என் மலர்tooltip icon

    செய்திகள்

    புதிய பிரதமரை தேர்தலுக்கு பின் தேர்வு செய்யலாம்- ப.சிதம்பரம் கருத்து
    X

    புதிய பிரதமரை தேர்தலுக்கு பின் தேர்வு செய்யலாம்- ப.சிதம்பரம் கருத்து

    புதிய பிரதமரை தேர்தலுக்கு பின் தேர்வு செய்யலாம் என காங்கிரஸ் முன்னாள் நிதி மந்திரி ப.சிதம்பரம் கருத்து தெரிவித்துள்ளார்.
    புதுடெல்லி:

    பாராளுமன்ற தேர்தல் கடைசி கட்டத்தை எட்டியுள்ள நிலையில், நாட்டின் அடுத்த பிரதமர் யார்? என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே உள்ளது.

    பா.ஜனதா, காங்கிரஸ் ஆகிய இரு அணிகளுக்குமே தனிப் பெரும்பான்மை கிடைக்காது என்ற பேச்சு பரவலாக உள்ளது. இதனால் தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு, பல்வேறு மாநில தலைவர்களை ஒருங்கிணைத்து 3-வது அணியை ஆட்சி அமைக்க செய்வதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

    இதற்காக வருகிற 21-ந்தேதி டெல்லியில் எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டத்தை நடத்துவதற்கான முயற்சியிலும் அவர் இறங்கினார். ஆனால் இந்த கூட்டத்தில் பங்கேற்க திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி உள்ளிட்ட சில மாநில கட்சி தலைவர்கள் மறுத்து விட்டனர். மே.23-ந்தேதி ஓட்டு எண்ணிக்கை முடிந்த பிறகு பார்த்துக்கொள்ளலாம் என அவர்கள் கூறியதால் எதிர்க்கட்சிகளின் கூட்டம் தள்ளிப் போய் உள்ளது.

    இந்தநிலையில் காங்கிரஸ் முன்னாள் நிதி மந்திரி ப.சிதம்பரம் டெல்லியில் அளித்த பேட்டி ஒன்றில், புதிய பிரதமரை தேர்தலுக்கு பின் தேர்வு செய்யலாம் என கருத்து தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறியதாவது:-

    புதிய பிரதமர் யார் என்பது இப்போது பிரச்சனை இல்லை. பா.ஜனதாவை வீழ்த்துவது மட்டுமே இப்போதைய உடனடி வேலை. அதன்பிறகு தலைவர்கள் அமர்ந்து பேசி எல்லா கேள்விகளுக்கும் விடை தேடலாம். அடுத்த அரசை அமைப்பது குறித்தும் பேசலாம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ப.சிதம்பரத்தின் இந்த கருத்து எதிர்க்கட்சி தலைவர்களுடன் காங்கிரஸ் கட்சி இணக்கமாக இருப்பதற்கு சிக்னல் காட்டுவதுபோல இருப்பதாக கருதப்படுகிறது.
    Next Story
    ×