என் மலர்tooltip icon

    தேர்தல் செய்திகள்

    அரசியல் கட்சியினர் பொய் வாக்குறுதிகள் தந்து மக்களை ஏமாற்றுகின்றனர் என்று நடிகை கோவைசரளா பிரசார கூட்டத்தில் பேசினார்.
    திருப்பரங்குன்றம்:

    திருப்பரங்குன்றத்தில் போட்டியிடும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் வேட்பாளரை ஆதரித்து நடிகை கோவை சரளா பிரசாரம் செய்தார்.

    திருப்பரங்குன்றம் தொகுதிக்குட்பட்ட தோப்பூர், நிலையூர், கைத்தறி நகர், ஹார்விபட்டி உள்ளிட்ட பகுதிகளில் அவர் பேசியதாவது:-

    மக்களிடம் வாக்குக்கு பணம் கொடுத்துவிட்டு அரசியல்வாதிகள் கோடிக்கணக்கில் கொள்ளையடிக்கின்றனர். பணத்தின் மீது மக்களுக்கு ஆசையை தூண்டிவிட்டு அடிமையாக்கி வருகின்றனர்.

    இவ்வளவு காலம் ஆட்சி செய்தவர்கள் சாலை வசதிகள் கூட செய்துதரவில்லை.

    நாங்கள் அரசியல்வாதி கிடையாது. எப்போதும் மக்களோடு, குடும்பத்தினராக உள்ளோம். எங்களுடைய வேட்பாளர் மக்களுக்காக செயல்படவில்லை என்றால் உடனே ராஜினாமா செய்வார்.

    தேர்தலில் வெற்றி பெற வாக்குறுதிகள் கொடுக்கும் அரசியல் கட்சியினர் ஏதும் செய்யாமல், தங்களது குடும்பத்தினர்களுக்கே சொத்து சேர்க்கின்றனர்.

    ஆட்சியில் இருக்கும் போது ஏதும் செய்யாமல் தேர்தலின் போது பொய் வாக்குறுதிகளை தந்து மக்களை ஏமாற்றுகின்றனர்.

    புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். வழி வந்தவர் தான் கமல்ஹாசன். அவரை பார்த்து சிலர், இவருக்கு அரசியல் பற்றி என்ன தெரியும்? என்று நக்கல், நையாண்டி செய்கின்றனர்.



    கமல்ஹாசன் வரலாறு, புவியியல், அறிவியல் அனைத்தும் அறிந்து தனக்கு தகுதி உள்ளதா? என்று பார்த்து தான் மக்கள் நீதி மய்யம் கட்சியை ஆரம்பித்தார்.

    கமல்ஹாசனை பார்த்து உங்களுக்கு அரசியல் பற்றி என்ன தெரியும்? என்று கேட்பவர்கள் அனைவரும் பிறக்கும்போது அரசியல் கட்சியின் துண்டை போர்த்திக் கொண்டா பிறந்தார்கள்?

    இவ்வாறு அவர் பேசினார்.
    இடைத்தேர்தல் நடைபெறும் 4 தொகுதிகளும் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் எக்கு கோட்டையாக உள்ளது என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசியுள்ளார்.

    ஓட்டப்பிடாரம்:

    ஓட்டப்பிடாரம் இடைத் தேர்தலில் இறுதி கட்ட வாக்கு சேகரிப்பு பணிகள் தொடர்பான ஆலோசனைக்கூட்டம் தூத்துக்குடி தனியார் விடுதியில் நடைபெற்றது. இதில் விருதுநகர் மாவட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட 50 பூத்களின் வாக்குச்சாவடி முகவர்கள், நிர்வாகிகள், தேர்தல் பொறுப்பாளர்கள், மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    கூட்டத்திற்கு தலைமை வகித்த தேர்தல் பொறுப்பாளரும், பால்வளத்துறை அமைச்சருமான கே.டி. ராஜேந்திரபாலாஜி பேசியதாவது:-

    தமிழக முதல்வர் எடப்பாடியார் நல்லாட்சிக்கு அங்கீகாரம் கொடுக்கும் இந்த தேர்தலில் ஓட்டப்பிடாரம் தொகுதியில் நமது வேட்பாளர் மோகனை 70 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வைத்தே தீரவேண்டும் என்ற கொள்கையோடு நாம் பணியாற்ற வேண்டும்.

    உழைத்தால் உயர்வு உண்டு, பதவிகள் உண்டு என்பதற்கு அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் எத்தனையோ பேரை எடுத்துக்காட்டாகச் சொல்லலாம். ஆகவே நீங்கள் சுறுசுறுப்பாக பணியாற்ற வேண்டும்.

    உங்கள் உழைப்பை இந்த இயக்கத்திற்காக கொடுங்கள். உங்களுக்கான தேவைகளை கட்சி செய்து கொடுக்கும். அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், சூலூர், ஓட்டப்பிடாரம் தொகுதிகள் எடப்பாடியாரின் எக்கு கோட்டையாக உள்ளது. திருப்பரங்குன்றத்தில் முனியாண்டியை வேட்பாளராக நிறுத்தியிருக்கிறோம். அவரை வெற்றி பெறச் செய்து அதனை மீண்டும் நிரூபிக்க வேண்டும்.

    மேற்கண்டவாறு அவர் பேசினார்.

    சென்னை கிண்டியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் இன்று 5 மாநில தேர்தல் அதிகாரிகளுக்கு வாக்குகளை எண்ணும் போது கையாள வேண்டிய நடைமுறைகள் குறித்து பயிற்சியளிக்கப்பட்டது.
    சென்னை:

    பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் கடந்த 18-ந்தேதி ஓட்டுப்பதிவு நடைபெற்றது. இதைத்தொடர்ந்து பல்வேறு மாநிலங்களில் 6 கட்டங்களாக தேர்தல் நடந்து முடிந்துள்ளது.

    7-வது கட்ட தேர்தல் வருகிற 19-ந் தேதி நடைபெறுகிறது. 23-ந் தேதி வாக்கு எண்ணிக்கை நடக்கிறது.

    தமிழகத்தை பொறுத்தவரையில் 38 பாராளுமன்ற தொகுதிகளுக்கும், 18 சட்டசபை தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெற்றுள்ளது. வருகிற 19-ந் தேதி மேலும் 4 சட்டசபை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடக்கிறது.

    இதற்கான வாக்கு எண்ணிக்கை முன்னேற்பாடுகளில் தேர்தல் ஆணையம் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இந்த முறை விவிபாட் என்று சொல்லக்கூடிய ஒப்புகை சீட்டு முறை அனைத்து தொகுதிகளிலும் நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளது. மின்னணு எந்திரத்தில் பதிவான வாக்குகளும், விவிபாட்டில் பதிவான ஓட்டுகளும் சமமாக இருக்க வேண்டும். இதில் வேறுபாடு ஏற்பட்டால் வாக்குப்பதிவில் குளறுபடி ஏற்பட்டதாக கருதப்படும்.

    எனவே வாக்குப்பதிவு எந்திரம்-விவிபாட் எந்திரத்தில் பதிவாகியுள்ள வாக்கு எண்ணிக்கைகள் ஒரே எண்ணிக்கையில் இருக்க வேண்டும் என்பதை கருத்தில் கொண்டு தேர்தல் அதிகாரிகள் வாக்குகளை எண்ணும் போது கையாள வேண்டிய நடைமுறைகள் குறித்து பயிற்சி அளித்தனர்.

    இந்த பயிற்சி சென்னை கிண்டியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் இன்று நடந்தது. இந்திய துணை தேர்தல் ஆணையர்கள் சந்தீப் சக்சேனா, உமேஷ் சின்கா ஆகியோர் தலைமையில் பயிற்சி நடைபெற்றது. இதில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு, தேர்தல் துணை கமி‌ஷனர்கள் பாலாஜி, ராஜதுரை, கேரள மாநில தலைமை தேர்தல் அதிகாரி டிக்காராம் மீனா, இயக்குனர் நிகில்குமார், டைரக்டர்ஜெனரல் திலீப் சர்மா மற்றும் புதுச்சேரி, குஜராத், லட்சத்தீவுகள் ஆகிய 5 மாநிலங்களை சேர்ந்த தேர்தல் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    தமிழகத்தில் 38 தொகுதிகளை சேர்ந்த தேர்தல் அதிகாரிகளும், 18 தொகுதி இடைத்தேர்தல்களை நடத்திய தேர்தல் அதிகாரிகள் உள்பட 200-க்கும் மேற்பட்டவர்கள் இதில் கலந்து கொண்டனர்.

    வாக்கு எண்ணும் போது அரசியல் கட்சி பிரமுகர்களுக்கு எந்தவித சந்தேகமும் ஏற்படாத வகையில் மின்னணு எந்திரங்களையும், விவிபாட் எந்திரங்களையும் முறையாக கையாள வேண்டும். விவிபாட் எந்திரத்தில் வித்தியாசம் ஏற்பட்டால் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் பற்றி தேர்தல் அதிகாரிகளுக்கு துணை ஆணையர்கள் எடுத்துக் கூறி விளக்கம் அளித்தார்கள்.

    இதனைத் தொடர்ந்து அண்ணா பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டுள்ள மாதிரி வாக்கு எண்ணும் மையத்தை அவர்கள் பார்வையிட்டனர்.
    மரணத்தையே சந்திக்கும் நிலை வந்தாலும் மோடியின் குடும்பத்தினரை அவமதிக்கும் வகையில் பேச மாட்டேன் என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
    போபால்:

    ஜவகர்லால் நேரு, இந்திராகாந்தி, ராஜீவ்காந்தி ஆகியோரை பிரதமர் மோடி கடுமையாக விமர்சித்து வருகிறார்.

    ராஜீவ்காந்தியை நம்பர்-1 ஊழல் பேர்வழியாக இருந்த நிலையில் தான் மரணத்தை சந்தித்தார் என்று கூறினார். மேலும் விராத் போர் கப்பலை ராஜீவ்காந்தி சுற்றுலாவுக்கு பயன்படுத்தினார் என்றும் கூறினார்.

    இவ்வாறு மோடி ராகுல்காந்தி குடும்பத்தினரை விமர்சித்து வருவதற்கு காங்கிரஸ் தரப்பில் இருந்து கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது.

    இதற்கு பதில் அளித்த பிரதமர் நரேந்திர மோடி காங்கிரஸ் கட்சியினர் தங்களுடைய முன்னோர்களின் சாதனைகளை கூறி ஓட்டு கேட்கிறார்கள். அவர்கள் என்னென்ன தவறு செய்தார்கள் என்பதை சுட்டிக்காட்டுவது தவறான வி‌ஷயம் அல்ல என்று கூறினார்.

    இந்த நிலையில் மத்திய பிரதேச மாநிலத்தில் ராகுல் காந்தி தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:-

    பிரதமர் மோடி எப்போதும் எங்கள் மீது வெறுப்புத்தன்மையுடன் பேசி வருகிறார். அவர் எனது தந்தை ராஜீவ்காந்தி, பாட்டி இந்திராகாந்தி, கொள்ளு தாத்தா நேரு என அனைவரையும் அவமதித்து பேசி வருகிறார்.



    அதே நேரத்தில் நான் என் வாழ்நாளில் ஒருபோதும் மோடியின் தாயார், தந்தை அல்லது அவரது குடும்பத்தினரை அவமதிக்கும் வகையில் பேச மாட்டேன். நான் மரணத்தையே சந்திக்கும் நிலை வந்தாலும் அவர்களை அவமதித்து பேசமாட்டேன்.

    நான் பிரதமர் மோடியை அன்பால் வென்று காட்டுவேன். அவரை கட்டி அணைத்துக் கொள்வேன். நான் ஆர்.எஸ்.எஸ். அல்லது பாரதிய ஜனதாகாரன் அல்ல. நான் காங்கிரஸ்காரன். எனவே யாரையும் அவமதிக்கும் பழக்கம் எங்களுக்கு இல்லை.

    யார் எங்களை வெறுத்தாலும் பதிலுக்கு நாங்கள் அவர்களுக்கு அன்பை திருப்பிக் கொடுப்போம்.

    இவ்வாறு ராகுல்காந்தி பேசினார். 
    3-வது அணி ஆட்சி அமைக்க காங்கிரஸ் ஆதரவை ஏற்க தயார் என்று சந்திரசேகர ராவ் கட்சி அறிவித்துள்ளது.

    ஐதராபாத்:

    மத்தியில் அடுத்து பாரதிய ஜனதா, காங்கிரஸ் அல்லாத புதிய ஆட்சியை அமைக்க வேண்டும் என்று தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சித் தலைவரும், தெலுங்கானா மாநில முதல்-மந்திரியுமான சந்திரசேகர ராவ் கூறி வந்தார்.

    அவரது இந்த முடிவில் நேற்று திடீரென மாற்றம் ஏற்பட்டது. மத்தியில் புதிய ஆட்சி அமைய காங்கிரஸ் கட்சி ஆதரவு கொடுத்தால் அதை ஏற்க தயார் என்று தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி அறிவித்துள்ளது. இது தொடர்பாக அந்த கட்சியின் செய்தித்தொடர்பாளர் அபித்ரசூல்கான் ஐதராபாத்தில் நிருபர்களுக்கு பேட்டியளிக்கும் போது கூறியதாவது:-

    மாநில கட்சிகள் ஒருங்கிணைக்கப்பட்டு, “கூட்டாட்சி முன்னணி” உருவாக்கப்பட்டுள்ளது. இந்த அணிக்கு ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி ஆதரவு தெரிவித்துள்ளார். அவரை எங்கள் கட்சித் தலைவர் சந்திரசேகரராவ் அடுத்த வாரம் சந்தித்து பேச உள்ளார்.

    மத்தியில் அடுத்து மாநில கட்சிகளின் கூட்டாட்சி முன்னணிதான் ஆட்சியை பிடிக்கும். ஒரு வேளை மத்தியில் அரசமைக்க எங்களுக்கு போதிய எம்.பி.க்கள் பலம் இல்லாமல் போகும் பட்சத்தில் காங்கிரசின் உதவியை நாடுவோம். காங்கிரஸ் கட்சி எங்களுக்கு ஆதரவு கொடுத்தால் ஏற்றுக் கொள்வோம்.

     


    காங்கிரஸ் அளிக்கும் ஆதரவு வெளியில் இருந்து தான் இருக்கும். எங்கள் அரசில் காங்கிரஸ் பங்கு பெறாது. காங்கிரசுக்கு எந்த ஒருஅதிகாரத்தையும் நாங்கள் கொடுக்க மாட்டோம்.

    ஆட்சி, அதிகாரத்தை நடத்தும் டிரைவர் சீட்டில் மாநில கட்சிகள்தான் இருக்கும். எனவே காங்கிரஸ் ஆதரவு கொடுத்தாலும் புதிய அரசு கூட்டாட்சி முன்னணியின் அரசாகத் தான் இருக்கும்.

    அதுபோல பிரதமர் பதவியையும் நாங்கள் காங்கிரஸ் கட்சிக்கு விட்டுக் கொடுக்க மாட்டோம். கூட்டாட்சி முன்னணியில் உள்ள மாநில கட்சிகளின் தலைவர்களில் யாராவது ஒருவர்தான் புதிய பிரதமராக பதவி ஏற்பார். நாங்கள் அதுபற்றி ஆலோசித்து ஒருமித்த அடிப்படையில் புதிய பிரதமரை தேர்ந்து எடுப்போம்.

    காங்கிரஸ் ஆதரவு கொடுத்தது போல பாரதிய ஜனதா ஆதரவு கொடுக்க முன் வந்தால் ஒரு போதும் ஏற்க மாட்டோம். பாரதிய ஜனதாவுடன் கூட்டணி சேருவதை நாங்கள் விரும்பவில்லை.

    மேலும் மத்தியில் மீண்டும் பா.ஜனதா ஆட்சி அமைக்க உதவிகள் எதுவும் செய்ய மாட்டோம். மாநில கட்சித் தலைவர்கள் அனைவரும் இதில் ஒருமித்த கருத்துடன் இருக்கிறோம்.

    பாராளுமன்ற தேர்தலில் சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ், தி.மு.க. ஆகிய கட்சிகள் அதிக இடங்களில் வெற்றி பெற வாய்ப்புள்ளது. காங்கிரஸ் கட்சி 100 இடங்களுக்குள் தான் வெற்றி பெறும்.

    எனவே கர்நாடகாவில் மதச்சார்பற்ற ஜனதாதளம் கட்சிக்கு ஆதரவு கொடுத்து இருப்பது போல மத்தியில் எங்களை ஆதரிப்பதை தவிர காங்கிரஸ் கட்சிக்கு வேறு வழி இல்லை. இடது சாரி கட்சிகளும், கூட்டாட்சி முன்னணிக்கு ஆதரவாக உள்ளனர்.

    எனவே மத்தியில் கூட்டாட்சி முன்னணி ஆட்சி மலரும் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அரசின் சாதனைகளுக்காக இடைத்தேர்தலில் அ.தி.மு.க.வை வெற்றிபெற செய்யுங்கள் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

    சென்னை:

    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    அனைத்துத் துறைகளின் மூலம் மக்கள் நலத் திட்டங்களை கழக அரசு தொடர்ந்து செயல்படுத்தி சாதனை புரிந்து வருகிறது.

    காவேரி டெல்டா விவசாயிகளின் வாழ்வாதார உரிமைகளை நிலைநாட்டும் வகையில் அம்மா வழியில் செயல்படும் இவ்வரசு மேற் கொண்ட தொடர் முயற்சிகளினால் காவேரி நீர் மேலாண்மை ஆணையம் மற்றும் காவேரி நீர் முறைப்படுத்தும் குழு அமைக்கப்பட்டுள்ளது.

    தொடக்கநிலை, இடைநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலை ஆகிய வகுப்புகளில் மாணவர்கள் சேர்க்கை விகிதம் உயர்வு பெற்றுள்ளது. 70.59 லட்சம் ஏழை எளிய பள்ளி மாணவ, மாணவியருக்கு ரூ. 1,223.35 கோடி செலவில் விலையில்லா நான்கு இணை சீருடைகள், நோட்டுப் புத்தகங்கள் மற்றும் புத்தகப் பைகள் வழங்கப்பட்டுள்ளன.

    முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், மருத்துவ உதவித் தொகை ரூ. 2 லட்சத்திலிருந்து ரூ. 5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.

    சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் ரூ. 91 கோடி செலவில் புற நோயாளிகள் பிரிவு மற்றும் ரூ. 16.11 கோடி செலவில் குழந்தைகள் கேத் லேப் கருவி பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. ரூ. 229.46 கோடி மதிப்பில் புதுக்கோட்டையில் புதிய அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை துவக்கப்பட்டுள்ளது. டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவி திட்டத்தின் கீழ் 13.75 லட்சம் கர்ப்பிணித் தாய்மார்களுக்கு தலா ரூ. 18,000 வீதம் ரூ. 1,113.52 கோடி நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.

    ஊரகப் பகுதிகளில் வாழும் ஏழை எளிய மக்களின் வறுமையை ஒழிப்பதற்கும், அனைத்து அடிப்படை வசதிகளை நிறைவேற்றுவதற்கும் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை மூலம் அம்மாவின் அரசு பல்வேறு திட்டங்களை உருவாக்கி செயல்படுத்தி வருகின்றது.

    கிராமப்புற பொருளாதாரத்தில் கால்நடைகள் முக்கிய பங்கு வகிப்பதுடன், அதிக எண்ணிக்கையிலான சிறிய, நடுத்தர விவசாயிகள் மற்றும் விவசாய தொழிலாளர்களுக்கு பயனுள்ள வேலை வாய்ப்பை வழங்கி பொருளாதார நிலையை மேம்படுத்துகிறது. இதன் காரணமாக, ரூ. 62.43 கோடி செலவில் 15,661 நபர்களுக்கு விலையில்லா கறவைப் பசுக்களும், ரூ. 315.03 கோடி செலவில் 2,45,199 நபர்களுக்கு விலையில்லா ஆடுகளும் வழங்கப்பட்டுள்ளன.

    அம்மா மெரினா கடற்கரையில் நல்லடக்கம் செய்யப்பட்ட இடத்தில் ரூ. 50.8 கோடி செலவில் நினைவு மண்டபம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. மாண்புமிகு அம்மா அவர்கள் வாழ்ந்த போயஸ் தோட்டத்தில் உள்ள வேதா இல்லத்தை அரசு நினைவில்லமாக்க நிலம் கையகப்படுத்தும் பணிகள் ரூ. 20 கோடியில் நடைபெற்று வருகின்றன. ரூ. 2.52 கோடி செலவில் சென்னை காமராசர் சாலையில்

    பாரத் ரத்னா புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு நினைவு வளைவு அமைக்கப்பட்டுள்ளது. நாராயணசாமி நாயுடு அவர்களின் நினைவைப் போற்றும் வகையில் கோயம்புத்தூர் மாவட்டம், வையம்பாளையத்தில் ரூ. 1.50 கோடி செலவில் நினைவு மண்டபம் கட்டி முடிக்கப்பட்டு மக்களின் பார்வைக்காக திறந்து வைக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூரில் டாக்டர் பா. சிவந்தி ஆதித்தனார் மணிமண்டபம், கடலூர் மாவட்டம், மஞ்சகுப்பத்தில் இராமசாமி படையாட்சியார் நினைவு மண்டபம், தருமபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டியில் பாரத மாதா நினைவாலயம், தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் இசை மேதை நல்லப்ப சுவாமி அவர்களின் நினைவாக நினைவுத் தூண் ஆகியவை அறிவிக்கப்பட்டு, பணிகள் நடைபெற்று வருகின்றன.

    போக்குவரத்து, பொதுமக்களின் வாழ்வில் முக்கிய பங்காற்றுகிறது. தமிழ் நாடு வலுவான பேருந்து போக்குவரத்து அமைப்பைப் கொண்டுள்ளது. அவற்றில், அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றது. இவ்வரசுப் போக்குவரத்துக் கழகங்கள் மாநிலத்திலுள்ள அனைத்து நகரங்கள் மற்றும் கிராமங்களுக்கு சேவை வழங்குவதுடன் அவற்றை தொலைதூர வழித்தடங்களுடன் இணைக்கவும் செய்கின்றன. மேலும், அண்டை மாநிலங்களுக்கும் சேவைகள் வழங்கப்பட்டு வருகின்றன. 1,955 புதிய பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளன.

    இஸ்லாமிய பெருமக்கள் ஹஜ் புனிதப் பயணம் செல்ல ஆண்டுதோறும் ரூ. 6 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, இந்த ஆண்டு 3,764 ஹஜ் புனித பயணிகளுக்கு நிதியுதவி அளிக்கப்பட்டுள்ளது. ஹஜ் குழுவிற்கு வழங்கப்படும் நிர்வாக மானியம் ரூ. 50 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.

    600 கிறித்துவர்கள் ஜெருசலேம் புனிதப் பயணம் மேற் கொள்ள ரூ. 1.20 கோடி வழங்கப்பட்டு வருகிறது. பிற்படுத்தப்பட்ட முஸ்லீம் வகுப்பினருக்கு நேரடி நியமன முறையில் நிரம்பாத பணியிடங்களுக்கு முன்கொணர்வு முறை நீட்டிக்க ஆணையிடப்பட்டுள்ளது.

    மக்கள் நலனையே குறிக்கோளாகக் கொண்டு தன் வாழ்நாள் முழுவதும் மக்களுக்காகவே வாழ்ந்த அம்மாவின் எண்ணத்தை நிறைவேற்றும் வகையில், அம்மா வழியில் நடைபெறும் கழக அரசு தொடர்ந்து வெற்றி நடைபோடவும், அனைத்து மக்கள் நலத் திட்டங்கள் தங்கு தடையின்றி கிடைத்திடவும், வருகின்ற 19.5.2019 அன்று நடைபெற உள்ள சூலூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், ஓட்டப்பிடாரம் ஆகிய 4 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத் தேர்தலிலும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் போட்டியிடும் கழக வேட்பாளர்களுக்கு

    எம்.ஜி.ஆரால் கண்டெடுக்கப்பட்ட, புரட்சித் தலைவியால் கட்டிக்காக்கப்பட்ட வெற்றிச் சின்னமாம் ‘‘இரட்டை இலை’’ சின்னத்தில் வாக்களித்து பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெறச் செய்யுமாறு, வாக்காளப் பெருமக்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.

    பாராளுமன்ற தேர்தலில் 6ம் கட்டத்திலேயே ஆட்சி அமைப்பதற்கான பெரும்பான்மையை பெற்றுவிட்டோம் என பா.ஜ.க. தலைவர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
    புதுடெல்லி:

    பாராளுமன்ற தேர்தலில் இதுவரை 6 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றுள்ளது. 7-வது கட்ட தேர்தல் வரும் 19ம் தேதி நடைபெறுகிறது. மொத்தமுள்ள 543 இடங்களில் பெரும்பான்மை பெற 272 இடங்களில் வெற்றி பெறவேண்டும்.

    இந்நிலையில், 6ம் கட்ட தேர்தலிலேயே ஆட்சி அமைப்பதற்கான பெரும்பான்மை பெற்றுவிட்டோம் என பாஜக தலைவர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.



    இதுதொடர்பாக, பா.ஜ.க. தலைவர் அமித்ஷா டெல்லியில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    பாராளுமன்ற தேர்தலில் இதுவரை ஆறு கட்டங்களாக தேர்தல் நடைபெற்றுள்ளது. 5 மற்றும் 6-வது கட்ட தேர்தலிலேயே பெரும்பான்மைக்கு தேவையான எண்ணிக்கையை நாங்கள் பெற்றுவிட்டோம்.

    7வது கட்ட தேர்தலில் பதிவாகும் வாக்குகளால் 300க்கும் மேற்பட்ட இடங்களில் பா.ஜ.க. நிச்சயம் வெற்றி பெறும் என தெரிவித்தார்.
    மத்திய பிரதேசத்தில் 19-ந்தேதி நடைபெற உள்ள தேர்தலில் ஓட்டுப்போட வரும் வாக்காளர்களுக்கு பரிசு வழங்கப்படும் என்று தேர்தல் அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
    இந்தூர்:

    மத்தியபிரதேசத்தில் மொத்தம் உள்ள 29 பாராளுமன்ற தொகுதிகளில் 3 கட்டமாக 21 தொகுதிகளுக்கு தேர்தல் முடிந்துவிட்டது.

    மீதமுள்ள 8 தொகுதிகளுக்கு வருகிற 19-ந்தேதி தேர்தல் நடக்கிறது. இதில் இந்தூர் தொகுதியும் ஒன்று. இங்கு வாக்குப்பதிவு சதவீதத்தை அதிகரிக்க தேர்தல் அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளனர்.

    விழிப்புணர்வு பிரசாரம் செய்தது மட்டுமின்றி ஓட்டுப் போடும் வாக்காளர்களுக்கு பரிசையும் அறிவித்துள்ளனர். கடந்த தேர்தலில் இந்த தொகுதியில் 62 சதவீதம் மட்டுமே ஓட்டுகள் பதிவாகி இருந்தது. எனவே ஓட்டுப்பதிவு சதவீதத்தை அதிகரிக்க செய்வதற்காக பிரத்யேகமாக செல்போன் செயலி ஒன்றையும் அறிமுகப்படுத்தி உள்ளனர்.

    அந்த செயலியை வாக்காளர்கள் தங்கள் செல்போனில் பதிவிறக்கம் செய்து தங்களது விவரங்களை பதிவு செய்ததால், வாக்குப்பதிவு நாளன்று நினைவூட்டிக் கொண்டே இருக்கும். இதோடு வாக்காளர்களுக்கு பல்வேறு பரிசுகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.

    சிறந்த ஆடை அணிந்து வாக்களிக்கும் ஆண், பெண், மிகுந்த ஆர்வத்துடன் வாக்களிக்கும் கர்ப்பிணி, மூத்த குடிமக்கள், வாக்களிக்கும் சிறந்த ஜோடி என பல்வேறு வகைகளில் வாக்காளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட தேர்தல் அதிகாரிகள் செய்துள்ளனர்.

    இதுதவிர ஓட்டுப்போட்ட பின் கைவிரலில் மையுடன் செல்லும் வாக்காளர்களுக்கு ஓட்டல்களில் 10 முதல் 30 சதவீதம் வரை தள்ளுபடி விலை, ஸ்வீட் கடைகள், தியேட்டர்களில் படம் பார்க்க செல்பவர்களுக்கு பாப்கார்ன் பரிசாக வழங்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. பெண்கள், பென்சனர்கள், மாற்றுத்திறனாளிகள் பஸ்சில் இலவச பயணம் செய்யலாம் என கூறப்பட்டுள்ளது.

    வாக்குச்சாவடிகளில் வாக்காளர்கள் நீண்ட வரிசையில் காத்து நிற்பதை தவிர்க்க டோக்கன் வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 
    திருப்பரங்குன்றம் தொகுதியில் இடைத்தேர்தல் நடப்பதை தள்ளி வைக்க கோரிய மனுவை மதுரை ஐகோர்ட் இன்று தள்ளுபடி செய்துள்ளது.
    மதுரை:

    தமிழகத்தில்  ஒட்டப்பிடாரம், அரவக்குறிச்சி, சூலூர், திருப்பரங்குன்றம் ஆகிய  4 தொகுதிகளில் வரும் 19ம் தேதி   இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் திருப்பரங்குன்றம் தொகுதியில் பணப்பட்டுவாடா நடந்ததாக கூறி கே.கே ரமேஷ் என்பவர், அத்தொகுதியில் தேர்தலை தள்ளி வைக்க வேண்டும் என மதுரை ஐகோர்ட்டில் மனு அளித்திருந்தார்.

    இந்த மனுவை இன்று விசாரித்த மதுரை ஐகோர்ட் நீதிபதிகள், வழக்கை தள்ளுபடி செய்துள்ளனர். மேலும் அறிவித்தபடி 4 தொகுதிகளிலும் இடைத்தேர்தல் நடைபெறும் எனவும் தெரிவித்தனர்.  
    டெல்லியில் புதிய ஆட்சி அமைப்பது பற்றி ஆலோசனை நடத்த மே 23-ந்தேதி சோனியா காந்தி எதிர்க்கட்சி தலைவர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

    புதுடெல்லி:

    பாராளுமன்றத்துக்கு மொத்தம் உள்ள 543 இடங்களில் வேலூர் தொகுதி தவிர 542 தொகுதிகளுக்கு வருகிற 19-ந் தேதியுடன் தேர்தல் நிறைவு பெறுகிறது.

    272 இடங்களை கைப்பற்றும் கட்சியே தனி மெஜாரிட்டியுடன் ஆட்சி அமைக்க முடியும். இல்லையெனில் மத்தியில் கூட்டணி ஆட்சிதான் உருவாகும்.

    வருகிற 23-ந் தேதி 542 தொகுதிகளின் ஓட்டுக்களும் எண்ணி முடிவு அறிவிக்கப்பட உள்ளன. அன்று மதியம் மீண்டும் பா.ஜனதா ஆட்சியில் அமருமா? அல்லது வேறு கட்சிகள் ஆட்சியை பிடிக்குமா என்பது தெரிய வரும். ஆரம்பத்தில் பாரதிய ஜனதா கட்சியே ஆட்சியைப் பிடிக்க வாய்ப்பு இருப்பதாக பெரும்பாலான கருத்துக் கணிப்புகளில் தகவல் வெளியானது.

    ஆனால் 4-வது கட்ட தேர்தலுக்குப் பிறகு அரசியல் வட்டாரத்தில் மாநில கட்சிகளின் கை தான் ஓங்க வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியானது. மாநில கட்சிகள் சுமார் 200 தொகுதிகளில் வெற்றி பெற வாய்ப்பு இருப்பதாக அரசியல் நிபுணர்கள் கருதுகிறார்கள். இதன் காரணமாக மத்தியில் தனித்து ஆட்சி அமைக்கும் அளவுக்கு பாரதிய ஜனதாவுக்கோ அல்லது காங்கிரசுக்கோ அதிக இடங்கள் கிடைக்காது என்றும், எனவே மாநில கட்சிகள் உதவியுடன்தான் புதிய ஆட்சி அமைக்க முடியும் என்றும் கருத்து நிலவுகிறது.

    மாநில கட்சிகளில் தி.மு.க., தேசியவாத காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம், ராஷ்டீரிய ஜனதா தளம் ஆகிய 4 கட்சிகளும் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் இடம் பெற்றுள்ளன. சிவசேனா, அ.தி.மு.க., ஐக்கிய ஜனதா தளம், அகாலி தளம் ஆகிய கட்சிகள் பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ளன. இடது சாரிகள் தனியாக செயல்பட்டு வருகிறார்கள்.

    திரிணாமுல் காங்கிரஸ், பிஜூ ஜனதா தளம், பகுஜன் சமாஜ் கட்சி, சமாஜ்வாடி, தெலுங்கு தேசம், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ், தெலுங்கானா ராஷ்டீரிய சமிதி உள்பட சுமார் 20 மாநிலகட்சிகள் எந்த கூட்டணியிலும் இல்லாமல் தனித்து தேர்தலை சந்தித்துள்ளன. இந்த கட்சிகள் தான் மத்தியில் புதிய ஆட்சி அமைப்பதில் கிங் மேக்கர்களாக திகழும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    ஆனால் இந்த மாநில கட்சிகள், மத்தியில் ஆட்சி அமைக்கும் வி‌ஷயத்தில் மாறுபட்ட மனநிலையுடன் உள்ளன.

    தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு காங்கிரஸ் தலைமையில் எதிர்க்கட்சிகள் ஒன்று சேர்ந்து பாரதிய ஜனதா ஆட்சி அமைவதைத் தடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறார். இதற்காக அவர் 23-ந் தேதி தேர்தல் முடிவுக்கு முன்னதாக 21-ந் தேதியே டெல்லியில் மாநில கட்சித் தலைவர்கள் கூட்டத்தை கூட்ட முயற்சி செய்தார். ஆனால் அதற்கு வெற்றி கிடைக்கவில்லை.


     

    இதற்கிடையே தெலுங்கானா ராஷ்டீரிய சமிதி கட்சித்தலைவர் சந்திரசேகர ராவ், மாநில கட்சிகளின் “கூட்டாட்சி முன்னணி” (3-வது அணி)தான் மத்தியில் புதிய ஆட்சியை அமைக்க வேண்டும் என்று முயற்சிகளில் ஈடுபட்டுள்ளார். இதற்காக அவர் சமீபத்தில் கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன், தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் ஆகியோரை சந்தித்துப் பேசினார். பாரதிய ஜனதா, காங்கிரஸ் இல்லாத புதிய ஆட்சியை உருவாக்க வேண்டும் என்பது அவரது லட்சியமாக உள்ளது.

    பிரதமர் கனவில் இருக்கும் மம்தா பானர்ஜி, மாயாவதி ஆகியோரும் இதே மனநிலையில் உள்ளனர்.

    ஆனால் நேற்று சந்திரசேகர ராவும், சில மாநில கட்சித் தலைவர்களும் தங்கள் முடிவை மாற்றிக் கொண்டனர். மத்தியில் புதிய ஆட்சி அமைப்பதற்கு, தேவைப்பட்டால் காங்கிரசின் ஆதரவை வெளியில் இருந்து பெறலாம் என்பதே அந்த முக்கிய முடிவாகும். இதனால் காங்கிரசும், மாநில கட்சிகளும் நெருங்கிவரத் தொடங்கியுள்ளன.

    இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள காங்கிரஸ் கட்சியும் மும்முரமாகி உள்ளது. ப.சிதம்பரம், ஏ.கே.அந்தோணி, குலாம் நபி ஆசாத், கமல்நாத் போன்றவர்கள் மாநில கட்சித்தலைவர்களுடன் தொடர்பை ஏற்படுத்திக் கொண்டு பேச்சு நடத்தி வருகிறார்கள்.

    பாரதிய ஜனதா தடாலடியாக ஏதாவது செய்வதற்கு முன்பு எல்லா மாநில கட்சிகளையும் தங்கள் பக்கம் இழுத்து விட வேண்டும் என்ற இலக்குடன் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் காதும், காதும் வைத்த மாதிரி ஓசையின்றி காய்களை நகர்த்தி வருகிறார்கள்.

    இந்த நிலையில் மத்தியில் மீண்டும் பாரதிய ஜனதா ஆட்சி வந்துவிடக்கூடாது என்பதை உறுதிப்படுத்துவதற்கான அதிரடி நடவடிக்கைகளை காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா தொடங்கியுள்ளார். அதன் முதல் கட்டமாக தனது ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் உள்ள மாநில கட்சிகள் மற்றும் பா.ஜனதா பக்கம் செல்லாமல் இருக்கும் எதிர்க்கட்சிகள் அனைவருக்கும் சோனியா ஒரு அழைப்பு விடுத்துள்ளார்.

    “டெல்லியில் வருகிற 23-ந் தேதி ஒரு ஆலோசனை கூட்டத்துக்கு ஏற்பாடு செய்துள்ளேன். எதிர்கால அரசியல் பற்றி அந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளது. அதில் அவசியம் கலந்து கொள்ள வேண்டுகிறேன் என்று அந்த அழைப்பில் சோனியா குறிப்பிட்டுள்ளார். இதற்கான சோனியாவின் அழைப்பு கடிதம், பிஜூ ஜனதா தளம், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ், தெலுங்கு தேசம், தெலுங்கானா ராஷ்டீரிய சமிதி ஆகிய கட்சிகளுக்கும் அனுப்பப்பட்டுள்ளது.

    23-ந் தேதிதான் பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ளது. அன்றைய தினம் முக்கிய மாநில கட்சிகளின் தலைவர்கள் அனைவரையும் டெல்லியில் ஒன்று திரட்ட சோனியா அழைப்பு விடுத்து இருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இதன் மூலம் பாரதிய ஜனதாவை எதிர்க்கும் கட்சிகள் அனைத்தையும் ஓரணியாக திரட்டும் அடித்தளம் அமைவது குறிப்பிடத்தக்கது.


     

    சோனியாவின் இலக்குபடி கூட்டப்படும் இந்த கூட்டத்தில் காங்கிரசின் கூட்டணி கட்சிகளான தி.மு.க., தேசியவாத காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம், ராஷ்டீரிய ஜனதா தளம் கட்சித் தலைவர்கள் நிச்சயம் பங்கேற்பார்கள். தெலுங்கு தேசம் தலைவர் சந்திரபாபு நாயுடுவும் பங்கேற்பது உறுதியாகி உள்ளது.

    பிஜூ ஜனதா தளம் தலைவரும், ஒடிசா முதல்-மந்திரியுமான நவீன் பட்நாயக்கை 23-ந் தேதி கூட்டத்தில் கலந்து கொள்ளும்படி மத்திய பிரதேச காங்கிரஸ் முதல்-மந்திரி கமல்நாத் போனில் தொடர்பு கொண்டு வலியுறுத்தி உள்ளார். அவர்கள் இருவரும் தனிப்பட்ட முறையில் நல்ல நண்பர்களாக இருப்பவர்கள். எனவே கமல்நாத் மூலம் நவீன்பட்நாயக்கை வளைக்க முயற்சி நடந்து வருகிறது.

    அது போல சந்திரசேகர ராவ், ஜெகன் மோகன்ரெட்டி, மம்தா பானர்ஜி, மாயாவதி ஆகியோரையும் 23-ந் தேதி கூட்டத்துக்கு அழைத்து வர காங்கிரசார் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர். தேர்தல் முடிவு வெளியாகும் போது காங்கிரஸ் மற்றும் மாநில கட்சிகளுக்கு கிடைக்கும் இடங்களைப் பொறுத்து முடிவுகள் எடுக்க திட்டமிட்டுள்ளனர்.

    காங்கிரஸ் அதிக இடங்களை கைப்பற்றினால், அவர்களது கை ஓங்கும். அப்படி இல்லாமல் மாநில கட்சிகள் அதிக இடங்களைக் கைப்பற்றினால், அவர்களுக்கு ஆதரவு கொடுக்கும் நிலைக்கு காங்கிரஸ் தள்ளப்படும். இதில் எது நடக்கும் என்பது தேர்தல் முடிவுகளை பொறுத்தே அமையும்.

    ஆனால் மாயாவதி, மம்தா பானர்ஜி இருவரும் பிரதமர் பதவி மீது பிடிவாதமான மனநிலையில் உள்ளனர். அதுவும் அவர்களுக்கு கிடைக்கும் எம்.பி.க்கள் எண்ணிக்கையை பொறுத்தே அமையும். எனவே தேர்தல் முடிவுகள் இவர்களது அடுத்தக்கட்ட நடவடிக்கையை தீர்மானிக்கும்.

    மேற்கு வங்காளம் மாநிலத்தின் தலைநகர் கொல்கத்தாவில் ஏற்பட்ட வன்முறையை தொடர்ந்து மம்தா பானர்ஜி - பாஜக இடையேயான வார்த்தை மோதல் வலுப்பெற்றுள்ளது.
    கொல்கத்தா:

    மேற்குவங்காளம் மாநிலம் கொல்கத்தாவில் நேற்று பாஜக தலைவர் அமித்ஷா, தேர்தல் பிரசார பேரணி நடத்தினார். அங்குள்ள கல்லூரி சாலையில் கொல்கத்தா பல்கலைக்கழக வளாகம் அருகே பேரணி சென்று கொண்டிருந்தது.

    அப்போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் மாணவர் அமைப்பைச் சேர்ந்தவர்கள் கருப்பு கொடி காட்டியும், ‘அமித்ஷா திரும்பிப்போ’ என்ற பதாகைகளை காட்டியும் கோ‌ஷமிட்டனர்.

    பல்கலைக்கழக மாணவர்கள் விடுதி அருகே பேரணி மீது திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மாணவர்கள் கற்களை வீசினார்கள். உடனே பாஜக தொண்டர்கள் விடுதி கதவுகளை பூட்டிவிட்டு, வெளியில் இருந்த மோட்டார்சைக்கிள் மற்றும் சைக்கிள்களுக்கு தீ வைத்தனர்.



    விடுதிக்கு வெளியே இருந்த தத்துவ மேதை வித்யாசாகரின் மார்பளவு சிலையையும் உடைத்தனர். பின்னர் ஏராளமான போலீசார் அங்கு வரவழைக்கப்பட்டனர். சிறிது நேரத்திற்கு பின்னர் அங்கு அமைதி திரும்பியது.

    இதுபற்றி அமித்ஷா கூறும்போது, ‘‘திரிணாமுல் காங்கிரஸ் குண்டர்கள் என்னை தாக்க முயன்றனர். மம்தா பானர்ஜி வன்முறையை தூண்டிவிடுகிறார். ஆனாலும் நான் பாதுகாப்பாக இருக்கிறேன். விவேகானந்தர் இல்லத்துக்கு செல்ல நினைத்தேன். ஆனால் போலீசார் என்னை அனுமதிக்கவில்லை’’ என்றார்.

    இந்த வன்முறை குறித்து கருத்து தெரிவித்த மேற்கு வங்காளம் முதல்வர்  மம்தா பானர்ஜி,  ‘பாஜக வெளியில் இருந்து குண்டர்களை அழைத்து வந்து வன்முறையில் ஈடுபட்டுள்ளது’ என கடுமையாக சாடினார். இதையடுத்து பாஜக- மம்தா பானர்ஜிக்கு இடையேயான வார்த்தை மோதல் மேலும் வலுப்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
     
    மோடியும், எடப்பாடியும் தமிழகத்திற்கும், தமிழக மக்களுக்கும் எதிராக செயல்படுவதாக தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டினார்.
    மதுரை:

    திருப்பரங்குன்றம் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர் டாக்டர் சரவணனை ஆதரித்து தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று 2-ம் கட்ட பிரசாரத்தில் ஈடுபட்டார்.

    புளியங்குளம் பகுதிகளில் வீதி வீதியாக நடந்து சென்று பொதுமக்களிடம் ஓட்டு சேகரித்தார். புளியங்குளத்தில் நடந்த திண்ணை பிரசார கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் அங்கு திரண்டிருந்த பொதுமக்கள் மத்தியில் பேசியதாவது:-

    நான் கலைஞரின் மகன். சொன்னதைதான் செய்வேன். தி.மு.க. தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள அத்தனை வாக்குறுதிகளும் நிச்சயமாக நிறைவேற்றித்தரப்படும். தி.மு.க. என்றைக்கும் மக்களுக்காக பாடுபடுகின்ற இயக்கம். ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் மக்கள் நலனை பேணுகின்ற இயக்கம்தான் தி.மு.க.

    புளியங்குளத்தில் மு.க.ஸ்டாலின் தேர்தல் பிரசாரம் செய்தார்.

    தி.மு.க. ஆட்சியில்தான் மகளிர் சுயஉதவிக்குழுக்கள் ஏற்படுத்தப்பட்டன. தமிழக மக்களுக்கு வளர்ச்சி திட்டங்களை நிறைவேற்றி தந்தது தி.மு.க. இப்போது எதிர்க்கட்சியாக இருந்தாலும் எங்களால் எந்த அளவுக்கு மக்கள் பணி செய்ய முடியுமோ அந்த வகையில் பணியாற்றி வருகிறோம்.

    விரைவில் தமிழகத்தில் விடிவுகாலம் பிறக்க உள்ளது. அதற்கு திருப்பரங்குன்றத்தில் சூரியன் உதிக்க வேண்டும். எனவே நீங்கள் எல்லோரும் தி.மு.க.வை ஆதரிக்க வேண்டும். இன்றைக்கு தமிழகத்திற்கும், தமிழக மக்களுக்கும் மத்தியில் ஆட்சி செய்கிற நரேந்திர மோடியும், மாநிலத்தை ஆளுகின்ற எடப்பாடியும் எதிராக செயல்படுகிறார்கள்.

    பிரதமர் மோடி வெளி நாட்டுவாழ் பிரதமர் போல இருக்கிறார். அவருக்கு இந்தியா மேல் அக்கறை இல்லை. தமிழகத்தை திட்டமிட்டு புறக்கணிக்கும் மோடி ஒரு சர்வாதிகாரிபோல செயல்படுகிறார்.

    உலகம் சுற்றும் நரேந்திர மோடி இதுவரை வெளிநாட்டு சுற்றுப்பயணத்துக்காக ரூ.400 கோடிக்கு மேல் செலவு செய்துள்ளதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. வருகிற 23-ந்தேதிக்கு பிறகு மத்தியில் பிரதமராக மோடி இருக்க மாட்டார். அதுபோல தமிழகத்திலும் எடப்பாடி பழனிசாமி முதல்-அமைச்சராக இருக்க மாட்டார்.

    மத்தியில் ராகுல்காந்தி தலைமையில் மதசார்பற்ற நல்லாட்சி அமையும். மாநிலத்திலும் தி.மு.க. ஆட்சிக்கு வரும். அப்போது மக்களின் கோரிக்கை அனைத்தும் நிறைவேற்றி தரப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×