என் மலர்tooltip icon

    தேர்தல் செய்திகள்

    மோடி மீண்டும் பிரதமராக முடியாது என்பதை உறுதியாக தெரிவித்துக் கொள்கிறேன். மதசார்பற்ற கட்சிகள் இணைந்து ஆட்சி அமைப்போம் என்று ராகுல் காந்தி கூறியுள்ளார்.

    புதுடெல்லி:

    பாராளுமன்ற தேர்தலில் இறுதி கட்ட ஓட்டுப்பதிவு நாளை(ஞாயிற்றுக் கிழமை) நடைபெறுகிறது. இதைத்தொடர்ந்து வருகிற 23-ந் தேதி(வியாழக்கிழமை) ஓட்டு எண்ணிக்கை நடக்கிறது. அன்றைய தினமே காங்கிரஸ் சார்பில் சோனியா காந்தி தலைமையில் டெல்லியில் ஒரு கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் பாரதீய ஜனதா கூட்டணியில் இல்லாத கட்சிகள் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி டெல்லியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

    மோடியைப் போல அல்லாமல் எங்கள் கட்சியில் அனுபவம் வாய்ந்த மூத்த தலைவர்களான சோனியா காந்தி, மன்மோகன் சிங் உள்ளிட்ட தலைவர்கள் உள்ளனர். எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைப்பது பற்றி இப்போது பதில் கூற விரும்பவில்லை.

    தேர்தலில் மக்கள் என்ன முடிவு அளிப்பார்கள் என்பதை நான் முன்னதாகவே கணித்துக் கூறவும் விரும்பவில்லை. தேர்தலில் யார் வெற்றி பெற வேண்டும் எனபதை மக்களே முடிவு செய்யட்டும். அவர்கள் யாரை தேர்வு செய்துள்ளார்கள் என்பது தேர்தல் முடிவு வெளியாகும் மே 23-ந் தேதி துல்லியமாக தெரிந்து விடும்.

    மோடி மீண்டும் பிரதமராக முடியாது என்பதை உறுதியாக தெரிவித்துக் கொள்கிறேன். இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி அதிக இடங்களில் வெற்றி பெற்று மிகப்பெரிய கட்சியாக இருக்கும்.


    பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி, திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி, சமாஜ்வாடி கட்சிதலைவர் முலாயம்சிங் யாதவ் ஆகியோர் பாரதீய ஜனதா கட்சிக்கு ஆதரவளிக்க மாட்டார்கள். அவர்களின் கருத்துகள் எங்களுடன் ஒத்துப் போகிறது. எனவே மதசார்பற்ற கட்சிகள் தான் இந்த தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும்.

    பிரதமர் மோடி தனது தவறுகளில் இருந்து தப்பிப்பதற்கான வாய்ப்புகளில் 90 சதவீதத்தை காங்கிரஸ் கட்சி முறியடித்து விட்டது.

    தேர்தல் பிரசாரத்தில் எதிர் கட்சிகள் மீது தொடர்ந்து அவதூறு பேசிய தன் மூலம் மீதமுள்ள 10 சதவீத வாய்ப்புகளை மோடியே முறியடித்து விட்டார்.

    ரபேல் போர் விமான ஒப்பந்தம் தொடர்பாக நேருக்கு நேர் விவாதம் நடத்த வருமாறு நான் விடுத்த அழைப்பை மோடி ஏற்கவில்லை. 5 ஆண்டுகாலம் பிரதமராக இருந்த அவர், இதுவரை ஒரு முறை கூட செய்தியாளர்கள் சந்திப்பை நடத்தியது இல்லை.

    ஆனால் தேர்தல் பிரசாரம் முடிவடைந்த பிறகு திடீரென பத்திரிகையாளர்களை சந்திக்கிறார். அதிலும் கூட செய்தியாளர்களின் கேள்விகளுக்கு முறையாக பதில் அளிப்பதை அவர் தவிர்த்து விட்டார்.

    பிரதமர் மோடியும், பா.ஜனதா தேசிய தலைவர் அமித்ஷாவும் என்ன தான் தத்துவங்களை பேசினாலும், அவை காந்தியின் தத்துவமாகி விடாது.

    தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் இந்த தேர்தலில் முறையாக இல்லை. பிரதமர் மோடியின் பிரசார அட்டவணையின் அடிப்படையிலேயே தேர்தல் ஆணையம் மேற்கு வங்கத்தில் முன்னதாக பிரசாரத்தை முடித்துக் கொள்ள வேண்டும் என்ற முடிவை எடுத்தது.

    ஒரு மாநிலத்தில் பிரச்சினை என்று கூறி தேர்தல் பிரசாரத்தை முன்னதாக முடிக்க நினைத்தால் அதனை உடனடியாக அமல்படுத்தி இருக்க வேண்டும்.

    ஆனால் மேற்கு வங்கத்தில் மோடியின் பிரசாரத்துக்கு பிறகு தான் ஒட்டு மொத்த பிரசாரத்தையும் நிறுத்துவோம் என்று தேர்தல் ஆணையம் கூறியதை எவ்வாறு ஏற்க முடியும்?

    இவ்வாறு அவர் கூறினார்.

    ஒட்டப்பிடாரம் தொகுதியில் 143 வாக்குச்சாவடிகளில் வெப்-கேமரா மூலம் கண்காணிக்கப்படுகிறது.
    ஒட்டப்பிடாரம்:

    ஒட்டப்பிடாரம் சட்ட மன்ற தொகுதியில் பொதுமக்கள் வாக்களிக்க 257 பூத்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பூத்கள் 20 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இங்கு ஏற்படுத்தப்பட்டுள்ள 257 வாக்குச்சாவடிகளிலும் மத்திய அரசின் ஊழியர்களை நுண்பார்வையாளர்களாக நியமித்துள்ளனர். இதையடுத்து டெல்லி உள்ளிட்ட எந்த இடத்தில் இருந்தும் வாக்குப்பதிவை கண்காணிக்கும் வகையில் இதில் 143 வாக்குச்சாவடிகளில் வெப்-கேமரா பொருத்தப்பட்டுள்ளது.

    மொத்தம் களத்தில் 15 வேட்பாளர்கள் உள்ளதால் ஒரு வாக்குப்பதிவு எந்திரங்கள் மட்டுமே பயன் படுத்தப்படுகிறது. மேலும் யாருக்கு வாக்களித்தோம் என்பதை உறுதிபடுத்த ஒரு வி.வி.பாட் எந்திரங்களும் வைக்கப்படுகிறது. 257 வாக்குச் சாவடிகளிலும் மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க வசதியாக ஒரு வீல் சேர் உள்ளது. வாக்குப்பதிவை முன்னிட்டு தொகுதி முழுவதும் தீவிர சோதனை நடைபெற்று வருகிறது.

    பதற்றமான வாக்குச்சாவடிகள் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும் 3 மத்திய கம்பெனி துணை ராணுவத்தினர் வரவழைக்கப்பட்டுள்ளனர். ஓட்டப்பிடாரம் யூனியன் அலுவலகத்தில் இருந்து பலத்த பாதுகாப்புடன் வாக்குப்பதிவு எந்திரங்கள் மற்றும் வி.வி.பாட் எந்திரங்கள் அந்தந்த வாக்குப்பதிவு மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டது.

    ஐந்து ஆண்டுகளில் முதன்முறையாக பத்திரிகையாளர்களை பிரதமர் மோடி நேருக்குநேர் சந்தித்தது ‘மன் கீ பாத்’தின் கடைசி எபிசோடு போன்று இருந்தது என அகிலேஷ் யாதவ் குற்றஞ்சாட்டியுள்ளார்.
    பாராளுமன்ற தேர்தலுக்கான கடைசி கட்ட தேர்தல் நாளை நடக்கிறது. இதற்கான பிரசாரம் நேற்று மாலையுடன் ஓய்ந்தது. இத்துடன் ஒட்டுமொத்த தேர்தல் பிரசாரமும் ஓய்ந்தது. அதன்பின் பிரதமர் மோடி பத்திரிகையாளர்களை சந்தித்தார்.

    அவர் பிரதமராக பதவி ஏற்றபின் சந்திக்கும் முதல் பத்திரிகையாளர் சந்திப்பு இதுதான். கடைசி நேரத்திலாவது பத்திரிகையாளர்களை சந்தித்ததற்கு காங்கிரஸ் தலைவர் பாராட்டு தெரிவித்தார். ஆனால், அமித் ஷா நடத்தும் பத்திரிகையாளர் சந்திப்பு என்பதால் கேள்விகளுக்கு பதில் அளிக்கமாட்டேன் என்று மோடி தெரிவித்தார்.



    இந்நிலையில் சமாஜ்வாடி கட்சித் தலைவரான அகிலேஷ் யாதவ் குற்றஞ்சாட்டியுள்ளார். ‘‘மோடி ஒவ்வொரு மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமை ‘மன் கீ பாத்’ என்ற ரேடியோ நிகழ்ச்சியின் மூலம் மக்களுக்கு உரையாற்றுவார். அந்த நிகழ்ச்சியின் கடைசி எபிசோடை டிவி மூலம் நிகழ்த்தியது போல் இருந்தது.

    பத்திரிகையாளர்கள் கேள்வி கேட்க முடியாமல் அமைதியாக இருக்கும் நிலையே ஏற்பட்டது. இது பாஜக-வின் பிரியாவிடைக்கான (Farewell) பத்திரிகையாளர் சந்திப்பு’’ என்று அகிலேஷ் தெரிவித்துள்ளார்.
    பஞ்சாப் மாநிலம் குர்தாஸ்பூர் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் சுனில் குமார் ஜாக்கர் தன் மனைவி பெயரில் சுவிட்சர்லாந்து வங்கியில் ரூ.7 கோடியே 37 லட்சம் டெபாசிட் செய்திருப்பதாக பிரமாண பத்திரத்தில் குறிப்பிட்டுள்ளார்.
    குர்தாஸ்பூர்:

    பஞ்சாப் மாநிலத்தில் உள்ள மொத்தம் 13 தொகுதிகளிலும் நாளை (ஞாயிற்றுக்கிழமை) வாக்குப்பதிவு நடக்கிறது. அவற்றில் ஒன்றான குர்தாஸ்பூர் தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளராக பாராளுமன்ற முன்னாள் சபாநாயகர் பல்ராம் ஜாக்கரின் மகன் சுனில் குமார் ஜாக்கர் போட்டியிடுகிறார். அவர் தனது பிரமாண பத்திரத்தில் சொத்து விவரங்களை குறிப்பிட்டுள்ளார்.



    அதில், தனக்கு ரூ.2 கோடியே 88 லட்சம் மதிப்புள்ள அசையா சொத்துகளும், ரூ.1 கோடியே 53 லட்சம் மதிப்புள்ள அசையும் சொத்துகளும் இருப்பதாக கூறியுள்ளார். தன் மனைவி சில்வியா பெயரில் சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள வங்கியில் ரூ.7 கோடியே 37 லட்சம் டெபாசிட் செய்திருப்பதாகவும் கூறியுள்ளார்.

    23-ந் தேதிக்கு பிறகு எடப்பாடி பழனிசாமி ஆட்சி தானாகவே கவிழும் என அரவக்குறிச்சியில் நடந்த இறுதிக்கட்ட தேர்தல் பிரசாரத்தில் திமுக தலைவர் முக ஸ்டாலின் பேசினார்.
    அரவக்குறிச்சி:

    கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க. சார்பில் போட்டியிடும் வி.செந்தில்பாலாஜியை ஆதரித்து தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று இறுதிக்கட்ட பிரசாரத்தில் ஈடுபட்டார். தொகுதிக்குட்பட்ட தடாகோவில், வாவிகனம், ஈசநத்தம், இந்திரா நகர், தென்னிலை, பரமத்தி, சின்னதாராபுரம் ஆகிய இடங்களில் திறந்த வேனில் நின்றபடி தி.மு.க. வேட்பாளருக்கு வாக்கு கேட்டு பேசினார்.

    அப்போது அவர் பேசியதாவது:-

    மோடியின் எடுபிடியாக இருக்கும் எடப்பாடி ஆட்சிக்கும் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். அதற்கு வருகிற 19-ந் தேதி உதய சூரியனுக்கு வாக்களிக்க வேண்டும். ஆகவே இந்த ஆட்சி கவிழக்கூடிய சூழலுக்கு வந்துவிட்டது. மே 23-ந் தேதி வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகு மோடிக்கு முடிவு கட்டப்படுவதோடு, எடப்பாடி ஆட்சியும் தானாகவே கவிழ்ந்துவிடும் என்பது நிச்சயமாகிவிட்டது.

    ஆனால் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஊர் ஊராக சென்று மேற்கொள்கிற பிரசாரங்களில் எல்லாம், எனது ஆட்சியை கவிழ்க்க ஸ்டாலின் முயற்சிக்கிறார் என தொடர்ந்து பேசி வருகிறார். ஆட்சியை கவிழ்க்க வேண்டிய அவசியம் எனக்கில்லை. அது தானாகவே கவிழப்போவதில் எவ்வித சந்தேகமும் இல்லை. அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், சூலூர், ஓட்டப்பிடாரம் ஆகிய 4 இடைத்தேர்தலிலும், ஏற்கனவே நடந்து முடிந்த 18 சட்டமன்ற இடைத்தேர்தலிலும் தி.மு.க. வெற்றி பெறுவது உறுதி.

    சபாநாயகர், முதல்-அமைச்சர் உள்ளிட்டோர் திட்டமிட்டு சதி செய்து, 3 எம்.எல்.ஏ.க்கள் பதவியை பறித்து விடலாம் என ஒரு நோட்டீஸ் கொடுத்தனர். அது கொடுக்கப்பட்ட அரை மணி நேரத்தில், சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரப்படும் என நான் ஒரு நோட்டீஸ் அனுப்பினேன். இது அரசியல் ராஜதந்திரம். ஏனெனில் கலைஞரின் மகன் நான். அவரது ராஜதந்திரத்தில் 5 சதவீதமாவது எனக்கிருக்காதா? இந்த நிலையில் தான் சபாநாயகர் எந்த நடவடிக்கையும் எடுக்கக்கூடாது என நீதிமன்றம் தடை போட்டது.

    சர்வாதிகாரத்தை பயன்படுத்தி இந்த ஆட்சி செயல்படலாம். மத்தியில் மோடி இருந்தாலாவது ஆட்சியை காப்பாற்றுவார். ஆனால் அவரே வீட்டுக்கு செல்வது உறுதி. மேலும் தற்போது கோர்ட்டுக்கு கோடைகால விடுமுறை என்பதால் அப்பீலுக்கும் செல்ல முடியாது. எனவே மே 23-ல் ஆட்சி மாற்றம் ஏற்படுவது உறுதி.

    எல்லா துறைகளையும் சேர்த்து கண்காணிப்பது தான் முதல்-அமைச்சரின் பொறுப்பு. இதே தமிழ்நாட்டில் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா மற்றும் பெருந்தலைவர் காமராஜர், அண்ணா, கருணாநிதி, பக்தவச்சலம் உள்ளிட்டோர் முதல்-அமைச்சராக இருந்திருக்கின்றனர். இவர்கள் எல்லாம் முதல்-அமைச்சராக இருந்து கொண்டு, அனைத்து துறைகளையும் கண்காணித்தனர். அனைத்து துறை கோப்புகளும் முதல்-அமைச்சரின் பார்வைக்கு வரும்.



    முக்கியமாக சட்டம் ஒழுங்கினை பாதுகாக்கக்கூடிய காவல்துறை, முதல்-அமைச்சரின் கட்டுப்பாட்டின்கீழ் தான் இருக்கும். மற்ற துறைகளையெல்லாம் அமைச்சரிடம் ஒப்படைத்திருந்தார்கள். ஆனால் எடப்பாடி பழனிசாமியை பார்த்தீர்களேயானால், அவர் காவல்துறையை கையில் வைத்து கொண்டு, அதையும் தாண்டி பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத்துறை இப்படி பல முக்கியமான துறைகளை தானே வைத்து கொண்டார். ஏனெனில், எதில் அதிகம் கொள்ளையடிக்க முடியும் என்பதை அறிந்து கொண்டு பொதுப்பணித்துறை உள்ளிட்டவற்றில் கமிஷன், கரப்ஷன், கலெக்‌ஷன் நடந்தது.

    ஆகவே இடைத்தேர்தல் வர காரணமாக இருந்த அயோக்கியர்களுக்கு பாடம் புகட்ட வேண்டும் என்றால், அதற்கு உதய சூரியனுக்கு நீங்கள் ஆதரவு தர வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார். 
    அரவக்குறிச்சி தொகுதியில் மக்கள் நீதி மய்யம் பரப்புரை கூட்டத்தில் கமல்ஹாசன் மீதான தாக்குதல் கண்டிக்கத்தக்கது என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார்.
    ஆலந்தூர்:

    ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    பாராளுமன்ற தேர்தல் மற்றும் சட்டசபை தொகுதி இடைத்தேர்தல்களில் தி.மு.க. கூட்டணி வெற்றிபெறும். இதன்மூலம் தமிழக அரசியலில் மிகப்பெரிய மாற்றம் ஏற்படஉள்ளது. மாநில கட்சிகளுடன் இணைந்து மத்தியில் காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைக்கும் என்று யூகிக்கிறேன். மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் கூறியதில் எந்த தவறும் இல்லை. கொடியவன் கோட்சே பற்றி பதிவு செய்து உள்ளார். காந்தியின் உருவப்படத்தை சுட்டுக்கொளுத்தி கோட்சேவுக்கு சிலை அமைப்போம் என்று இந்து மகாசபை தலைவி கூறியபோது மோடி, யோகி ஆதித்யாநாத் ஆகியோர் ஏன் கண்டிக்கவில்லை?. கமல்ஹாசன் சரித்திர உண்மையை பதிவு செய்தார். அவர் மீது செருப்பு, மூட்டை வீசியது அக்கிரமம் அல்லவா?. இதை பா.ஜ.க. தலைமை ஏன் கண்டிக்கவில்லை?.



    கோட்சே கொடியவன் என்று பதிவிட்டவரை நடமாடவிடக்கூடாது, நாக்கை அறுப்பேன் என்று பேசுவது, கூட்டத்தில் ஆட்களை அனுப்பி செருப்பு வீச செய்வது என்பது அநாகரிகமான அரசியல். ஆரோக்கியமற்ற ஒரு வன்முறை வெறியாட்டத்தை தூண்டி விடுகின்ற இந்த செயலை வன்மையாக கண்டிக்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    டெல்லியில் இருந்து சென்னைக்கு விமானத்தில் வந்த அ.தி.மு.க. எம்.பி.யின் சூட்கேசில் கட்டுக்கட்டாக ரூ.25 லட்சம் இருந்தது. இது தொடர்பாக அவரிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள்.
    ஆலந்தூர்:

    சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு நேற்று இரவு 8.15 மணிக்கு டெல்லியில் இருந்து விமானம் வந்தது. அந்த விமானத்தில் ஆரணி தொகுதி அ.தி.மு.க. எம்.பி. ஏழுமலை வந்தார்.

    டெல்லி விமான நிலையத்தில் அவரது உடைமைகளை சோதனை செய்த பாதுகாப்பு அதிகாரிகள், அவரது சூட்கேசில் கட்டுக்கட்டாக பணம் இருப்பதை கண்டுபிடித்தனர். உடனே சென்னை விமான நிலைய அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர்.

    அதன்படி அந்த விமானம், சென்னையில் தரை இறங்கியதும் விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் ஏழுமலை எம்.பி.யை தடுத்து நிறுத்தி, அவரது சூட்கேசை சோதனை செய்தனர். அதில் ரூ.25 லட்சம் வரை இருந்ததாக கூறப்படுகிறது.

    இதுபற்றி சென்னை வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். அதன்படி வருமான வரித்துறை அதிகாரிகள் 5 பேர் கொண்ட குழுவினர் சென்னை விமான நிலையம் விரைந்து வந்து அ.தி.மு.க. எம்.பி.யிடம் விமான நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தினர்.

    அப்போது ஏழுமலை எம்.பி. மகளின் படிப்பு செலவுக்காக இந்த பணத்தை கொண்டு வந்ததாக கூறி அதற்கான உரிய ஆவணங்களை அதிகாரிகளிடம் காண்பித்தனர்.

    பின்னர் ஒரு மணி நேர விசாரணைக்கு பின் வருமான வரித்துறை அதிகாரிகள் அவரை பணத்துடன் செல்ல அனுமதித்தனர்.

    இந்த சம்பவம் சென்னை விமான நிலையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
    “வருகிற 23-ந் தேதிக்கு பிறகு தி.மு.க. இரண்டாக உடையும்” என்று பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறினார்.
    ஓட்டப்பிடாரம்:

    ஓட்டப்பிடாரத்தில் பிரசாரத்தின்போது, நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    ஓட்டப்பிடாரம் தொகுதியில் இன்று (நேற்று) பிரசாரம் முடிவடைகிறது. ஆனால் எடப்பாடியாரின் சாதனைகள் தொடரும். சாதகமான கருத்துக்களை தெரிவிப்பவர்களை மட்டுமே டி.டி.வி.தினகரனுக்கு பிடிக்கும்.

    அவர் பித்தலாட்ட அரசியல் செய்கிறார். முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா அவரை கடுமையாக விமர்சித்து உள்ளார். அ.தி.மு.க.வில் இருந்து அவர் விலக்கி வைக்கப்பட்டார். இன்று ஜெயலலிதா ஆட்சியை கொண்டு வர வேண்டும் என்றும், அ.தி.மு.க.வை முடக்க வேண்டும் என்றும் சொல்கிறார். இதுதான் அவருடைய வாடிக்கை. தி.மு.க. செய்கிற வேலையைத்தான் தினகரன் செய்கிறார்.

    தினகரனுக்கும், அ.தி.மு.க.வுக்கும் சம்பந்தம் கிடையாது. ஜெயலலிதா பெயரை சொல்லும் அருகதை தினகரனுக்கு கிடையாது.

    மக்கள் நீதிமய்யம் சார்பில் என் மீது போடப்பட்டு உள்ள வழக்கை சந்திக்க தயாராக இருக்கிறேன். எம்.ஜி.ஆர் பக்தர், ஜெயலலிதா தொண்டர்கள், எடப்பாடியாரின் தம்பிகள் வழக்கை எதிர்கொள்ள தயாராக இருக்கிறோம்.

    வருகிற 23-ந் தேதிக்கு பிறகு மாற்றம் வரும் என்று தொடர்ந்து எதிர்க்கட்சியினர் பேசி வருகின்றனர். முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் எளிமையான ஆட்சி தொடர வேண்டும் என்று மக்கள் விரும்புகிறார்கள். நாடாளுமன்ற தேர்தலிலும், 22 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலிலும் இரட்டை இலைக்கு ஓட்டு போட மக்கள் ரோட்டில் வந்து நிற்கிறார்கள். அ.தி.மு.க.வின் பின்னால் மக்கள் இயக்கம் உள்ளது. முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் ஆட்சிக்கு அங்கீகாரம் கொடுக்கும் விதமாக மக்கள் தீர்ப்பு அமையும்.

    தி.மு.க. இதுவரை நேர்மையான முறையில் ஆட்சியை கைப்பற்றவில்லை. அ.தி.மு.க.வுக்கு பிரச்சினை வரும் போதெல்லாம் குறுக்கு வழியில் ஆட்சி பிடித்தனர். மக்கள் நேர்மையான ஆட்சியை விரும்புகின்றனர். வருகிற 23-ந் தேதிக்கு பிறகு தி.மு.க. இரண்டாக உடையப்போகிறது.

    காங்கிரஸ் கட்சி உடைந்தது போன்று, தி.மு.க.வும், முன்னாள் தலைவர் கருணாநிதி காலத்தில் இருந்த 70 வயதை நெருங்கும் தலைவர் ஒரு அணியாகவும், உதயநிதி ஸ்டாலின் பின்னால் இருக்க கூடியவர்கள் மற்றொரு அணியாகவும் பிரிய போகிறார்கள். தி.மு.க.வில் உள்ள நல்ல மனிதர்கள் வந்து விடுவார்கள். அல்லது மாற்று அணி உருவாக்குவார்கள். இதுதான் தி.மு.க.வின் நிலை.

    ஆட்சியை கைப்பற்றுவதற்காக மு.க.ஸ்டாலின் வசனம் எழுதி பேசிக் கொண்டு இருக்கிறார். இது சினிமா படத்துக்கு பொருந்தும். நிஜத்தில் நடப்பது இல்லை. எடப்பாடியார் ஆட்சி நிம்மதியாக கம்பீரமாக நடைபெறும். எனவே, எடப்பாடியார் ஆட்சி நிலையான ஆட்சியாக இருக்கும்.

    இவ்வாறு அமைச்சர் ராஜேந்திரபாலாஜி கூறினார்.
    பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்களில் 110 பேர் மீது குற்ற வழக்குகள் உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
    கொல்கத்தா:

    பாராளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் 7 கட்டங்களாக அறிவிக்கப்பட்டன. கடைசி கட்ட தேர்தல் நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் 724 பெண் வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இவர்களில் 716 பேரில் 110 (15 சதவீதம்) பெண் வேட்பாளர்கள் மீது குற்ற வழக்குகள் உள்ளன. மற்ற 8 வேட்பாளர்களின் தகவல்கள் கிடைக்கவில்லை. கடந்த பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்ட 665 பெண் வேட்பாளர்களில் 87 பேர் (13 சதவீதம்) மீது மட்டுமே குற்ற வழக்குகள் இருந்தன.

    இதில் 78 பேர் (11 சதவீதம்) மீது தீவிர குற்ற வழக்குகள் உள்ளன. கடந்த தேர்தலில் 51 பேர் (8 சதவீதம்) மீது குற்ற வழக்குகள் இருந்தன.

    காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் 54 பேரில் 14 பேர் (26 சதவீதம்), பா.ஜ.க. வேட்பாளர்கள் 53 பேரில் 18 பேர் (34 சதவீதம்), பகுஜன் சமாஜ் வேட்பாளர்கள் 24 பேரில் 2 பேர் (8 சதவீதம்), திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளர்கள் 23 பேரில் 6 பேர் (26 சதவீதம்) மீது குற்ற வழக்குகள் உள்ளன.

    இந்த தேர்தலில் 255 பெண் வேட்பாளர்கள் (36 சதவீதம்) கோடீஸ்வரர்கள் ஆவர். கடந்த தேர்தலில் 219 கோடீஸ்வர பெண் வேட்பாளர்கள் (33 சதவீதம்) போட்டியிட்டனர்.

    இவர்களில் காங்கிரஸ் வேட்பாளர்கள் 44 பேர் (82 சதவீதம்), பா.ஜ.க. வேட்பாளர்கள் 44 பேர் (83 சதவீதம்), திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளர்கள் 15 பேர் (65 சதவீதம்), பகுஜன் சமாஜ் வேட்பாளர்கள் 9 பேர் (38 சதவீதம்) கோடீஸ்வர பெண்கள். இந்த தேர்தலில் பெண் வேட்பாளர்களின் சராசரி சொத்து மதிப்பு ரூ.5.63 கோடி ஆகும். கடந்த தேர்தலில் இது 10.62 கோடியாக இருந்தது.

    இந்த தகவலை ஜனநாயக சீர்திருத்தம் என்ற அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்து உள்ளது.
    இடைத்தேர்தல் நடை பெறும் 4 தொகுதிகளிலும் 16 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு கூறினார்.
    சென்னை:

    தலைமைச் செயலகத்தில் நிருபர்களுக்கு சத்யபிரத சாகு அளித்த பேட்டி வருமாறு:-

    இடைத்தேர்தல் நடக்கவுள்ள திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, சூலூர், ஓட்டப்பிடாரம் ஆகிய 4 சட்டமன்ற தொகுதிகளிலும் மொத்தம் 5,508 தேர்தல் பணியாளர்கள் ஈடுபடுத்தப்படுவார்கள். ஒவ்வொரு வாக்குச்சாவடிகளிலும் ஒருவர் என்ற வீதத்தில் 1,364 நுண் பார்வையாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.

    மத்திய அரசின் முகமைகள், தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் ஆகியவற்றை சேர்ந்தவர்கள் நுண்பார்வையாளர்களாக இருப்பார்கள். அவர்கள் பொதுப் பார்வையாளர்களின் கீழ் செயல்படுவார்கள்.

    மேலும், 4 தொகுதிகளிலும் மொத்தம் 15 ஆயிரத்து 939 போலீசார் பாதுகாப்பு பணியில் நியமிக்கப்பட உள்ளனர். இது மிக அதிக பாதுகாப்பாக இருக்கும். எனவே எந்தவித சட்டம்-ஒழுங்கு பிரச்சினையையும் எதிர்கொள்ள முடியும். அதோடு மத்திய ஆயுத போலீஸ் படையினர் 1,300 பேர் இருப்பார்கள்.



    மக்கள் நீதி மய்யத்தின் நிறுவனர் கமல்ஹாசன் பேசியது தொடர்பாக போலீஸ் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அதுபற்றி அரசியல் கட்சியினரும் புகார் மனு அளித்துள்ளனர். இதுபற்றி விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய மாவட்ட தேர்தல் அதிகாரிக்கு உத்தரவிட்டுள்ளோம். அந்த அறிக்கைக்காக காத்திருக்கிறோம்.

    அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி மீது மக்கள் நீதி மய்யம் சார்பில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. அதுபற்றியும் மாவட்ட தேர்தல் அதிகாரியின் அறிக்கை பெற உள்ளோம். அறிக்கை வந்த பிறகு நடவடிக்கை எடுக்கப்படும்.

    பொன்பரப்பியில் நடந்த சம்பவம் தொடர்பாக கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. எனவே இதில் நான் கருத்து கூற முடியாது. இந்த நிலையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் என்னை சந்தித்துப் பேசியிருக்கிறார்.

    அதுபோல தபால் ஓட்டுகள் தொடர்பான வழக்கும் கோர்ட்டில் நிலுவையில் உள்ளது. எல்லா தபால் ஓட்டுகளும் சரியான முறையில்தான் வழங்கப்பட்டுள்ளன. இதை மாவட்ட தேர்தல் அதிகாரிகள், தேர்தல் நடத்தும் அதிகாரிகள்தான் நிர்வகிப்பார்கள்.

    போலீசுக்கான தபால் ஓட்டுகள் 100 சதவீதம் வழங்கப்பட்டு விட்டன.

    ஓட்டு எண்ணிக்கையின்போது முதல் ரவுண்டு முடிவுகளை எத்தனை மணிக்கு எதிர்பார்க்கலாம்? என்ற கேள்விக்கு இப்போதே நான் பதிலளிக்க முடியாது. ஒரு சட்டமன்ற தொகுதிக்கு 5 ஒப்புகைச் சீட்டு எந்திரம் (‘விவிபாட்’) என்ற வகையில் ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் (6 சட்டமன்றங்களை உள்ளடக்கிய தொகுதி என்றால்) 30 ‘விவிபாட்’ எந்திரங்களில் உள்ள சீட்டுகளையும் எண்ண வேண்டும்.

    ஒவ்வொரு ‘விவிபாட்’ எந்திரத்துக்கும் எண் இருக்கும். குலுக்கல் முறையில் அதில் 5 எந்திரங்கள் தேர்வு செய்யப்பட்டு சீட்டுகள் எண்ணப்படும். இந்த தேர்வை வீடியோ படம் எடுப்பார்கள். எனவே ஓட்டு எண்ணிக்கையில் காலதாமதம் ஆகலாம். வாக்குப் பதிவு எந்திரங்களில் உள்ள ஓட்டுகளை எண்ணிவிட்டு கடைசியில்தான் விவிபாட் எந்திரத்தில் உள்ள சீட்டுகள் எண்ணப்படும். 23-ந் தேதி காலை 8 மணிக்கு ஓட்டு எண்ணிக்கை தொடங்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    பிரதமர் மோடி உலகின் மிகப்பெரிய நடிகர் என இறுதிக்கட்ட பிரசாரத்தின்போது பிரியங்கா காந்தி விமர்சனம் செய்துள்ளார்.
    லக்னோ:

    பாராளுமன்ற இறுதிக்கட்ட தேர்தல் ஞாயிற்றுக்கிழமை நடக்கிறது. இதற்கான பிரசாரம் இன்று மாலை முடிவடைந்தது. காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி மிர்சாப்பூரில் இறுதிக்கட்ட பிரசாரம் செய்தார். சாலையில் காங்கிரஸ் தொண்டர்கள் மத்தியில் பேரணியாக சென்ற பிரியங்கா காந்தி பேசுகையில், மக்கள் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். உலகின் மிகப்பெரிய நடிகரை (மோடியை) நீங்கள் பிரதமராக தேர்வு செய்திருக்கிறீர்கள். 

    அவருக்கு பதிலாக நீங்கள் அமிதாப்பச்சனைக்கூட தேர்வு செய்து இருந்தால் சிறப்பாக இருந்திருக்கக்கூடும். யாரும் உங்களுக்கு எதுவும் செய்து விடப்போவதில்லை என்பது வேறு வி‌ஷயம் என்றார். 

    பிரதமர் மோடியை விமர்சனம் செய்த கையோடு அமிதாப்பச்சனையும் பிரியங்கா காந்தி விமர்சனத்திற்கு இழுத்ததற்கு காரணம் உள்ளது. இந்தி நடிகர் அமிதாப்பச்சன், பிரியங்காவின் தந்தை ராஜீவ் காந்தியின் நெருங்கிய நண்பராக திகழ்ந்தவர். அவரை அரசியலுக்கு கொண்டு வந்த ராஜீவ் காந்தி 1983 தேர்தலில் அலகாபாத் பாராளுமன்ற தொகுதியில் நிறுத்தி வெற்றி பெற வைத்தவர். 

    கடந்த 1986-ம் ஆண்டில் ராஜீவ் காந்தி ஆட்சிக் காலத்தில் இந்திய ராணுவத்துக்கு ஸ்வீடனின் போபர்ஸ் நிறுவனத்திடம் இருந்து பீரங்கிகள் வாங்கப்பட்டன. பீரங்கிகள் கொள்முதல் செய்யப்பட்டதில் அரசியல் தலைவர்கள், பாதுகாப்புத் துறை அதிகாரிகளுக்கு ரூ.64 கோடி லஞ்சம் கொடுக்கப்பட்டதாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக விசாரணை நடைபெற்றது. போபர்ஸ் ஊழலில் அமிதாப் பெயர் அடிபட்டபோது அவர் எம்.பி. பதவியை ராஜினாமா செய்தார். அந்த ஊழலில் அவர் குற்றம் செய்யவில்லை என நிரூபணமானது. ஆனாலும் அமிதாப்பச்சன் அரசியலைப் பற்றி திரும்ப நினைத்துப்பார்க்கவில்லை. அதனை குறிப்பிட்டு பிரியங்கா காந்தி பேசியுள்ளார். 
    நடிகர் கமல்ஹாசன் முன்ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனு மீது திங்களன்று உயர்நீதிமன்ற மதுரை கிளை தீர்ப்பு வழங்குகிறது.
    சென்னை:

    சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து என்று கமல் ஹாசன் பேசிய விவகாரத்தில் பல்வேறு தரப்பினர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்திருந்தனர். வழக்கு விசாரணையின்போது கமல் ஹாசன் மீது 76 புகார்கள் அளிக்கப்படிருப்பதாக அரசு தெரிவித்திருந்தது. 

    இந்த வழக்கில் நடிகர் கமல்ஹாசன் முன்ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனு மீது உயர்நீதிமன்ற மதுரை கிளை வரும் திங்களன்று தீர்ப்பு வழங்குகிறது.

    ×