search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பிரதமர் பதவிக்கு காங். உரிமை கோரும்- குலாம்நபி ஆசாத் ‘திடீர்’ பல்டி
    X

    பிரதமர் பதவிக்கு காங். உரிமை கோரும்- குலாம்நபி ஆசாத் ‘திடீர்’ பல்டி

    பிரதமர் பதவிக்கு காங்கிரஸ் கட்சி உரிமை கோரும் என்று முன்னாள் மத்திய மந்திரி குலாம்நபி ஆசாத் திடீர் பல்டி அடித்துள்ளார்.

    புதுடெல்லி:

    பாராளுமன்றத்துக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகிறது. 7-வது மற்றும் இறுதிகட்ட வாக்குப்பதிவு நாளை நடக்கிறது.

    பாராளுமன்ற தேர்தலுக்கு பிறகு மீண்டும் பா.ஜனதா தலைமையிலான ஆட்சி அமைவதை தடுக்க காங்கிரஸ் கட்சி தீவிரமாக காய்களை நகர்த்தி வருகிறது. மாநில கட்சிகளுக்கு வளைந்து கொடுக்கும் வகையில் பல்வேறு முடிவுகளையும் எடுக்க அந்த கட்சி தயாராகி வருகிறது.

    இது தொடர்பாக காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய மந்திரியுமான குலாம்நபி ஆசாத் சிம்லாவில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தனிப்பெரும் கட்சியாக காங்கிரஸ் வந்தால் கூட மாநில கட்சிகளில் இருந்து ஒரு தலைவர் பிரதமராக வர விரும்பினால் காங்கிரஸ் ஆதரிக்கும். பிரதமர் பதவிக்கு காங்கிரஸ் உரிமை கோராது, பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வரக் கூடாது என்பதே எங்கள் இலக்கு.

    இவ்வாறு அவர் கூறி இருந்தார்.

    இந்த நிலையில் குலாம் நபி ஆசாத் தனது கருத்தில் இருந்து திடீர் பல்டி அடித்துள்ளார். பிரதமர் பதவிக்கு காங்கிரஸ் உரிமை கோரும் என்று அவர் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    காங்கிரஸ் கட்சி பிரதமர் பதவிக்கு உரிமை கோராது என்பதில் உண்மையில்லை. நாட்டிலே மிகவும் பழமையான பெரிய கட்சி காங்கிரஸ் ஆகும்.

    5 ஆண்டுகள் ஆட்சி செய்ய கூடிய கட்சி என்பதால் மிகப் பெரிய கட்சிக்கு வாய்ப்பு வழங்க வேண்டும். இன்னும் தேர்தல் முடிவுகள் வராத நிலையில் கூட்டணியில் இது குறித்து சண்டை போட்டு கொள்ளக் கூடாது. பிரதமர் பதவி கருத் தொற்றுமை அடிப்படையில் முடிவு செய்யப்படும்.

    தேர்தல் முடிவுக்கு பிறகு காங்கிரஸ் மிகப் பெரிய கட்சியாக உருவெடுக்கும். 273 இடங்கள் வரை கைப்பற்றும். கடந்த காலங்களிலும் வென்று இருக்கிறோம். இனி மேலும் வெல்வோம் என்ற நம்பிக்கை இருக்கிறது. அதே சமயம் ராகுல் காந்தி தலைமையில் காங்கிரஸ் அரசு அமைந்து நாட்டில் 5 ஆண்டுகள் நிலையான ஆட்சி தரும்.


    பிரதமராக வருவதற்கு ராகுல் காந்திக்கு தகுதிகள் இருக்கின்றன. மன்மோகன்சிங், வாஜ்பாய் ஆகியோர் 5 ஆண்டுகள் ஆட்சியை நிறைவு செய்ததற்கு காரணம் எம்.பி.க்கள் அதிகமாக இருந்தனர். எனவே நிலையான அரசு அமைவதற்கு காங்கிரஸ் கட்சிதான் தேர்வு.

    இவ்வாறு குலாம்நபி ஆசாத் கூறியுள்ளார்.

    Next Story
    ×