search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நிர்மலா சீதாராமன் - ஓ பன்னீர்செல்வம்
    X
    நிர்மலா சீதாராமன் - ஓ பன்னீர்செல்வம்

    வேலூர் பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதா தலைவர்கள் பிரசாரம் - ஓ.பன்னீர்செல்வம்

    வேலூர் பாராளுமன்றத்தேர்தலில் பா.ஜ.க. தேசிய தலைவர்கள் பிரசாரம் செய்வார்கள் என்று துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.
    புதுடெல்லி:

    மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமனை, தமிழக துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் டெல்லியில் நேற்று சந்தித்தார்.

    அப்போது தமிழக நிதி மேலாண்மை மற்றும் தமிழகத்துக்கு தேவையான நிதி உதவி குறித்த கோரிக்கை மனுவை அவர் வழங்கினார். அப்போது தமிழக அரசின் நிதித்துறை முதன்மை செயலாளர் ச.கிருஷ்ணன் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் உடனிருந்தனர்.

    பின்னர் தமிழ்நாடு இல்லத்தில் ஓ.பன்னீர்செல்வம் நிருபர்களிடம் கூறியதாவது:-

    மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவை சந்தித்தது மரியாதை நிமித்தமானது. நிதி மந்திரி நிர்மலா சீதாராமனை சந்தித்து தமிழக நலனுக்காக நிதி தொடர்பாக பேசினேன். அவரும் பல்வேறு ஆலோசனை மற்றும் வழிமுறைகளை கூறியிருக்கிறார். மேலும் வளர்ச்சி திட்டங்களுக்கு தேவையான நிதியை கேட்டுள்ளேன். அதை கொடுப்பதாக அவர் உறுதி அளித்துள்ளார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அதனைத்தொடர்ந்து நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-

    கேள்வி:- அ.தி.மு.க.வில் இணக்கமான சூழ்நிலை இல்லை என்றும், அதனால் சில குறைகளை கூறவே அமித்ஷாவை நீங்கள் சந்தித்ததாகவும் கூறப்படுகிறதே?

    பதில்:- அதுபோன்ற எந்த பிரச்சினையும் இல்லை. மேலும் குறைகூறும் குணம் என்னிடம் அறவே இல்லை.

    கேள்வி:- வேலூர் பாராளுமன்ற தொகுதி தேர்தல் பிரசாரத்தில் பா.ஜ.க. தலைவர்கள் பங்கேற்கிறார்களா?

    பதில்:- வேலூர் பாராளுமன்ற தேர்தலில் எங்களுடன் கூட்டணியில் உள்ள அனைத்து கட்சி தலைவர்களும் பிரசாரம் செய்வார்கள். பா.ஜ.க. தேசிய அளவிலான தலைவர்களும் பிரசாரம் செய்ய வருவார்கள்.

    கேள்வி:- உங்கள் மகன் ரவீந்திரநாத்குமாருக்கு பதவி வழங்குவதில் உங்கள் தலையீடு இருந்ததாக கூறப்படுகிறதே?

    பதில்:- எனது மகனாக இருந்தாலும் மக்களிடம் ஆதரவும், தகுதியும், திறமையும் இருந்தால் அரசியலில் நீடிப்பார். ரவீந்திரநாத்குமாருக்கு பதவி வழங்க வேண்டும் என எந்த ஒரு பேச்சும் பேசவில்லை, மேலும் பதவி என்பது ஒருவரை தேடி வரவேண்டியது.

    கேள்வி:- சென்னை-சேலம் 8 வழி சாலை திட்டம் குறித்து என்ன நினைக்கிறீர்கள்?

    பதில்:- உள்கட்டமைப்பை மேம்படுத்த வேண்டுமென்றால் இது போன்ற சாலை திட்டம் தேவை. மக்களுக்கு வளர்ச்சி தேவையா? இல்லையா?. தமிழகத்தில் மக்களுக்கு எதிரான எந்த ஒரு திட்டத்தையும் செயல்படுத்த மாட்டோம். உயர் மின்கோபுரம் அமைக்கும் திட்டத்தை மாற்று வழியில் செயல்படுத்துவோம். மக்களுக்கு எதிரான எந்த திட்டமாக இருந்தாலும் அவர்களின் எதிர்ப்பு இருந்தால் நிறைவேற்றமாட்டோம்.

    இவ்வாறு ஓ.பன்னீர்செல்வம் பதில் அளித்தார்.
    Next Story
    ×