆயிரத்து 579.27 மதிப்பில் அசையும், அசையா சொத்துகள் இருப்பதாக குறிப்பிட்டிருந்தார்.

    பின்னர், ரத்து செய்யப்பட்ட வேலூர் மக்களவைத் தேர்தல் 3 மாதங்களுக்கு பிறகு மீண்டும் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், வேட்புமனுவை தாக்கல் செய்துள்ள ஏ.சி.சண்முகம் தனது குடும்பச் சொத்து மதிப்பாக ரூ. 193 கோடியே 95 லட்சத்து 71 ஆயிரத்து 347.85 என குறிப்பிட்டிருந்தார். இதன்மூலம், அவரது குடும்ப சொத்து 3 மாதங்களில் ரூ. 2.74 கோடி உயர்ந்திருப்பது தெரியவந்துள்ளது.

    ×