என் மலர்
தேர்தல் செய்திகள்
ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி அ.ம.மு.க. வேட் பாளர் சுந்தரராஜை ஆதரித்து, அக்கட்சியின் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் நேற்று புதுக்கோட்டை, கோரம்பள்ளம், தூத்துக்குடி ஹவுசிங் போர்டு, மாப்பிள்ளையூரணி, டேவிஸ்புரம், தாளமுத்துநகர், தருவைகுளம் ஆகிய பகுதிகளில் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:-
நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தல், இடைத்தேர்தல்களில் ஆளும் கட்சி படுதோல்வி அடையும் என்பதால், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மேலும் 3 எம்.எல்.ஏ.க்களுக்கு சபா நாயகர் மூலம் நோட்டீஸ் கொடுத்தார். ஆனால் உச்சநீதிமன்றம் தடை விதித்து விட்டது. இந்த ஆட்சி வருகிற 23-ந் தேதியுடன் முடிவுக்கு வருவது உறுதியாகிவிட்டது. ஏற்கனவே அ.தி.மு.க.வுக்கு எதிராக வாக்களித்த ஓ.பன்னீர்செல்வத்துக்கு துணை முதல்-அமைச்சர் பதவி கொடுத்தனர். ஆனால் அ.தி.மு.க.வுக்கு வாக்களித்த 18 பேருக்கு தகுதிநீக்கத்தை எடப்பாடி பழனிசாமி வழங்கி உள்ளார். இந்த ஆட்சி மக்களால் அகற்றப்படும் நிலை உருவாகி விட்டது. அதனால்தான் செல்லும் இடமெல்லாம் என்னை வாய்க்கு வந்தபடி பேசு கிறார்.
நான் தி.மு.க.வுடன் கூட்டணி வைத்து இருப்பதாக கூறுகிறார். தி.மு.க. வேட்பாளர் வெற்றி பெறுவதற்காக நாங்கள் வேட்பாளரை நிறுத்தி இருப்பதாக கூறுகிறார். ஆர்.கே.நகரில் தி.மு.க.வை டெபாசிட் இழக்க செய்தவர்கள் நாங்கள். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவிடம் இருந்த வெற்றி சின்னமான இரட்டை இலை சின்னத்தில் துரோக கறை படிந்து இருப்பதால், ஆர்.கே.நகர் மக்கள் துரோகத்துக்கு வாக்களிக்க மாட்டோம் என்று இரட்டை இலையை தோற்கடித்தனர். நாங்கள் தி.மு.க.வுடன் கூட்டணி வைக்கவில்லை என்பது மக்களுக்கு தெரியும். கடந்த முறை சுந்தரராஜ் 500 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இந்த முறை 50 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற செய்யுங்கள். 2-வது இடத் துக்குதான் மற்றவர்கள் போட்டியிட்டு வருகின்றனர்.
ஸ்டெர்லைட் ஆலை போராட்டத்தின்போது போராடிய மக்கள் 13 பேரை சுட்டுக்கொலை செய்தது எடப்பாடி பழனிசாமி அரசு. அதற்கு மே 23-ந் தேதிக்கு பிறகு அவர் தமிழக மக்களுக்கு பதில் சொல்ல வேண்டிய நேரம் வந்து விட்டது. அந்த 13 பேரை போலீசார் சுடுவதற்கு யார் காரணமாக இருந்தார்கள்?, யார் அவர்களுக்கு ஆணையிட்டார்கள்? என்பதை வெளிக் கொண்டு வரும் நேரம் வந்து விட்டது. நிரந்தரமாக ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கு நீங்கள் வாக்களிக்க வேண்டிய சின்னம் பரிசு பெட்டகம்.
தமிழக மக்கள் விரும்பாத எந்த திட்டத்தையும் தமிழகத்தில் அனுமதிக்க விடமாட்டோம் என்ற உறுதியோடு செயல்பட்டு வரும் கட்சி அ.ம.மு.க., ஆட்சிக்கு வர வேண்டும், அதிகாரத்தை கைப்பற்ற வேண்டும் என்பதை விட, தமிழகத்தில் உள்ள துரோகிகளை ஒழித்து கட்ட வேண்டும். ஏற்கனவே 5 முறை ஆட்சி செய்த தி.மு.க. ஆட்சிக்கு வந்து மக்களுக்கு பயன் இல்லை என்பது எடுத்துக்கூறி உண்மையான மக்கள் ஆட்சியை தமிழகத்தில் உருவாக்க நீங்கள் வாக்க ளிக்க வேண்டிய சின்னம் பரிசுபெட்டகம் என்பதை எடுத்துக்கூற வந்து உள்ளேன். மோடியின் தவறான பொருளாதார கொள்கையால் மூடப்பட்ட தொழிற்சாலைகளை மீண்டும் திறக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும். ஆகையால் நீங்கள் பரிசு பெட்டகம் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச் செய்யுங்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.
காங்கிரஸ் கட்சிக்கு கடந்த 2014-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் 44 இடங்களே கிடைத்திருந்தன.
இந்த தடவை காங்கிரஸ் கட்சிக்கு சுமார் 150 இடங்கள் வரைதான் கிடைக்கும் என்று பெரும்பாலான கருத்துக் கணிப்புகளில் கூறப்பட்டுள்ளது.
ஆனால் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி இந்த தடவை காங்கிரஸ் கட்சி ஆச்சரியப்படும் அளவுக்கு வெற்றிகளை குவிக்கும் என்று நம்பிக்கையோடு பேசி வருகிறார். மோடி நிச்சயமாக ஆட்சி அமைக்க முடியாது என்பதை அவர் உறுதிபட பொதுக்கூட்டங்களில் கூறி வருகிறார்.
இது தொடர்பாக அவர் ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு விரிவான பேட்டி அளித்துள்ளார். அதில் ராகுல்காந்தி மனம் திறந்து கூறியிருப்பதாவது:-
இந்தியாவில் மக்கள்தான் எஜமானர்கள். அவர்களது முடிவுக்காக நான் காத்திருக்கிறேன். அவர்கள் முடிவை தெரிந்த பிறகே எனது அடுத்தகட்ட நடவடிக்கைகள் அமையும்.
இந்த தேர்தலில் மோடி தோற்கடிக்கப்படுவது நிச்சயம். இந்தியாவில் உள்ள 125 கோடி மக்களால் மோடியை தோற்கடிக்க முடியாது என்று நினைக்கிறீர்களா?
தற்போது இந்தியாவில் வேலை இல்லா பிரச்சனை, பொருளாதார சிக்கல்கள் அதிகம் உள்ளது. புதிதாக அமைய இருக்கும் அரசுக்கு இந்த பிரச்சனைகளையெல்லாம் தீர்த்து இந்தியாவை மீண்டும் வளர்ச்சி பாதைக்கு கொண்டு வரவேண்டிய பொறுப்பு உள்ளது.
உலகம் முழுக்க உள்ள அரசியல் வாதிகளை ஆய்வு செய்து பார்த்தால் அவர்கள் தங்கள் எதிராளிகளின் மீது அன்பும், மரியாதையும் வைத்திருந்தது தெரியும். அதுதான் அவர்களை வெற்றிப்பாதைக்கு அழைத்து சென்றது.
வெறுப்பு அரசியலால் எதையும் சாதிக்க இயலாது. பாராளுமன்றத்தில் நான், மோடியை கட்டி பிடித்து வாழ்த்தியது அந்த அடிப்படையில்தான். ஆனால் அதை பெரும்பாலானவர்கள் சரியான முறையில் உணரவில்லை.

எனது இலக்கு எல்லாம் நரேந்திர மோடியை தோற்கடிக்க வேண்டும் என்பதுதான். இதற்காக நான் நீண்ட விவாதம் செய்ய வேண்டியதில்லை. மக்கள் ஏற்கனவே தீர்மானித்து விட்டர்கள். எங்களது எண்ணங்களுக்கு ஒப்புதல் கொடுத்துள்ளனர். 23-ந் தேதி அதற்கான விடை கிடைத்து விடும்.
ஆனால் பல்வேறு கருத்துக் கணிப்புகள் வெளியாகி இருக்கின்றன. எனக்கு இந்த கருத்து கணிப்புகளில் நம்பிக்கை இல்லை. மக்களின் எண்ணங்களை முழுமையாக நம்புகிறேன்.
பிரதமர் மோடி 5.55 லட்சம் கோடி ரூபாயை 15 பணக்காரர்களுக்கு கொடுத்து விட்டார். இதன் மூலம் காவலாளியே திருடனாக மாறியது எல்லோருக்கும் தெரியும். அந்த பணத்தை வாங்கியவர்கள் வெளிநாடுகளுக்கு தப்பி சென்று விட்டனர்.
ஆனால் காங்கிரஸ் கட்சி ஏழைகளுக்கு ஆண்டுதோறும் ரூ.72 ஆயிரம் கொடுக்கும் திட்டமானது வெளிப்படையானது. அதில் ஊழல் நடக்க வாய்ப்பில்லை. இந்த திட்டத்தின் கீழ் வேலை இல்லாதவர்களுக்கு பணம் நேரிடையாக கையில் கிடைக்கும். இடைத்தரகர்கள் பயன்பெற முடியாது.
ரபேல் போர் விமானம் ஒப்பந்த திட்டத்தால் பல இடைத்தரகர்கள் பயன் அடைந்தனர். அந்த ஒப்பந்தத்தில் மிகப்பெரிய அளவில் ஊழல் நடந்துள்ளது. இதைச்சொன்னால் மோடி கோபப்படுகிறார். கோபம் மோடியின் கண்களை மறைத்துள்ளது.
2014-ம் ஆண்டு மோடி வெற்றிபெற்றதும் மன்மோகன்சிங்கை சென்று பார்த்திருக்க வேண்டும். நீங்கள் அனுபவசாலி. உங்கள் உதவி எனக்கு தேவை என்று சொல்லி இருக்க வேண்டும். அதுபோல மம்தா பானர்ஜி, மு.க.ஸ்டாலின், நிதிஷ்குமார் ஆகியோரிடமும் பேசி இருக்க வேண்டும்.
அப்படி அவர் செய்திருந்தால் அவரை தோற்கடிப்பது கஷ்டமாக இருந்திருக்கும். ஆனால் அவர் நிறைய தவறுகள் செய்துள்ளார். மிகவும் ஆணவமாகவும், அராஜகமாகவும் நடந்து கொண்டுள்ளார். யாருடைய கருத்தையும் கேட்பதில்லை. எனவே மோடியை தோற்கடிப்பது ஒன்றும் கஷ்டமில்லை.
தென் இந்தியாவில் மாறுபட்ட நிலையில் மக்கள் மனநிலை உள்ளது. இந்தியாவை நாக்பூரில் இருந்து சிலர் வழிநடத்துகிறார்கள் என்று தென் இந்திய மக்கள் நினைக்கிறார்கள். நான் தமிழ்நாட்டுக்கு சுற்றுப்பயணம் சென்றிருந்த போது மக்களின் இந்த மன உணர்வை நேரில் பார்த்து அதிர்ச்சி அடைந்தேன்.
இது சரியல்ல என்பதை அன்றே உணர்ந்தேன். ஆந்திர மக்கள் தங்களுக்கு சிறப்பு அந்தஸ்து கிடைக்காமல் தவிக்கிறார்கள். தென் இந்தியா புறக்கணிக்கப்படக் கூடாது என்பதற்காகவே நான் வயநாடு தொகுதியை தேர்வு செய்து போட்டியிட்டுள்ளேன்.
கடந்த 5 ஆண்டுகளில் மோடி என்னையும், எனது குடும்பத்தினரையும் கடுமையாக விமர்சனம் செய்து பேசியுள்ளார். ஆனால் நான் பதிலுக்கு அதே போன்று விமர்சனம் செய்து பேசவில்லை. அவரது குடும்பத்தினரை குறை கூறி எதுவுமே சொன்னது இல்லை.
பிரதமர் என்ற முறையில் மோடியை நான் மதிக்கிறேன். அன்புதான் வெற்றி பெறும். வெறுப்பு அரசியலுக்கு நிச்சயம் வெற்றி கிடைக்காது. தேர்தல் முடிந்த பிறகும் கூட அன்பு மட்டுமே தொடர்ந்து நீடிக்கும்.
இவ்வாறு ராகுல் கூறியுள்ளார்.
தஞ்சாவூர்:
பாரதிய ஜனதாவின் தேசியக்குழு உறுப்பினர் இல.கணேசன் தஞ்சையில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது;
அரவக்குறிச்சி தேர்தல் பிரசாரத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல் பேசும்போது மகாத்மா காந்தியை நல்ல இந்து என்று பேசியிருக்கலாம், ஆனால் கோட்சேவை பற்றி பேசுவதற்காக இந்து தீவிரவாதி என சொல்லவில்லை. அவர் இந்துக்களை இழிவுப்படுத்த வேண்டும் என்பதற்காகவே இதனை கூறியுள்ளார்.
அரவக்குறிச்சி தேர்தலுக்கும், மகாத்மா காந்தி கொல்லப்பட்டதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அரவக்குறிச்சியில் உள்ள இஸ்லாமியர்கள் பெரும்பான்மையாக உள்ளதால் அவர்களின் ஓட்டுக்களை “பொறுக்குவதற்காக” பேசியுள்ளார். எத்தனை பேர் மனம் புண்பட்டாலும் பரவாயில்லை என இவ்வாறு அவர் பேசியது கண்டிக்கத்தக்கது.
எந்த ஒரு இந்துவும் பயங்கரவாதியாக இருக்க முடியாது. இந்து தீவிரவாதம் என்பது சூடான ஜஸ்கிரீம் சாப்பிடுவது போல.. பிரதமர் மோடிக்கு எதிராக யார் கருத்து கூறினாலும் அதனை வரவேற்க ஒரு கூட்டம் இருக்கத்தான் செய்கிறது.
திருநாவுக்கரசர் கோட்சே ஆர்.எஸ்.எஸ். என கூறுவது அவர் வரலாறு தெரியாமல் பேசுவதையே காட்டுகிறது. கமல் எப்போதும் திருந்துவதாக தெரியவில்லை. அவர் ஒரு குழப்பவாதி. மக்கள் அவரது பேச்சை சகித்துக் கொண்டுதான் கேட்கிறார்கள். பேரறிவாளன் உட்பட 7 பேர் விடுதலையை ஆளுனர் தான் முடிவு செய்ய வேண்டும் என்று உச்சநீதிமன்றமே கூறிவிட்டது. பா.ஜனதாவும் அதனை தான் வலியுறுத்தும்.
பிரதமர் மோடி ஒரு நல்ல இந்து. அதனால் தான் கமல் பேச்சை கண்டித்துள்ளார். கோட்சேவை பயங்கரவாதி என்பதற்கு பதில் தீவிரவாதி என கமல் கூறிவிட்டதாகவே நினைக்கிறேன். ஆனாலும் அவர் அதை நல்ல அர்த்தத்தில் கூறவில்லை..
கடற்கரை ஓரங்களில் எண்ணை வளம் இருப்பதை கடந்த ஆட்சியாளர்களே ஆய்வு நடத்தி பணிகள் நடந்து கொண்டுதான் இருந்தது. தற்போதைய அரசும் அதற்கான ஆராய்ச்சி பணியைதான் மேற்கொண்டு வருகின்றன. இந்த திட்டத்தால் விவசாயிகளுக்கு பாதிப்பு என்பது ஏற்படாது. அவ்வாறு ஏற்பட்டாலும் அது சிறிதளவு பாதிப்பாகவே இருக்கும். அவ்வாறு ஏற்படும் குறுகிய பாதிப்புக்கும் விவசாயிகளை திருப்திபடுத்தும் விதத்தில் இழப்பீடு வழங்க வேண்டும். டெல்லியில் போராட்டம் நடத்தியவர்கள் விவசாயிகளே அல்ல. அப்படியிருக்கும் போது அவர்களை எப்படி பிரதமர் சந்திக்க முடியும்.
இவ்வாறு அவர் கூறினார்.
காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய மந்திரியுமான ப.சிதம்பரம் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது:-

தோல்வி பயத்தை மறைக்கவே 300-க்கும் அதிகமான இடங்களை வெல்வோம் என்று பா.ஜனதா கூறி வருகிறது.
பிராந்திய அடையாளங்கள், வரலாற்று கலாச்சாரத்தை இழிவுப்படுத்தி வரும் பா.ஜனதாவுக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
மேற்கு வங்க மாநிலத்தில் மே 14-ந்தேதி பா.ஜனதா கட்சி சார்பில் நடைபெற்ற தேர்தல் பரப்புரை பேரணியின்போது, அமித்ஷா வருகைக்கு எதிர்ப்புத் தெரிவித்து திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்கள், கொல்கத்தா பல்கலைக் கழகம், மற்றும் வித்யா சாகர் கல்லூரி அருகில் முழக்கங்களை எழுப்பினர்.
இதனை சகித்துக்கொள்ள முடியாத பா.ஜ.க.வினர், திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்கள் மீது தாக்குதல் நடத்தியதால் இருதரப்புக்கும் மோதல் உருவானது.
வித்யாசாகர் கல்லூரிக்கு உள்ளே நுழைந்த பா.ஜ.க. குண்டர்கள், வங்கத்து மக்கள் போற்றி வணங்கி வரும் சமூக சீர்திருத்தவாதி, தத்துவவாதி, கல்வியாளர், எழுத்தாளர் போன்ற பன்முகச் சிறப்புகளைப் பெற்று, வங்க மறு மலர்ச்சிக்கு வித்திட்ட ஈஸ்வர சந்திர வித்யாசாகர் சிலையை உடைத்து நொறுக்கி இருக்கின்றனர்.
மேற்கு வங்க மக்களின் பேராதரவுடன் இரண்டாம் முறையாகவும் முதல்வர் பொறுப்பை ஏற்ற மம்தா பானர்ஜியை வீழ்த்த வேண்டும் என்று நரேந்திர மோடி, அமித்ஷா இருவரும் துடிக்கிறார்கள்.எனவேதான், வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக பா.ஜ.க. திட்டமிட்டு வன்முறைகளை அரங்கேற்றி வருகிறது.
பா.ஜனதா தலைவர் அமித்ஷா மற்றும் மத்திய அமைச்சர்களின் அத்துமீறல் பேச்சுக்கள், தேர்தல் நடத்தை விதி மீறல்கள் குறித்து மம்தா பானர்ஜி தேர்தல் ஆணையத்திடம் தொடர்ந்து திரும்பத் திரும்ப முறையிட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

மேற்கு வங்காளம் மட்டும் அல்ல, நாடு முழுவதும் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில், இந்தியத் தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைகள் ஆளும் பா.ஜ.க. அரசுக்கு ஆதரவாகவே இருந்தன.
நியாயமான, சுதந்திரமான தேர்தலை நடத்த வேண்டிய பொறுப்புமிக்க தேர்தல் ஆணையம் அப்பட்டமாக பாரதிய ஜனதா கட்சி மற்றும் அதிகார வர்க்கத்தின் கைப்பொம்மையாகச் செயல்பட்டு வருகிறது.
தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி தேர்தல் பரப்புரையில் மதவாத அரசியல், ராணுவ நடவடிக்கைகள் பற்றி பிரதமர் மோடி, அமித்ஷா இருவரும் தொடர்ந்து பேசினர்.
தேர்தல் நடத்தை விதி மீறல் குறித்து, மே 6 ஆம் தேதிக்குள் தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஏப்ரல் 15-ந்தேதி உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியும் கூட, அவர்களின் பேச்சுக்களை வேடிக்கை பார்த்தது மட்டுமல்ல, இருவர் பேச்சிலும் விதி மீறல் இல்லை என்று தேர்தல் ஆணையம் சான்று அளித்தது வெட்கக்கேடான நியாயப்படுத்த முடியாத செயலாகும்.
இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையத்தின் இத்தகைய மோசமான செயல்பாடுகள் கடும் கண்டனத்துக்கு உரியது; ஜனநாயக நெறிமுறைகளுக்கு எதிரானது என்பதைத் தெரிவித்துக்கொள்வதோடு, தேர்தல் ஆணையம் அரசமைப்புச் சட்டத்திற்கு மட்டுமே கட்டுப்பட்டதாகச் செயல்பட வேண்டும் என்றும் வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
இமாச்சலப்பிரதேசத்தில் வரும் 19ம் தேதி பாராளுமன்ற தேர்தல் ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இதையடுத்து பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் முக்கிய தலைவர்கள், பிரமுகர்கள் தேர்தல் பிரசாரம், செய்தியாளர் சந்திப்பு போன்றவற்றில் ஈடுபட்டு வருகின்றனர்.

நான் பிரதமர் நரேந்திர மோடியிடம் ஒன்றை மட்டும் கூறிக் கொள்ள விரும்புகிறேன். மோடி, ரபேல் ஒப்பந்தத்தில் ஊழல் செய்தாரா இல்லையா என்பது குறித்து நாட்டின் எந்த பகுதிக்கு வேண்டுமானாலும் சென்று அவருடன் வாக்குவாதம் செய்ய நான் தயார். இதில் ஒரு வேளை நான் தோற்றால் அரசியலை விட்டு விலகவும் தயார்.
கடந்த 2014ம் ஆண்டு கங்கையின் புதல்வனாக மோடி வந்தார். இப்போது ரபேல் ஏஜென்டாக வெளியேற போகிறார். ஆனால், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சிறந்தவர் மற்றும் உயர்வானவர். அவர் பீரங்கி, நான் ஏகே 47.
இவ்வாறு அவர் கூறினார்.
பாராளுமன்றத்துக்கு வருகிற 19-ந்தேதி நடக்கும் இறுதி 7-வது கட்ட தேர்தலில் 59 தொகுதிகளில் ஓட்டுப்பதிவு நடைபெற உள்ளது.
இந்த 59 தொகுதிகளில் பிரதமர் மோடி போட்டியிடும் வாரணாசி தொகுதி அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
வாரணாசி தொகுதியில் 2-வது முறையாக களம் இறங்கியுள்ள பிரதமர் மோடி கடந்த மாதம் 25-ந் தேதி அங்கு வேட்பு மனு தாக்கல் செய்தார். அப்போது அவர் வாரணாசியில் சுமார் 3 லட்சம் பேர் கலந்துகொண்ட மிகப்பிரமாண்ட ரோடு ஷோவில் கலந்து கொண்டார்.
அதன்பிறகு மோடி 2 தடவை வாரணாசி சென்று தனக்கு ஆதரவு திரட்டினார். பிரசாரம் நிறைவு பெறும் நாளையும் மோடி வாரணாசியில் பிரசாரம் செய்ய திட்டமிட்டுள்ளார்.
இந்த நிலையில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா நேற்று வாரணாசி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் அஜய்ராயை ஆதரித்து பிரசாரம் செய்தார். உத்தரபிரதேசத்தில் காங்கிரஸ் கட்சியில் புத்துணர்ச்சி ஏற்படுத்தும் நோக்கத்துடன் களம் இறக்கப்பட்டுள்ள பிரியங்கா வாரணாசி தொகுதியிலும் தனி கவனம் செலுத்தி வருகிறார்.

நேற்று பிரியங்காவும் அதே இடத்தில் இருந்து ரோடு ஷோவை நடத்தினார். மோடி செய்தது போல அவர் பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள மதன்மோகன் மாளவியா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி விட்டு பிரியங்கா ரோடு ஷோ நடத்தினார்.
பிரியங்காவைப் பார்ப்பதற்காக அவர் ரோடு ஷோ செல்லும் பகுதிகளில் ஏராளமான மக்கள் திரண்டு இருந்தனர். வாரணாசி தொகுதி காங்கிரசார் அண்டை மாவட்டங்களில் இருந்து ஏராளமானவர்களை அழைத்து வந்திருந்தனர். இதனால் பிரியங்காவின் ரோடு ஷோவில் 2 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டதாக தெரிய வந்துள்ளது.
பிரியங்காவின் ரோடு ஷோ சுமார் 6 கிலோ மீட்டர் தூரத்துக்கு நடந்தது. வாரணாசி நகருக்குள் மற்றும் புறநகர் பகுதிகளிலும் பிரியங்காவின் ரோடு ஷோ நடந்தது.
வாரணாசியில் உள்ள லங்கா, அசி, படனி, சிவலா, சோனாபுரா, மதன்புரா பகுதிகள் வழியாக பிரியங்காவின் ரோடு ஷோ சென்றது. குறிப்பாக பிரதமர் மோடி கடந்த 25-ந்தேதி நடத்திய ரோடு ஷோ பாதைகளில் பெரும்பாலான பகுதிகளில் பிரியங்காவின் ரோடு ஷோவும் அமைந்தது.
இந்த ரோடு ஷோவால் வாரணாசி தொகுதி காங்கிரஸ் தொண்டர்களிடம் புத்துணர்ச்சி ஏற்பட்டு இருப்பதாக காங்கிரஸ் மூத்த தலைவர்கள் கூறி உள்ளனர்.
இதற்கிடையே மாயாவதி-அகிலேஷ் யாதவ் இருவரும் இன்று (வியாழக்கிழமை) வாரணாசியில் ரோடு ஷோ நடத்துகிறார்கள். இதனால் வாரணாசி தொகுதியில் உச்சக்கட்ட தேர்தல் பிரசாரம் நடந்து வருகிறது.
அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் பாளையங்கோட்டையில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
பழனிசாமி-பன்னீர்செல்வத்தின் துரோக ஆட்சியை முடிவுக்கு கொண்டு வந்து மீண்டும் தமிழகத்தில் அம்மாவின் ஆட்சியை அமைப்பதற்கு என்னை வெற்றி பெறச் செய்யுங்கள் என்று ஆர்.கே.நகர் இடைத்தேர்தலின் போது மக்களிடம் கேட்டேன்.
அதேதான் தற்போது நடைபெறுகின்ற தேர்தலுக்காக பிரச்சாரம் மேற்கொள்ளும் இடங்களிலெல்லாம் கேட்கிறேன்.
இன்னொரு ஆட்சி அமைப்பது தி.மு.க.வின் ஆசையாக இருக்கலாம். ஆனால் அது நிறைவேறுவதற்கு வாய்ப்பே கிடையாது.

பழனிசாமி ஆட்சியை முடிவுக்கு கொண்டு வர எதிர்க்கட்சிகள் முயற்சித்தால் கண்டிப்பாக அதில் நாங்களும் சேர்ந்து ஆட்சியை முடிவுக்கு கொண்டு வருவோம்.
ஏப்.18-ந் தேதிக்கு பிறகு தமிழகம் முழுவதும் பரிசுப் பெட்டகம் சின்னம் மக்களவை பொதுத் தேர்தலிலும், 18 சட்டமன்ற இடைத்தேர்தலிலும் வெற்றி பெறப்போகிறது என்பதை உளவுத்துறை மூலம் அறிந்து கொண்டதால் என்னை தாக்கி பேச வேண்டிய அவசியம் துரோகிகளுக்கு ஏற்பட்டுள்ளதால்தான் என்னை தாக்கி தற்போது பேசுகிறார்கள்.
வாக்குக்கு பணம் கொடுப்பதாலேயே மக்கள் வாக்களித்து விடுவார்கள் என்ற சரித்திரம் இதுவரை கிடையாது. இனிமேலும் வாக்களிக்க மாட்டார்கள்.
எந்த மதத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் தீவிரவாதம் என்பது கூடாது. அது ஓர் அழிவுச் சக்தி. அதிலெல்லாம் போய் மதத்தின் பெயரையெல்லாம் சேர்த்து யார் பேசினாலும் அது தவறு. எந்த மதத்தை சேர்ந்தவர்களையும் புண்படுத்துவதுப்போல யார் பேசினாலும் அது தவறு.
தனிப்பட்ட ஒருவரோ, ஒரு குழுவோ தீவிரவாதிகளாக ஆவதால் அவர்கள் சார்ந்த மதத்திற்கும், தீவிரவாதத்திற்கும் என்ன சம்பந்தம். எல்லா மதங்களும் அன்பைதான் கற்பிக்கின்றன. எந்த மதமும் நீங்கள் தீவிரவாதி ஆகுங்கள், வேறு மதத்தை சேர்ந்தவர்களை அழியுங்கள் என்று சொல்வதில்லை.
இன்னொரு மதத்தை தாழ்த்தி பேச வேண்டிய அவசியமும் கிடையாது. தேவையில்லாமல் மதத்தை சம்பந்தப்படுத்தி பேசுவதை எல்லோரும் தவிர்ப்பது நாட்டுக்கும் நல்லது. மக்களுக்கும் நல்லது.
இவ்வாறு அவர் கூறினார்.
சூலூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம் ஆகிய 4 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வருகிற 19-ந்தேதி நடக்கிறது.
கடந்த ஏப்ரல் 22-ந்தேதி முதல் 29-ந்தேதிவரை வேட்பு மனு தாக்கல் நடைபெற்று இறுதி வேட்பாளர் பட்டியல் மே 2-ந்தேதி வெளியிடப்பட்டது. 4 சட்டசபை தொகுதிகளிலும் மொத்தம் 137 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள்.
4 தொகுதிகளிலும் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து அந்தந்த கட்சியின் தலைவர்கள் தொகுதிகளில் முற்றுகையிட்டு தீவிர பிரசாரம் செய்து வருகிறார்கள்.

தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார். இன்று அவர் சூலூர் தொகுதியில் திண்ணையில் அமர்ந்து பொது மக்களிடம் குறை கேட்டார்.
அ.ம.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து கட்சியின் பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன், மக்கள் நீதிமய்யம் வேட்பாளர்களை ஆதரித்து அதன் தலைவர் கமல்ஹாசன், நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோரும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
அ.தி.மு.க. மற்றும் தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து கூட்டணி கட்சிகளை சேர்ந்த தலைவர்களும் வாக்கு சேகரித்து வருகிறார்கள்.
கடந்த 15 நாட்களுக்கும் மேலாக நடந்து வரும் அனல் பறக்கும் பிரசாரம் நாளை (வெள்ளிக்கிழமை) மாலை 5 மணியுடன் ஓய்கிறது. அதன் பிறகு தொகுதிக்கு தொடர்பு இல்லாத நபர்கள் அனைவரும் வெளியேற்றப்படுவார்கள்.
தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள ஊழியர்கள், பணியாளர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடிகள் குறித்து விவரங்கள் நாளை மாலை தெரிவிக்கப்படும்.
பாராளுமன்ற தேர்தல் கடந்த மாதம் 11-ந்தேதி தொடங்கியது. இதுவரை 6 கட்ட தேர்தல் முடிந்துள்ளது.
ஏப்ரல் 11-ந் தேதி 91 தொகுதிகளுக்கு முதல் கட்ட தேர்தல், ஏப்ரல் 18-ந் தேதி 96 தொகுதிகளுக்கு 2-வது கட்ட தேர்தல், ஏப்ரல் 23-ந் தேதி 115 தொகுதிகளுக்கு மூன்றாவது கட்ட தேர்தல், ஏப்ரல் 29-ந் தேதி 71 தொகுதிகளுக்கு 4-வது கட்ட தேர்தல் நடைபெற்றது. கடந்த 6-ந் தேதி 51 தொகுதிகளுக்கு 5-வது கட்ட தேர்தல் நடைபெற்றது. கடந்த 12-ந் தேதி 59 தொகுதிகளுக்கு 6-வது கட்ட ஓட்டுப்பதிவு நடந்தது.
இதைத்தொடர்ந்து 7-வது கட்ட தேர்தலுக்கான பிரசாரம் 8 மாநிலங்களில் தீவிரமாக நடந்து வருகிறது.
7-வது கட்ட தேர்தலில் பீகார் (8), ஜார்க்கண்ட் (3), மத்திய பிரதேசம் (8), பஞ்சாப் (13), மேற்கு வங்காளம் (9), சத்தீஸ்கர் (1), உத்தரபிரதேசம் (13), இமாச்சலபிரதேசம் (4) ஆகிய 8 மாநிலங்களில் இருக்கும் 59 தொகுதிகளுக்கு ஓட்டுப்பதிவு நடக்கிறது. வருகிற ஞாயிற்றுக்கிழமை ஓட்டுப்பதிவு நடைபெற உள்ளது.

7-வது கட்ட ஓட்டுப்பதிவு நடக்கும் 59 தொகுதிகளில் வாரணாசி, பாட்னா சாகிப், சண்டிகர், இந்தூர், அமிர்தசரஸ், கோரக்பூர், காசியாப்பூர் ஆகிய தொகுதிகள் நட்சத்திர அந்தஸ்து பெற்ற தொகுதிகளாகும். இந்த தொகுதிகளில் உள்ள ஓட்டுச் சாவடிகளில் 5 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகளை தலைமை தேர்தல் ஆணையம் செய்துள்ளது.
குறிப்பாக மேற்கு வங்காள மாநிலத்துக்கு கூடுதல் பாதுகாப்பு படையினர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
7-வது கட்ட தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் 19 சதவீதம் பேர் மீது அதாவது 170 பேர்மீது கிரிமினல் வழக்கு உள்ளன. 12 பேர் மீது கொலை வழக்கும், 34 பேர் மீது கொலை முயற்சி வழக்குகளும் உள்ளன.
20 வேட்பாளர்கள் மீது பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபட்டதாக வழக்குகள் இருக்கின்றன. இந்த 20 பேரில் 2 வேட்பாளர்கள் மீது கற்பழிப்பு குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
7-வது கட்ட தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் 29 சதவீதம் பேர் கோடீசுவரர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் 7-வது கட்ட தேர்தலில் அதிக பணப்பட்டுவாடா நடப்பதாக புகார்கள் குவிந்துள்ளன.
இதைத் தடுக்க நாளை பிரசாரம் முடிந்ததும் கண்காணிப்பை அதிகப்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. 19-ந் தேதி தேர்தல் முடிந்ததும் மின்னணு எந்திரங்கள் அனைத்தும் ‘சீல்’ வைக்கப்பட்டு ஓட்டு எண்ணும் மையங்களுக்கு எடுத்துச்செல்லப்படும். 23-ந் தேதி ஓட்டு எண்ணிக்கை நடைபெறும்.







