search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    22 தொகுதி இடைத்தேர்தல்களிலும் அ.தி.மு.க. வெற்றி பெறும்- ஜி.கே.வாசன் பேச்சு
    X

    22 தொகுதி இடைத்தேர்தல்களிலும் அ.தி.மு.க. வெற்றி பெறும்- ஜி.கே.வாசன் பேச்சு

    22 தொகுதி இடைத்தேர்தல்களிலும் அ.தி.மு.க. வெற்றி பெறும் என்று தேர்தல் பிரசாரத்தில் ஜி.கே.வாசன் பேசியுள்ளார்.

    தூத்துக்குடி:

    ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் மோகனை ஆதரித்து தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசன் நேற்று தேர்தல் பிரசாரம் செய்தார். அவர் தாளமுத்துநகர் பகுதியில் கூறியதாவது:-

    இந்த தேர்தல் தமிழகத்தின் மிக முக்கியமான தேர்தல். இந்த தேர்தல் அடிப்படையில் தொகுதி மக்களின் வருங்காலத்தை தீர்மானிக்க போகிறீர்கள். அ.தி.மு.க. ஆட்சியாளர்கள், முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் திட்டங்களை தடம் புரளாமல் செய்து வரும் ஆட்சியாளர்கள். கிராமம் முதல் நகரம் வரை திட்டங்களை கொண்டு சேர்ப்பதில் இந்தியாவிலேயே முதல் வரிசையில் அமரக்கூடிய ஆட்சியாளராக தமிழக ஆட்சியாளர்கள் செயல்பட்டு வருகின்றனர். 

    22 தொகுதியிலும் அ.தி.மு.க. வெற்றி பெறும். அ.தி.மு.க. ஆட்சியை பொறுத்தவரை அனைத்து மக்கள் நலனுக்காக பணியாற்றி வருகின்றனர். ஏழை, எளிய மக்களின் நலனை பேணி காக்கும் அணி. இல்லாதோர் நிலையை உயர்த்தும் அரசு. தொழிலாளர், விவசாயிகள் நலன் காக்கும் ஆட்சி. மகளிர், மாணவர்கள், இளைஞர் நலனை காக்கும் ஆட்சி.

    தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி சந்தர்ப்பவாத கூட்டணி. மக்கள் வெறுக்கும் கூட்டணி. நம்முடைய கூட்டணி மக்கள் விரும்பும் கூட்டணி. இந்த தேர்தலில் நிச்சயமாக வெற்றி பெறுவோம். முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் சாமானிய மக்களோடு நெருங்கி பழகி வருகின்றனர். இது போன்ற செயல்பாடுகள் தொடர வேண்டும். பெண்கள் முன்னேற்றம் நாட்டின் முன்னேற்றம். இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களை எடுத்துக் கொண்டால், தமிழகத்தில் மட்டும்தான் பெண்களுக்கு அதிக திட்டங்கள் செயல் படுத்தப்பட்டு வருகின்றன.

    மத்திய அரசு இந்தியாவை வளர்ச்சியான பாதையில் அழைத்து செல்லும் அரசாக உள்ளது. அ.தி. மு.க.- பா.ஜனதா வுடன் கூட்டணி வைத்து இருப்பது மட்டுமின்றி, மத்திய அரசிடம் இருந்து தமிழகத்தின் வளர்ச்சிக்காக பலகோடி ரூபாய் கிடைத்து உள்ளது என்பதுதான் உண்மை. தமிழக எதிர்க்கட்சி தலைவரை, தெலுங்கான முதல்வர் சந்திரசேகர ராவ் சந்தித்த போது மக்கள் புரிந்து கொண்டார்கள். வடஇந்தியாவில் காங்கிரசின் தோல்வி உறுதி செய்யப்பட்ட ஒன்று. அதன் அடிப்படையில் அரசியல் தொடங்கி உள்ளது. எனவே நம்முடைய வெற்றியை, வளர்ச்சியை உறுதி செய்து கொள்ள வேண்டும். அந்த வகையில் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதியில் வேட்பாளர் மோகனை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்யுங்கள்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    Next Story
    ×