search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆர்ப்பாட்டக் கூட்டம் நம்மை வன்முறைக்கு வலிந்து இழுக்கும் அதற்கு மயங்காதீர் - கமல்ஹாசன்
    X

    ஆர்ப்பாட்டக் கூட்டம் நம்மை வன்முறைக்கு வலிந்து இழுக்கும் அதற்கு மயங்காதீர் - கமல்ஹாசன்

    ஆர்ப்பாட்டக் கூட்டம் நம்மை வன்முறைக்கு வலிந்து இழுக்கும் அதற்கு மயங்காதீர் - கமல்ஹாசன்
    அரவக்குறிச்சி தொகுதியில் மக்கள் நீதி மய்யம் வேட்பாளர்  எஸ்.மோகன்ராஜூக்கு ஆதரவாக அந்த கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கடந்த 12-ந்தேதி பள்ளப்பட்டி என்ற இடத்தில் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசுகையில், “சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து; அவர்தான் நாதுராம் கோட்சே. அங்குதான் தீவிரவாதம் தொடங்குகிறது. காந்திஜியின் படுகொலைக்கு பதில் பெறத்தான் இங்கு வந்துள்ளேன்” என கூறினார்.



    அவர் இவ்வாறு கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. கமல்ஹாசனின் கருத்துக்கு பாரதீய ஜனதா, அ.தி.மு.க. கட்சிகளும் மற்றும் பல்வேறு இந்து அமைப்புகளும் கண்டனம் தெரிவித்து உள்ளன.

    இதற்கு பல்வேறு தரப்பிலும் கண்டனங்கள் எழுந்த நிலையில் கமல் மீது அரவக்குறிச்சி காவல்நிலையத்தில் 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. மேலும், இந்துக்களை இழிவுபடுத்தும் வகையில் பேசியதாக கமல்ஹாசனின் தேர்தல் பிரசாரத்திற்கு தடை விதிக்கக் கோரி பாஜக சார்பில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

    இதனிடையே, இந்து தீவிரவாதம் குறித்து பேசிய விவகாரத்தில் முன் ஜாமின் கோரி கமல்ஹாசன் தரப்பில் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் நேற்று மனுதாக்கல் செய்யப்பட்டது.  இதனை தொடர்ந்து கமல்ஹாசன் பிரசாரத்திற்கு தடை விதிக்க கோரி வழக்கறிஞர் சரவணன் என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்துள்ளார்.  இந்த மனுவை ஏற்க நீதிபதிகள் இன்று மறுப்பு தெரிவித்தனர்.

    தேர்தலை முன்னிட்டு தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளன.  அதனால் தேர்தல் பிரசாரம் தொடர்பான முடிவுகளை தேர்தல் ஆணையம்தான் எடுக்க வேண்டும்.  இந்த மனுவை நாங்கள் விசாரணை மேற்கொள்ள இயலாது என நீதிபதிகள் கூறிவிட்டனர். மேலும் நாளை சூலூர் தொகுதியில் பிரச்சாரம் மேற்கொள்ள காவல்துறை அனுமதி மறுப்பு தெரிவித்துள்ளது.

    இந்நிலையில் கரூரில் வேலாயுதம்பாளையம் பகுதியில் பிரச்சாரத்தின் போது மக்கள் நீதி மய்யம் கட்சித்தலைவர் கமல் ஹாசன் மீது நடந்த செருப்பு வீச்சு தாக்குதலால் அங்கு பரபரப்பு நிலவியது.

    இதனைத்தொடர்ந்து மக்கள் நீதி மய்யம் நிர்வாகிகள் சினேகன் மற்றும் தொண்டர்களுடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விக்ரமன் பேச்சுவார்த்தை நடத்தினார். இதனால் மக்கள் நீதி மய்யம் தொண்டர்கள் கலைந்து சென்றனர்.  இதனைத்தொடர்ந்து கல்வீச்சில் ஈடுபட்ட தளவாபாளையத்தை சேர்ந்த ராமச்சந்திரன் என்பவரை பிடித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.



    இந்நிகழ்வை தொடர்ந்து ம.நீ.ம. குடும்பத்தாருக்கும், ரசிகர்களுக்கும் மக்கள் நீதி மய்யம் கட்சித்தலைவர் கமல்ஹாசன் தொண்டர்களுக்கு அன்பு வேண்டுகோள் விடுத்துள்ளார். நிகழும் சம்பவங்கள், நம் நேர்மைக்கும் பொறுமைக்கும் நடக்கும் அக்னிப் பரிட்சை என்று தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். ஆர்ப்பாட்டக் கூட்டம் நம்மை வன்முறைக்கு வலிந்து இழுக்கும் அதைக்கண்டு மயங்கி விடக்கூடாது என்றும் தெரிவித்துள்ளார்.  அவர்களின் தீவிரவாதம் நம் நேர்மைவாதத்திற்கு முன் தோற்கும் எனவும் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். 
    Next Story
    ×