என் மலர்tooltip icon

    தேர்தல் செய்திகள்

    அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதியில் கமல்ஹாசன் இன்று பிரசாரம் மேற்கொள்வார் என்று மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் வெளியிடப்பட்ட செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    அரவக்குறிச்சி:

    கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலையொட்டி கடந்த சில நாட்களுக்கு முன்பு பிரசாரம் மேற்கொண்ட மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன், இந்து மதத்தை பற்றி சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக அவர்கள் மீது அரவக்குறிச்சி போலீஸ் நிலையத்தில் 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

    இந்த நிலையில் நிர்ணயித்தபடி அரவக்குறிச்சி தொகுதியில் இன்று (வியாழக்கிழமை) கமல்ஹாசன் பிரசாரம் மேற்கொள்வாரா? என தொண்டர்களிடையே குழப்பம் நிலவியது. எனினும் தேர்தல் விதிகளை பின்பற்றி பிரசாரம் மேற்கொள்ள தேர்தல் அதிகாரி அனுமதி வழங்கிவிட்டதாக கரூர் மாவட்ட மக்கள் நீதி மய்யம் கட்சியினர் தெரிவித்தனர்.



    மேலும் இன்று (வியாழக்கிழமை) மாலை 5 மணிக்கு தென்னிலையில் திறந்தவேன் மூலம் கமல்ஹாசன் பிரசாரத்தை தொடங்குகிறார். பின்னர் தொப்பம்பட்டி, நொய்யல், தளவாபாளையம் ஆகிய இடங்களில் வேட்பாளர் மோகன்ராஜிக்கு ஆதரவு கேட்டு தொடர்ந்து பேசுகிறார். வேலாயுதம்பாளையம் மலைவீதியில் இரவு 8.15 மணியளவில் நடக்கிற பொதுக்கூட்டத்திலும் அவர் பங்கேற்று பேசுகிறார் என மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் வெளியிடப்பட்ட செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தில் பொதுக்கூட்ட மேடைக்கு வந்த கமல்ஹாசன் மீது செருப்பு வீசப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
    மதுரை: 

    மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தில் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்ட மேடையில் நடிகர் கமல்ஹாசன் மீது செருப்பு வீசப்பட்டுள்ளது. செருப்பு வீசிய நபரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    பா.ஜனதாவின் கட்டுப்பாட்டின் கீழ் தேர்தல் ஆணையம் செயல்படுகிறது என மம்தா பானர்ஜி குற்றம் சாட்டியுள்ளார்.
    மேற்கு வங்கத்தில் 19-ம் தேதி கடைசி கட்ட தேர்தல் வாக்குப்பதிவுகள் நடக்கிறது. மாநிலத்தில் அமித்ஷா ஊர்வலத்தில் திரிணாமுல் காங்கிரஸ், பா.ஜனதா தொண்டர்களிடையே கடும் மோதல்கள் ஏற்பட்டு பெரிய வன்முறை வெடித்தது. இதனையடுத்து அரசியல் சட்டப்பிரிவு 324-ஐ கையிலெடுத்த தேர்தல் ஆணையம் ஒரு நாள் முன்னதாகவே அதாவது மே 16-ம் தேதி இரவு 10 மணியுடன் அனைத்து பிரசாரங்களும் முடித்துக் கொள்ளப்பட வேண்டும் என உத்தரவிட்டது. இதனை அடுத்து செய்தியாளர்களிடம் பேசிய மம்தா பானர்ஜி, தேர்தல் ஆணையம் பா.ஜனதாவின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்படுகிறது என குற்றம் சாட்டியுள்ளார். 

    மம்தா பானர்ஜி செய்தியாளர்களிடம் பேசுகையில், அமித் ஷா தனது கூட்டத்தின் மூலம் வன்முறைகளை உருவாக்கியுள்ளார், வித்யாசாகர் சிலை சிதைக்கப்பட்டது. இதற்காக பிரதமர் மோடி வருத்தப்படவில்லை. மேற்கு வங்காள மக்கள் இதனை தீவிரமாக எடுத்துள்ளனர். அமித் ஷாவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இன்று அமித்ஷா செய்தியாளர்களை சந்தித்து பேசினார், தேர்தல் ஆணையத்திற்கு மிரட்டல் விடுத்தார். அதன் விளைவுதான் பிரசாரத்திற்கு ஒருநாள் தடையா? வங்க மக்கள் பயப்பட மாட்டார்கள். 

    நான் மோடிக்கு எதிராக பேசுவதால்தான் மேற்கு வங்கம் இலக்காக்கப்படுகிறது. தேர்தல் ஆணையத்தை பா.ஜனதா நடத்துகிறது. இது இதுவரையில் இல்லாத ஒருநடவடிக்கையாகும். நேற்று வன்முறையே அமித் ஷாவால் நடத்தப்பட்டது. தேர்தல் ஆணையம் அமித்ஷாவிற்கு நோட்டீஸ் விடுக்காதது ஏன்? பிரசாரம் செய்ய தடை விதிக்காதது ஏன்? குண்டர்கள் வெளி மாநிலங்களில் இருந்து வந்தார்கள், அவர்கள் காவி நிறம் அணிந்துக்கொண்டு வன்முறையை நிகழ்த்தியுள்ளனர். 

    பாபர் மசூதி இடிக்கப்பட்டபோது இருந்த வன்முறைகளை உருவாக்கியுள்ளனர். தேர்தல் கமிஷனின் முடிவு நியாயமற்றது, அரசியல் ரீதியாக ஒருசார்பானது. பிரதமர் மோடி நாளை தன்னுடைய இரண்டு பேரணிகளை முடிக்க நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது எனக் கூறினார். 

    மேலும் பேசுகையில், பிரதமர் மோடி உங்களால் உங்கள் மனைவியையே கவனித்துக் கொள்ளமுடியவில்லை, எப்படி நாட்டை கவனித்துக் கொள்வீர்கள்? எனக் கேள்வியையும் எழுப்பியுள்ளார் மம்தா பானர்ஜி. மாயாவதி இதுபோன்ற விமர்சனத்தை முன்வைத்ததால், தனிமனித தாக்குதலில் தரம் தாழ்ந்து விட்டார் என பா.ஜனதா விமர்சனம் செய்தது. இப்போது மம்தாவும் அதுபோன்று பேசியுள்ளார். 
    ரூ.1000,ரூ.2000க்கு ஆசைப்பட்டு தி.மு.க.,- காங்கிரஸ் கூட்டணி அறிவித்துள்ள திட்டங்கள் மூலம் ரூ.5 லட்சத்தை இழந்துவிடாதீர்கள் என்று ஈஸ்வரன் பேசியுள்ளார்.
    வேலாயுதம்பாளையம்:

    அரவக்குறிச்சி தொகுதி தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின்  மாநில பொதுச்செயலாளர் ஈஸ்வரன்  வேலாயுதம் பாளையத்தில் பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:-

    இந்தியாவிலேயே இலவச மின்சாரத்தை வழங்கி விவசாயத்தையும். அதேபோல் விவசாயிகள் வாங்கிய கடன் தொகை ரூ.7 ஆயிரம் கோடியை தள்ளுபடி செய்து விவசாயிகளையும் காப்பாற்றியவர் முன்னாள் முதல்வர் கருணாநிதிதான். இதன் மூலம் அதிக பயன் அடைந்தவர்கள் கொங்கு நாட்டு விவசாயிகள் தான். 

    அதேபோல் இந்த தேர்தலிலும் விவசாயிகள் வாங்கிய கடனை தள்ளுபடி செய்வதாகவும். நிலமற்ற ஏழைத்தொழிலாளர்கள் வாங்கியுள்ள 5 பவுனுக்கு உட்பட்ட நகை கடனையும் தள்ளுபடி செய்வதாகவும் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். விவசாயிக்கு தான் விளை வித்த பொருட்களுக்கு உரிய விலை கிடைக்காமல் இடைத் தரகர்கள் பயன் பெறும் நிலை இருந்தது. அதை மாற்றுவதற்காக கருணாநிதி உழவர் சந்தை கொண்டு வந்தார். அவை மீண்டும் சரியாக செயல்பட தி.மு.க. ஆட்சிக்கு வர வேண்டும். 

    இப்படி விவசாயிகளுக்காக பல்வேறு நலத் திட்டங்களை செயல் படுத்திய தி.மு.க., கொங்கு நாட்டில் வெற்றி பெற்றதில்லை என்ற நிலையை இனி மாற்றிக் காட்டுவோம். செந்தில் பாலாஜி அ.தி.மு.க.வுக்கு துரோகம் செய்ததாக அக்கட்சியினர் கூறுகின்றனர்.

    ஏழை மக்களுக்கு மாதம் 6 ஆயிரம் ரூபாய், சிலிண்டர் விலை மற்றும் கேபிள் கட்டணம் குறைப்பு,  கடன் தள்ளுபடி என்று தி.மு.க.,- காங்கிரஸ் கூட்டணி அறிவித்துள்ள  திட்டங்கள் மூலம் ரூ.5 லட்சம் வரை ஒரு குடும்பம் பயன்பெற உள்ளது. எனவேரூ.1000,ரூ.2000க்கு ஆசைப்பட்டு ரூ.5 லட்சத்தை இழந்துவிடாதீர்கள்.

    இவ்வாறு அவர் பேசினார்.
    மேற்கு வங்காள மாநிலத்தில் அமித் ஷா பேரணியின் மீது தாக்குதல் நடத்தப்பட்டதை தொடர்ந்து அங்கு பதற்றம் நிலவுவதால் ஒருநாள் முன்னதாகவே பிரசாரத்தை நிறுத்துமாறு தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது.
    கொல்கத்தா:

    7 கட்டங்களாக நடைபெற்றுவரும் பாராளுமன்ற தேர்தலில் வரும் 19-ம் தேதி இறுதிக்கட்ட தேர்தல் நடைபெறவுள்ளது. மேற்கு வங்காள மாநிலத்தில் உள்ள 9 பாராளுமன்ற தொகுதிகளுக்கும் அன்றைய தினத்தில் வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில் நேற்றிரவு கொல்கத்தா நகரில் நடந்த பாஜக ட்ய்ஹலைவர்  அமித் ஷா பேரணியின்மீது தாக்குதல் நடத்தப்பட்டது.

    இதைதொடர்ந்து, அம்மாநிலத்தை சேர்ந்த சீர்திருத்தவாதி ஈஷ்வர் சந்திரா வித்யாசாகரின் சிலை உடைக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து திரிணாமுல், மா.கம்யூனிஸ்ட் தொண்டர்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். 

    இவ்விவகாரத்தில் புகார் அளிக்கப்பட்டும் தேர்தல் கமிஷன் நடவடிக்கை எடுக்கவில்லை என மத்தியில் ஆளும் பாஜக மற்றும் மாநிலத்தை ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் ஆகியவை குற்றம்சாட்டி வருகின்றன. காங்கிரஸ் மற்றும் மா.கம்யூனிஸ்ட் கட்சியும் தேர்தல் கமிஷனை குறை சொல்கின்றன.

    இதை எல்லாம் கருத்தில் முன்னிறுத்தி ஒருநாள் முன்னதாகவே பிரசாரத்தை நிறுத்துமாறு அம்மாநில தேர்தல் கமிஷன் இன்றிரவு உத்தரவிட்டுள்ளது.

    இதுதொடர்பாக மேற்கு வங்காளம் மாநில தேர்தல் கமிஷன் இன்றிரவு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், ‘டம் டம், பரசட், பசிர்ஹட், ஜெய்நகர், மதுராப்பூர், ஜாதவ்பூர், டைமன்ட் ஹார்பர், தெற்கு கொல்கத்தா, வடக்கு கொல்கத்தா ஆகிய 9 தொகுதிகளிலும் நாளை (16-ம் தேதி) இரவு 10 மணியில் இருந்து வாக்குப்பதிவு முடியும்வரை யாரும் பிரசாரத்தில் ஈடுபட கூடாது’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    நாடு முழுவதும் 17-ம் தேதி மாலையுடன் தேர்தல் பிரசாரம் முடியும் நிலையில் இங்கு மட்டும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது ஏன்? என்பது தொடர்பாக விளக்கம் அளித்துள்ள தேர்தல் கமிஷன், ‘தேர்தல் கமிஷனுக்கு அளிக்கப்பட்டுள்ள அதிகாரிகளின்படி 324-வது சட்டப்பிரிவை பயன்படுத்தி இதுபோன்ற நடவடிக்கை எடுக்கப்படுவது இதுவே முதல்முறை.

    இருப்பினும், இதுபோல் தேர்தல் நடவடிக்கைகளை சீர்குலைக்கும் சட்டம்-ஒழுங்கு சீர்கேடும் வன்முறையும் எங்கு நடந்தாலும் இனி அங்கும் இந்த நடவடிக்கை பாயும்’ என தெரிவித்துள்ளது.
    பா.ஜனதாவோ, என்டிஏ கூட்டணியோ மத்தியில் ஆட்சி அமைக்க முடியாது என காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம்நபி ஆசாத் கூறியுள்ளார்.
    பீகாரில் காங்கிரஸ் மூத்த தலைவரும், நாடாளுமன்ற மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவருமான குலாம்நபி ஆசாத் செய்தியாளர்களிடம் பேசுகையில், தேர்தலுக்காக  நாடு முழுவதும் சென்று பிரசாரம் செய்த எனது அனுபவத்தில் ஒன்றை சொல்கிறேன். பா.ஜனதா கட்சியோ அல்லது அதன் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியோ மத்தியில் மீண்டும் ஆட்சி அமைக்க முடியாது. நரேந்திர மோடியும் 2–வது முறையாக பிரதமராக முடியாது. 

    தேர்தல் முடிந்த பின்னர் தேசிய ஜனநாயக கூட்டணி அல்லாத, பா.ஜனதா அல்லாத அரசு தான் மத்தியில் அமையும். தேர்தல் முடிவுகள் வெளியான பின்னர் மத்திய அரசுக்கு தலைமை தாங்குவதற்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பெயர் ஒருமித்த கருத்துடன் பரிந்துரைக்கப்பட்டால் நல்லது. அதேசமயம் காங்கிரசுக்கு வாய்ப்பு வழங்கப்படாவிட்டால் நாங்கள் வேறு எந்த தலைவரையும் பிரதமர் பதவிக்கு ஏற்க மாட்டோம் என்ற பிரச்சினையை உருவாக்க விரும்பவில்லை எனக் கூறினார்.

    பா.ஜனதா கட்சிக்கு 125 இடங்களுக்கும் குறைவாகத்தான் கிடைக்கும் என்ற அவர், காங்கிரசுக்கு எத்தனை தொகுதிகள் கிடைக்கும் என்பதை கூற மறுத்து விட்டார். 
    நான் பேசியதை முழுமையாக கேட்காமல் என்னை குற்றம்சாட்டுகிறார்கள். நான் சரித்திர உண்மையை தான் பேசினேன் என இந்துக்கள் குறித்த தனது சர்ச்சை பேச்சு குறித்து கமல் விளக்கம் அளித்துள்ளார்.
    தோப்பூர்:

    திருப்பரங்குன்றம் தொகுதி தோப்பூரில் பிரசாரத்தில் பேசிய மக்கள் நீதி மையம் கட்சி தலைவர் கமல், நான் அரவக்குறிச்சியில் பேசியதற்கு கோபப்படுகிறார்கள். சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி இந்து என நான் கூறியது சரித்திர உண்மை. அதை நான் ஒருமுறை தான் கூறினேன். ஆனால் ஊடகங்கள் 200 முறைக்கு மேல் சொல்லி விட்டார்கள். 

    அரவக்குறிச்சியில் நான் பேசியதை சரியாக கேட்காமல் நான் கலகத்தை விளைவிக்கிறேன் என என் உள்மனதை புண்படுத்துகிறார்கள். என் குடும்பத்தில் உள்ள அனைவரும் இந்துக்கள். அவர்கள் மனதை புண்படுத்தும் வகையில் நான் பேசமாட்டேன்.

    என்னை நான் தலைவராக பார்த்துக் கொண்டதே இல்லை. என்னை பல இடங்களில் கையெடுத்து கும்பிடுகிறார்கள். சில இடங்களில் அவமானப்படுகிறார்கள். அரவக்குறிச்சியில் நான் பேசியதை முழுவதுமாக கேட்காமல் என்னை குற்றம்சாட்டுகிறார்கள். உண்மை கசக்கத்தான் செய்யும். அந்த கசப்பு மருந்தாக மாறும். குற்றம் சொல்வதற்கும் ஒரு அளவு வேண்டாமா? நம்புவது போல் குற்றம்சாட்டுங்கள். என் மீது நடவடிக்கை எடுக்க பல வழக்குகளைப் பதிவு செய்கிறார்கள். அது ஊடக நண்பர்களுக்கம் பொருந்தும்.

    மதச் செறுக்கு, ஜாதி செறுக்கு எங்கும் எடுபடாது. உண்மையே வெல்லும். தீவிரவாதி என்று தான் சொன்னேன். பயங்கரவாதி என்றோ, கொலைகாரன் என்றோ நான் சொல்லவில்லை. நான் தீவிர அரசியலில் இறங்கி உள்ளேன். எனக்கு தீவிர ரசிகர்கள் உள்ளனர் என்றே கூறுகினேன். பிரிவினை பேச மாட்டோம். 

    என்னை அவமானப்படுத்த எனது கொள்கையை கையில் எடுத்தால் தோற்றுப் போவீர்கள். எனது கொள்கை நேர்மை. இது போன்ற விளையாட்டுக்கள் என்னிடம் வேண்டாம். இது அறிவுரை தான். இந்த அரசு வீழ்த்தப்பட வேண்டும், ஜனநாயக முறைப்படி வீழ்த்துவோம். வீழ்த்துவோம் என்பதையும் சர்ச்சை ஆக்காதீர்கள்.

    எந்த ஜாதியை பற்றியும், மதத்தை பற்றியும் விமர்சித்து பேசுவேன். இவர்கள் என் மக்கள் என்பதால் அந்த உரிமையில் பேசுவேன். நான் பேசியதால் யார் மனதும் புண்படவில்லை. 

    இவ்வாறு அவர் பேசினார்.
    ராகுல் காந்தி பிரதமராவதும், ஸ்டாலின் முதலமைச்சராவதும் ஒரு போதும் நடக்காது என அரவக்குறிச்சியில் நடந்த தேர்தல் பிரசாரத்தில் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
    அரவக்குறிச்சி:

    அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் செந்தில்நாதனை ஆதரித்து பா.ம.க. சார்பில் தேர்தல் பிரசார பொதுக் கூட்டம் அரவக்குறிச்சி போலீஸ் நிலையம் அருகில் கந்தம்பாளையம் பகுதியில் நடந்தது. இதில் பா.ம.க. இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. கலந்து கொண்டு பேசியதாவது:-

    பல கட்சிகளுக்கு செல்வதில் சாதனை படைத்தவர் தி.மு.க. வேட்பாளர் செந்தில் பாலாஜி. தேர்தல் முடிந்ததும் எந்த கட்சிக்கு அவர் செல்வார் என்பது தெரியவில்லை. ஆளும் கட்சியால் மட்டுமே திட்டங்களை கொடுத்திட முடியும் என்பதால், அ.தி.மு.க. வேட்பாளர் செந்தில்நாதன் வெற்றி உறுதியாகிவிட்டது.

    குடிநீர் பிரச்சினையை தீர்க்க வேலாயுதம்பாளையம் அருகே காவிரி ஆற்றில் கதவணை கட்ட முதலமைச்சரே திட்டம் அறிவித்திருக்கிறார். இதே திட்டத்தை ஸ்டாலினும் அறிவித்துள்ளார். ஸ்டாலின் சொல்வதற்கும், முதலமைச்சர் சொல்வதற்கும் வித்தியாசம் உள்ளது.

    இதில் அரசு சார்பில் சொல்வது தான் நிறைவேறும். அது தான் எதார்த்தம். ஸ்டாலின் ஒரு வாக்குறுதியை 100 முறை சொன்னாலும் அது நிறைவேறாது. ஆனால் முதலமைச்சர் ஒரு முறை சொன்னாலே அது நடக்கும்.

    அ.தி.மு.க. தோற்க வேண்டும் என்பது தான் டி.டி.வி. தினகரனின் ஆசை. தான் முதலமைச்சராக ஆக வேண்டும் என்பது ஸ்டாலினின் ஆசை. ஆனால் எங்களது (அ.தி.மு.க. கூட்டணி) ஆசை என்னவென்றால், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு பெருக்குவது, விவசாயிகளின் கஷ்டத்தை போக்க வேண்டும் என வளர்ச்சியை நோக்கியதாக தான் இருக்கிறது.

    1½ மாத காலமாக சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் மு.க.ஸ்டாலின் எந்த வளர்ச்சியை பற்றியும் பேசவில்லை. என்னை, மருத்துவர் ஐயாவை (ராமதாஸ்), முதலமைச்சர், துணை முதலமைச்சர், மோடி ஆகியோரை பற்றி கொச்சையாக தெரு பேச்சாளர்கள் போல் பேசுகிறார். ஆனால் நாங்கள் நாகரீக வளர்ச்சி அரசியலில் பேசி வருகிறோம்.

    ராகுல் காந்தி தான் அடுத்த பிரதமர் என்றார் ஸ்டாலின். ஆனால் ராகுலே அதனை ஏற்கவில்லை. பின்னர் மேற்கு வங்கம் சென்ற அவர், தேர்தல் முடிவுக்கு பிறகு பிரதமர் வேட்பாளரை சொல்வோம் என பேச்சை மாற்றிவிட்டார். இப்படி மாற்றி மாற்றி பேசுகிறார். ராகுல் பிரதமராவதும், ஸ்டாலின் முதலமைச்சராவதும் ஒரு போதும் நடக்காது.

    இதனை தெரிந்து கொண்டு 3-வது அணிக்கு போகும் நோக்கில், சந்திரசேகரராவிடம் ஒரு மணிநேரம் ஸ்டாலின் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறார். இதில் இருந்து மிகுந்த குழப்பத்தில் எதிரணி இருப்பது தெரிகிறது. ஸ்டாலின் வாயை திறந்தாலே பொய் பேசுகிறார்.

    நீட் தேர்வை ரத்து செய்வேன் என அவர் கூறுகிறார். ஆனால் நீட் தேர்வு கொண்டு வரப்பட்டதே தி.மு.க. மத்தியில் காங்கிரஸ் கூட்டணியின் இருந்த நேரத்தில்தான் அனுமதிக்கப்பட்டது. காவிரியில் டெல்டா பகுதியில் மீத்தேன், ஹைட்ரோ கார்பன் திட்டத்தை அனுமதித்தது தி.மு.க. ஆனால் அதை எதிர்த்து ஸ்டாலின் போராடுகிறார். தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை திறந்து வைத்தது கருணாநிதி. அதன் விரிவாக்கத்துக்கு கையெழுத்து போட்டது அன்றைய தொழில்துறை அமைச்சராக இருந்த ஸ்டாலின்.

    அரக்கோணம் தொகுதியின் தி.மு.க. வேட்பாளர் ஜெகத்ரட்சகன் இலங்கையில் 26 ஆயிரம் கோடி முதலீடு செய்திருக்கிறார். இலங்கையில் சிங்கள வெறியர்கள் தமிழர்களை கொன்று குவித்தார்கள். அந்த வெறியர்களின் பிள்ளைகளுக்கு வேலை வாய்ப்பு உருவாக வேண்டும், இலங்கை பொருளாதார முன்னேற்றம் அடைய வேண்டும் என்பதன் அடிப்படையில் முதலீடு செய்திருக்கிறார். ஏன் தமிழ்நாட்டில் அவர் முதலீடு செய்யவில்லை?. இதற்கு என்ன ஸ்டாலின் பதில் சொல்ல போகிறார்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    எந்த மதத்தையும் புண்படுத்தி பேச நடிகர் கமல்ஹாசனுக்கு என்ன அவசியம்? என்று அரவக்குறிச்சியில் நடந்த தேர்தல் பிரசாரத்தில் தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

    கரூர்:

    அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் அ.ம.மு.க. வேட்பாளர் சாகுல்ஹமீதை ஆதரித்து அக்கட்சியின் பொதுச்செயலார் டி.டி.வி. தினகரன் அரவக்குறிச்சி புங்கம்பாடி பகுதியில் திறந்த வேனில் நின்றபடி பிரசாரம் செய்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    அ.தி.மு.க.வுக்கு எல்லா தொகுதிகளிலும் தோற்று விடுவோம் என பயம் வந்து விட்டது. துரோகம் என்றைக்கும் வென்றதாக வரலாறு கிடையாது. 18 தொகுதிகளிலும் தோற்று விடுவோம் என்ற பயத்தில் எனது ஆதரவாளர்களான 3 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்ய நோட்டீசு அனுப்பியுள்ளனர். அதற்கு நீதிமன்றம் தடைவிதித்து விட்டது.

    நடிகர் கமலஹாசன் தேவையில்லாமல் சினிமா வசனம் போல இங்கு பேசியுள்ளார். ஒரு பரபரப்பை உண்டாக்குவதற்காக அவர் பேசியிருக்கிறார். கமல் விஸ்வரூபம் என்ற ஒரு படம் எடுத்தார். பின்னர் அந்த படம் பெரிதாக விஸ்வரூபம் எடுத்து நாட்டை விட்டே போய் விடுவேன் என கமலஹாசன் தெரிவித்தார்.

    இஸ்லாமியர்களுக்கு எதிராக படம் எடுத்ததாக சந்தேகம் வந்ததால், அந்த படத்தை விளக்க வேண்டியது படத் தயாரிப்பாளர்களின் கடமை. நாட்டில் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்படக்கூடாது என்பதற்காக அதனை சரி செய்ய ஜெயலலிதா கூறினார். இதனால் ஜெயலலிதா மீது அவருக்கு கோபம்.

    எந்த மதத்தையும் புண்படுத்தி பேச வேண்டிய அவசியம் என்ன? இந்து, கிறிஸ்தவம், இஸ்லாம் என மதம் பற்றி எதுக்கு பேசவேண்டும். யாரோ ஒருத்தர் கொலைகாரர் என்றால் அதற்காக மதத்தை பற்றி பேச வேண்டிய அவசியம் என்ன? கோட்சே காந்தியை சுட்டுக் கொன்றதை யாருமே எற்றுக் கொள்ளமாட்டோம். அவர் என்ன மதம் என்று பார்த்துக் கொண்டிருப்போமா?

    இந்திராகாந்தியை ஒரு சீக்கியர் கொன்றார். ஆனால் மன்மோகன்சிங்கை பிரதமராக்கினார் சோனியாகாந்தி. கோட்சே எந்த மதம் என்றே நமக்கு தெரியவில்லை. அந்த பெயர் ரஷ்யன் பெயர் போல உள்ளது. அந்த கோட்சேவை இந்து பயங்கரவாதி என பேசியிருக்கிறார். இது தேவையா? காந்தியடிகளை கோட்சே துப்பாக்கியால் சுட்டுக்கொன்றதில் மதம் எங்கிருந்து வந்தது.

    தமிழக அரசு சினிமாவை போல ஏதோ செய்துவிடும் என அவரே (கமலஹாசன்) பிரசாரத்தை ரத்து செய்து விட்டு சென்றார். கமலஹாசனின் நாக்கை வெட்டுவேன் என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசி உள்ளார். இது தவறில்லையா?

    துரோகத்தை பற்றி நான் பேசினால் வழக்கு போடுவோம் என்கின்றனர். நீங்கள் எத்தனை வழக்குகள் போட்டாலும் பார்த்துக்கொள்ளலாம். வருகிற 23-ந்தேதிக்கு பின்னர் நீங்கள் வழக்குபோட இருக்கிறீர்களா? என்று பார்ப்போம். உங்கள் மீதும் வழக்குவராமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

    நம்மகூட இருந்து ஓடிப் போன செந்தில் பாலாஜி என்னை அரவக்குறிச்சிக்கு அழைத்து வந்து மக்களுக்காக உண்ணாவிரம் இருக்க வைத்தார். இப்போது பா.ஜ.க.வின் சி. டீம் என அவர் பேசுகிறார். அவருக்கு இந்த தேர்தலில் தக்க பாடத்தினை புகட்ட வேண்டும். காங்கிரஸ் கூட்டணியில் இருந்து கொண்டு பா.ஜ.க., சந்திரசேகரராவுடன் பேசிக்கொண்டிருக்கிறார்கள். பா.ஜ.க.வுடன் தி.மு.க. பேசிய உண்மையை தமிழிசை சவுந்திரராஜன் தெரிவித்து விட்டார்.

    இவ்வாறு அவர் கூறினார். 

    பள்ளிக்கூடமே செல்லாத நடிகர் கமல்ஹாசன் இந்துக்களை பற்றி பேச தகுதி இல்லை என்று பா.ஜ.க. தேசிய செயலாளர் எச்.ராஜா கூறியுள்ளார்.

    கொடைக்கானல்:

    பா.ஜ.க. தேசிய செயலாளர் எச்.ராஜா கொடைக்கானலில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    விஸ்வரூபம் படம் வெளியாகும்போது முஸ்லீம்களால் கமல்ஹாசனுக்கு கடுமையான மிரட்டல் வந்தது. பின்னர் அவர்களது காலில் விழுந்து தனது படத்தை வெளியிடும்படி கெஞ்சினார்.

    அத்தகைய கமல்ஹாசன் இந்துக்களை தீவிரவாதி என்றும், கோட்சேவை தரக்குறைவாகவும் விமர்சிக்க தகுதியற்றவர். பள்ளிக் கூடத்திற்கே செல்லாமல் இடைநின்ற மாணவரான கமல்ஹாசனுக்கு இந்துக்களின் வரலாறு எப்படி தெரியும். அவருக்கு வருகிற தேர்தலில் மக்கள் தெளிவான பாடத்தை புகட்டுவார்கள். 100 ஓட்டுகள் வாங்க வேண்டும் என்பதற்காக பள்ளப் பட்டியில் கமல்ஹாசன் இந்துக்களை தீவிரவாதி என்று கூறி உள்ளார்.


    அவரது கருத்துக்கு கே.எஸ்.அழகிரி, வீரமணி போன்றவர்கள் ஆதரவு தெரித்துள்ளனர். அவர்களும் இந்துக்களுக்கு எதிரானவர்களே. வருகிற தேர்தலில் நாடு முழுவதும் பா.ஜ.க. தலைமையிலான கூட்டணி அமோக வெற்றி பெற்று மோடி மீண்டும் பிரதமர் ஆவார். தமிழகத்தில் அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெறும்.

    தி.மு.க. தலைவர் ஸ்டாலின் தான் பங்கேற்கும் கூட்டங்களில் எல்லாம் எம்.எல்.ஏக்களின் எண்ணிக்கையை வைத்து கணக்கு போட்டு வாக்காளர்களிடம் கதை சொல்லி வருகிறார். ஜூன் 3-ந் தேதி தான் முதல்-அமைச்சராக பதவி ஏற்பேன் என்று கூறுகிறார். இது அவரது கனவு மட்டுமே. ஒருபோதும் பலிக்காது.

    விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் சரக்குக்கும், முருக்குக்கும் சொந்தக்காரர். எனவே அவரும் கமல்ஹாசனுக்கு ஆதரவாகத்தான் பேசுவார். இதில் வியப்பு இல்லை.

    ப.சிதம்பரம் மற்றும் அவரது மகன் ஊழல் புகாரில் உச்சநீதிமன்றத்தால் கண்டிக்கப்பட்டவர்கள். அவர்களது ஊழலை நாடே அறியும். தான் நின்றால் தோற்று விடுவோம் என்பதால்தான் தனது மகனை ப.சிதம்பரம் நிறுத்தினார். இருந்தாலும் அவரும் வெற்றி பெறப்போவதில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோல்வி அடைந்தால், அதற்கு பொறுப்பேற்க அக்கட்சியினர் நியமித்திருக்கும் இருவரின் பெயர்களை பிரதமர் மோடி கூறியுள்ளார்.
    தியோகார்:

    ஜார்க்கண்ட் மாநிலத்தில் கடந்த ஏப்ரல் 29ம் தேதி தொடங்கிய பாராளுமன்ற தேர்தல் 3 கட்டங்கள் முடிவடைந்த நிலையில், மீதமுள்ள தொகுதிகளுக்கு வரும் மே 19ம் தேதி நடைபெற உள்ளது. இதையடுத்து காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட கட்சிகளின் முக்கிய தலைவர்கள் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    அந்த வகையில் ஜார்க்கண்ட் மாநிலத்தின் தியோகார் பகுதியில் பிரதமர் மோடி பிரசாரப்பொதுக் கூட்டத்தில் கலந்துக் கொண்டு உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:

    பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோல்வியை தழுவ தான் போகிறது. இந்த தோல்விக்கு பொறுப்பேற்க காங்கிரஸ் கட்சி,  மணி சங்கர் ஐயர் மற்றும் சாம் பிட்ரோடா ஆகிய இரு நபர்களை நியமித்திருக்கிறது. இதில் ஒருவர், 1984ம் ஆண்டு சீக்கியர்களுக்கு எதிராக நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து கேட்டால், ‘ஆமாம் நடந்து விட்டது, அதற்கென்ன?’ என கேள்வி கேட்கிறார். இவர் தான் குஜராத்தில் தேர்தலின்போது என்னை அவதூறாக பேசினார். இப்போது மீண்டும் என்னை தாக்கி பேசுகிறார்.



    55 ஆண்டுகளாக ஒரு குடும்பத்தின் ஆட்சியில் செய்யமுடியாத முன்னேற்றத்தை, எங்கள் பாஜக ஆட்சி 55 மாதங்களில் செய்து முடித்திருக்கிறது. 5 ஆண்டுகளில் கரை படியாத நேர்மையான ஆட்சியினை பாஜக நடத்தி இருக்கிறது.  மேலும் இந்தியா முன்னேற்றம் கண்டுள்ளது. நான் இதை கோவில் நகரமான தியோகார் பகுதியில் இருந்து கூறுவதை பெருமையாக கருதுகிறேன். 

    இது மட்டுமின்றி மக்கள் என் மீது நம்பிக்கை வைத்து நேர்மையான அரசை நடத்தும் பொறுப்பை தந்துள்ளனர். இதனால் மிகுந்த பெருமைக்குரியவன் ஆகிறேன். உங்கள் காவலாளியான நான் எப்போதும் உங்கள் நலனில் அக்கறை செலுத்துவதையே கடமையாக கொண்டுள்ளேன்.

    இவ்வாறு அவர் பேசினார். 
    மீண்டும் நானே பிரதமராக வருவேன் என பிரதமர் மோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
    2019 பாராளுமன்றத் தேர்தல் இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. 19-ம் தேதி இறுதிக்கட்ட தேர்தல் நடக்கிறது. இதற்கான பிரசாரத்தில் பிரதமர் மோடி தீவிரமாக இறங்கியுள்ளார். பீகார் மாநிலம் பாடலிபுத்ராவில் பிரசாரம் செய்த பிரதமர் மோடி வாக்காளர்களுக்கு மிகவும் உணர்ச்சிபூர்வமான கோரிக்கையை விடுத்தார். 

    இந்த தேர்தலில் பீகார் மாநிலத்தில் மேற்கொள்ளும் கடைசி பொதுக்கூட்டம் இதுவாகும். ஆனால் என்னுடைய வளர்ச்சி திட்டங்களுடன் புதிய ஆட்சியில் வருவேன் எனக் கூறியுள்ளார். 

    உங்களுடைய அன்பு வெற்றியின் மீதான நம்பிக்கையை எனக்கு ஏற்படுத்தியுள்ளது. கடைசி கட்டத்தில், வெற்றிக்கான வெற்றி அழகாக இருப்பதை உறுதி செய்யுங்கள் எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.
    ×