search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    4 தொகுதி இடைத்தேர்தலில் பிரசாரம் ஓய்ந்தது
    X

    4 தொகுதி இடைத்தேர்தலில் பிரசாரம் ஓய்ந்தது

    அரவக்குறிச்சி, சூலூர், திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம் ஆகிய 4 தொகுதி இடைத்தேர்தல் பிரசாரம் இன்று மாலையுடன் ஓய்ந்தது.
    சென்னை:

    தமிழகத்தில் திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, சூலூர், ஒட்டப்பிடாரம் ஆகிய 4 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வருகிற 19-ந்தேதி பாராளுமன்ற தேர்தலில் 7-வது மற்றும் இறுதிக்கட்ட ஓட்டுப்பதிவுடன் நடக்கிறது.

    4 தொகுதிகளிலும் அரசியல் கட்சி தலைவர்கள் வேட்பாளர்கள், தொண்டர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், அமைச்சர்கள், தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன, மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், அ.ம.மு.க. பொதுச் செயலாளர் தினகரன், தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் உள்ளிட்ட தலைவர்கள் பிரசாரம் மேற்கொண்டனர்.

    இந்த நிலையில் 4 தொகுதிகளிலும் அனல் பறந்த பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் ஓய்ந்தது. இதையடுத்து இன்று காலை முதல் அரசியல் கட்சியினர் இறுதி பிரசாரத்தில் ஈடுபட்டனர்.


    பிரதான கட்சியினர் தங்களது தகவல் தொழில் நுட்ப அணி ஆலோசனை மூலம் வேட்பாளரை முன்னிலைப்படுத்தி சிறு குறும் படங்களாகவும், எதிர் தரப்பினரின் குறைகளை சுட்டி காட்டியும் வீடியோ தயாரித்து யூடியூப், முகப்புத்தகம், வாட்ஸ்- அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் உலவ விட்டு ஆதரவு திரட்டினர். இதன் உச்சக்கட்டமாக தற்போது, கரூர் மாவட்டம் முழுவதும் மக்களின் செல்போன் எண்ணுக்கு அழைப்பு வந்தது. சம்பந்தப்பட்ட நபர் அந்த அழைப்பினை ஏற்றதும், மறுமுனையில் நான் உங்கள் வேட்பாளர் பேசுகிறேன், எனக்கு ஆதரவு தாருங்கள் என்கிற ஒலிப்பதிவு சில நிமிடங்கள் வரை கேட்கிறது. பின்னர் அந்த இணைப்பு துண்டிக்கப்படுகிறது.

    பிரசாரம் ஓய்ந்ததை அடுத்து வெளியூர் நபர்கள் 4 தொகுதிகளில் இருந்து வெளியேற உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி வெளியூர் நிர்வாகிகள் வெளியேறி வருகிறார்கள்.

    அரவக்குறிச்சி தொகுதியில் போலீஸ் குழுவினர் ஆங்காங்கே பிரிந்து சென்று இன்று மாலை 6 மணிக்கு மேல் தங்கும் விடுதிகள், திருமண மண்டபங்கள், ஓட்டல்கள், பண்ணை வீடு உள்ளிட்டவற்றில் விசாரணை நடத்துகின்றனர். அப்போது வெளி நபர்கள் யாரும் இருப்பின் அவர்களை உடனடியாக வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்படுகிறது. எனினும் தேர்தல் விதிகளை மீறி தொகுதிக்குள் இருக்கும் வெளிநபர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுத்து 2 ஆண்டு சிறை தண்டனை, அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து வழங்கப்படும் என போலீஸ் துறையினர் தெரிவிக்கின்றனர்.

    பணப்பட்டுவாடா செய்ய முயற்சிக்க கூடும் என்பதால் அதை தடுக்க பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பில் உள்ளனர்.

    திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, சூலூர், ஒட்டப்பிடாரம் ஆகிய 4 தொகுதிகளில் 137 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். 19-ந்தேதி காலை 7 மணி முதல் மாலை 6 மணிவரை ஓட்டுப்பதிவு நடக்கிறது.
    Next Story
    ×