என் மலர்tooltip icon

    தேர்தல் செய்திகள்

    சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து என்று குறிப்பிட்ட மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனுக்கு பதிலளித்த பிரதமர் மோடி, எந்தவொரு இந்துவும் பயங்கரவாதியாக இருக்க முடியாது என கூறியுள்ளார்.
    புது டெல்லி:

    நடிகர் கமல்ஹாசன் தனது மக்கள் நீதிமய்யம் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்து வருகிறார். கடந்த ஞாயிற்றுக்கிழமை அரவக்குறிச்சி தொகுதியில் பேசும்போது, சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட்டார்.

    சுதந்திர இந்தியாவின் முதல் பயங்கரவாதி ஒரு இந்து. அவரது பெயர் நாதுராம் கோட்சே என்று கமல்ஹாசன் தனது பேச்சில் குறிப்பிட்டார். பள்ளப்பட்டி என்ற ஊரில் வாழும் இஸ்லாமியர்களின் வாக்குகளை குறி வைத்து அவர் இவ்வாறு பேசியதாக தகவல்கள் வெளியானது.

    இதற்கு பல்வேறு தரப்பிலும் கடும் கண்டனம் எழுந்தது. தமிழ்நாட்டின் பல பகுதிகளில் கமல்ஹாசனின் உருவப்பொம்மை எரிக்கப்பட்டது. அவர் மீது போலீஸ் நிலையங்களில் புகார் செய்யப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் கமல்ஹாசனின் இந்து  பயங்கரவாதி  என்ற பேச்சுக்கு பிரதமர் நரேந்திர மோடியும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ஆங்கில தொலைக்காட்சி ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    உலகமே ஒரு குடும்பம் என்பதுதான் இந்து தர்மத்தின் ஆழமான நம்பிக்கை. அது எந்த ஒரு தனிநபரையும் காயப்படுத்துவதில்லை. அதுபோல யாரையும் கொலை செய்வதையும் இந்து மதம் அனுமதித்ததில்லை.



    அந்த அடிப்படையில் பார்த்தால் எந்த ஒரு இந்துவும் பயங்கரவாதியாக இருக்க முடியாது. பயங்கரவாதியாக ஒருவர் இருந்தால் அவர் இந்துவாக இருக்க முடியாது.

    இவ்வாறு பிரதமர் மோடி அந்த பேட்டியில் கூறியுள்ளார்.

    தூத்துக்குடியில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    எந்த மதமும் பயங்கரவாதத்தை ஆதரிப்பது இல்லை. ஆனால் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் இந்துக்களை பயங்கரவாதிகள் என பேசியுள்ளார். அவர் அரசியலில் தரம் தாழ்ந்து பேசி வருகிறார். அவரை பின்னால் இருந்து யாரோ இயக்கி கொண்டு இருக்கிறார்கள். அது அரசியல் கட்சிகளா அல்லது வேறு யாருமா என்று தெரியவில்லை. எனவே அவரது பிரசாரத்தை தடை செய்ய வேண்டும்.

    மகாத்மா காந்தியின் கொள்ளு பேரன் நான் என்றும், ஒரு கட்டத்தில் இந்த நாட்டை விட்டே வெளியேறும் சூழ்நிலை ஏற்படும் என்றும் கூறியவர் கமல்ஹாசன்.

    இப்போது தரம் தாழ்ந்து பேசி வருகிறார். அவரது சர்ச்சை பேச்சுக்கு சில அரசியல் கட்சி தலைவர்கள் ஆதரவு தெரிவிப்பது வருத்தம் அளிக்கிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதைத்தொடர்ந்து நிருபர்கள் கமலின் சர்ச்சை பேச்சு குறித்து பிரதமர் மோடி குறிப்பிடும் போது, பயங்கரவாத செயல்களில் இந்துக்கள் ஈடுபட மாட்டார்கள் என்றும், பயங்கரவாதத்தில் ஈடுபடுபவர்கள் இந்துக்களாக இருக்க மாட்டார்கள் என்றும் பேட்டி அளித்தது குறித்து கேட்டனர்.

    அதற்கு பதில் அளித்த தமிழிசை சவுந்திரராஜன் பிரதமர் மோடி கூறியது சரிதான் என்றார்.




    ஆளுங்கட்சிக்கு வாக்களித்தால்தான் நல்ல திட்டங்களை கொண்டுவர முடியும் என்று சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார் கூறியுள்ளார்.

    வேலாயுதம்பாளையம்:

    அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து நொய்யல் குறுக்குசாலை, குப்பம், க. பரமத்தி உள்ளிட்ட பகுதிகளில் சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார் பிரசாரம் செய்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    முன்னாள் முதல்வர்கள் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா வழியில் தொலைநோக்கு பார்வையுடன் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆட்சி நடத்தி வருகிறார். அ.தி.மு.க.வை யாராலும் அவ்வளவு சீக்கிரம் அசைத்துவிட முடியாது. ஸ்டாலினாலும் அது முடியாது. அவர்கள் சுயநலவாதிகள் தி.மு.க.வினர் ஊழல் செய்தார்கள்.

    மே 23-ந்தேதிக்கு மேல் ஆட்சிக்கு வந்து விடலாம் என கனவு காண்கிறார்கள். நீங்கள் ஒரு நாற்காலி வாங்கி, அவருடைய வீட்டுக்கு அனுப்பிவிடுங்கள். அதில் முதல்-அமைச்சர் பதவி என எழுதி வீட்டிலேயே அமர்ந்து கொள்ளலாம். அவர் முதல்வராவது எந்த காலத்திலும் நடக்காது. ஒரு தலைவன் மக்களை பற்றி சிந்திக்க வேண்டும். ஆட்சியை கலைக்க வேண்டும் என நினைப்பவர் தலைவராக முடியாது.

     


    நீங்கள் ஒருவருக்கு ஓட்டு போடுவீர்கள். அவர் வேறு கட்சிக்கு சென்றுவிடுவார். உங்களிடம் கேட்டுவிட்டா சென்றார். கொள்கை பிடிப்பு இல்லாமல் பல கட்சிகளுக்கு தாவிய செந்தில்பாலாஜி பொய்யான வாக்குறுதிகளை தந்து கொண்டு இருக்கிறார். ஆளுங்கட்சிக்கு வாக்களித்தால் தான் மக்களுக்கு பல நல்ல திட்டங்களை கொண்டு வர முடியும்.

    ஜெயலலிதா ஆட்சியில் வறட்சியை எதிர்கொள்ளும் வகையில் மழைநீர் சேகரிப்பு தொட்டியை ஒவ்வொரு வீட்டிலும் கட்ட வேண்டும் என கூறி, மழைநீரை பூமிக்கடியில் சேமித்து நிலத்தடி நீர்மட்டம் உயர வழிவகுத்தார். அவரது வழியில் எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் குடிமராமத்து பணிகள் மூலம் ஏரி, குளங்கள் தூர்வாருவது உள்ளிட்டவற்றால் விவசாயிகளுக்க உதவிகரமாக இருக்கிறது. அ.தி.மு.க. ஆட்சி இன்னும் 2 ஆண்டுகள் தொடரும். 38 பாராளுமன்ற தேர்தலிலும், 22 சட்டமன்ற இடைத்தேர்தலிலும் அ.தி.மு.க. வெற்றி பெறுவது உறுதி.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கொல்கத்தா நகரில் பாஜக தலைவர் அமித் ஷாவின் பிரசார வாகனத்தின் மீது இன்று தாக்குதல் நடத்தப்பட்டதால் பெரும் பதற்றம் ஏற்பட்டது.
    கொல்கத்தா:

    பாராளுமன்றத்துக்கு ஏப்ரல் மாதம் 11-ம் தேதி தொடங்கி ஆறுகட்டங்களாக நடந்து முடிந்த தேர்தலில் வேறெந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் மேற்கு வங்காளம் மாநிலத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் பாஜக தொண்டர்களிடையே கடுமையான மோதல்கள் நடந்தன.
     
    பிரதமர் மோடியும் மேற்கு வங்காளம் மாநில முதல் மந்திரி பானர்ஜியும் காரசாரமாக ஒருவரையொருவர் தாக்கி பேசி வருகின்றனர்.

    இந்நிலையில், இறுதிக்கட்ட பிரசாரத்துக்காக ஜாதவ்பூர் பகுதியில் பாஜக தலைவர் அமித் ஷாவின் மிக பிரமாண்டமான பேரணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த பேரணிக்கு அனுமதி அளிக்க போலீசார் மறுத்து விட்டனர். இந்த பேரணியில் பங்கேற்பதற்காக அமித் ஷா வரும் ஹெலிகாப்டர் தரையிறங்கவும் அனுமதி மறுக்கப்பட்டதால் அம்மாநில பாஜகவினர் கொதிப்படைந்துள்ளனர்.

    இந்த பேரணி ரத்தான நிலையில் ஜாய்நகர் பகுதியில் நடைபெற்ற மற்றொரு பிரசார கூட்டத்தில் நேற்று மம்தா பானர்ஜியை அமித் ஷா கடுமையாக தாக்கி பேசினார்.

    ‘இன்று இங்கு நான் 3 பிரசார கூட்டங்களில் பேச இருந்தேன். மம்தாவின் மருமகன் போட்டியிடும் தொகுதிக்கு நான் போனால் அவர் தோற்பது உறுதி என்பதால் அங்கு என்னுடைய நிகழ்ச்சிக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. எனது பிரசாரத்திற்கு மட்டும்தான் மம்தா தடை விதிக்க முடியும். ஆனால், பாஜகவின் வெற்றியை அவரால் தடுத்து நிறுத்திவிட முடியாது.

    மத்திய அரசு கொண்டுவந்த பல திட்டங்களின் பலன்கள் இங்குள்ள மக்களை வந்து சேராத வகையில் மம்தாவின் அரசு தடைக்கல்லாக நின்று தடுத்து விட்டது. அந்த திட்டங்களின் மூலம் இங்குள்ள மக்களிடையே பிரதமர் மோடி பிரபலமாகி விடக்கூடாது என்ற நோக்கத்தில் மம்தா இந்த திட்டங்களை எல்லாம் எதிர்த்து வருகிறார்.

    இந்த மாநிலத்தில் உள்ள மக்கள் ‘ஜெய் ஸ்ரீராம்’ என்று சொன்னால் அவர்கள் சிறையில் அடைக்கப்படுகின்றனர். இந்த மேடையில் இருந்து நான் ‘ஜெய் ஸ்ரீராம்’ என்று முழங்குகிறேன். நாளை வரை நான் கொல்கத்தாவில் இருப்பேன். முடிந்தால், துணிச்சல் இருந்தால் என்னை கைது செய்து பாருங்கள் என்று மம்தாவுக்கு நான் பகிரங்கமாக சவால் விடுகிறேன்’ என அமித் ஷா பேசினார்.

    இந்நிலையில், கொல்கத்தா நகரில் இன்று மாலை நடைபெற்ற பாஜக பேரணியில் அமித் ஷா பங்கேற்றார்.

    கொல்கத்தா பல்கலைக்கழகத்தை கடந்து சுமார் 7 மணியளவில் கல்லூரி சாலைக்குள் பேரணி நுழைந்தபோது அமித் ஷா வந்த பிரசார வாகனத்தின் மீது சில கம்புகள் வீசப்பட்டன. இதனால், அங்கு பதற்றம் ஏற்பட்டது.



    பேரணியில் வந்தவர்களுக்கும் வேறொரு தரப்பினருக்கும் இடையில் மோதல் வெடித்தது. சாலையோரத்தில் இருந்த கட் அவுட்டுகள் அடித்து நாசப்படுத்தப்பட்டன. போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர்.

    சில இடங்களில் தீவைப்பு சம்பவங்களும் நடைபெற்றதால் கொல்கத்தா நகர மக்கள் பீதியடைந்துள்ளனர். பல பகுதிகளில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
    சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து என்று குறிப்பிட்ட கமல் மீது அரவக்குறிச்சியில் 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
    புதுடெல்லி:

    மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் நேற்று முன்தினம் அரவக்குறிச்சி தொகுதியில் பிரசாரம் செய்தார். அங்கு அவர் பேசுகையில், “சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து” என்று பேசினார். மத நல்லிணக்கம், மத ஒற்றுமை பற்றி பேசுகின்றனர். தேசிய கொடியில் உள்ள 3 வண்ணங்களும் அப்படியே இருக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன்.

    காந்தி சிலை முன்பு நின்று கொண்டு சொல்கிறேன். சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து. அவன் பெயர் நாதுராம் கோட்சே. காந்தியின் கொள்ளுப் பேரனான நான், அந்த கொலைக்கு கேள்வி கேட்க வந்துள்ளேன் என்று கூறினார்.



    இந்நிலையில், கமல்ஹாசனின் இந்த விமர்சனம் குறித்து டெல்லி பாட்டியாலா ஹவுஸ் வளாகத்தில் உள்ள நீதிமன்றத்தில் ஹிந்து சேனா அமைப்பு இன்று கிரிமனல் வழக்கு தொடர்ந்துள்ளது. இந்த வழக்கு நாளை மறுநாள் விசாரணைக்கு வருகிறது.

    இதை தொடர்ந்து கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி காவல் நிலையத்தில் இன்று இரவு இந்து முன்னணி பிரமுகர் ராமகிருஷ்ணன் என்பவர் அளித்த புகாரின் பேரில் கமல்ஹாசன் மீது 153A, 295A ஆகிய 2 பிரிவுகளில் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 
    மத்திய பிரதேச பிரசாரத்தில் மோடி வாழ்க என்று கோஷமிட்டவர்களிடம் கை குலுக்கி பிரியங்கா ஓட்டு கேட்ட சம்பவம் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
    இந்தூர்:

    மத்திய பிரதேச மாநிலத்தின் சில தொகுதிகளில் வருகிற 19-ந்தேதி இறுதி கட்ட தேர்தல் நடைபெற உள்ளது.

    இதையடுத்து அந்த மாநிலத்தில் நேற்று பிரதமர் மோடியும், காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்காவும் ஒரே நாளில் போட்டி போட்டு பிரசாரம் செய்தனர்.

    நேற்று காலை மத்திய பிரதேசத்தின் முக்கிய நகரங்களில் மோடி பொதுக்கூட்டங்களில் பேசினார். நேற்று மதியம் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா டெல்லியில் இருந்து புறப்பட்டு மத்திய பிரதேச மாநிலம் இந்தூருக்கு வந்தார்.

    இந்தூரில் அவர் ரோடு ஷோ நடத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது. இதற்காக அவர் இந்தூர் விமான நிலையத்தில் இருந்து ராஜ்மோகல்லா என்ற இடத்துக்கு காரில் சென்று கொண்டிருந்தார்.

    அப்போது வழிநெடுக சாலையின் இருபுறமும் ஏராளமானோர் திரண்டு நின்று பிரியங்காவை பார்த்து கையசைத்து வாழ்த்து தெரிவித்தனர். ஒரு இடத்தில் பிரியங்காவின் கார் வந்த போது நூற்றுக்கணக்கான தொண்டர்கள் திரண்டு நின்று பா.ஜனதாவுக்கு ஆதரவாக கோ‌ஷத்தை எழுப்பினார்கள்.

    அவர்கள், “மீண்டும் மோடி, வேண்டும் மோடி” என்று கோ‌ஷமிட்டனர். பிரியங்காவை பார்த்ததும் அவர்களது இந்த கோ‌ஷம் அதிகரித்தது. ஆனால் பிரியங்கா அவர்களை பார்த்து சிரித்தப்படி கையசைத்தபடி சென்றார்.

    ஆனால் சிறிது தூரம் சென்றதும் பிரியங்காவின் கார் நின்றது. அவரது கார் பின்னோக்கி வந்தது. மோடி வாழ்க என்று கோ‌ஷமிட்டவர்கள் நின்ற பகுதியில் அவரது கார் நிறுத்தப்பட்டது.

    காரில் இருந்து இறங்கிய பிரியங்கா சிரித்தபடி அந்த கூட்டத்தினரிடம் சென்றார். அவர்களிடம், “உங்கள் உணர்வுகளை மதிக்கிறேன். வாழ்த்துக்கள்” என்று கூறி கை குலுக்கினார். பிறகு சிரித்தபடி அவர்களிடம் இருந்து விடைபெற்று காரில் ஏறி புறப்பட்டு சென்றார்.

    பிரியங்கா திடீரென தங்களிடம் வந்ததும் பா.ஜனதா ஆதரவாளர்கள் ஆச்சரியம் அடைந்தனர். பிரியங்கா புறப்பட்டு சென்ற பிறகும் அவர்கள் இன்ப அதிர்ச்சியில் விடுபடவில்லை. பிரியங்காவின் எளிமையை பாராட்டிய படி கலைந்து சென்றனர்.

    பிரியங்கா நேற்று மத்திய பிரதேசத்தில் இந்தூர், உஜ்ஜைனி, ரட்லம் நகரங்களில் நடந்த பொதுக்கூட்டங்களில் கலந்து கொண்டு பேசினார். இந்தூர், உஜ்ஜைனி நகரங்களில் ரோடு ஷோ நடத்தினார்.

    ரட்லம் நகரில் பொதுக்கூட்டத்தில் பேச சென்ற போது பாதுகாப்பு வளையத்தை மீறி பெண்கள் இருக்கும் பகுதிக்கு சென்றார். அங்கிருந்த பெண்களிடம் அவர் கேள்விகள் கேட்டு பேசினார்.

    அப்போது பெண்கள் பலர் அவர் அருகில் நின்று செல்பி எடுத்தனர். அதற்கு பிரியங்கா சிரித்தப்படி போஸ் கொடுத்து விட்டு சென்றார்.
    புதிய பிரதமரை தேர்தலுக்கு பின் தேர்வு செய்யலாம் என காங்கிரஸ் முன்னாள் நிதி மந்திரி ப.சிதம்பரம் கருத்து தெரிவித்துள்ளார்.
    புதுடெல்லி:

    பாராளுமன்ற தேர்தல் கடைசி கட்டத்தை எட்டியுள்ள நிலையில், நாட்டின் அடுத்த பிரதமர் யார்? என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே உள்ளது.

    பா.ஜனதா, காங்கிரஸ் ஆகிய இரு அணிகளுக்குமே தனிப் பெரும்பான்மை கிடைக்காது என்ற பேச்சு பரவலாக உள்ளது. இதனால் தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு, பல்வேறு மாநில தலைவர்களை ஒருங்கிணைத்து 3-வது அணியை ஆட்சி அமைக்க செய்வதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

    இதற்காக வருகிற 21-ந்தேதி டெல்லியில் எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டத்தை நடத்துவதற்கான முயற்சியிலும் அவர் இறங்கினார். ஆனால் இந்த கூட்டத்தில் பங்கேற்க திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி உள்ளிட்ட சில மாநில கட்சி தலைவர்கள் மறுத்து விட்டனர். மே.23-ந்தேதி ஓட்டு எண்ணிக்கை முடிந்த பிறகு பார்த்துக்கொள்ளலாம் என அவர்கள் கூறியதால் எதிர்க்கட்சிகளின் கூட்டம் தள்ளிப் போய் உள்ளது.

    இந்தநிலையில் காங்கிரஸ் முன்னாள் நிதி மந்திரி ப.சிதம்பரம் டெல்லியில் அளித்த பேட்டி ஒன்றில், புதிய பிரதமரை தேர்தலுக்கு பின் தேர்வு செய்யலாம் என கருத்து தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறியதாவது:-

    புதிய பிரதமர் யார் என்பது இப்போது பிரச்சனை இல்லை. பா.ஜனதாவை வீழ்த்துவது மட்டுமே இப்போதைய உடனடி வேலை. அதன்பிறகு தலைவர்கள் அமர்ந்து பேசி எல்லா கேள்விகளுக்கும் விடை தேடலாம். அடுத்த அரசை அமைப்பது குறித்தும் பேசலாம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ப.சிதம்பரத்தின் இந்த கருத்து எதிர்க்கட்சி தலைவர்களுடன் காங்கிரஸ் கட்சி இணக்கமாக இருப்பதற்கு சிக்னல் காட்டுவதுபோல இருப்பதாக கருதப்படுகிறது.
    பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுபவர்களில் பீகார் மாநிலத்தை சேர்ந்த சுயேட்சை ஒருவர் நாட்டிலேயே மிகப்பெரிய பணக்கார வேட்பாளர் என தெரிய வந்துள்ளது.
    புதுடெல்லி:

    இந்தியாவில் உள்ள 543 தொகுதிகளிலும் போட்டியிடும் வேட்பாளர்கள் பற்றிய பின்னணி தகவல்களை ஜனநாயக சீர்திருத்த கழகம் என்ற அமைப்பு ஆய்வு செய்தது.

    அந்த ஆய்வில் எத்தனை வேட்பாளர்கள் கோடீஸ்வரர்கள்? எத்தனை வேட்பாளர்கள் கிரிமினல்கள்? எத்தனை வேட்பாளர்கள் ஏழைகளாக இருக்கிறார்கள்? என்பன போன்ற விவரங்கள் தெரிய வந்துள்ளன.

    அந்த ஆய்வில் இந்தியாவிலேயே பணக்கார வேட்பாளர் யார் என்ற ஆய்வும் மேற்கொள்ளப்பட்டது. அதில் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த ரமேஷ்குமார் சர்மா என்பவர்தான் நாட்டிலேயே மிகப்பெரிய பணக்கார வேட்பாளர் என்பது தெரிய வந்துள்ளது.

    அவரது மொத்த சொத்து மதிப்பு ரூ.ஆயிரத்து 100 கோடி என்று கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் சொத்து வைத்திருக்கும் இவர் எந்த கட்சியிலும் சேரவில்லை.

    சுயேட்சையாக பாடலி புத்ரா தொகுதியில் போட்டியிடுகிறார். தேர்தலுக்காக இவர் கணிசமான அளவுக்கு பணத்தை செலவு செய்து இருப்பதாக தெரிய வந்துள்ளது.

    நாட்டிலேயே 2-வது பெரிய பணக்கார வேட்பாளராக காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த கொண்ட விஸ்வேஸ்வர ரெட்டி உள்ளார். தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்த செவல்லா தொகுதியில் போட்டியிடுகிறார்.

    இவரது சொத்து மதிப்பு 895 கோடி ரூபாய் ஆகும். மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த நகுல்நாத் 3-வது பணக்கார வேட்பாளர் ஆவார். இவரது சொத்து ரூ.660 கோடியாகும்.


    தமிழ்நாட்டில் பணக்கார வேட்பாளராக கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் வசந்தகுமார் உள்ளார்.
    பிரதமர் நரேந்திர மோடி மிகப்பெரிய வெற்றியை பெறுவார் என்று மத்திய மந்திரி பொன். ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

    ஆலந்தூர்:

    மத்திய மந்திரி பொன். ராதாகிருஷ்ணன் சென்னை விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    வாரணாசியில் போட்டியிடும் பிரதமர் மோடிக்கு ஆதரவாக தமிழர்கள் உள்ள பகுதிக்கு சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டோம். வாரணாசி தொகுதியில் கடந்த முறை போட்டி இருந்தது.

    ஆனால் இந்த முறை யாரும் போட்டியாக கருத முடியாது. ஒட்டு மொத்த மக்களும் மோடிக்கு வாக்களிக்க முடிவு செய்துள்ளனர். அங்குள்ள சிறுபான்மை மக்கள், இஸ்லாமிய மக்கள் ஆகியோரும் பிரதமர் மோடிக்கு வாக்களிக்க இருப்பதாக கூறினார்கள். 5 ஆண்டுகளில் மோடி பல திட்டங்களை செய்துள்ளார். இந்த தேர்தலில் மிகப்பெரிய வெற்றியை பெறுவார்.

    ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தை ஐ.எஸ்.இயக்கத்துடன் தொடர்புப்படுத்தி பேசும் கே.எஸ்.அழகிரியின் பார்வையில் கோளாறு இருப்பதாக தெரிகிறது.


    சந்திரசேகரராவை சந்திக்க முதலில் ஸ்டாலின் மறுத்ததாக தகவல் வந்தது. இப்போது சந்தித்து உள்ளார். அப்போது நல்ல டீ குடித்து இருப்பார்கள். அவ்வளவு தான் நடந்து இருக்கும். இதன் பின்னாடி எந்த பலனும் இருக்க போவதில்லை.

    பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி மிகப்பெரிய வெற்றியை பெற போகிறது. பா.ஜனதா தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க கூடிய வகையில் பலம் பொருந்திய கட்சியாக வர போகிறது. கடந்த முறை தேசிய ஜனநாயக கூட்டணி எப்படி ஆட்சி அமைத்ததோ அதுபோல் பிரதமர் மோடி ஆட்சி அமைப்பார்.

    பா.ஜனதாவிடம் தி.மு.க. சார்பில் தூது அனுப்பப்பட்டதாக அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளதாக கூறுகிறீர்கள். ஒருவேளை சந்திரசேகர ராவ் மூலமாக தூது அனுப்பி இருப்பார்.

    திரை மறைவில் எதுவும் பேசுவதற்கு பா.ஜனதா தயாராக இல்லை. இதை யார் சொல்லியிருந்தாலும் ஏற்றுக் கொள்ள முடியாது. எதுவாக இருந்தாலும் வெளிப்படையாக செய்யப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்து தீவிரவாதி என்று விமர்சனம் தொடர்பாக கமல் பிரசாரத்துக்கு தடை விதிக்கப்படுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

    சென்னை:

    அரவக்குறிச்சி, ஓட்டப்பிடாரம், சூலூர், திருப்பரங்குன்றம் ஆகிய 4 தொகுதிகளின் இடைத்தேர்தல் வருகிற 19-ந்தேதி நடைபெற உள்ளது.

    பிரசாரம் ஓய்வதற்கு இன்னும் 4 நாட்களே உள்ள நிலையில் இந்த தொகுதிகளில் அனல்பறக்கும் பிரசாரம் நடந்து வருகிறது.

    நடிகர் கமல்ஹாசன் இந்த 4 தொகுதிகளிலும் தனது மக்கள் நீதிமய்யம் வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்து வருகிறார். நேற்று முன்தினம் அவர் அரவக்குறிச்சி தொகுதியில் பிரசாரம் செய்தார்.

    அந்த ஊரில் கமல்ஹாசன் பிரசாரம் செய்யும்போது, சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட்டார்.

    அவர் பேசுகையில், “சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து” என்று பேசினார். மத நல்லிணக்கம், மத ஒற்றுமை பற்றி பேசுகின்றனர். தேசிய கொடியில் உள்ள 3 வண்ணங்களும் அப்படியே இருக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன்.

    காந்தி சிலை முன்பு நின்று கொண்டு சொல்கிறேன். சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து. அவன் பெயர் நாதுராம் கோட்சே. காந்தியின் கொள்ளுப் பேரனான நான், அந்த கொலைக்கு கேள்வி கேட்க வந்துள்ளேன் என்று கூறினார். கமல் தனது பேச்சின் போது ஆவேசமாக இதை குறிப்பிட்டார்.

    கமலின் இந்த பேச்சு தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் எதிரொலித்து கடும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. பாரதிய ஜனதா, அ.தி.மு.க. தலைவர்கள் கமலின் பேச்சுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். சிவசேனா கட்சியும் கமலின் பேச்சை கண்டித்துள்ளது.

    அதே நேரத்தில் தமிழக காங்கிரஸ் கட்சி கமலின் கருத்தை வரவேற்றுள்ளது. இதனால் கமலின் இந்து தீவிரவாதி பேச்சுக்கு ஆதரவும், எதிர்ப்பும் வலுத்து வருகிறது.

     


    தமிழக பா.ஜனதா தலைவர் தமிழிசை வெளியிட்டுள்ள அறிக்கையில், ஒழுக்கத்தை கடைபிடித்த காந்தியின் கொள்ளுப்பேரன் என்று கூறுவதற்கு கமல் தகுதி இல்லாதவர். அவரது பேச்சு கண்டிக்கத்தக்கது.

    தேர்தல் ஆணையம் கமல் மீது நடவடிக்கை எடுப்பதுடன் பிரசாரத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

    பா.ஜனதா தேசிய செயலாளர் எச்.ராஜா, “மக்கள் நீதிமய்யம் முளையிலேயே கிள்ளி எரியப்பட வேண்டிய வி‌ஷ செடி. சிறுபான்மையினர் ஓட்டுக்காக இந்துக்களை கமல் இழிவுப்படுத்தி உள்ளார்” என்று தெரிவித்துள்ளார்.

    மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் இந்த விவகாரம் பற்றி டெல்லியில் நேற்று பேட்டி அளித்தார். அப்போது அவர், “தீவிரவாதிக்கும், கொலைகாரனுக்கும் வித்தியாசம் தெரியாமல் கமல் பேசியுள்ளார். இது சிறுபான்மையினரை கவரும் செயலாகும் என்று தெரிவித்தார்.

    பா.ஜனதா மூத்த தலைவரான சுப்பிரமணியசாமி கூறும்போது, இந்து மக்களை இழிவுப்படுத்திய கமலின் கட்சிக்கு தடைவிதிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

    அதே நேரத்தில் கமல் ஹாசனின் ‘இந்து தீவிரவாதி’ கருத்தை தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி ஆகியோர் வர வேற்றுள்ளனர்.


    இதற்கிடையே கமல் மீது டெல்லியில் தேர்தல் ஆணையத்தில் பா.ஜனதா கட்சி சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அந்த கட்சியின் சுப்ரீம் கோர்ட்டு மூத்த வக்கீல் அஸ்வினிகுமார் உபாத்யாயா அளித்த மனுவில், கமல்ஹாசன் தேர்தல் நடத்தை விதிகளை மீறியுள்ளார்.

    எனவே, அவரது கட்சியின் பதிவை ரத்து செய்ய வேண்டும். குறைந்தது 5 நாட்களாவது அவரது பிரசாரத்துக்கு தடை விதிக்க வேண்டும். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தப்பட வேண்டும்என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

    தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகுவிடமும் பா.ஜனதா சட்டப்பிரிவு சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

    இந்த புகார் மனுக்கள் மீது எதுபோன்று நடவடிக்கை எடுக்கலாம் என்பது பற்றி தேர்தல் ஆணையம் பரிசீலித்து வருவதாக கூறப்படுகிறது. எனவே கமலின் பிரசாரத்துக்கு தடைவிதிக்கப்படுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

    இந்த நிலையில் அரவக்குறிச்சி தொகுதியில் நேற்று கமல் தனது பிரசாரத்தை திடீரென ரத்து செய்தார். ‘இந்து தீவிரவாதி’ கருத்தால், பா.ஜனதா மற்றும் இந்து அமைப்பினர் மத்தியில் கமலுக்கு கடும் எதிர்ப்பு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாகவே கமலின் பிரசாரம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

    இது பற்றி மக்கள் நீதி மய்யம் கட்சியின் கரூர் மாவட்ட பொறுப்பாளர் புகழ் முருகன் கூறுகையில், வேலாயுதம்பாளையத்தில் கமல்ஹாசன் பங்கேற்க இருந்த பொதுக்கூட்டத்துக்கு தமிழக முதல்வர் வருகை, வைகோ பிரச்சாரம் போன்றவற்றால் அனுமதி கிடைக்கவில்லை. இதனால் பொதுக்கூட்டத்தை நாளை மறுநாள் 16-ந்தேதிக்கு ஒத்தி வைத்துள்ளோம் என்றார்.

    இந்து அமைப்புகள், பா.ஜ.க. எதிர்ப்பு ஆகியவற்றால் கமல்ஹாசனின் பொதுக்கூட்டத்துக்கு அனுமதி கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இருப்பினும் பொதுக்கூட்டத்துக்கு அனுமதி அளிப்பது தொடர்பாக தேர்தல் அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

    இதற்கிடையே நாளை மறுநாள் பொதுக்கூட்டத்துக்கு அனுமதி கேட்டு கமல் கட்சியினர் தேர்தல் அதிகாரிகளிடம் மனு கொடுக்க நேற்று சென்றனர். இரவு 11 மணி வரை காத்திருந்த அவர்களிடம், இன்று காலை வருமாறு அதிகாரிகள் தெரிவித்தனர். இதையடுத்து அவர்கள் திரும்பி சென்றனர்.

    நாளை மறுநாள் 16-ந்தேதி கமல்ஹாசன் அரவக்குறிச்சி தொகுதிக்குட்பட்ட தென்னிலை, பரமத்தி, நொய்யல் ஆகிய இடங்களில் திறந்த வேனில் நின்றவாறு பிரசாரம் செய்ய கமல் திட்டமிட்டுள்ளார். மாலையில் வேலாயுதம்பாளையத்தில் பொதுக்கூட்டத்தில் பேசவும் அவர் முடிவு செய்துள்ளார். இதற்கு முறையான அனுமதி கிடைக்குமா? என்பதுதான் கேள்விக்குறியாக உள்ளது.

    இதற்கிடையே சமூக வலைதளங்களில் கமல்ஹாசனை மிக கடுமையாக கேலியும், கிண்டலும செய்து நிறைய பேர் பதிவுகளை வெளியிட்டுள்ளனர்.

    இந்தியாவில் பா.ஜனதா, காங்கிரஸ் தவிர்த்து 3-வது அணி அமைய வாய்ப்பு இருப்பதாக எனக்கு தெரியவில்லை என்று தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் கூறி உள்ளார்.
    ஆலந்தூர்:

    தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் தூத்துக்குடி செல்வதற்கு முன் சென்னை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் 3வது அணி உருவாக்க தமிழகம் வரவில்லை. அவர் ஆலயங்களை வழிபட வந்தார். அவருடனான சந்திப்பு மரியாதை நிமித்தமானது.

    இந்தியாவில் பா.ஜனதா, காங்கிரஸ் தவிர்த்து 3-வது அணி அமைய வாய்ப்பு இருப்பதாக எனக்கு தெரியவில்லை. இருப்பினும் 23-ந் தேதி வாக்கு எண்ணிக்கைக்கு பிறகே தெரியவரும்.



    சந்திர சேகரராவ் வருகை எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்று தமிழிசை சொல்லி இருக்கிறார். அவர் வருகை தாக்கத்தை ஏற்படுத்தவில்லை, என்று தமிழிசை கூறியதில் ‘ க்’கை எடுத்துவிடுங்கள். அது தாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    உலக நாயகன் கமல்ஹாசன் தற்போது உளறல் நாயகனாக மாறி வருகிறார். ஒருநாள் பேச்சிலேயே டார்ச் லைட் பீஸ் ஆகி விட்டது என்று பா.ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறி உள்ளார்.
    திருப்பரங்குன்றம்:

    திருப்பரங்குன்றம் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து பா.ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தேர்தல் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:-

    திருப்பரங்குன்றத்தில் மக்கள் கொடுக்கும் வரவேற்பை பார்க்கும்போது அ.தி.மு.க.வின் வெற்றி உறுதியாகி விட்டது. அ.தி.மு.க. - பா.ஜனதா கூட்டணி வெற்றி பெறப் போவதை எண்ணி மு.க.ஸ்டாலின், கே.எஸ்.அழகிரி, கமல்ஹாசன் ஆகியோர் பதட்டத்தில் உள்ளனர். ஜெயலலிதா உயிருடன் இருந்திருந்தாலும் இதே கூட்டணியைத்தான் அமைத்திருப்பார்.

    சட்டசபையில் ஜெயலலிதாவை அவமதித்த தி.மு.க. தற்போது அவரது மரணம் குறித்து விசாரணை நடத்துவோம் என்று கூறுகிறார்கள். இதற்கு அவர்களுக்கு என்ன தகுதி இருக்கிறது.



    உலக நாயகன் கமல்ஹாசன் தற்போது உளறல் நாயகனாக மாறி வருகிறார். அரசியலில் கமல்ஹாசன் கத்துக்குட்டி. பிரிவினை பற்றி கமல் பிரசாரம் செய்வதாக பா.ஜனதா குற்றம் சாட்டிய நிலையில் அரவக்குறிச்சி தேர்தல் பிரசாரம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

    கமல்ஹாசன் இப்படி பேசுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும். இல்லையென்றால் பா.ஜனதா உங்களது பேச்சை நிறுத்தும். ஒருநாள் பேச்சிலேயே டார்ச் லைட் பீஸ் ஆகி விட்டது.

    ஒழுக்கமான காந்தியின் பேரன் என்று சொல்வதற்கு கமல்ஹாசனுக்கு எந்த தகுதியும் இல்லை. கமல்ஹாசனின் பிரசாரத்துக்கு தடை விதிக்க வேண்டும். அவரது கட்சியின் அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும்.

    கி.வீரமணி பிரசாரத்துக்கு வந்தால் தி.மு.க.வுக்கு கிடைக்க வேண்டிய ஓட்டும் கிடைக்காது. தமிழகத்தில் பா.ஜனதா - அ.தி.மு.க. கூட்டணியின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. மு.க.ஸ்டாலின் இரட்டை மனதுடன் இருக்கிறார். தேர்தல் முடிந்ததும் அரியணை ஏறலாம் என்று கனவு காண்கிறார். அவரது கனவு நனவாகப் போவதில்லை.

    மு.க.ஸ்டாலின் சந்திரசேகரராவை சந்தித்ததால், பா.ஜனதாவுக்கு எந்த பாதிப்பும் இல்லை. இந்தியாவில் 3 அல்ல எத்தனை அணிகள் வந்தாலும் பா.ஜனதாவின் வெற்றியை தடுக்க முடியாது

    மேற்கண்டவாறு அவர் பேசினார்.

    குறுக்கு வழியில் முதல்வராக மு.க.ஸ்டாலின் துடிக்கிறார் என்று துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

    திருப்பரங்குன்றம்:

    திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளராக முனியாண்டி போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தேர்தல் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:-

    காங்கிரஸ் - தி.மு.க. ஆட்சியில் தமிழகத்தின் பாரம்பரியமிக்க வீர விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்கப்பட்டது. அதனை நீக்கக் கோரி சென்னை மெரினா கடற்கரை உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் போராட்டம் நடந்தது.

    அப்போது முதல்- அமைச்சராக இருந்த நான் உடனே டெல்லிக்கு சென்று பிரதமர் மோடியை சந்தித்து பேசினேன். ஒரே நாளில் 4 துறைகளிடம் அனுமதி பெற்று திரும்பினேன்.


    தி.மு.க. ஆட்சியில் தடை விதிக்கப்பட்ட ஜல்லிக்கட்டு விழா கடந்த சில வருடங்களாக தங்குதடையின்றி நடைபெற்று வருகிறது.

    மக்கள் நலனில் அக்கறை இல்லாத தி.மு.க.வை மக்கள் ஒருபோதும் ஏற்க மாட்டார்கள். தி.மு.க. மீது மக்களுக்கு நம்பிக்கை இல்லை. குறுக்கு வழியில் மு.க. ஸ்டாலின் முதல்வராகத் துடிக்கிறார். அவரது எண்ணம் ஒருபோதும் நிறைவேறாது.

    பிரியாணி கடையில் சாப்பிட்டு விட்டு பணம் தர மறுக்கும் தி.மு.க. வினரின் அக்கிரமம் தற்போதும் தொடர்கிறது. மாமூல் கேட்கும் பழக்கம் இன்னும் அவர்களை விட்டு விலகவில்லை.

    காவிரி விவகாரம் உள்ளிட்டவற்றில் வெற்றி தேடித்தந்த அ.தி.மு.க. ஆட்சிக்கு மக்கள் ஆதரவு தந்து கொண்டிருக்கிறார்கள். அ.தி.மு.க. ஆட்சி எப்போதும் மக்களுக்கான ஆட்சி மக்களைப் பற்றி சிந்திக்கும் கட்சி அ.தி.மு.க.

    திருப்பரங்குன்றம் உள்பட 4 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வருகிற 19-ந்தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளர்களை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற செய்ய வேண்டுகிறேன். எஜமானர்களாகிய நீங்கள்தான் எங்களுக்கு நல்ல தீர்ப்பை தர வேண்டும்.

    தமிழகத்தில் எந்த பகுதியிலும் சாதி, மத கலவரங்கள் இல்லை. அ.தி.மு.க. ஆட்சியில்தான் தமிழகம் அமைதிப் பூங்காவாக திகழ்கிறது. எந்த காலத்திலும் அ.தி.மு.க.வை ஆட்டவோ, அசைக்கவோ முடியாது. புயல், பூகம்பம் வந்தாலும் அ.தி.மு.க.வை ஒன்றும் செய்ய முடியாது. தி.மு.க. ஆட்சியில் 5 ஆண்டு காலம் மின்வெட்டு இருந்தது. ஆனால் ஜெயலலிதா ஆட்சிக்கு வந்த 6 மாதத்தில் மிகை மின் மாநிலமாக மாறியது.

    மேற்கண்டவாறு அவர் பேசினார்

    ×