என் மலர்
தேர்தல் செய்திகள்
திருப்பரங்குன்றம், சூலூர் உள்ளிட்ட 4 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வருகிற 19-ந் தேதி நடைபெறுகிறது. இதற்காக கடந்த ஒரு மாதமாக நடைபெற்ற தேர்தல் பிரசாரம் இன்றுடன் நிறைவு பெறுகிறது.
இதையொட்டி அரசியல் கட்சியினர் வாக்கு சேகரிக்கும் பணியில் ஈடுபட்டு உள்ளனர். திருப்பரங்குன்றம் தொகுதியில் அ.தி.மு.க., தி.மு.க., அ.ம.மு.க., மக்கள் நீதி மய்யம் உள்பட 37 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
முக்கிய கட்சிகளின் தலைவர்கள் தங்கள் வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்ட, சுயேட்சையாக போட்டியிடுபவர்கள் நாள் தோறும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் நேற்று இடைத்தேர்தலில் போட்டியிடும் ஆறுமுகம், பூவநாதன், நாகராஜ், உக்கிர பாண்டி, செல்லப்பாண்டியன், சேகர் ஆகிய 6 சுயேட்சை வேட்பாளர்கள் ஒரே மேடையில் தோன்றி பிரசாரம் செய்தனர்.
திருப்பரங்குன்றம் 16 கால் மண்டபம் அருகில் நடந்த இந்த கூட்டத்தில் ஒவ்வொரு வேட்பாளர்களும் போட்டி போட்டுக்கொண்டு தங்கள் வாக்குறுதிகளை அள்ளி வீசினர்.
சுயேட்சை வேட்பாளர்கள் ஒரே மேடையில் தோன்றி பிரசாரம் செய்தது அப்பகுதி வாக்காளர்களிடையே வியப்பை ஏற்படுத்தியது.
ஆண்டிப்பட்டியில் அ.ம.மு.க. கொள்கை பரப்பு செயலாளரும் தேனி பாராளுமன்ற தொகுதி வேட்பாளருமான தங்க தமிழ்ச்செல்வன் இன்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தேர்தல் ஆணையத்தில் ஆளும் கட்சியினரின் அத்து மீறல்குறித்து எந்த புகார் அளித்தாலும் அவர்கள் நடவடிக்கை எடுப்பதில்லை. தற்போது நடந்துள்ள விதி மீறல் அப்பட்டமாக வெளிப்பட்டுள்ளது இதன் பிறகாவது அவர்கள் எந்தவிதமான நடவடிக்கையை எடுக்கிறார்கள்? என்று பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.
தேனி பாராளுமன்ற தொகுதியில் வருகிற 19-ந்தேதி நடைபெறும் மறு வாக்குப்பதிவு நியாயமாக நடக்கும் என்று நம்புகிறோம். அதே போல் அன்றைய தினம் நடைபெறும் 4 சட்டமன்ற தேர்தலும் ஜனநாயக முறைப்படி நடக்க தேர்தல் ஆணையம் உறுதியளிக்க வேண்டும்.
23-ந்தேதி வாக்கு எண்ணிக்கைக்கு பிறகு தமிழகத்தில் பாராளுமன்றம் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலில் பெரும்பாலான இடங்களில் அ.ம.மு.க. வெற்றி பெறும்.
இவ்வாறு அவர் கூறினார்.
தேனி மாவட்டம் குச்சனூர் சனீஸ்வர பகவான் கோவில் அருகே சுரபிநதி செல்கிறது. இந்த நதிக்கரையில் காசி அன்னபூரணி ஆலயம் கட்டப்பட்டு வந்தது. ஆலயம் கட்டி முடித்து கும்பாபிஷேக பணிகள் நடந்த நிலையில் அதற்காக வைக்கப்பட்டுள்ள கல்வெட்டில் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பெயர் இடம் பெற்றிருந்தது. அதற்கு கீழே தேனி பாராளுமன்ற உறுப்பினர் என்று ரவீந்திரநாத்குமார் பெயர் பொறிக்கப்பட்டு இருந்தது.

தற்போது மீண்டும் ஒரு சர்ச்சையாக கல்வெட்டில் ரவீந்திரநாத்குமார் பெயர் இடம் பெற்றுள்ளது. எதிர்கட்சியினர் மற்றும் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கு பல்வேறு தரப்பிலும் கண்டனங்கள் எழுந்த நிலையில் கமல் மீது அரவக்குறிச்சி காவல்நிலையத்தில் 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. மேலும், இந்துக்களை இழிவுபடுத்தும் வகையில் பேசியதாக கமல்ஹாசனின் தேர்தல் பிரசாரத்திற்கு தடை விதிக்கக் கோரி பாஜக சார்பில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இதனிடையே, இந்து தீவிரவாதம் குறித்து பேசிய விவகாரத்தில் முன் ஜாமின் கோரி கமல்ஹாசன் தரப்பில் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் நேற்று மனுதாக்கல் செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து கமல்ஹாசன் பிரசாரத்திற்கு தடை விதிக்க கோரி வழக்கறிஞர் சரவணன் என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனுவை ஏற்க நீதிபதிகள் இன்று மறுப்பு தெரிவித்தனர்.
தேர்தலை முன்னிட்டு தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளன. அதனால் தேர்தல் பிரசாரம் தொடர்பான முடிவுகளை தேர்தல் ஆணையம்தான் எடுக்க வேண்டும். இந்த மனுவை நாங்கள் விசாரணை மேற்கொள்ள இயலாது என நீதிபதிகள் கூறிவிட்டனர். மேலும் நாளை சூலூர் தொகுதியில் பிரச்சாரம் மேற்கொள்ள காவல்துறை அனுமதி மறுப்பு தெரிவித்துள்ளது.
இந்நிலையில் கரூரில் வேலாயுதம்பாளையம் பகுதியில் பிரச்சாரத்தின் போது மக்கள் நீதி மய்யம் கட்சித்தலைவர் கமல் ஹாசன் மீது நடந்த செருப்பு வீச்சு தாக்குதலால் அங்கு பரபரப்பு நிலவியது.
இதனைத்தொடர்ந்து மக்கள் நீதி மய்யம் நிர்வாகிகள் சினேகன் மற்றும் தொண்டர்களுடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விக்ரமன் பேச்சுவார்த்தை நடத்தினார். இதனால் மக்கள் நீதி மய்யம் தொண்டர்கள் கலைந்து சென்றனர். இதனைத்தொடர்ந்து கல்வீச்சில் ஈடுபட்ட தளவாபாளையத்தை சேர்ந்த ராமச்சந்திரன் என்பவரை பிடித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தேர்தல் பிரசார பொதுக் கூட்டத்தில் கமல்ஹாசன் மீது செருப்புகள் மற்றும் முட்டை வீசப்பட்டது.
கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலையொட்டி மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளர் மோகன்ராஜை ஆதரித்து அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் பிரசாரம் மேற்கொண்டார். கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று அவர் பிரசாரத்தில் ஈடுபட்டு பேசியபோது, சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து என்று குறிப்பிட்டார்.
அவருடைய கருத்துக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதற்கிடையே கடந்த திங்கட்கிழமையன்று அவர் பிரசாரத்தை ரத்து செய்தார்.

பின்னர் பேச்சை முடித்துக்கொண்டு அவர் கீழே இறங்க முயன்றபோது, மேடையை நோக்கி 2 செருப்புகள் அடுத்தடுத்து வீசப்பட்டன. மேலும் முட்டையும் வீசப்பட்டது. அவை மேடையில் வந்து விழுந்தன. கமல்ஹாசன் மீது படவில்லை. இதையடுத்து அவர் மேடையில் இருந்து இறங்கி, காரில் அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.
இதைக்கண்ட மக்கள் நீதிமய்யம் கட்சியினர் ஒருவரை பிடித்து தாக்கினார்கள். இதையடுத்து அவரை போலீசார் மீட்டனர்.
போலீசார் நடத்திய விசாரணையில், 3 பேர் இந்த சம்பவத்தில் ஈடுபட்டதும், அதில் 2 பேர் தப்பிவிட்டதும் தெரியவந்தது. மேலும் மேடை மீது செருப்பு வீசியவர் பா.ஜ.க.வை சேர்ந்த ராமச்சந்திரன் என்பது தெரியவந்தது.
இதையடுத்து கட்சி நிர்வாகியும், சிவகங்கை பாராளுமன்ற தொகுதி வேட்பாளருமான சினேகன் தலைமையில் மக்கள் நீதி மய்யம் கட்சியினர் மோடிக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.
இதுபற்றி தகவல் அறிந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விக்ரமன் அங்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது அவர் ஒலிபெருக்கி மூலம், “உங்கள் கோபம் நியாயமானது. உங்கள் உணர்வுகளை மதிக்கிறேன். நாங்களும், நீங்களும் ஒரே அணியில்தான் இருக்கிறோம். எனவே எங்கள் பணியை செய்ய விடுங்கள். உங்கள் கோரிக்கை மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என்று கூறினார்.
இதை ஏற்று மக்கள் நீதிமய்யம் கட்சியினர் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
முன்னதாக பொதுக்கூட்டத்தில் கமல்ஹாசன் பேசுகையில், “நாளை (அதாவது இன்று) சூலூர் செல்வதாக இருந்தது. பிரசாரத்திற்கு தடை செய்யப்பட்டிருக்கிறது. அதற்கு அவர்கள் சொல்லும் காரணம் சட்டம்-ஒழுங்கு மீறப்படும் என்பது. நாங்கள் சட்டம்-ஒழுங்கை மீறுபவர்கள் அல்ல என்பதற்கு எங்கள் கூட்டமே உதாரணம்” என்றார்.

வேலாயுதம்பாளையம்:
அரவக்குறிச்சி தொகுதி தி.மு.க. வேட்பாளர் செந்தில் பாலாஜியை ஆதரித்து தோட்டக்குறிச்சி அய்யம்பாளையம், புதுகுறுக்குபாளையம் உள்ளிட்ட இடங்களில் உதயநிதி ஸ்டாலின் திறந்த வேனில் தேர்தல் பிரசாரம் செய்தார். அப்போது அவர் கூறியதாவது:-
இப்போது முதல்வராக இருக்கும் எடப்பாடி பழனிச்சாமிக்கா நீங்கள் வாக்களித்தீர்கள்? அவர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வரா? ஜெயலிலதாவுக்குதான் வாக்களித்தீர்கள். எடப்பாடி பழனிச்சாமிக்கு நீங்கள் வாக்களிப்பீர்களா? ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் நடந்த கூத்துகள் உங்கள் அனைவருக்கும் தெரியும்.
கூவத்தூரில் எம்.எல்.ஏ.க் களை அடைத்து வைத்தபோது ஒரு எம்.எல்.ஏ. சுவர் ஏறி குதித்தார். இன்னொருவர் ஓடும் பஸ்சில் இருந்து கீழே இறங்கி ஓடினார். எடப்பாடி பழனிச்சாமி 10 மாத குழந்தையாக தவழ்ந்து சென்று சசிகலா காலில் விழுந்து பதவிக்கு வந்தார்.
இந்த ஆட்சி 2 ஆண்டுகளாக கோமா நிலையில் இருக்கிறது. நடந்து முடிந்த 18 சட்டமன்ற தொகுதி இடைத் தேர்தல்களிலும் தி.மு.க. வெற்றி பெறும் என கருத்துக்கணிப்புகள் வருகின்றன. எனவே இந்த ஆட்சி தற்போது டெட்பாடி ஆகி விட்டது. பிணத்தை சவப் பெட்டியில் வைத்து 4 ஆணி அடிப்பார்கள். அது தான் இப்போது நடைபெறும் 4 சட்டமன்ற இடைத்தேர்தல். நீங்கள் ஆணி அடித்தால் புதைகுழியில் தள்ளி விடலாம்.
மோடி போட்ட பிச்சை இந்த முதல்-அமைச்சர் நாற்காலி. மோடிக்கு கடந்த மாதம் 18-ந்தேதி டாடா காட்டி விட்டோம். எடப் பாடி பழனிச்சாமியை வீட்டுக்கு அனுப்ப உதயசூரியன் சின்னத்தில் வாக்களியுங்கள். இந்த ஆட்சியில் என்ன சாதனை செய்தீர்கள் என எடப்பாடி பழனிச்சாமியை கேட்டால், 2 ஆண்டுகள் ஆட்சியில் இருந்ததே சாதனை. 38 ஆயிரம் போராட்டங்களை சந்தித்து சமாளித்துள்ளோம் என்கிறார்.
இதுவெல்லாம் சாதனையல்ல வேதனை. எந்த கட்சியுடன் உதவியும் இல்லாமல் தூத்துக்குடியில் மக்கள் தன்னெழுச்சியாக போராட்டம் நடத்தினார்கள். அந்த போராட்டத்தில் காவல் துறையை வைத்து 13 பேரை காக்கா, குருவியை போல சுட்டு கொன்றனர். 1,000 பேர் கூடியதால் துப்பாக்கி சூடு நடத்தியதாக கூறினர். எனவே இந்த ஆட்சி தேவையா? என்பதை சிந்தித்து பாருங்கள்.
மக்களின் எழுச்சியை பார்க்கையில் வருகிற 19-ந் தேதி நடைபெற உள்ள 4 இடைத்தேர்தலிலும் தி.மு.க. வெற்றி பெறும் என்கிற நம்பிக்கை வந்துவிட்டது. எனவே ஜூன் 3-ந்தேதி தலைவர் கருணாநிதி பிறந்த தினத்தின் போது, நமது தலைவர் ஸ்டாலினை முதல்-அமைச்சராக்கும் வாய்ப்பு வந்திருக்கிறது. இதற்காக ஒட்டு மொத்த தமிழகமும் காத்திருக்கிறது.
அப்போலோ ஆஸ்பத்திரியில் ஜெயலலிதா இறந்தது எப்படி? என்பது குறித்து கேட்டால் யாராலும் பதில் சொல்ல முடியவில்லை. ஜெயலலிதாவின் சாவில் மர்மம் இருப்பதாக முதலில் கூறியவர் பன்னீர்செல்வம். சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும் எனக்கூறியதோடு அவர் நின்று விட்டார்.
ஆனால் தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் திட்டங்களை தீட்டுவது ஒருபுறமிருப்பின், முதல் வேலையாக ஜெயலலிதா மரண சந்தேகம் குறித்து உரிய விசாரணை நடத்தி சம்பந்தப்பட்டவர்களுக்கு தண்டனை பெற்றுத்தர நடவடிக்கை மேற்கொள்வதுதான் என தி.மு.க. தலைவர் ஸ்டாலின் உறுதி அளித்துள்ளார்.
இவ்வாறு அவர் பேசினார்.


கரூர்:
அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர் செந்தில்நாதனை ஆதரித்து தே.மு.தி.மு.க. பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் ஈசநத்தம் மூன்றுரோடு, அரவக்குறிச்சி புங்கம்பாடி கார்னர், சின்னதாராபுரம் மெயின் ரோடு உள்ளிட்ட இடங்களில் திறந்த வேனில் நின்று பிரசாரம் செய்தார். அப்போது அவர் கூறியதாவது:-
கொள்கை பிடிப்பில்லாதவர் தான் தி.மு.க. சார்பில் வேட்பாளராக நிற்கிறார். சுயநலம் கருதி பச்சோந்தியாய் இருப்பவர்களை கண்டறிந்து தேர்தலில் மக்கள் தக்க பாடம் புகட்ட வேண்டும். அரவக்குறிச்சி தொகுதியில் நீண்ட நாட்களாக எம்.எல்.ஏ. இல்லாத சூழல் இருக்கிறது. இதனால் தொகுதிக்கு மேற் கொள்ளப்பட வேண்டிய பணிகள் நிறைய இருக்கின்றன.
எனவே தொகுதியின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு அ.தி.மு.க. வேட்பாளர் செந்தில்நாதனுக்கு மக்கள் ஆதரவினை தர வேண்டும். அ.தி.மு.க. கூட்டணியை பொறுத்த வரையில் ஒரு வாக்குறுதி சொன்னால் சொன்னது தான். அதில் எவ்வித மாற்று கருத்தும் இல்லை. இதனால் மக்களின் எழுச்சியால் தமிழகம்-புதுச்சேரி உள்பட 39 நாடாளுமன்ற தொகுதிகள் மற்றும் 22 சட்டமன்ற தொகுதிகளிலும் அ.தி.மு.க. கூட்டணி வெற்றி பெறுவது உறுதியாகி விட்டது. இதனால் அ.தி.மு.க. ஆட்சி தொடரும் என்பதை ஆணித்தரமாக சொல்லலாம்.
2011-ல் ஜெயலலிதா ஆட்சிக்கு வருகிற சமயத்தில் மின்தட்டுப்பாடு நிலவியது. அப்போது அதற்கு உரிய தீர்வு காணப்பட்டு மின்மிகை மாநிலமாக தமிழகம் மாறியது. இதனால் தற்போது எங்கும் மின் வினியோகம் அடிக்கடி நிறுத்தம் என்கிற பேச்சுக்கே இடமில்லை என்ற நிலை ஏற்பட்டு இருக்கிறது. எங்களது கூட்டணி 2011-ல் அமைந்த கூட்டணி. ஆளும் கட்சி-எதிர்கட்சியாக அமைந்த கூட்டணியாகும்.
சில துரோகிகளின் செயலால் அன்று கூட்டணி பிரிக்கப்பட்டது. ஆனால் கடவுளின் அருளால் மீண்டும் இந்த கூட்டணி அமைந்துள்ளது. 2011 தேர்தலின் வெற்றி வரலாறு, மீண்டும் 2019-ல் திரும்பி வரப்போகிறது. அப்படி நடக்கும் போது தமிழகம் முழுவதும் மக்கள் நலத் திட்டங்கள் கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்படும். பிரதமர் மீண்டும் பதவி யேற்றவுடன், கூட்டணி கட்சியினர் ஒருங்கிணைந்து சென்று நதிநீர் இணைப்பு பற்றி வலியுறுத்துவோம்.
ஸ்டாலின் சொல்கிற எந்த ஒரு வாக்குறுதியும் நிறைவேறப்போவதில்லை. ஏனெனில் தி.மு.க.வால் நிச்சயம் ஆட்சிக்கு வர முடியாது. எனவே வாக்கினை இரட்டை இலைக்கு செலுத்துங்கள். இரட்டை இலைக்கு வாக்கு தருவீர்களா? செந்தில்நாதனை வெற்றி பெற வைப்பதோடு எதிர்த்து போட்டியிடுபவதை டெபாசிட் இழக்க செய்வீர்களா? (அப்போது ஆம் என்று மக்கள் கோஷம் எழுப்பினர்).
அம்மாவின் (ஜெயலலிதா) ஆன்மாவுக்கு பதில் சொல்லும் வகையில், துரோகம் செய்தவருக்கு தக்க பதிலடியை கொடுக்க வேண்டும் என்று உங்கள் வீட்டு பெண்ணாக, சகோதரியாக அத்தனை பேரையும் பார்த்து கேட்டு கொள்கிறேன்.
தி.மு.க. ஆட்சி வந்தாலே கட்டபஞ்சாயத்து தான் நடக்கும். ஆனால் இன்று தமிழகம் இன்று அமைதி பூங்காவாக இருக்கிறது என்தை எண்ணி பார்த்து கொள்ளுங்கள். டி.டி.வி. தினகரன் சொல்கிற வாக்குறுதிகள் எல்லாம் பொய்யானவை. இன்று அ.தி.மு.க.வில் சிலிப்பர் செல் இருக்காங்க என்று சொல்லி வருகிறார். உண்மையான சிலிப்பர் செல்லே டி.டி.வி.தினகரன் தான். வேறு யாராவது அ.தி.மு.க.வை விட்டு சென்று கட்சி ஆரம்பித்தார்களா?. அவருக்கும் சரியான பாடத்தை இந்த தேர்தலில் புகட்ட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கோவை:
சூலூர் தொகுதியில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பிரசாரம் மேற்கொண்டார். செஞ்சேரி மலையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அவர் பேசியதாவது-
தமிழகத்தில் அரசியல் என்பது மிக இழிவாக கற்பிக்கப்பட்டு இருக்கிறது. கட்சிகள் நிறுவனமாகிவிட்டன. வேட்பாளர்களை நேர்காணல் செய்து பலகோடி ரூபாய் முதலீடு செய்து வாங்கும் வியாபாரிகளாக மாறிவிட்டனர்.
வேட்பாளர் ஒரு தொகுதிக்கு ரூ.100 கோடி முதலீடு செய்கிறார் என்றால் மக்களுக்கு சேவை செய்ய வருகிறாரா? என்பதை நீங்கள் சிந்தித்து பார்க்க வேண்டும்.
இதை தகர்த்து எறிந்து புதிய அரசியலை கொண்டு வராமல் நல்ல ஆட்சியை உருவாக்க முடியாது. நாங்கள் தோற்பதற்காக தானே தேர்தலில் போட்டியிடுகிறோம் என்று கேட்கிறார்கள். தோற்பதற்காக அல்ல, நல்ல அரசியலை தொடங்குவதற்காக போட்டியிடுகிறோம். வேட்பாளர்களோ, தலைவர்களோ வெற்றியை தீர்மானிப்பது இல்லை. வாக்களிக்கும் மக்கள்தான் தீர்மானிக்கிறார்கள்.
எங்களை விமர்சிப்பதை பெரிதாக எடுத்துக்கொள்வது இல்லை. விமர்சனமும் ஒருவித பாராட்டுதான். காயப்படுத்தும் கற்கள் இல்லை. நாங்கள் உணர்ந்து கொண்ட தத்துவம் விமர்சனம் இல்லாமல் வளர முடியாது என்பதுதான்.
ஓட்டுக்கு பணம் வாங்காதீர்கள் என்று சொல்கிறோம். ஆனால் தொடர்ச்சியாக தேர்தல் களத்தில் நமது உரிமையை விற்பது என்பது அவமானம் ஆகும். வாக்கை விற்கவில்லை, வாழ்க்கையை விற்கிறோம்.
தேர்தல் என்பது வாக்கை விற்கும் சந்தை இல்லை. அடுத்த 5 ஆண்டு வாழ்க்கையை தீர்மானிக்கும் சந்தை. சின்னத்தை பார்த்து வாக்களிப்பதை நிறுத்துங்கள். நல்ல எண்ணத்தை கவனித்து ஓட்டுப்போடும் முறையை செயல்படுத்துங்கள். தேர்தல் களத்தில் ஓட்டுக்கு பணம் வாங்காதீர்கள் என்று சொல்ல ஒரு கட்சியாவது இருக்கிறதா? பணம் இருப்பவன்தான் அரசியல் செய்யமுடியும் என்ற நிலை இருக்கும்போது எப்படி நல்ல ஆட்சி நடக்கும்.
நாங்கள் வாக்குக்காக தேர்தலில் நிற்கவில்லை. எங்களின் இன மக்களுக்காக தேர்தலில் நின்று பேசி வருகிறோம். தமிழகத்தில் உள்ள 24 மாவட்டத்தை வறட்சியாக அறிவித்து உள்ளது. அப்படி என்றால் தண்ணீர் இல்லை என்று அர்த்தம்.
அ.தி.மு.க.,- தி.மு.க.வை வெல்ல முடியாது என்று கூறுகிறார்கள். வெல்ல முடியாத படை உலகத்திலேயே இல்லை. அ.தி.மு.க., தி.மு.க. செத்துப்போன கட்சிகள். எனவேதான் ஓட்டுக்கு காசு கொடுக்கிறார்கள்.
கல்வி சந்தை பொருளாக மாற்றப்பட்டு விட்டது. அறிவை வளர்க்கும் கூடம் இல்லை. வர்த்தக, வியாபார மையமாக மாற்றப்பட்டு விட்டது. நாட்டின் எதிர்காலம் குழந்தைகள் கையில்தான் இருக்கிறது. ஆனால் குழந்தைகள் நலனுக்கு என்று ஒதுக்கப்படும் நிதியில் கொள்ளையடிக்கிறார்கள். இது கொடுமை இல்லையா?.
தேர்தல் என்றால் என்ன மாறுதல் வருகிறது என்பதை படித்த இளைஞர்கள் உணர வேண்டும். அதே ஆட்சி முறைதான் இருக்கிறது. ஊழல் நிறைந்த கட்சியான அ.தி.மு.க., தி.மு.க.வை வீட்டிற்கு அனுப்ப வேண்டும். அவர்கள் நல்லது செய்யவில்லை. மீண்டும் ஆட்சிக்கு வந்தால் செய்வோம் என்கிறார்கள். ஏன் இருந்தபோது செய்யவில்லை.
இவ்வாறு அவர் பேசினார்.
தூத்துக்குடி:
ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் மோகனை ஆதரித்து தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசன் நேற்று தேர்தல் பிரசாரம் செய்தார். அவர் தாளமுத்துநகர் பகுதியில் கூறியதாவது:-
இந்த தேர்தல் தமிழகத்தின் மிக முக்கியமான தேர்தல். இந்த தேர்தல் அடிப்படையில் தொகுதி மக்களின் வருங்காலத்தை தீர்மானிக்க போகிறீர்கள். அ.தி.மு.க. ஆட்சியாளர்கள், முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் திட்டங்களை தடம் புரளாமல் செய்து வரும் ஆட்சியாளர்கள். கிராமம் முதல் நகரம் வரை திட்டங்களை கொண்டு சேர்ப்பதில் இந்தியாவிலேயே முதல் வரிசையில் அமரக்கூடிய ஆட்சியாளராக தமிழக ஆட்சியாளர்கள் செயல்பட்டு வருகின்றனர்.
22 தொகுதியிலும் அ.தி.மு.க. வெற்றி பெறும். அ.தி.மு.க. ஆட்சியை பொறுத்தவரை அனைத்து மக்கள் நலனுக்காக பணியாற்றி வருகின்றனர். ஏழை, எளிய மக்களின் நலனை பேணி காக்கும் அணி. இல்லாதோர் நிலையை உயர்த்தும் அரசு. தொழிலாளர், விவசாயிகள் நலன் காக்கும் ஆட்சி. மகளிர், மாணவர்கள், இளைஞர் நலனை காக்கும் ஆட்சி.
தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி சந்தர்ப்பவாத கூட்டணி. மக்கள் வெறுக்கும் கூட்டணி. நம்முடைய கூட்டணி மக்கள் விரும்பும் கூட்டணி. இந்த தேர்தலில் நிச்சயமாக வெற்றி பெறுவோம். முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் சாமானிய மக்களோடு நெருங்கி பழகி வருகின்றனர். இது போன்ற செயல்பாடுகள் தொடர வேண்டும். பெண்கள் முன்னேற்றம் நாட்டின் முன்னேற்றம். இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களை எடுத்துக் கொண்டால், தமிழகத்தில் மட்டும்தான் பெண்களுக்கு அதிக திட்டங்கள் செயல் படுத்தப்பட்டு வருகின்றன.
மத்திய அரசு இந்தியாவை வளர்ச்சியான பாதையில் அழைத்து செல்லும் அரசாக உள்ளது. அ.தி. மு.க.- பா.ஜனதா வுடன் கூட்டணி வைத்து இருப்பது மட்டுமின்றி, மத்திய அரசிடம் இருந்து தமிழகத்தின் வளர்ச்சிக்காக பலகோடி ரூபாய் கிடைத்து உள்ளது என்பதுதான் உண்மை. தமிழக எதிர்க்கட்சி தலைவரை, தெலுங்கான முதல்வர் சந்திரசேகர ராவ் சந்தித்த போது மக்கள் புரிந்து கொண்டார்கள். வடஇந்தியாவில் காங்கிரசின் தோல்வி உறுதி செய்யப்பட்ட ஒன்று. அதன் அடிப்படையில் அரசியல் தொடங்கி உள்ளது. எனவே நம்முடைய வெற்றியை, வளர்ச்சியை உறுதி செய்து கொள்ள வேண்டும். அந்த வகையில் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதியில் வேட்பாளர் மோகனை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்யுங்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.






