என் மலர்
தேர்தல் செய்திகள்
புதுடெல்லி:
பாராளுமன்ற தேர்தலில் 7-வது மற்றும் கடைசி கட்ட ஓட்டுப்பதிவு இன்று விறுவிறுப்பாக நடந்தது.
இன்று தேர்தல் நடந்த 59 தொகுதிகளில் பிரதமர் மோடி போட்டியிடும் வாரணாசி தொகுதியும் அடங்கும். இந்த நிலையில் மோடி இன்று காலை தனது டுவிட்டர் பக்கத்தில் வாக்காளர்களுக்கு செய்தி ஒன்றை தெரிவித்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-
இன்று 2019-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் கடைசி கட்ட ஓட்டுப்பதிவு நடக்கிறது.

இந்த கடைசி கட்ட ஓட்டுப் பதிவில் அதிக அளவில் வாக்குப்பதிவு செய்து சாதனை படைக்க வேண்டும் என்று வாக்காளர்களை வலியுறுத்துகிறேன்.
உங்கள் ஒரு வாக்கு இந்தியாவின் வளர்ச்சியை வரும் ஆண்டுகளில் தீர்மானிக்கும். முதல் முறையாக வாக்களிக்கும் இளம் வாக்காளர்கள் ஆர்வத்துடன் வந்து வாக்களிப்பார்கள் என்று நானும் நம்புகிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
அரவக்குறிச்சி:
அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை முதல் விறுவிறுப்பாக நடை பெற்றது. அசம்பாவித சம்பவங்கள் ஏற்படாதவாறு இருக்க போலீசார் மற்றும் துணை ராணுவ படையினர் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். ரோந்து பணி மற்றும் வாகன சோதனையிலும் ஈடுபட்டனர்.
இந்தநிலையில் தொகுதிக்குட்பட்ட பள்ளப்பட்டி அண்ணா நகர் பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அந்த வழியாக ஒன்றன்பின் ஒன்றாக 4 ஆம்னி பஸ்கள் வந்தன. அதனை வழிமறித்து போலீசார் மற்றும் அதிகாரிகள் திருச்சி மத்திய மண்டல ஐ.ஜி. வரதராஜூ, எஸ்.பி. விக்ரமன் ஆகியோர் தலைமையில் சோதனை நடத்தினர்.
அப்போது அந்த பஸ்களில் முஸ்லிம்கள் ஏராளமானோர் இருந்தனர். அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது வெளியூர் நபர்களுக்கு இங்கு அனுமதியில்லை என்றனர்.

இதையடுத்து பஸ்சில் வந்தவர்கள், நாங்கள் பள்ளப்பட்டி பகுதியை சேர்ந்தவர்கள் என்றும், அரவக்குறிச்சி தொகுதி இடைத்தேர்தலில் வாக்களிக்க வந்துள்ளதாகவும் தெரிவித்தனர். இருப்பினும் சந்தேகமடைந்த போலீசார், பள்ளப்பட்டியை சேர்ந்தவரா? என்பதற்கான அடையாள அட்டையை காண்பித்து விட்டு அனைவரும் செல்லும்படி அறிவுறுத்தினர்.
இதற்காக அவர்களின் வாக்காளர் அட்டையை வைத்து அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அதன் பிறகு அவர்கள் அங்கிருந்து செல்ல அனுமதிக்கப்பட்டனர்.
பள்ளப்பட்டி பகுதியில் முஸ்லிம்கள் அதிகம் பேர் வசிக்கின்றனர். அவர்களில் பலர் சென்னை, மும்பை, டெல்லி உள்ளிட்ட நகரங்களில் தொழில் செய்து வருகின்றனர். அரவக்குறிச்சி தொகுதியை பொறுத்தமட்டில் முஸ்லிம் வாக்குகள் மட்டும் 30 சதவீதம் உள்ளது. இதனால் அனைத்து கட்சியினரும் முஸ்லிம்களின் வாக்குகளை குறிவைத்து தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டனர்.
இந்தநிலையில் வாக்களிக்க வந்த இஸ்லாமியர்கள் கூறுகையில், ஜனநாயக கடமையை ஆற்றுவதற்காக நாங்கள் வாக்களிக்க வந்தோம். ஆனால் போலீசார் எங்கள் மீது சந்தேகமடைந்து விசாரணை நடத்தினர். எங்களின் வாக்காளர் அடையாள அட்டைகளை பார்த்த பிறகே வாக்களிக்க செல்ல அனுமதி அளித்தனர். நாங்கள் யாரிடமும் பணம் பெற்றுக்கொண்டு வாக்களிக்க வரவில்லை. ஜனநாயக கடமையை ஆற்ற வந்துள்ளோம். இருப்பினும் போலீசார் எங்களிடம் விசாரணை நடத்தியது வருத்தமளிக்கிறது என்றனர்.
சென்னை:
தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு அளித்துள்ள பேட்டி விவரம்:-
கேள்வி:- அரசு ஊழியர் மற்றும் அரசு சாரா ஊழியர்களின் தபால் ஓட்டு பதிவில் தாமதம் ஏதும் ஏற்பட்டதா? பலருக்கு இன்னும் ஓட்டு சீட்டே வரவில்லை என்று அரசு ஊழியர் சங்கம் கூறி இருக்கிறதே?
பதில்:- இது சம்பந்தமான அனைத்து விவரங்களையும் கோர்ட்டில் தாக்கல் செய்துள்ளோம். அனைத்து தபால் ஓட்டு சீட்டுகளும் முறைப்படி வழங்கப்பட்டன. மாவட்ட தேர்தல் அதிகாரிகளும், தேர்தல் நடத்தும் அதிகாரிகளும் இதை கவனித்து கொண்டார்கள்.
தற்போது இதன் ஓட்டு பெட்டிகள் தேர்தல் கமிஷன் வழிகாட்டுதல்படி மாவட்ட தேர்தல் அதிகாரிகளிடம் இருக்கிறது. மேலும் இந்த விவகாரம் கோர்ட்டு விசாரணையில் இருக்கிறது.
கே:- தேர்தல் முடிந்த பிறகும் தேர்தல் தொடர்பான ஆவணங்களை தேர்தல் அதிகாரிகளே கைவசம் வைத்திருப்பதாக குற்றம் சாட்டப்படுகிறதே?
ப:- இது சம்பந்தமாகவும் கோர்ட்டில் விளக்கம் அளித்து விட்டோம். விசாரணை நிலுவையில் உள்ளது.
கே:- ஓட்டு எந்திரங்களை தேனி தொகுதிக்கு மாற்றியது பற்றி என்ன கூறுகிறீர்கள்?

ப:- தேர்தல் சாதனங்களை ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்துக்கு மாற்றுவது வழக்கமான நடைமுறைதான். தேர்தல் கமிஷன் விதித்துள்ள விதிமுறைகள்படிதான் இவற்றை செய்தோம்.
அரசியல் கட்சிகளுக்கும் இதுபற்றி தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த கட்சிகளின் பிரதிநிதிகளும் கையெழுத்திட்டுள்ளனர்.
கோவை மற்றும் திருவள்ளூரில் பயன்படுத்தாத ஓட்டு எந்திரங்கள்தான் இவ்வாறு மாற்றப்பட்டன.
ஓட்டு எந்திரங்கள் மாற்றப்படும் போது முதல்கட்ட பரிசோதனை நடைபெறும். பின்னர் ஓட்டு எந்திரங்கள் ஸ்டிராங் அறைக்கு கொண்டு செல்லப்படும். எத்தனை ஓட்டு பெட்டிகள் என்ற விவரமும் வேட்பாளர்களுக்கு தெரிவிக்கப்படும்.
கே:- தேர்தல் போலீஸ் டி.ஜி.பி. அசுதோஷ் சுக்லா சில அதிகாரிகளை மாற்றம் செய்ய கூறிய போதும், அதை செய்யவில்லை என்று கூறப்படுகிறதே? இதற்கு யார்தான் பொறுப்பு?
ப:- எப்போது இது போன்ற பரிந்துரை வந்தாலும் அதுபற்றி தேர்தல் கமிஷனுக்கு தகவல் அனுப்பி விடுவோம். தேர்தல் கமிஷன் தான் இதில் முடிவு எடுக்கும்.
இவ்வாறு சத்யபிரத சாகு கூறினார்.
அரவக்குறிச்சி:
அரவக்குறிச்சி தொகுதி இடைத்தேர்தல் இன்று காலை 7 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. மொத்தமுள்ள 250 வாக்குச்சாவடிகளிலும் ஆண்கள், பெண்கள் நீண்ட வரிசையில் நின்று தங்களது வாக்கினை பதிவு செய்து வருகிறார்கள்.
பதற்றமான 29 வாக்குச் சாவடிகளில் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதற்கிடையே முக்கியமான வாக்குச்சாவடிகளுக்கு தி.மு.க. வேட்பாளர் செந்தில் பாலாஜி மற்றும் அ.தி.மு.க. வேட்பாளர் செந்தில்நாதன் உள்ளிட்ட மற்ற கட்சி வேட்பாளர்களும் நேரில் சென்று வாக்குப்பதிவை பார்வையிட்டனர்.
இந்தநிலையில் வேலாயுதம்பாளையம் அருகே தோட்டக்குறிச்சியில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடி மையம் அருகே அ.தி.மு.க., தி.மு.க.வினர் தேர்தல் பணிமனைகளை அருகருகே அமைத்திருந்தனர். இதனால் இரு கட்சி தொண்டர்களும் அங்கு அதிக அளவில் குவிந்திருந்தனர்.
திடீரென அரசியல் கட்சியினர் திரண்டு நின்றதால் வாக்களிக்க வந்த வாக்காளர்கள் சற்றே பீதியுடன் காணப்பட்டனர்.
உடனடியாக அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அவர்களிடம் சென்று ஏன் இங்கு திரண்டு நிற்கிறீர்கள்? என்று கேட்டனர். அதற்கு தி.மு.க.வினர் தங்களது வேட்பாளர் செந்தில் பாலாஜியை வரவேற்பதற்காக வந்துள்ளதாக தெரிவித்தனர். நீங்கள் இப்படி திரண்டு நிற்பதால் வாக்காளர்கள் அச்சம் அடைந்து இருப்பதாக கூறி, கலைந்து செல்லுமாறு போலீசார் அறிவுறுத்தினர்.

இதேபோல் அ.தி.மு.க. வினரையும் அங்கிருந்து கலைந்து செல்லுமாறு போலீசார் கூறினர். இருப்பினும் அவர்கள் அங்கிருந்து செல்லாமல் இருந்தனர். போலீசாருடன் தர்க்கம் செய்த தி.மு.க.வினர் நாங்கள் வாக்குச்சாவடிக்கு 200 மீட்டர் தூரத்திற்கு அப்பால் தான் நின்று கொண்டிருக்கிறோம் என்று கூறி வாதம் செய்தனர். தொடர்ந்து அவர்களை கலைந்து செல்லுமாறு திருச்சி சரக டி.ஐ.ஜி. லலிதா லட்சுமி மைக் மூலம் எச்சரிக்கை விடுத்தார்.
இதையடுத்து அங்கிருந்து கலைந்து அருகில் உள்ள தெருவில் நாற்காலிகளை போட்டு அமர்ந்தனர். அங்கிருந்தும் கலைந்து செல்லுமாறு போலீசார் எச்சரித்தனர். வாக்குச்சாவடிக்கு வரும் வாக்காளர்களுக்கு எந்த விதமான இடை யூறும் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காகத்தான் தாங்கள் கூறுவதாகவும், உடனே கலைந்து செல்லுமாறும் போலீசார் தொடர்ந்து கூறினர்.
ஆனாலும் அவர்கள் அங்கேயே நின்றுகொண்டு இருந்ததால் அங்கு பரபரப்பான சூழ்நிலை உருவாகியது.
இதற்கிடையே தி.மு.க. வேட்பாளர் செந்தில்பாலாஜி அங்கு வந்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
அரவக்குறிச்சி தொகுதியல் 250 வாக்குச்சாவடிகளிலும் காவல் துறை உயர் அதிகாரிகள் மற்றும் போலீசார் நின்றுகொண்டு தி.மு.க. மற்றும் எங்கள் தோழமை கட்சியினரின் களப்பணியை தடுத்து வருகிறார்கள். அதாவது எங்கள் கட்சி சின்னத்தை எடுத்துக்கூறுவதற்கு கூட அனுமதி மறுக்கிறார்கள்.
மனிதாபிமானமற்ற முறையில், ஈவு இரக்கமின்றி எங்கள் கட்சியினரை அப்புறப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள். நாங்கள் தேர்தல் ஆணையத்தின் விதிமுறைக்கு உட்பட்டுதான் செயல்படுகிறோம். 300 மீட்டருக்கு அப்பால் வேட்பாளரின் பெயர், சின்னத்தை பிளக்சாக வைக்க தேர்தல் ஆணையமே அனுமதி வழங்கியுள்ளது. ஆனால் காவல் துறை அனுமதி மறுக்கிறது.
அதே நேரத்தில் ஆளுங்கட்சியான அ.தி.மு.க. வேட்பாளரின் பிளக்ஸ் கூட்டணி கட்சி தலைவர்களின் படங்களுடன் வைக்க காவல் துறை அனுமதி அளித்துள்ளது. இது காவல்துறையின் ஒரு தலைப்பட்சமான, ஆளுங்கட்சிக்கு ஆதரவாக செயல்படும் நிலையை காட்டுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.

பாஜகவை சேர்ந்த 3 பேர் தங்களது விரலில் மை வைத்து ரூ. 500 கொடுத்துச்சென்றதாக கிராம மக்கள் புகார் தெரிவித்துள்ளனர். நீங்கள் எங்கள் கட்சிக்கு தான் வாக்களிக்க வேண்டும். இல்லையென்றால் வாக்களிக்க முடியாது என்றும் கூறியதாக கிராம மக்கள் தெரிவித்துள்ளனர். தேர்தலுக்கு ஒரு நாளைக்கு முன்னதாகவே வாக்காளர்கள் விரலில் மை வைக்கப்பட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக காவல்துறையினரும், அதிகாரிகளும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
உத்தர பிரதேசத்தின் வாரணாசி உட்பட, எட்டு மாநிலங்களில் உள்ள, 59 தொகுதிகளில் 7-ம் கட்ட மற்றும் இறுதிக்கட்ட மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது.
இன்று காலை பாட்னாவில் உள்ள ராஜ்பவன் வாக்குச்சாவடியில் தனது வாக்கை பதிவு செய்த பீகார் முதல்வர் நிதிஷ்குமார் வாக்களித்து விட்டு வெளியில் வரும் போது செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
அப்போது அவர் மக்களவை தேர்தலை இதுபோல் நீண்ட நாட்கள் நடத்தக்கூடாது என்றும், ஒவ்வொரு கட்ட தேர்தலுக்கும் இடையே அதிக நாட்கள் இடைவெளியும் தேவையில்லை என்றும், தேர்தலை குறைந்த நாட்களில் நடத்தும் விவகாரம் பற்றி அனைத்துக்கட்சிகளுக்கும் கடிதம் எழுதுவேன் என்று கூறினார்.
உத்தர பிரதேசத்தின் வாரணாசி உட்பட, எட்டு மாநிலங்களில் உள்ள, 59 தொகுதிகளில் 7-ம் கட்ட மற்றும் இறுதிக்கட்ட மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது.

இறுதிக்கட்ட மக்களவை தேர்தலில் முன்னிட்டு இன்று காலை உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கோரம்பூரில் வாக்களித்தார். அதே போல் பீகார் முதல்வர் நிதிஷ்குமார் பாட்னாவில் உள்ள ராஜ்பவன் வாக்குச்சாவடியில் தனது வாக்கை பதிவு செய்தார்.
நாடு முழுவதும் 59 மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது. பிரதமர் நரேந்திர மோடி, மீண்டும் போட்டியிடும், உத்தர பிரதேசத்தின் வாரணாசி உட்பட, எட்டு மாநிலங்களில் உள்ள, 59 தொகுதிகளில் ஓட்டுப் பதிவு நடக்கிறது.
ஹிமாச்சாலப்பிரதேசத்தில் 4, ஜார்கண்டில் 3, சண்டிகரில் ஒரு தொகுதியிலும் வாக்குப்பதிவு தொடங்கியது. பஞ்சாப்பில் 13, மேற்கு வங்கத்தில் 9, மத்திய பிரதேசத்தில் தலா 8 தொகுதிகளிலும் வாக்குப்பதிவு நடக்கிறது.
நாட்டின், 17-வது மக்களவை தேர்தல், இறுதிக் கட்டத்தை எட்டி உள்ளது. மக்களவைவில் உள்ள, 543 தொகுதிகளுக்கு, ஏழு கட்டங்களாக தேர்தல் நடைபெறும் என, மார்ச், 10ல் அறிவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, ஏப்., 11 முதல் இதுவரை, ஆறு கட்டங்களாக ஓட்டுப் பதிவு நடந்துள்ளது. கடைசி கட்ட ஓட்டுப் பதிவு, எட்டு மாநிலங்களில் உள்ள, 59 தொகுதிகளுக்கு இன்று நடக்கிறது.

உத்தர பிரதேசத்தின், வாரணாசி தொகுதியில், பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் போட்டியிடுகிறார். கடந்த மக்களவை தேர்தலில், 3.71 லட்சம் வித்தியாசத்தில் மோடி வென்றார். அவருக்கு, 5.51 லட்சம் ஓட்டுகள் கிடைத்தன. தற்போது, பிரதமர் மோடியை எதிர்த்து, காங்., சார்பில், அஜய் ராய் மீண்டும் களமிறக்கப்பட்டுள்ளார். பகுஜன் சமாஜ் - சமாஜ்வாதி கூட்டணியில், சமாஜ்வாதியின் சார்பில், ஷாலினி யாதவ் நிறுத்தப்பட்டுள்ளார். மத்திய அமைச்சர், மனோஜ் சின்ஹா, உத்தர பிரதேச பாஜக தலைவர், மகேந்திர நாத் பாண்டே ஆகியோரும் மீண்டும் போட்டியிடுகின்றனர்.
மத்திய பிரதேசத்தில், மத்திய அமைச்சர்கள், காந்திலால் புரியா, அருண் யாதவ் ஆகியோர் மீண்டும் போட்டியிடுகின்றனர். ஏழு கட்டத்திலும் தேர்தலை சந்திக்கும், பீஹாரில் உள்ள, எட்டு தொகுதிகளில், 157 பேர் போட்டியிடுகின்றனர். இதில், நான்கு மத்திய அமைச்சர்களும் அடங்குவர். பாட்னா சாஹிப் தொகுதி, மிகவும் எதிர்பார்க்கப்படும் தொகுதியாக அமைந்துள்ளது.
மத்திய சட்ட அமைச்சர், ரவி சங்கர் பிரசாத் இங்கு போட்டியிடுகிறார். இந்தத் தொகுதியின் தற்போதைய, எம்பியான நடிகர் சத்ருகன் சின்ஹா, பாஜகவில் இருந்து விலகி, தற்போது, காங்கிரஸ் சார்பில் இங்கு போட்டியிடுகிறார்.
திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, ஓட்டப்பிடாரம், சூலூர் ஆகிய 4 சட்டசபை தொகுதிகளில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இடைத்தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. இதில் திருப்பரங்குன்றம் தொகுதி சற்று வித்தியாசமானது. கடந்த 3 ஆண்டுகளில் இந்த தொகுதி 2-வது முறையாக இடைத்தேர்தலை சந்திப்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இந்த தொகுதிகளில் காலை 6 மணி அளவில் மாதிரி வாக்குப்பதிவு தொடங்கி சரிபார்க்கும் பணி நடைபெற்றது. அதனை தொடர்ந்து 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடக்கும். ஏற்கனவே அங்கு பாராளுமன்ற தேர்தல் நடைபெற்றிருந்த நிலையில் இடைத்தேர்தல் நடப்பதால், வாக்காளர்களின் நடுவிரலில் அழியாத மை வைக்கப்படும்.
இடைத்தேர்தல் நடக்கவுள்ள 4 சட்டமன்ற தொகுதிகளுக்கும் மொத்தம் 5,508 தேர்தல் பணியாளர்கள் ஈடுபடுத்தப்படுகிறார்கள். ஒவ்வொரு வாக்குச்சாவடிகளிலும் ஒருவர் என்ற வீதத்தில் 1,364 நுண் பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்த இடைத்தேர்தலுக்காக 4 தொகுதிகளிலும் 656 வெப் கேமராக்கள் வைக்கப்பட்டுள்ளன.
கடந்த ஏப்ரல் 18-ந் தேதி நடந்த வாக்குப்பதிவின் போது சில வாக்குச்சாவடிகளில் பிரச்சினைகள் ஏற்பட்டன. சில வாக்குச்சாவடிகள் கைப்பற்றப்பட்டன. சில வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு எந்திரங்களில் பிரச்சினை ஏற்பட்டது. சில இடங்களில் மாதிரி வாக்குப்பதிவை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அழிக்காமல் விட்டுவிட்டனர்.
அதன் அடிப்படையில் 13 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவை நடத்த இந்திய தேர்தல் ஆணையம் ஏற்கனவே உத்தரவிட்டிருந்தது. அதனை முன்னிட்டு 13 வாக்குச்சாவடியிலும் மறுவாக்கு இன்று நடைபெற்று வருகிறது. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணிக்கு முடியும்.
திருவள்ளூர் பாராளுமன்ற தொகுதி மற்றும் பூந்தமல்லி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மேட்டுப்பாளையம் பஞ்சாயத்து யூனியன் தொடக்கப்பள்ளியில் உள்ள 195-ம் வாக்குச்சாவடியில் மறுவாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.
கரூரில் உள்ள மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் மோகன்ராஜின் வீட்டில் அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர். மோகன்ராஜ் பணப்பட்டுவாடா செய்வதாக கிடைத்த புகாரை தொடர்ந்து பறக்கும் படை அலுவலர் மனோகரன் தலைமையில் சோதனை நடத்தப்பட்டது.
இந்நிலையில் மோகன்ராஜ் வீட்டில் நடைபெற்ற சோதனையில் எதுவும் சிக்காததால் தேர்தல் பறக்கும் படையினர் திரும்பிச் சென்றனர்.

இந்நிலையில், பீகார் தலைநகர் பாட்னா தொகுதியில் அமைக்கப்பட்டுள்ள 37,38 மற்றும் 40-ம் எண் கொண்ட வாக்குச்சாவடிகளில் மக்களை வாக்குப்பதிவுக்கு ஈர்க்கும் வகையில் குழந்தைகளுக்கு தாய்ப்பால் புகட்டும் அறை, குழந்தைகள் காப்பகம் போல் விளையாட்டு பொருட்கள் மற்றும் முதலுதவி போன்ற சிறப்பு வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளது.







