என் மலர்tooltip icon

    தேர்தல் செய்திகள்

    அரவக்குறிச்சி, சூலூர், திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம் ஆகிய 4 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நாளை நடைபெற உள்ளது.

    சென்னை:

    அரவக்குறிச்சி, சூலூர், திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம் ஆகிய 4 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நாளை (19-ந்தேதி) நடக்கிறது.

    நாளை காலை 7 மணிக்கு ஓட்டுப்பதிவு தொடங்கி மாலை 6 மணி வரை நடக்கிறது.

    அரவக்குறிச்சி தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் செந்தில்நாதன், தி.மு.க. சார்பில் செந்தில்பாலாஜி, அ.ம.மு.க. சார்பில் சாகுல் அமீது, மக்கள் நீதிமய்யம் சார்பில் மோகன்ராஜ், நாம் தமிழர் கட்சி சார்பில் செல்வம் போட்டியிடுகிறார்கள்.

    இங்கு ஆண்கள் 99,052 பேரும், பெண்கள் 1,06,219 பேரும், இதர வாக்காளர்கள் 2 என மொத்தம் 2 லட்சத்து 5 ஆயிரத்து 273 வாக்காளர்கள் உள்ளனர். தொகுதி முழுவதும் 159 இடங்களில் 250 வாக்குச் சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

    இதில் 29 வாக்குச்சாவடி மையங்கள் பதற்றமானவையாக அறிவிக்கப்பட்டுள்ளன. அங்கு துணை ராணுவத்தினர் பாதுகாப்புபணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

    அரவக்குறிச்சி தொகுதியில் 63 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். வாக்கு எண்ணும் மையத்தில் 4 பேலட் யூனிட்டுகள் (பொத்தானை அழுத்தி வாக்கு செலுத்தும் எந்திரம்), ஒரு கண்ட்ரோல் யூனிட் (வாக்குப்பதிவினை கட்டுக்குள் வைத்திருக்கும் எந்திரம்), யாருக்கு வாக்களித்தோம் என்பதை அறியும் வகையிலான விவிபேட் எந்திரம் ஆகியவை பயன்படுத்தப்பட உள்ளன.

    இதற்காக 1199 பேலட் யூனிட்டுகள், 295 கண்ட்ரோல் யூனிட்டுகள், 313 விவிபேட் எந்திரங்கள் தயார் நிலையில் அரவக்குறிச்சி தாலுகா அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ளன. இவை இன்று மதியத்திற்கு மேல் வாக்குச்சாவடி மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட உள்ளன. 1200-க்கும் மேற்பட்ட வாக்குச்சாவடி அலுவலர்கள் பணியமர்த்தப்பட்டு உள்ளனர்.

    மாற்றுத்திறனாளிகள் சிரமமின்றி வந்து வாக்களிக்கும் வகையில் அவர்களுக்கு சக்கர நாற்காலிகள் தயார் நிலையில் உள்ளன. 4 கம்பெனிகளை சேர்ந்த தமிழ்நாடு சிறப்பு காவல் படை போலீசார் 320 பேர் தேர்தல் பணிக்காக வந்துள்ளனர். துணை ராணுவத்தினர், உள்ளூர் போலீசார் 700-க்கும் மேற்பட்டோர் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

    சூலூர் தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் வி.பி. கந்தசாமி, தி.மு.க.வில் முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிசாமி, அ.ம.மு.க. சார்பில் சுகுமார், மக்கள் நீதி மய்யத்தில் மயில்சாமி, நாம் தமிழர் கட்சி சார்பில் விஜயராகவன் உள்ளிட்ட 22 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

    பொதுமக்கள் வாக்களிக்க வசதியாக 324 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளது. இதில் 130 வாக்குச் சாவடிகள் பதட்டமானவை என கண்டறியப்பட்டு உள்ளது.

    அங்கு துணை ராணுவத்தினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். சூலூர் தொகுதியில் 778 மின்னணு வாக்குப் பதிவு எந்திரங்களும், 388 கட்டுப்பாட்டு எந்திரங்களும், வி.வி. பேட் (யாருக்கு வாக்களித்தோம் என்பதை உறுதி செய்யும் எந்திரம்) 422-ம் பயன்படுத்தபப்பட உள்ளது.

    மாற்றுத் திறனாளிகளுக்காக 324 சக்கர நாற்காலிகள் அனுப்பி வைக்கப்பட்ட உள்ளது. வாக்காளர்கள் தாங்கள் வாக்களிக்கும் மையம் எது என்பதை எளிதாக கண்டறிய ஏற்கனவே பூத் சிலிப்புகள் வினியோகம் செய்யப்பட்டு உள்ளது.

    சூலூர் தொகுதியில் 324 வாக்குச்சாவடியில் பயன்படுத்தப்பட உள்ள 778 மின்னணு எந்திரங்கள் சூலூர் யூனியன் அலுவலகத்தில் வைக்கப்பட்டு சின்னம் பொருத்தப்பட்டது. இந்த மின்னணு எந்திரங்களை வாக்குச் சாடிக்கு அனுப்பும் பணி இன்று தொடங்கியது. காலை முதல் சூலூர் யூனியன் அலுவலகத்தில் இருந்து மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் லாரிகளில் ஏற்றப்பட்டு வாக்குச்சாவடி மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.

    ஓட்டுப்பதிவுக்கு தேவையான மை உள்ளிட்ட பொருட்களும் அனுப்பப்பட்டு வருகிறது. வாக்குச்சாவடி தேர்தல் அலுவலர்கள் இன்று இரவே தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள வாக்குச் சாவடிக்கு செல்கிறார்கள்.

    பாதுகாப்பு பணியில் ஈடுபடும் போலீசார் மற்றும் துணை ராணுவத்தினரும் பாதுகாப்பு பணிக்கு சென்று விட்டனர்.

    சூலூர் தொகுதியில் மொத்தம் 2 லட்சத்து 95 ஆயிரத்து 158 வாக்காளர்கள் உள்ளனர். அவர்களில் ஆண்கள் 1 லட்சத்து 45 ஆயிரத்து 397 பேர். பெண்கள் 1 லட்சத்து 49 ஆயிரத்து 743 பேர். மூன்றாம் பாலினத்தவர்கள் 18 பேர் ஆவார்கள்.

    சூலூர் தொகுதியில் தேர்தல் நுண்பார்வையாளர்கள் 324 பேரும், கூடுதல் பார்வையாளர்கள் 400 பேரும், 9 நிலையான கண்காணிப்பு குழுவும் அமைக்கப்பட்டு உள்ளது. தேர்தலின் போது அசம்பாவிதங்கள் நடைபெறாமல் தடுக்க பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

    நீலகிரி, திருப்பூர், சேலம், ஈரோடு, நாமக்கல் ஆகிய 4 மாவட்டங்களில் இருந்து 4 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

    திருப்பரங்குன்றம் தொகுதியில் அ.தி.மு.க., தி.மு.க., அ.ம.மு.க. மக்கள் நீதிமன்றம், நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் உள்பட 37 பேர் களத்தில் உள்ளனர். இங்கு 3 லட்சத்து 4 ஆயிரத்து 478 வாக்காளர்கள் உள்ளனர்.

    இவர்களில் 1 லட்சத்து 50 ஆயிரத்து 533 பேர் ஆண் வாக்காளர்கள். 1 லட்சத்து 53 ஆயிரத்து 918 பேர் பெண் வாக்காளர்கள். 27 பேர் மூன்றாம் பாலினத்தைச் சேர்ந்தவர்கள். இவர்கள் வாக்களிப்பதற்காக தொகுதியில் 297 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

    இதில் அவனியாபுரத்தில் 150-ஏ, 186-ஏ, வாக்குச் சாவடிகள் முற்றிலும் பெண்களுக்கானது. இங்கு பெண் வாக்காளர்கள் வரிசையில் நின்று வாக்களிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

     


     

    மொத்தமுள்ள வாக்குச் சாவடிகளில் 88 வாக்குச் சாவடிகள் பதட்டமானவை என கண்டறியப்பட்டுள்ளது. இங்கு துணை ராணுவத்தினர் மற்றும் கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். மேலும் 130 வெப்- கேமராக்கள் பொருத்தப்பட்டு, திருப்பரங்குன்றம் தாசில்தார் அலுவலகத்தில் உள்ள மானிட்டர் மூலம் வாக்குப்பதிவு கண்காணிப்படுகிறது.

    தேர்தல் பணியில் 1500 ஊழியர்கள் ஈடுபட உள்ளனர். இவர்கள் தவிர நுண்பார்வையாளர்களும் கண்காணிப்பு பணியில் உள்ளனர். நோட்டாவுடன் சேர்த்து 38 வேட்பாளர்கள் களத்தில் இருப்பதால் 3 வாக்குப்பதிவு எந்திரங்கள் வாக்குச் சாவடியில் வைக்கப்பட உள்ளன. இது தவிர கட்டுப்பாட்டு எந்திரம் மற்றும் வி.வி.பேட் எந்திரம் போன்றவையும் அமைக்கப்படுகிறது.

    ஒட்டப்பிடாரம் தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் மோகன், தி.மு.க. சார்பில் சண்முகையா, அ.ம.மு.க. சார்பில் சுந்தர்ராஜ், மக்கள் நீதி மய்யம் சார்பில் காந்தி, நாம் தமிழர் கட்சி சார்பில் அகல்யா உள்ளிட்ட 15 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

    ஒட்டப்பிடாரம் தொகுதியில் மொத்தம் ஆண் வாக்காளர்கள் ஒரு லட்சத்து 15 ஆயிரத்து 8, பெண் வாக்காளர்கள் ஒரு லட்சத்து 18 ஆயிரத்து 51, 3-ம் பாலினத்தவர் 16 என மொத்தம் 2 லட்சத்து 33 ஆயிரத்து 847 வாக்களாளர்கள் உள்ளனர்.

    அவர்கள் வாக்களிப் பதற்காக தொகுதி முழுவதும் 257 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. அங்கு வாக்காளர்கள் வாக் களிக்க வசதியாக அனைத்து ஏற்பாடு களும் செய்யப்பட்டுள்ளன.

    அனைத்து வாக்குச்சாவடிகளிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பதட்டம் நிறைந்தவையாக கண்டறியப்பட்டுள்ள 71 வாக்குச்சாவடிகளில் கூடுதல் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பதட்டமான வாக்குச்சாவடிகளில் கூடுதலாக ஒரு போலீஸ் அதிகாரி மற்றும் போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர். 143 வாக்குச்சாவடிகள் வெப் கேமரா மூலம் கண்காணிக்கப்படுகின்றன.

    அவற்றில் 54 வாக்குச் சாவடிகளில் ஆயுதம் தாங்கிய துணை ராணுவப்படையினரும், 17 சாவடிகளில் தமிழ்நாடு சிறப்பு போலீஸ் படையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். அதுமட்டுமின்றி ஒட்டப்பிடாரம் தொகுதி முழுவதும் 18 துணை போலீஸ் சூப்பிரண்டுகள், 46 இன்ஸ்பெக்டர்கள், 50 அதிரடி படை போலீசார் ரோந்து சென்று பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள்.

    ஒட்டப்பிடாரம் தொகுதி முழுவதும் தேர்தல் பாதுகாப்பு பணியில் 300 துணை ராணுவ வீரர்கள் உள்பட 3 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

    வாக்குப்பதிவுக்கு பயன்படுத்தக்கூடிய கட்சி மற்றும் சுயேட்சை வேட்பாளர்களுக்கு ஒதுக்கப்பட்ட சின்னங்கள் பொருத்தப்பட்ட 335 ஓட்டுப்பதிவு எந்திரங்கள், கட்டுப்பாட்டு கருவிகள், 360 வி.வி.பேட் ஆகியவை ஓட்டப்பிடாரம் யூனியன் அலுவலகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தன. அவை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வாகனங்கள் மூலம் அந்தந்த வாக்குச்சாவடிகளுக்கு இன்று அனுப்பப்படுகின்றன.

    தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்களுக்கான பணி நியமன ஆணை இன்று வழங்கப்பட்டது. அவர்கள் தங்களுக்கு நியமிக்கப்பட்டுள்ள வாக்குச் சாவடிகளுக்கு புறப்பட்டு சென்றனர்.

    மகாத்மா காந்தியை சுட்டுக்கொன்ற கோட்சே சுதந்திர இந்தியாவின் முதல் இந்து தீவிரவாதி என்று கமல் கருத்து தெரிவித்திருந்தார். அதற்கு திருமாவளவன், முத்தரசன் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

    கமல்ஹாசன் கருத்துக்கு விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன், இந்திய கம்யூனிஸ்டு செயலாளர் முத்தரசன் ஆகியோர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

    இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் முத்தரசன்:-

    மகாத்மா காந்தி இந்து மதத்தினரை மட்டுமல்ல எல்லா மதத்தவரையும் அரவணைத்து சென்றார். பிரார்த்தனையில் கூட பகவத் கீதையுடன் திருக்குர்ரானையும் சேர்த்து படிக்க வேண்டும் என்று கூறினார்.

    மத சார்பற்ற கொள்கையில் உறுதியுடன் இருந்தார். ஆனால் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தை சேர்ந்த பா.ஜ.க. வினர் தலையில் தூக்கி கொண்டாடுகின்றது. கமல் கூறிய கருத்தில் பெரிய தவறு இல்லை. அதனை பா.ஜ.க.வினர் அரசியலுக்காக பயன்படுத்துகிறார்கள். கோட்சேவை தேச பக்தன் என்றும் அவர் செய்தது சரிதான் என்றும் கூறுகின்றனர்.

    பா.ஜ.க. வேட்பாளரே கோட்சே தேச பக்தன் என்று கூறுகிறார். அதற்காக வருத்தம் தெரிவித்த பிரதமர் மோடி அவரை வேட்பாளரில் இருந்து நீக்கவில்லை.

    மோடியும், அமித்ஷாவும் நாடகம் ஆடுகிறார்கள். ஜனநாயக நாட்டில் கருத்துக்கள் கூற உரிமை உண்டு. அதனை மறுப்பதற்கு எத்தனையோ வழிமுறைகள் உள்ளன. அதை தவிர்த்து செருப்பு, முட்டைகளை வீசி வன்முறையில் ஈடுபடுகிறார்கள். இதை மோடி கண்டிக்கவில்லை.

    பா.ஜ.க.வை பொறுத்த வரை கோட்சே தேச பக்தர். காந்தி தேச துரோகி. வரலாற்று உண்மையை சொன்ன கமலை தனிமைப்படுத்த முயற்சிக்கிறார்கள். அவரை தனிமைப்படுத்த முடியாது.

    விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன்:-

    பெரியார், அம்பேத்கார் கடந்த காலங்களில் இந்து மதத்தை பற்றி என்ன கருத்துக்களை கூறினார்களோ அதைதான் கமல் ஹாசன் பிரதிபலிக்கிறார். இந்து என்ற பெயரில் ஒரு மதம் இல்லவே இல்லை.

    மதங்களுக்கு இடையில் மோதல்-வன்முறை அவ்வப்போது நடந்து கொண்டே இருந்தது. இந்தியா என்கிற ஒரு தேசத்தையும் இந்து என்கிற மதத்தையும் ஆங்கிலேயர்களின் ஆட்சிதான் உருவாக்கியது. எனவே கமல் சொல்வது ஒரு வரலாற்று உண்மைதான்.


    அதை இன்று அரசியல் ஆதாயத்திற்கு வசதியாக பயன்படுத்தி கொள்கிறார்கள். இந்து என்கிற உணர்வை தூண்டி பெரும்பான்மை மக்களின் வாக்குகளை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி கொள்வதுதான் அவர்களின் உண்மையான நோக்கம். அரசியல் ஆதாயம் தேடுவதே அவர்களின் ஒரே இலக்கு.

    கமலின் கருத்து உண்மையானதும், நியாயமானதும் ஆகும். அவரை அச்சுறுத்தும் போக்கை கைவிட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தேர்தல் ஆணையர்களுக்குள் கடந்த காலங்களிலும் கருத்து வேறுபாடுகள் இருந்துள்ளதால் அசோக் லவாசா தெரிவித்த கருத்து சகஜமானதுதான் என தலைமை தேர்தல் ஆணையாளர் சுனில் அரோரா குறிப்பிட்டுள்ளார்.
    புதுடெல்லி:

    பாராளுமன்ற தேர்தலில் பிரதமர் மோடி, அமித் ஷாவுக்கு எதிரான தேர்தல் விதிமீறல் புகாரில்  தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா மற்றும் தேர்தல் ஆணையர்  அசோக் லவாசா இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக தெரியவந்தது.

    எனது கருத்தை அரோரா ஏற்காததால் ஆணைய கூட்டங்களில் இனி பங்கேற்கப்போவதில்லை என இந்திய தலைமை தேர்தல் ஆணையருக்கு தேர்தல் ஆணையர் அசோக் லவாசா கடிதம் கடந்த 4-ம் தேதி ஒரு கடிதம் எழுதி இருந்தார்.



    அதில் ‘‘பிரதமர் மோடி, அமித்ஷா தேர்தல் விதிமுறைகளை மீறி உள்ளனர். பிரதமர் மோடி அமித் ஷாவுக்கு எதிரான 6 தேர்தல் விதிமுறை மீறல்களில் எனது கருத்து ஏற்கப்படவில்லை.

    அமித் ஷா மற்றும் பிரதமருக்கு எதிரான 11 நடத்தை விதிமீறல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக எடுக்கப்பட்ட முடிவு எனக்கு ஏற்புடையதல்ல. எனது கருத்துக்களை தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா ஏற்றுக்கொள்ளவில்லை. எனது கருத்துக்களை ஏற்றுக் கொள்ளாதது மட்டுமின்றி, எனது எதிர்ப்புகளும் பதிவு செய்யப்படாததால் இனிவரும் தேர்தல் ஆணைய கூட்டங்களில் இனி பங்கேற்கப்போவதில்லை’’ என்று அசோக் லவாசா குறிப்பிட்டிருந்தார்.

    கடிதத்தின் நகலுடன் இந்த தகவல் ஊடகங்களில் வெளியான பின்னர் தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா இன்று பிற்பகல் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    கடந்த 14-ம் தேதி நடைபெற்ற ஆணையத்தின் கூட்டத்தில் 13 விவகாரங்கள் தொடர்பாக ஆலோசிப்பதற்கு ஒருமனதாக தீர்மானிக்கப்பட்டது. அவற்றில் ஒன்று நடத்தை விதிமீறல் தொடர்பானது.

    தேர்தல் கமிஷனில் ஆணையாளர்களாக பதவி வகிக்கும் மூன்று பேருமே மற்றவர்களின் ‘குளோனிங்’ (நகல்) ஆக இருக்க வேண்டும் என எதிர்பார்க்க முடியாது. இதற்கு முன்னரும் பல முறை சில விவகாரங்களில் ஆணையாளர்களுக்குள் மாறுபட்ட கருத்துகள் இருந்துள்ளன. இதுபோன்ற முரண்பாடுகள் இருக்கக்கூடியது, இருக்க வேண்டியதும்கூட. ஆனால், அவை அனைத்துமே தேர்தல் கமிஷனின் கட்டுப்பாட்டுக்குள் இருந்து வந்துள்ளன.

    இவ்வாறு அவர் கூறினார்.
    தனது கருத்துக்கு கமல் மன்னிப்பு கேட்காவிட்டால் தமிழகம் முழுவதும் மிகப்பெரிய போராட்டத்தை இந்து மக்கள் கட்சி நடத்தும் என்று அர்ஜூன் சம்பத் கூறியுள்ளார்.

    இந்து தீவிரவாதி மற்றும் இந்து என்பது மாற்றான் சொல் என்பது போன்ற கருத்துக்களை தெரிவித்த கமலுக்கு எதிராக போராட்டம் நடத்தப்படும் என்று இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜூன் சம்பத் கூறியுள்ளார்.

    இது தொடர்பாக அவர் அளித்த பேட்டி வருமாறு:-

    இந்து என்பது மதம் சம்பந்தப்பட்டது அல்ல. அது ஒரு கலாச்சாரம். அடையாளம். கருட புராணத்திலேயே இந்துஸ்தானம் உள்ளது. இந்து என்பது வெறும் சொல் அல்ல. வாழ்வியல் நெறியாகும். இந்திராகாந்தியை ஒரு சீக்கியர் சுட்டுக்கொன்றார் என்பதற்காக அதனை சீக்கிய தீவிரவாதம் என்று கூற முடியுமா? ராஜீவ்காந்தி கொலையை சுட்டிக்காட்டி தமிழர்கள் எல்லாம் தீவிரவாதிகள் என்று கூறமுடியுமா?

    எனவே இந்து தீவிரவாதம் என்ற சொல்லை பயன்படுத்தி இருப்பதன் மூலம் கமல் வரலாற்று பிழையை செய்துள்ளார். காந்தியை கோட்சே சுட்டுக் கொன்றதன் பின்னணியிலும் ஒரு வரலாறு உள்ளது. காந்தியை சுட்டுக் கொல்ல வேண்டும் என்று கோட்சேயிடம் இந்து மதம் சொல்லவில்லை.

    விஸ்வரூபம் பட பிரச்சினையின் போது கமல் என்ன பாடுபட்டார் என்பது எல்லோருக்கும் தெரியும். இப்படி பாதிப்புக்குண்டான கமல் இந்து தீவிரவாதம் பற்றி பேசுவது மிகவும் ஆபத்தானது.

    இடதுசாரி சிந்தனை கொண்டவர்களுடன் கமலுக்கு ஏற்பட்ட தொடர்பே இதற்கு காரணம். தான் எழுதியுள்ள யார் மகாத்மா? என்கிற புத்தகத்தை கமல் படிக்க வேண்டும். இந்து என்பது மாற்றான் சொல் என்று கூறும் கமலுடன் நேருக்கு நேர் விவாதம் நடத்த ஆவணங்களோடு தயாராகவே உள்ளேன்.


    கமல் தயாரா? தனது கருத்துக்கு கமல் மன்னிப்பு கேட்காவிட்டால் தமிழகம் முழுவதும் மிகப்பெரிய போராட்டத்தை இந்து மக்கள் கட்சி நடத்தும்.

    இவ்வாறு அர்ஜூன் சம்பத் கூறினார்.

    பிரதமர் மோடி நேற்று பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்ததை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கிண்டல் செய்துள்ளார்.

    புதுடெல்லி:

    பாராளுமன்ற தேர்தலின் இறுதிக்கட்ட பிரசாரம் நிறைவடையும் நேரத்தில் பா.ஜனதா தேசிய தலைவர் அமித்ஷா நிருபர்களை சந்தித்தார். இதில் யாரும் எதிர்பார்க்காத வகையில் பிரதமர் மோடியும் பங்கேற்றார்.

    மோடி பிரதமராக பதவி ஏற்ற 5 ஆண்டுகளில் பத்திரிகையாளர்களை சந்திப்பது இதுவே முதல் முறையாகும். இந்த சந்திப்பில் மோடி “நான் உங்களுடைய கேள்விகள் எதற்கும் பதில் அளிக்க முடியாது. ஏனெனில் இது அமித்ஷா நடத்தும் பத்திரிகையாளர் சந்திப்பு என்று கூறி எந்த கேள்விக்கும் பதில் அளிக்க வில்லை.

    இதை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கிண்டல் செய்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது:-


    மோடி ஜி அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள் பத்திரிகையாளர் சந்திப்பு மிகவும் பிரமாதமாக இருந்தது. அவர் நிருபர்கள் சந்திப்புக்கு வந்தது எங்களுக்கு பாதி வெற்றி கிடைத்தது. அடுத்த முறை பத்திரிகையாளர்கள் சந்திப்பின் போது பதில் அளிக்க அமித்ஷா அனுமதி அளித்தால் நல்லது.

    இவ்வாறு ராகுல் காந்தி கிண்டலாக தெரிவித்தார்.

    இந்துக்களுக்கு எதிராக கருத்து தெரிவிப்பதை கமல்ஹாசன் உடனே நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியுள்ளார்.

    விருதுநகர்:

    அமைச்சர் ராஜேந்திர பாலாஜி இன்று ‘மாலை மலர்’ நிருபரிடம் கூறியதாவது:-

    மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் இந்துக்களுக்கு எதிரான கருத்துக்களை தெரிவித்து வருகிறார். இந்து என்ற சொல் மாற்றான் கொடுத்தது என அவர் மீண்டும் சர்ச்சை கருத்துக்களை கூறியுள்ளார். இது கண்டிக்கத்தக்கது.

    இந்து மதம் ஆண்டாண்டு பழமையானது- முதன்மையான மதம். கேதர்நாத்தில் உள்ள சிவாலயம் பாண்டவர்கள் வழிபட்டது. அந்த அளவுக்கு இந்து மதம் மிகவும் தொன்மையானது.

    இந்தியாவுக்கு வந்தவர்களும், ஆள வந்தவர்களும், வாழ வந்தவர்களும் இந்து மதத்தின் சிறப்புகளை அழிக்க முற்பட்டனர். அதையெல்லாம் தாண்டி இந்துமதம் தழைத்தோங்கி உள்ளது.


    கமல்ஹாசன் கூறுவது போல இந்து என்ற சொல் மாற்றான் கொடுத்தது அல்ல, இந்துக்களுக்கு எதிராக கருத்து தெரிவிப்பதை அவர் உடனே நிறுத்திக் கொள்ள வேண்டும்.

    மேற்கண்டவாறு அவர் கூறினார்.

    பிரதமர் பதவிக்கு காங்கிரஸ் கட்சி உரிமை கோரும் என்று முன்னாள் மத்திய மந்திரி குலாம்நபி ஆசாத் திடீர் பல்டி அடித்துள்ளார்.

    புதுடெல்லி:

    பாராளுமன்றத்துக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகிறது. 7-வது மற்றும் இறுதிகட்ட வாக்குப்பதிவு நாளை நடக்கிறது.

    பாராளுமன்ற தேர்தலுக்கு பிறகு மீண்டும் பா.ஜனதா தலைமையிலான ஆட்சி அமைவதை தடுக்க காங்கிரஸ் கட்சி தீவிரமாக காய்களை நகர்த்தி வருகிறது. மாநில கட்சிகளுக்கு வளைந்து கொடுக்கும் வகையில் பல்வேறு முடிவுகளையும் எடுக்க அந்த கட்சி தயாராகி வருகிறது.

    இது தொடர்பாக காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய மந்திரியுமான குலாம்நபி ஆசாத் சிம்லாவில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தனிப்பெரும் கட்சியாக காங்கிரஸ் வந்தால் கூட மாநில கட்சிகளில் இருந்து ஒரு தலைவர் பிரதமராக வர விரும்பினால் காங்கிரஸ் ஆதரிக்கும். பிரதமர் பதவிக்கு காங்கிரஸ் உரிமை கோராது, பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வரக் கூடாது என்பதே எங்கள் இலக்கு.

    இவ்வாறு அவர் கூறி இருந்தார்.

    இந்த நிலையில் குலாம் நபி ஆசாத் தனது கருத்தில் இருந்து திடீர் பல்டி அடித்துள்ளார். பிரதமர் பதவிக்கு காங்கிரஸ் உரிமை கோரும் என்று அவர் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    காங்கிரஸ் கட்சி பிரதமர் பதவிக்கு உரிமை கோராது என்பதில் உண்மையில்லை. நாட்டிலே மிகவும் பழமையான பெரிய கட்சி காங்கிரஸ் ஆகும்.

    5 ஆண்டுகள் ஆட்சி செய்ய கூடிய கட்சி என்பதால் மிகப் பெரிய கட்சிக்கு வாய்ப்பு வழங்க வேண்டும். இன்னும் தேர்தல் முடிவுகள் வராத நிலையில் கூட்டணியில் இது குறித்து சண்டை போட்டு கொள்ளக் கூடாது. பிரதமர் பதவி கருத் தொற்றுமை அடிப்படையில் முடிவு செய்யப்படும்.

    தேர்தல் முடிவுக்கு பிறகு காங்கிரஸ் மிகப் பெரிய கட்சியாக உருவெடுக்கும். 273 இடங்கள் வரை கைப்பற்றும். கடந்த காலங்களிலும் வென்று இருக்கிறோம். இனி மேலும் வெல்வோம் என்ற நம்பிக்கை இருக்கிறது. அதே சமயம் ராகுல் காந்தி தலைமையில் காங்கிரஸ் அரசு அமைந்து நாட்டில் 5 ஆண்டுகள் நிலையான ஆட்சி தரும்.


    பிரதமராக வருவதற்கு ராகுல் காந்திக்கு தகுதிகள் இருக்கின்றன. மன்மோகன்சிங், வாஜ்பாய் ஆகியோர் 5 ஆண்டுகள் ஆட்சியை நிறைவு செய்ததற்கு காரணம் எம்.பி.க்கள் அதிகமாக இருந்தனர். எனவே நிலையான அரசு அமைவதற்கு காங்கிரஸ் கட்சிதான் தேர்வு.

    இவ்வாறு குலாம்நபி ஆசாத் கூறியுள்ளார்.

    சேலத்தில் இன்று அதிகாலை பறக்கும் படையினர் நடத்திய வாகன சோதனையில் வியாபாரியிடம் ரூ.49 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

    சேலம்:

    தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் முடிந்த நிலையில் அரவக்குறிச்சி, சூலூர், திருப்பரங்குன்றம், ஓட்டப்பிடாரம் ஆகிய 4 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் பிரசாரம் நேற்றுடன் நிறைவடைந்தது.

    இந்த தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு நாளை (19-ந்தேதி) நடைபெறுகிறது. இதையொட்டி வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை தடுக்க தமிழகம் முழுவதும் நேற்றிரவு பறக்கும் படையினர் மற்றும் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அதன் தொடர்ச்சியாக சேலம் சந்தைப்பேட்டை பகுதியில் செவ்வாய்ப்பேட்டை போலீஸ் நிலைய ரோந்து போலீசார் இன்று அதிகாலை 2 மணியளவில் தீவிர வாகன சோதனை மேற்கொண்டனர். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த ஒரு சொகுசுகாரை தடுத்து நிறுத்தி சோதனையிட்டனர்.

    அப்போது காரில் கட்டு கட்டாக ரூ.49 லட்சம் பணம் இருந்தது தெரிய வந்தது. இது குறித்து காரில் இருந்த செவ்வாய்ப்பேட்டை தெய்வநாயகம் தெருவவை சேர்ந்த சித்தாராம் (வயது 40) என்பவரிடம் போலீசார் விசாரித்தனர்.அவர் முன்னுக்கு பின் முரணாக பேசியதால் சந்தேகம் அடைந்த போலீசார் சேலம் வடக்கு தொகுதி தேர்தல் உதவி அதிகாரியான முத்திரை தாள் விற்பனை தாசில்தார் மாதேஸ்வரனுக்கு தகவல் தெரிவித்தனர்.

    உடனே அங்கு விரைந்து வந்த தாசில்தார் மாதேஸ்வரன் காரில் இருந்த பணம் குறித்து வியாபாரி சித்தாராமிடம் விசாரணை நடத்தினர்.செவ்வாய்ப்பேட்டையில் அழகு சாதன பொருட்கள் விற்பனை கடை வைத்துள்ளதாகவும், சோப்புத்தூள், காப்பித்தூள் மற்றும் சிகெரட் மொத்த வியாபாரம் செய்து வருவதால் அதற்கான பொருட்களை கொள்முதல் செய்ய ஆந்திராவுக்கு செல்வதாகவும் அவர் கூறினார்.

    ஆனால் அதற்கு உரிய ஆவணங்கள் இல்லாததால் ரூ.49 லட்சத்தையும் தேர்தல் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும் அந்த பணத்தை சேலம் வடக்கு தொகுதி தேர்தல் அதிகாரியும், சேலம் ஆர்.டி.ஓ.வுமான செழியனிடம் இன்று காலை ஒப்படைத்தனர். அவர் அந்த பணத்தை சேலம் மாவட்ட கருவூலத்தில் ஒப்படைக்க உள்ளதாகவும், உரிய ஆவணங்களை காட்டி சித்தாராம் பணத்தை வாங்கி கொள்ளலாம் என்றும் கூறினார்.

    தேர்தல் முடிவுகளை அறிவிக்க 30 மணி நேரம் தேவைப்படும் என்று ராமநாதபுரம் கலெக்டர் வீரராகவராவ் தெரிவித்துள்ளார்.
    ராமநாதபுரம்:

    ராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதி பொதுத்தேர்தல் மற்றும் பரமக்குடி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 18-ந்தேதி நடைபெற்றது.

    வாக்குப்பதிவு முடிந்தவுடன் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் மற்றும் வாக்காளர் சரிபார்க்கக் கூடிய எந்திரங்கள் அனைத்தும் வாக்கு எண்ணும் மையமான ராமநாதபுரம் அண்ணா பல்லைக்கழக பொறியியல் கல்லூரியில் அந்தந்த சட்டமன்ற தொகுதிகள் வாரியாக பாதுகாப்பு அறைகளில் வைக்கப்பட்டன.

    இந்த மையத்திற்கு காவல்துறை, தமிழ்நாடு காவல்துறை சிறப்புப்பிரிவு, ஆயுதம் ஏந்திய துணை ராணுவ படை வீரர்கள் என மூன்றடுக்கு காவல் பாதுகாப்பு வழங்கப்பட்டு தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.

    வருகிற 23-ந்தேதி வாக்கு எண்ணும் பணிகள் நடைபெறுவதை முன்னிட்டு மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான வீரராகவ ராவ், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஓம்பிரகாஷ் மீனா ஆகியோர் வாக்கு எண்ணும் மையத்திற்கு சென்று மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்தனர்.

    பின்னர் கலெக்டர் வீரராகவராவ் கூறியதாவது:-

    வாக்கு எண்ணிக்கையின் போது முதலாவதாக தபால் வாக்குகள், அதன் தொடர்ச்சியாக மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் பதிவான வாக்குகள் என முறையே வாக்கு எண்ணும் பணிகள் நடைபெறும்.

    மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் பதிவான வாக்குகளை எண்ணும் பணிகளுக்காக ஒவ்வொரு சட்டமன்ற தொகுதி வாரியாக தலா 14 மேசைகள் அமைக்கப்பட்டு ஒவ்வொரு மேசையிலும் வாக்கு எண்ணிக்கை கண்காணிப்பாளர், நுண் பார்வையாளர், உதவியாளர் என 3 அலுவலர்கள் வீதம் வாக்கு எண்ணும் பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

    ஓட்டு எண்ணிக்கையின் போது ஒவ்வொரு சட்டசபை தொகுதிக்கும் தலா 5 விவி பேட் எந்திரங்கள் வேட்பாளர் பெயருடன், சின்னத்தை பதிவு செய்துள்ள எந்திரத்தில் உள்ள வாக்காளர் உறுதி சீட்டுகளையும் எண்ண திட்டமிடப்பட்டுள்ளது.

    ஒரு விவி பேட்டில் உள்ள சீட்டுகளை எண்ணி முடிக்க இரண்டு மணி நேரம் ஆகும் என்பதால் ஒரு சுற்று முடிந்த பின் அதை உறுதிப்படுத்திய பிறகே அடுத்த சுற்று ஓட்டு எண்ணிக்கை தொடங்கும். இதனால் தேர்தல் முடிவுகளை அறிவிக்க 30 மணி நேரத்திற்கு கூடுதலாக அவகாசம் தேவைப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.



    தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி, பெரியகுளம் சட்டமன்ற தொகுதிகளில் தலா ஒரு வாக்குச்சாவடியில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) மறு வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

    தேனி:

    தமிழகத்தில் கடந்த மாதம் 18-ந் தேதி பாராளுமன்ற தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் தேனி பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட பெரியகுளம் அருகே வடுகபட்டியில் உள்ள வாக்குச்சாவடி எண் 197-ல் மாதிரி வாக்குப்பதிவு முடிந்த பின்னர் யாருக்கு வாக்களித்தோம் என்பதை காட்டும் விவி பேட் கருவியில் இருந்து ஒப்புகை சீட்டை அகற்றாமல் தொடர்ந்து வாக்குப்பதிவு நடந்தது.

    இது பற்றி அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இந்த மையத்தில் 1405 வாக்குகள் உள்ளன. இதில் ஆண்கள் 702 பேரும், பெண்கள் 703 பேரும் வாக்காளர்களாக உள்ளனர். இதில் ஆண்கள் 450 பேர், பெண்கள் 454 பேர் என 904 பேர் வாக்களித்திருந்தனர்.

    இதே போல ஆண்டிப்பட்டி அருகே பாலசமுத்திரம் வாக்குச்சாவடி எண் 67-ல் மாதிரி வாக்குப்பதிவு அழிக்காமலும், ஒப்புகை சீட்டை அகற்றாமலும் வாக்குப்பதிவு நடந்தது. இந்த மையத்தில் 644 ஆண்கள், 611 பெண்கள் என 1255 பேர் வாக்காளர்களாக உள்ளனர். இதில் 523 ஆண்கள், 500 பெண்கள் என மொத்தம் 1023 பேர் வாக்களித்திருந்தனர். இதனால் இந்த இரண்டு வாக்குச்சாவடிகளிலும் மறு வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

    இதற்காக 2 வாக்குச்சாவடிகளிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டுள்ளார்கள். தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்கள் இன்று மாலையே வாக்குச்சாவடிகளுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனர். வாக்குச்சாவடிகளுக்கு இன்று காலை வாக்குப்பதிவு எந்திரங்கள் மற்றும் விவி பேட் எந்திரம் அனுப்பி வைக்கப்பட்டது. மாவட்ட தேர்தல் அதிகாரியும் கலெக்டருமான பல்லவி பல்தேவ் வாக்குச்சாவடிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    காங்கிரஸ் தலைமையில் ஆட்சி அமைக்க இன்று காலை ராகுல் காந்தியை சந்திரபாபு நாயுடு சந்தித்து பேசினார்.

    புதுடெல்லி:

    மத்தியில் பாரதீய ஜனதா மீண்டும் ஆட்சி அமைப்பதை தடுப்பதற்கு காங்கிரஸ் கட்சியும், பா.ஜனதாவை எதிர்க்கும் மாநில கட்சிகளும் தீவிரமாக ஆலோசனை நடத்த தொடங்கி உள்ளன.

    இதன் முதல் கட்டமாக காங்கிரஸ் மற்றும் மாநில கட்சிகளை ஓர் அணியில் திரட்டும் நடவடிக்கைகள் தீவிரமாக நடந்து வருகின்றன.

    காங்கிரஸ் கட்சியை எதிர்த்து தொடங்கப்பட்ட தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு மாநில கட்சிகள் அனைத்தையும் காங்கிரசுடன் கை கோர்க்க வைக்க கடந்த மாதம் முதல் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். இடையில் அவரது பேச்சுவார்த்தையில் சற்று தொய்வு ஏற்பட்டது.

    தற்போது அவர் மீண்டும் தனது வியூகத்தை தீவிரப்படுத்த தொடங்கி இருக்கிறார். நேற்று அவர் கம்யூனிஸ்டு கட்சி தலைவர் சீதாராம் யெச்சூரியை சந்தித்து பேசினார். பிறகு ஆம்ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவாலை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

    இந்த நிலையில் இன்று காலை அவர் டெல்லியில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியை சந்தித்து பேசினார். அப்போது தேர்தல் முடிவுகள் வெளியானதும் எத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும் என்று அவர்கள் ஆலோசனை நடத்தினார்கள்.

    மாநில கட்சிகளில் எந்தெந்த கட்சிகள் தங்கள் அணிக்கு உடனடியாக வரும் என்றும் அவர்கள் ஆலோசித்தனர். அதன் அடிப்படையில் அடுத்தக் கட்டமாக எந்தெந்த தலைவர்களை சந்தித்து பேச வேண்டும் என்றும் அவர்கள் முடிவு செய்தனர்.


    இன்று பிற்பகல் பகுஜன் சமாஜ் கட்சி மாயாவதியை சந்திரபாபு நாயுடு சந்தித்து பேசுகிறார். அகிலேஷ் யாதவ், மம்தாபானர்ஜி ஆகியோரையும் சந்திரபாபு நாயுடு சந்திக்க உள்ளார்.

    தேர்தல் முடிவுகள் வெளியாகும் 23-ந்தேதி மாலை எதிர்க்கட்சி தலைவர்கள் அனைவரையும் டெல்லியில் திரள செய்ய வேண்டும் என்ற இலக்குடன் சந்திரபாபு நாயுடு முக்கிய கட்சி தலைவர்களை சந்தித்து வருகிறார்.

    மாநில அரசியலில் எதிரியாக உள்ள தெலுங்கானா ராஷ்டீரிய சமிதி தலைவர் சந்திரசேகர ராவையும் அவர் அழைத்து உள்ளார். இதன் மூலம் பாரதீய ஜனதா ஆட்சிக்கு வருவதை தடுப்பதற்கு சந்திரபாபு நாயுடு அனைத்து வகையிலும் தன்னை தியாகம் செய்ய தயாராக இருப்பதாக தெரிகிறது.

    பாராளுமன்றத்துக்கு இறுதிக் கட்டமாக 8 மாநிலங்களில் உள்ள 59 தொகுதிகளில் நாளை ஓட்டுப்பதிவு நடைபெறுகிறது.

    புதுடெல்லி:

    பாராளுமன்றத்துக்கு 7 கட்டமாக தேர்தல் நடத்த தலைமை தேர்தல் ஆணையம் அட்டவணை வெளியிட்டது.

    அதன்படி கடந்த மாதம் 11-ந்தேதி 91 தொகுதிகளுக்கு முதல் கட்ட தேர்தல் நடந்தது. 18-ந்தேதி 96 தொகுதிகளுக்கும், 23-ந் தேதி 115 தொகுதிகளுக்கும், 29-ந்தேதி 71 தொகுதிகளுக்கும் தேர்தல் நடத்தப்பட்டது.

    கடந்த 6-ந்தேதி 51 தொகுதிகளுக்கும், 12-ந் தேதி 6-வது கட்டமாக 59 தொகுதிகளுக்கும் ஓட்டுப்பதிவு நடைபெற்றது. இறுதிக் கட்டமாக 8 மாநிலங்களில் உள்ள 59 தொகுதிகளுக்கு தேர்தல் நடத்த தலைமை தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்து இருந்தது.

    பீகார் (8), ஜார்க்கண்ட் (3), மத்திய பிரதேசம் (8), பஞ்சாப் (13), மேற்குவங்காளம் (9), சண்டிகர் (1), உத்தரபிரதேசம் (13), இமாச்சலபிரதேசம் (4) ஆகிய மாநிலங்களில் இந்த 59 தொகுதிகள் இடம் பெற்றுள்ளன. கடந்த மாதம் 30-ந்தேதி இந்த 59 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் விவரம் அறிவிக்கப்பட்டது.

     


    கடந்த 2 வாரங்களாக இந்த 59 தொகுதிகளிலும் அனல் பறக்கும் பிரசாரம் நடந்து வந்தது. பா.ஜனதா சார்பில் பிரதமர் மோடி, அமித்ஷா மற்றும் மத்திய மந்திரிகள் 8 மாநிலங்களிலும் ரோடு ஷோ நடத்தி ஆதரவு திரட்டினார்கள். அதுபோல காங்கிரஸ் தலைவர் ராகுல், பிரியங்கா ஆகியோரும் அதிரடி பிரசாரத்தில் ஈடுபட்டனர்.

    இதற்கிடையே மாநில கட்சிகளின் தலைவர்களான மம்தா பானர்ஜி, மாயாவதி, அகிலேஷ் யாதவ் ஆகியோரும் இறுதி கட்ட பிரசாரத்தை மேற்கொண்டனர். மேற்கு வங்காளத்தில் கலவரம் ஏற்பட்டதால் அங்குள்ள 9 தொகுதிகளிலும் நேற்று முன்தினமே பிரசாரம் ஓய்ந்தது.

    மற்ற 50 தொகுதிகளில் நேற்று மாலையுடன் பிரசாரம் முடிவுக்கு வந்தது. இதன் மூலம் கடந்த 2 மாதமாக பரபரப்பாக நடந்து வந்த தேர்தல் பிரசாரம் நிறைவு பெற்றுள்ளது.

    நாளை (ஞாற்றுக்கிழமை) காலை 7 மணிக்கு ஓட்டுப்பதிவு தொடங்குகிறது. இதற்காக 59 தொகுதிகளிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பதட்டமான தொகுதிகளில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    முதல் 6 கட்ட தேர்தல் மூலம் 483 தொகுதிகளுக்கு ஓட்டுப்பதிவு நிறைவு பெற்றுள்ளது. நாளை 59 தொகுதிகளுக்கு ஓட்டுப்பதிவு முடிந்ததும் 542 தொகுதிகளுக்கான தேர்தல் நிறைவு பெறும். பணப்பட்டுவாடா புகார் காரணமாக நிறுத்தப்பட்டுள்ள வேலூர் தொகுதிக்கு மட்டும் பின்னர் தேர்தல் நடைபெறும்.

    நாளை நடக்கும் தேர்தலில் சுமார் 10 கோடி பேர் வாக்களிக்க உள்ளனர். இதற் காக 59 தொகுதிகளிலும் 1 லட்சத்து 12 ஆயிரத்து 986 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

    59 தொகுதிகளில் மொத்தம் 918 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இவர்களில் பிரதமர் மோடி போட்டியிடும் வாரணாசி தொகுதி மிகுந்த எதிர் பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

    நாளை சத்ருகன்சின்கா, ரவிசங்கர்பிரசாத், நிஷா பாரதி, பவன்குமார் பன்சால், சன்னி தியோல் ஆகியோர் தொகுதிகளிலும் ஓட்டுப்பதிவு நடைபெற உள்ளது. கடந்த 2014-ம் ஆண்டு தேர்தலில் இந்த 50 தொகுதிகளிலும் 33 தொகுதிகளை பாரதிய ஜனதா கைப்பற்றி இருந்தது. இந்த தடவை மாநில கட்சிகளின் கடுமையான சவால் காரணமாக பாரதிய ஜனதா நெருக்கடிக்கு தள்ளப்பட்டு உள்ளது.

    ×