என் மலர்
தேர்தல் செய்திகள்
தமிழகத்தில் திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, சூலூர், ஒட்டப்பிடாரம் ஆகிய 4 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வருகிற 19-ந்தேதி பாராளுமன்ற தேர்தலில் 7-வது மற்றும் இறுதிக்கட்ட ஓட்டுப்பதிவுடன் நடக்கிறது.

பிரசாரம் ஓய்ந்ததை அடுத்து வெளியூர் நபர்கள் 4 தொகுதிகளில் இருந்து வெளியேற உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி வெளியூர் நிர்வாகிகள் வெளியேறி வருகிறார்கள்.
அரவக்குறிச்சி தொகுதியில் போலீஸ் குழுவினர் ஆங்காங்கே பிரிந்து சென்று இன்று மாலை 6 மணிக்கு மேல் தங்கும் விடுதிகள், திருமண மண்டபங்கள், ஓட்டல்கள், பண்ணை வீடு உள்ளிட்டவற்றில் விசாரணை நடத்துகின்றனர். அப்போது வெளி நபர்கள் யாரும் இருப்பின் அவர்களை உடனடியாக வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்படுகிறது. எனினும் தேர்தல் விதிகளை மீறி தொகுதிக்குள் இருக்கும் வெளிநபர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுத்து 2 ஆண்டு சிறை தண்டனை, அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து வழங்கப்படும் என போலீஸ் துறையினர் தெரிவிக்கின்றனர்.
பணப்பட்டுவாடா செய்ய முயற்சிக்க கூடும் என்பதால் அதை தடுக்க பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பில் உள்ளனர்.
திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, சூலூர், ஒட்டப்பிடாரம் ஆகிய 4 தொகுதிகளில் 137 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். 19-ந்தேதி காலை 7 மணி முதல் மாலை 6 மணிவரை ஓட்டுப்பதிவு நடக்கிறது.



மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் டுவிட்டரில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.
‘நான் பரப்புரை செய்ய எனக்கு ஒரு ஊரில் அனுமதி மறுக்கப்பட்டது. இதையடுத்து என் பரப்புரை தமிழ்நாடு காணுவதற்கு விஞ்ஞானத்திற்கு நன்றி .
நான் பரப்புரை செய்ய எனக்கு ஒரு ஊரில் அனுமதி மறுக்கப்பட்டது. விஞ்ஞானத்திற்கு நன்றி. இதோ என் பரப்புரை தமிழ்நாடு காண.... pic.twitter.com/MsEsNQbhLB
— Kamal Haasan (@ikamalhaasan) May 17, 2019
தூத்துக்குடி:
ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் அ.தி.மு.க. வேட்பாளர் மோகனை ஆதரித்து சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் நேற்று மாலையில் பேரூரணி, கூட்டாம்புளி, குலையன்கரிசல், ஸ்பிக்நகர், மாப்பிள்ளையூரணி, சிலுவைப்பட்டி மற்றும் தாளமுத்துநகர் ஆகிய பகுதிகளில் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் திரண்டு இருந்த மக்கள் மத்தியில் கூறியதாவது:-
ஓட்டப்பிடாரம் வந்ததும் நினைவிற்கு வருவது வீரபாண்டிய கட்டபொம்மன், வீரன் சுந்தரலிங்கம், வ.உ.சி., வாஞ்சிநாதன் ஆகியோர் தான். வீரம் நிறைந்த மண் ஓட்டப்பிடாரம். அந்த மண்ணில் நின்று வேட்பாளர் மோகனுக்கு வாக்கு கேட்கிறேன். கடந்த 2011-ம் ஆண்டு ஜெயலலிதா கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றி சிறப்பாக செயல்பட்டார். அவர் இல்லாத இந்த தேர்தலை சந்திப்பது ஒரு வருத்தம் தான். அவர் வழியில் தற்போது முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சிறப்பான ஆட்சி செய்து வருகிறார். மக்களுக்கான முன்னேற்ற திட்டங்களை செயல்படுத்தி ஜெயலலிதா பாதையில் பயணிக்கிறார். தமிழகத்தில் சிறந்த ஆட்சி நடந்து வருகிறது.
அவர் வழியில் தற்போது முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சிறப்பான ஆட்சி செய்து வருகிறார். எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு பதவி மீது மட்டுமே மோகம். மக்களுக்கு சேவை செய்தால் மட்டுமே தலைவர் ஆக முடியும். அ.தி.மு.க.வினருக்கு மக்கள் மீது தான் மோகம். மு.க.ஸ்டாலின் குறுக்கு வழியில் முதல்-அமைச்சர் ஆக நினைக்கிறார். அது நடக்காது. அதற்கு அவர் தகுதியற்றவர். அ.தி.மு.க. வேட்பாளர் வெற்றி பெறுவது உறுதி. 4 தொகுதி இடைத்தேர்தலிலும் அ.தி.மு.க. மக்கள் ஆதரவோடு வெற்றி பெறும். அ.தி.மு.க.வில் சாதாரண தொண்டனும் முதல்வரக முடியும். மாற்றுக்கட்சியில் அதற்கான வாய்ப்பு கிடையாது.
இவ்வாறு அவர் பேசினார்.
திருப்பரங்குன்றம்:
திருப்பரங்குன்றம் தொகுதி இடைத்தேர்தலில் அ.ம.மு.க. வேட்பாளரை ஆதரித்து அக்கட்சியின் பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் நாகமலை புதுக்கோட்டை பகுதியில் தேர்தல் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:-
ஆர்.கே.நகர் மக்கள் என்னை வெற்றி பெறச் செய்து தமிழகம் முழுவதும் துரோகிகளை வீழ்த்த அனுப்பியுள்ளனர்.
ஓ.பன்னீர்செல்வம் துரோக சிந்தனையுடன் செயல்பட்டதால் அவரை பதவியில் இருந்து விலக்கி எடப்பாடி பழனிசாமியை முதல்-அமைச்சராக்கினார் சசிகலா. நான் நினைத்திருந்தால் அன்றே முதல்வராகி இருக்கலாம்.
22 தொகுதி இடைத் தேர்தலிலும் அ.ம.மு.க. அமோக வெற்றி பெறும் என்பதை தெரிந்து கொண்ட அ.தி.மு.க.வினர் 3 எம்.எல்.ஏ.க்களை தகுதியிழப்பு செய்ய முயற்சிக்கின்றனர். வருகிற 23-ந் தேதி துரோகிகள் வீழ்ந்து விடுவார்கள்.
சசிகலா முதல்-அமைச்சராக வேண்டும் என்று முதலில் கூறிய ஆர்.பி.உதயகுமார் தற்போது சசிகலா சிறையில் உள்ளதால் அவரைப்பற்றி பேச வேண்டாம் என்று கூறுகிறார். மந்திரவாதி கே.டி. ராஜேந்திரபாலாஜி அடுத்த தேர்தலில் டெபாசிட் இழப்பார். இவர்கள் எல்லாம் கசாப்புக்கடைக்காரர்கள் போல செயல்படுகின்றனர்.
ஆர்.கே.நகரில் தி.மு.க. டெபாசிட் இழந்தது. திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் துரோகிகள், விரோதிகளான அ.தி.மு.க. மற்றும் தி.மு.க.வை டெபாசிட் இழக்கச் செய்ய வேண்டும்.
துரோகத்தை ராஜதந்திரம் என்கிறார்கள். இதை எங்காவது கேள்விப்பட்டதுண்டா? பல அமைச்சர்கள் ஊருக்குள் செல்ல முடியாத நிலையில் உள்ளனர். அவர்களோடு நாம் எப்படி சேர முடியும். துரோகிகளை கூண்டோடு தோற்கடிக்க வேண்டும். உண்மையான ஜெயலலிதா ஆட்சி அமைய, மக்களாட்சி அமைய அ.ம.மு.க.வை மக்கள் அமோக வெற்றி பெறச் செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
சூலூர்:
சூலூர் சட்டமன்ற இடைத் தேர்தலில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர் பொங்கலூர் பழனிசாமியை ஆதரித்து தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் நேற்று 2-வது கட்ட பிரசாரம் செய்தார். முதலிபாளையம், முத்து கவுண்டன் புதூர், குரும்ப பாளையம்,கரவழி மாதப்பூர், இருகூர் உள்ளிட்ட பகுதிகளில் மு.க.ஸ்டாலின் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது-
தேர்தலுக்காக மக்களை சந்திக்கும் கட்சி தி.மு.க. அல்ல. ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் மக்களுக்காக பணியாற்றும் கட்சி. கைத்தறி நெசவாளர்களுக்கும், தி.மு.க.வுக்கும் என்றும் தொப்புள் கொடி உறவு உள்ளது. அந்த உறவோடு தான் உங்களை பார்க்கிறோம்.
ஆட்சியை எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என்பது தான் இருப்பவர்களுடைய கவலையாக இருக்கிறது. இந்த ஆட்சி ஒரு மைனாரிட்டி ஆட்சியாக உள்ளது. அதனை தாங்கி பிடிப்பது மோடி அரசு.
மத்திய அரசு எது சொன்னாலும் கூனி குறுகி கேட்கும் ஆட்சியாக முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் ஆட்சி உள்ளது.
ஜி.எஸ்.டி.யால் வணிகர்களுக்கும் தொழில் நிறுவனங்களுக்கும், மக்களுக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தி.மு.க. ஆட்சி அமைந்ததும் ஜி.எஸ்.டி. பிரச்சினைக்கு தீர்வு காணப்படும்.
கைத்தறி தொழில் நவீனமயமாக்கப்படும். கைத்தறிக்கு தேவையான உபகரணங்கள் மானிய விலையில் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
நெசவாளர்களுக்கு கூட்டுறவு சங்கம் ஏற்படுத்தப்பட்டு ஓய்வூதியம் வழங்கப்படும். கைத்தறி ரகங்களை விற்க கண்காட்சி அரங்குகள் ஏற்படுத்தப்படும்.
மற்ற கட்சிகள் பிரசாரத்திற்கு வருவார்கள். வென்றால் அதை செய்வோம். இதை செய்வோம் என்பார்கள். வென்றதும் எல்லாவற்றையும் மறந்து விடுவார்கள்.

இதற்கு உதாரணம் பிரதமர் மோடி. ஆண்டுக்கு 2 கோடி பேர் வீதம் 5 ஆண்டுகளில் 10 கோடி பேருக்கு வேலை கொடுப்போம் என்றார். இது வரை ஒருவருக்கு கூட வேலை கிடைக்கவில்லை.
23-ந் தேதிக்கு பிறகு தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படும்.22 தொகுதி இடைத் தேர்தல்களிலும் வெற்றி பெற்றால் 119 இடங்களை பெற்று நாம் ஆட்சி அமைப்போம். தி.மு.க. ஆட்சி அமைத்தவுடன் மத்தியிலும், மாநிலத்திலும் வேலை வாய்ப்புகளில் தமிழர்களுக்கு முன்னுரிமை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
தி.மு.க. ஆட்சிக்கு வருவதை தடுக்க 3 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்ய சபாநாயகர் நோட்டீஸ் அனுப்பினார். அதனை எதிர்த்து நான் நோட்டீஸ் அனுப்பினேன். இவ் விவகாரத்தில் 3 எம்.எல்.ஏ.க்கள் பெற்ற தடை உத்தரவை எதிர்த்து நீதிமன்ற விடுமுறை காரணமாக அ.தி.மு.க. மேல் முறையீடு செய்ய முடியாது.
இவ்வாறு அவர் பேசினார்.

அதன்படி இன்று தேர்தல் ஆணையம் உயர்நீதிமன்றத்தில் அறிக்கை ஒன்றை தாக்கல் செய்தது. அதில் “தபால் வாக்குகள் அளிக்க 4 லட்சத்து 35 ஆயிரத்து மூன்று பேருக்கு விண்ணப்பங்கள் வழங்கப்பட்டன. அதில் 4 லட்சத்து 10 ஆயிரத்து 200 பேர் வாக்களித்தனர்.
12915 பேரின் வாக்குகள் விண்ணப்பங்களை முறையாக பூர்த்தி செய்யாததாலும், அவர்களுடைய பிறந்த நாள் உள்ளிட்ட சில தகவல்கள் எங்களிடம் உள்ள ஆவணங்களுடன் ஒத்துப்போகாததாலும் நிராகரிக்கப்பட்டன. 39, 7291 விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன” என்று குறிப்பிட்டிருந்தது.
அதன்பின் தபால் வாக்குகள் தொடர்பாக குழப்பம் ஏற்படுவதை தடுக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திற்கு உயர்நீதிமன்றம் அறிவுரை வழங்கியது.
தமிழக காங்கிரஸ் ஊடகத்துறை தலைவர் கோபண்ணா, மூத்த வக்கீல்கள் சூரியபிரகாஷ், எஸ்.கே. நவாஸ் ஆகியோர் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகுவிடம் ஒரு புகார் மனு கொடுத்துள்ளனர். அதில் கூறியிருப்பதாவது:-
தேனி பாராளுமன்றத் தொகுதியில் மே 19-ம் தேதி நடைபெறவிருக்கும் மறுவாக்குப்பதிவில் பயன்படுத்தப்படவிருக்கும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், அ.திமு.க. வேட்பாளருக்குச் சாதகமாக திருத்தப்பட்டிருப்பதாக நாங்கள் உறுதியாக நம்புகிறோம். அதனால், இந்த மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களோடு இணைக்கப்பட்டிருக்கும் ஒப்புகை சீட்டு இயந்திரத்தில் பதிவாகியிருக்கும் அத்தனை துண்டுச் சீட்டுகளையும் எண்ண வேண்டும் என்று தேர்தல் ஆணையத்தை கோருகிறோம்.
கடந்த ஏப்ரல் 18 அன்று வாக்குப்பதிவு மையங்களில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை மாற்றுவதற்கு வசதியாக, கோவையில் இருந்து சட்டவிரோதமாக தேனிக்கு கொண்டு வரப்பட்ட 50 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் தொடர்பாக, காங்கிரசும், தி.மு.க.வும் ஏற்கனவே, தலைமை தேர்தல் அதிகாரியிடம் எழுத்துப்பூர்வமான புகார்களை கொடுத்துள்ளன. இந்தப் புகார்களை பெற்றுக்கொண்ட தலைமைத் தேர்தல் அதிகாரி, கோவையில் இருந்து முறைகேடாக கொண்டு வரப்பட்ட 50 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் திருப்பி அனுப்பிவைக்கப்படும் என்றும் தேர்தல் நடைமுறையில் எந்த குறைபாடும் இராது, அப்படி இருக்குமானால், அது தடுக்கப்படும் என்று உறுதி அளித்தார்.
ஆனால், மீண்டும் 50 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை தேர்தல் அலுவலர்கள் எடுத்து வந்துள்ளனர் என்பதை அறிந்து நாங்கள் அதிர்ச்சியும் ஆச்சரியமும் அடைந்துள்ளோம். தற்போதுள்ள இயந்திரங்களுக்கு பதிலாக புதிய இயந்திரங்கள் பயன்படுத்தப்படும் என்று தெரிகிறது. இது தமிழ்நாட்டின் துணை முதல்- அமைச்சரின் மகனான, அ.திமு.க. வேட்பாளருக்கு சாதகமாக பயன்படுத்தப்பட வேண்டும் என்ற சட்ட விரோத உள்நோக்கத்துடனேயே செய்யப்பட்டுள்ளது.
தேனி பாராளுமன்ற தொகுதியில் இருக்கும் தேர்தல் அலுவலர் அ.தி.மு.க. தேர்தல் முகவர் போலவே செயல்படுவதோடு, தனது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து வருகிறார். இதன் மூலம், காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக வாக்களித்த மக்களின் வாக்குகளைத் திருப்பி, முறைகேடுகள் மூலம் காங்கிரஸ் வேட்பாளரின் வெற்றியைத் தட்டிப்பறிக்க நினைக்கிறார்.
அதனால் கோவையில் இருந்தும், திருவள்ளூரில் இருந்தும் தேனிக்கு புதிதாக கொண்டுவரப்பட்ட 70 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை உடனடியாக நீக்குவதோடு, மக்களுடைய வாக்குகளைத் திருத்த நினைக்கும் அ.தி.மு.க. வேட்பாளரின் சட்டவிரோத நடவடிக்கைகளை தடுத்து நிறுத்தி, நியாயமான தேர்தலை தேனியில் நடத்தி முடிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.
அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், சூலூர் மற்றும் ஒட்டப்பிடாரம் ஆகிய நான்கு தொகுதிகளுக்கு நாளை மறுநாள் இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது.
இதுதொடர்பாக அதிமுக-வின் ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம், துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் இணைந்து அறிக்கை மூலம் வாக்காளர்களுக்கு ஒரு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:-
நல்லதை எந்நாளும் போற்றி அல்லதை அறவே அகற்றுகின்ற அரசியல் ஞானம் மிகுந்த அன்பார்ந்த வாக்காளப் பெருமக்களுக்கு பணிவார்ந்த வணக்கங்களை தெரிவித்துக் கொள்கிறோம். புரட்சித் தலைவி அம்மா அவர்களின் வழியில், இவ்வரசு பல்வேறு சாதனைகள் செய்து வருகிறது.
‘மக்கள் தொண்டே மகேசன் தொண்டு’ என்ற பேரறிஞர் அண்ணா அவர்கள் காட்டிய அன்புப்பாதையில், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர், புரட்சித் தலைவி அம்மா ஆகியோர் வழியில் ‘எல்லோரும் எல்லாமும் பெற வேண்டும் - இங்கு இல்லாமை இல்லாத நிலை வேண்டும்’ என்ற நல்ல நோக்கத்திற்காக செயல்படும் இந்த அரசு மெருகோடு, மிடுக்கோடு தொடர்ந்து நடைபெற, வருகின்ற மே 19 அன்று நடைபெறும் நான்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில், உங்களின் பொன்னான ஆதரவை ‘இரட்டை இலை’ சின்னத்தில் வழங்கி, கழக வேட்பாளர்களை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச்செய்து, அதன் மூலம் நயவஞ்சக நரி சூழ்ச்சிகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து, இந்த நல்லாட்சியின் மீது தமிழக மக்கள் கொண்டிருக்கும் பற்றினையும், பாசத்தினையும் உறுதிபட இந்நாட்டுக்கு தெளிவுபடுத்த வேண்டுமென, வாக்காளப் பெருமக்களாகிய உங்களையெல்லாம் அன்போடு வேண்டி விரும்பி கேட்டுக்கொள்கிறோம்.
இவ்வாறு அந்த அறிக்கையில் இருவரும் தெரிவித்துள்ளனர்.






