என் மலர்
தேர்தல் செய்திகள்




ஆண்டிப்பட்டி:
தேனி பாராளுமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் இ.வி.கே.எஸ்.இளங்கோவன் இன்று ஆண்டிப்பட்டியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தேனி பாராளுமன்ற தொகுதிக்கான தேர்தல் பலவித சர்ச்சைகளுக்கு பிறகு முடிவடைந்தது. ஆனால் யாரும் எதிர்பார்க்காத வகையில் 2 வாக்குச்சாவடி மையத்திற்கு மறுவாக்குப்பதிவு நடத்த தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
இதனை எந்த கட்சிகளும் விரும்ப வில்லை. துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வாரணாசி சென்று பிரதமர் மோடியிடம் கோரிக்கை வைத்துள்ளார். தனது மகனை எப்படியாவது டெபாசிட் தொகையாவது வாங்கச் செய்ய வைக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். அவரது கோரிக்கையை ஏற்றே தற்போது இங்கு மறுதேர்தல் நடத்தப்படுகிறது.
இறுதிகட்ட தேர்தல் நடந்து வரும் நிலையில் மோடி 20 மணி நேரத்துக்கு மேலாக குகையில் அமர்ந்து தியானம் செய்து வருகிறார். அவர் குகையிலேயே இருப்பதுதான் இனி நாட்டு மக்களுக்கு நல்லது.

வருகிற 23-ந் தேதி வாக்கு எண்ணிக்கைக்கு பிறகு நல்ல தீர்ப்பு கிடைக்கும். இந்தியாவில் ராகுல்காந்தி அடுத்த பிரதமராக பதவி ஏற்பார். தமிழகத்தில் மு.க.ஸ்டாலின் முதல்-அமைச்சராக பதவி ஏற்பார். இந்த மாற்றத்தை எதிர்பார்த்துதான் தமிழகத்திலும் இந்தியாவிலும் மக்கள் வாக்களித்து வருகின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
லக்னோ:
உத்தரபிரதேச மாநிலம் ரேபரேலி பாராளுமன்ற தொகுதியில் 1977-ம் ஆண்டு அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி போட்டியிட்டார். அவர் பாரதிய லோக் தளம் கட்சியை சேர்ந்த ராஜ் நாராயணனால் தோற்கடிக்கப்பட்டார்.
இந்த சம்பவத்தை குறிப்பிட்டு பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி தனது டுவிட்டர் பக்கத்தில் 1977-ம் ஆண்டு ரேபரேலி தொகுதியில் நடந்தது போல இப்போது வாரணாசி தொகுதியில் மோடி தோற்கடிக்கப்பட வேண்டும் என்று விருப்பம் தெரிவித்து உள்ளார்.
இது தொடர்பாக மாயாவதி தனது டுவிட்டர் பக்கத்தில் கூறி இருப்பதாவது:-

உத்தரபிரதேச மாநிலத்தின் கிழக்கு பகுதியில் எந்த வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படவில்லை. அங்குள்ள மக்கள் அனைவரையும் முதல்-மந்திரி யோகி ஆதித்ய நாத்தும், பிரதமர் நரேந்திர மோடியும் ஏமாற்றி விட்டனர். கோரக்பூர் பாராளுமன்ற தொகுதியில் யோகி ஆதித்யநாத்தை மக்கள் நிராகரித்தனர்.
பிரதமர் மோடியின் வெற்றியைவிட அவரது தோல்வி வரலாற்று சிறப்பு மிக்கதாக இருக்கும். 1977-ம் ஆண்டு ரேபரேலி தொகுதியில் நிகழ்ந்தது இப்போது வாரணாசிதொகுதியில் மீண்டும் நிகழுமா?
குஜராத்தின் வளர்ச்சியை போல கிழக்கு உத்தரபிரதேசத்தின் வறுமை, வேலை வாய்ப்பின்மை உள்ளிட்டவற்றை நீக்கவில்லை. மாநிலத்தில் வளர்ச்சியை ஏற்படுத்துவதை விடுத்து வகுப்பு வாரியான வன்முறையையும், ஜாதி ரீதியான கலவரத்தையும் மத்திய, மாநில பா.ஜனதா அரசுகள் தூண்டி விடுகின்றன. இது மிகவும் கவலையை ஏற்படுத்தி உள்ளது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.



திருநின்றவூர்:
தமிழகத்தில் ஏப்ரல் 18-ந் தேதி பாராளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடந்தது.
அப்போது திருவள்ளூர் பாராளுமன்ற தொகுதிக்குட்பட்டதும், பூந்தமல்லி சட்டமன்ற இடைத்தேர்தலுக்கு உட்பட்டதும் ஆன திருநின்றவூர் அருகே உள்ள மேட்டுப்பாளையம் கிராமத்தில் உள்ள ஒரு வாக்குச்சாவடியில் (எண் 195) வாக்கு எண்ணிக்கையில் குளறுபடி ஏற்பட்டது.
அப்போது மொத்தம் 858 ஓட்டுகள் பதிவானதாக முடிவு செய்யப்பட்டது. ஆனால் இறுதியில் வாக்குப்பதிவு எந்திரத்தில் பதிவான ஓட்டுகளை சரிபார்த்த போது திருவள்ளூர் பாராளுமன்ற தொகுதிக்கு 27 வாக்குகளும், பூந்தமல்லி எம்.எல்.ஏ. தொகுதிக்கு 37 வாக்குகளும் கூடுதலாக பதிவாகி இருந்தன.
இதையடுத்து மேட்டுப்பாளையம் கிராமத்தில் உள்ள வாக்குச்சாவடி எண் 195-ல் மறுவாக்குப்பதிவு இன்று (19-ந் தேதி) நடைபெறும் என்று தேர்தல் கமிஷன் அறிவித்தது.

அதன்படி மேட்டுப்பாளையம் கிராமத்தில் உள்ள வாக்குச்சாவடியில் இன்று மறுவாக்குப்பதிவு நடைபெற்றது.
வாக்குப்பதிவு நேரம் தொடங்கியது முதலே வாக்காளர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து ஓட்டு போட்டனர். வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால் காலையிலே ஏராளமானோர் வாக்களித்தனர்.
அவர்களுக்கு திருவள்ளூர் பாராளுமன்றதொகுதி, பூந்தமல்லி சட்டமன்ற இடைத்தேர்தல் நடந்ததால் 2 ஓட்டு போட்டனர். அவர்களது இடது கை நடுவிரலில் மை வைக்கப்பட்டது.
இந்த வாக்குச்சாவடியில் மொத்தம் 513 ஆண் வாக்காளர்களும், 536 பெண் வாக்காளர்களும் என மொத்தம் 1049 பேர் உள்ளனர்.
மறுவாக்குப்பதிவு நடைபெறுவதையொட்டி வாக்குச்சாவடியில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. துணை ராணுவப் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
சென்னை:
அரவக்குறிச்சி உள்பட 4 தொகுதி இடைத்தேர்தல் ஓட்டுப்பதிவுவிறுவிறுப்பாக நடந்து வருகிறது.
இந்நிலையில், அரவக்குறிச்சி தொகுதியில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர் செந்தில்பாலாஜி மீது தமிழக தேர்தல் ஆணையர் சத்யபிரத சாகுவிடம் அ.தி.மு.க. செய்தி பிரிவு ஒருங்கிணைப்பாளர் வக்கீல் பாபு முருகவேல் ஒரு புகார் மனு அளித்தார். அதில் கூறியிருப்பதாவது:-
அரவக்குறிச்சி தொகுதியில் தொட்டிக்குறிச்சி, வேலாயுதம்பாளையம் பகுதிகளில் வாக்காளர்களை தி.மு.க. வேட்பாளர் செந்தில் பாலாஜி ஓட்டுப்போட விடாமல் தடுத்துள்ளார். இது நீதிக்கும், மனித உரிமைக்கும் எதிரானது. அப்பட்டமான தேர்தல் விதிமீறல் ஆகும்.

எனவே செந்தில்பாலாஜி மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் ஓட்டுப்போடவிடாமல் தடுக்கப்பட்ட வாக்காளர்களை மீட்டு அவர்கள் வாக்களிக்க செய்யவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும் இன்று இடைத்தேர்தல் நடைபெறும் 4 தொகுதிகளிலும் தி.மு.க. வேட்பாளர்கள் தங்களுக்கு ஆதரவாக வாக்களிக்கச் செய்வதற்காக வாக்காளர்களுக்கு பிரியாணி தயார் செய்து வினியோகிக்க உள்ளனர்.
இதற்காக அதிக அளவில் இறைச்சி மற்றும் காய்கறிகள் வாங்கி தொகுதி தேர்தல் அலுவலகத்தில் வைத்துள்ளனர். ஒவ்வொரு தொகுதியிலும் சுமார் 50 ஆயிரம் பொட்டலங்கள் வினியோகிக்க உள்ளனர். இது தேர்தல் நடத்தை விதிகளுக்கு எதிரானது.
எனவே சம்பந்தப்பட்ட மாவட்ட கலெக்டர்கள், தேர்தல் அதிகாரிகள் உடனடியான நடவடிக்கை எடுக்க உத்தரவிடவேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பள்ளப்பட்டியில் உள்ள வாக்குச்சாவடியில் நடைபெற்று வரும் வாக்குப்பதிவை அ.தி.மு.க. வேட்பாளர் செந்தில்நாதன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
தி.மு.க. வேட்பாளர் செந்தில் பாலாஜி, ஆர்.கே.நகர் பாணியில் ரூ.2 ஆயிரம் நோட்டுக்களை ஜெராக்ஸ் எடுத்து அதனை வாக்காளர்களுக்கு விநியோகித்துள்ளார். டோக்கன் முறையில் அதனை விநியோகித்துள்ள அவர், உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களித்து விட்டு, மாலையில் வந்து பணத்தை பெற்றுக்கொள்ளலாம் என்று கூறியுள்ளார்.
மக்களை ஏமாற்றி வெற்றி பெறுவதற்காக அவர் இந்த மாதிரி செயல்படுகிறார். இந்த தகவல் எங்களுக்கு தெரியவந்ததையடுத்து போலீசிலும் தேர்தல் ஆணையத்திடமும் புகார் செய்துள்ளோம். இருப்பினும் தி.மு.க.வின் தில்லுமுல்லு அரவக்குறிச்சி மக்களிடையே எடுபடாது.
இவ்வாறு அவர் கூறினார்.






