என் மலர்tooltip icon

    தேர்தல் செய்திகள்

    கர்நாடக முதல்வர் குமாரசாமியை விமர்சித்து பேசுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் காங்கிரசாருக்கு ராகுல்காந்தி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    புதுடெல்லி:

    கர்நாடகாவில் காங்கிரஸ்-மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சிகள் கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி தலைவர் குமாரசாமி முதல்-மந்திரியாக உள்ளார். அவரது அமைச்சரவையில் முக்கிய பொறுப்புகளில் காங்கிரசார் உள்ளனர்.

    இந்த கூட்டணி ஆட்சி அமைந்ததில் இருந்து காங்கிரஸ் தலைவர்களுக்கும், மதச்சார்பற்ற ஜனதா தளம் தலைவர்களுக்கும் இடையே கருத்து வேறுபாடு உள்ளது. சமீபகாலமாக இரு கட்சியினருக்கும் இடையே மோதல் அதிகரித்துள்ளது.

    இந்த நிலையில் பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதாதளம் இடையே வார்த்தை போர் வெடித்து குமாரசாமியை நீக்கக் கோரி காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் போர்க்கொடி உயர்த்தி உள்ளனர். இதற்காக ரகசிய ஆலோசனைக் கூட்டங்களையும் நடத்தி வருகிறார்கள்.

    இதற்கிடையே நேற்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை கர்நாடகா மாநில காங்கிரஸ் பொறுப்பாளர் கே.சி.வேணுகோபால், மாநில காங்கிரஸ் தலைவர் குண்டுராவ், முன்னாள் முதல்-அமைச்சர் சித்த ராமையா, துணை முதல்- மந்திரி பரமேஸ்வரா ஆகியோர் சந்தித்து பேசினார்கள். அப்போது அவர்கள் குமாரசாமி மீது சரமாரியாக புகார் கூறினார்கள்.

    அதோடு கூட்டணிக்கு எதிராக குமாரசாமியும், மதச் சார்பற்ற ஜனதாதளம் தலைவர்களும் பேசிவரும் தகவல்களையும் தெரிவித்தனர். இவை அனைத்தையும் பொறுமையாக கேட்டுக்கொண்ட ராகுல் இப்போதைக்கு எந்தவித முடிவும் எடுக்க வேண்டாம் என்று கேட்டுக்கொண்டார்.


    மேலும் கூட்டணியை சீர்குலைக்கும் வகையில் யாரும் செயல்பட வேண்டாம் என்றும், பேச வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டார். பா.ஜனதாவை தோற்கடிக்க மதச்சார்பற்ற ஜனதாதளம் தலைவர்களுடன் இணைந்து செயல்படுமாறும் கேட்டுக் கொண்டார்.

    குமாரசாமியை விமர்சித்து பேசுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ராகுல்காந்தி எச்சரித்துள்ளார். இதனால் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் இனி அமைதியாக இருப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    தமிழகத்தில் கருத்துக் கணிப்புகள் மாறக்கூடிய வாய்ப்பு உள்ளதாகவும், இதில் திமுக பெருமைப்பட ஒன்றும் இல்லை என்றும் இல.கணேசன் கூறினார்.
    ஈரோடு:

    மத்தியில் பாஜக மீண்டும் ஆட்சியை பிடிக்கும் என தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன. தமிழகத்தில், திமுக தலைமையிலான கூட்டணி அதிக இடங்களை கைப்பற்றும் எனவும் கருத்துக் கணிப்புகள் கூறுகின்றன.

    இதுபற்றி பாஜக மூத்த தலைவர் இல.கணேசன் கூறியதாவது:-

    மத்தியில் பாஜக ஆட்சியமைக்கும் என கருத்துக்கணிப்புகளில் தெளிவாக தெரியவந்துள்ளது. தேசிய அளவில் காங்கிரஸ் கட்சிக்கு 40 இடங்கள் வரை மட்டுமே கிடைக்க வாய்ப்புள்ளது.



    தமிழகத்தை பொருத்தவரை கருத்துக்கணிப்புகள் மாறக்கூடிய வாய்ப்புள்ளது. தமிழகத்தில் பாஜகவுக்கு 50 சதவீத வெற்றி வாய்ப்புள்ளது. இந்த கருத்துக்கணிப்பில் திமுக பெருமைப்பட ஒன்றும் இல்லை,

    அழிவை நோக்கி செல்லும் காங்கிரஸ் என்ற பெருங்காய டப்பாவுடன் மற்ற கட்சிகள் இணைவது சாத்தியமில்லாதது.

    இவ்வாறு அவர் கூறினார்.  
    அரவக்குறிச்சி தொகுதியில் வாக்காளர்களுக்கு ரூ.2000 ஜெராக்ஸ் கொடுத்து திமுக தில்லுமுல்லு செய்துள்ளது என்று அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் குற்றம் சாட்டியுள்ளார்.

    கரூர்:

    கரூர் மாவட்ட அ.தி.மு.க. கட்சி அலுவலகத்தில் போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் நேற்றிரவு நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    அரவக்குறிச்சி தொகுதியில் அ.தி.மு.க., வேட்பாளர் வி.வி.செந்தில்நாதன் 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவது உறுதி. இந்த தேர்தலில் எதிர்கட்சி வேட்பாளர் தி.மு.க.வை சேர்ந்த செந்தில்பாலாஜி கார்வழி ஊராட்சியில் 2,000ரூபாயை ஜெராக்ஸ் எடுத்து வினியோகித்து விட்டு, பணம் மாலையில் கொடுப்போம் என கூறி தில்லுமுல்லு செய்துள்ளார். அரவக்குறிச்சியில் இதைவிட கேவலமாக வேலை செய்ய எதுவுமில்லை.

    நம்பர் எழுதி ஸ்டார் குறியீடு போட்டு டோக்கன், ரூ.2,000-ன் ஜெராக்ஸ் தாள் ஆகியவற்றை மஞ்சள் துண்டு போட்டிருந்தவர்களே (தி.மு.க.) வினியோகித்தனர். பச்சை துண்டுபோட்டிருந்த (அ.தி.மு.க.) எங்களது ஆட்கள் தான் அவர்களை பிடித்தனர். டோக்கன் கொடுப்பதில் இவர்கள் கை தேர்ந்தவர்கள்.


    ஆர்.கே.நகரில் இது போல் டோக்கன் வினியோகித்து ஒரு ஆளை ஜெயிக்க வைத்தனர். அந்த டோக்கன் எல்லாம் அரவக்குறிச்சியில் எடுபடாது. டோக்கன் விவகாரத்தை விடுத்து வேறு சில கருத்துக்களையும் செந்தில் பாலாஜி கூறியிருக்கிறார். மின்சாரம் திருடியதாகவும், அதற்காக அபராதம் நாங்கள் செலுத்தியதாகவும் கூறியிருக்கிறார். இன்று அதன் விவர நகலை தருகிறேன். விவசாயத்துக்கு போகிற தண்ணீரை ஜெனரேட்டர் பழுதின் காரணமாக தண்ணீரை எடுத்ததற்காக அபராதம் விதித்தனர்.

    மின்சாரம் திருடி பிழைக்க வேண்டிய அவசியமில்லை. அந்த பரம்பரையில் நான் பிறக்கவும் இல்லை. இவர்களை மாதிரி திருட்டு சாராயம் காய்ச்சி பாட்டிலில் அடைத்து விற்கவில்லை. மின்சாரம் திருடியதாக இனி குற்றம்சாட்டினால், அது தவறு என்பதற்குரிய ஆதாரத்தை நான் தருகிறேன். டோக்கன் கொடுப்பது உள்ளிட்ட பல வேலைகளை இன்று செய்து விட்டார்கள். இதைவிட கேவலமாக அரசியல் செய்ய முடியாது. ஆள் கடத்தலில் கை தேர்ந்தவர் எதிர்க்கட்சி வேட்பாளர். கருத்து கணிப்பு இருக்கட்டும். நிச்சயமாக அனைத்து தொகுதிகளிலும் அ.தி.மு.க. வெற்றி பெறும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் வெளியாகி உள்ளன. இத்தகைய கருத்துக் கணிப்புகளில் எனக்கு ஒரு போதும் நம்பிக்கை கிடையாது என்று ராகுல் காந்தி கூறியுள்ளார்.

    புதுடெல்லி:

    காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நாளிதழ் ஒன்றுக்கு சிறப்புப் பேட்டி அளித்துள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது:-

    நாடு முழுவதும் மோடிக்கு எதிரான அலையே உள்ளது. அதனால்தான் மோடியின் பிரசாரம் வெறுப்பை வெளிக்காட்டும் வகையில் இருந்தது. அரசியல் ரீதியாக நான் அன்பையே வெளிப்படுத்துகிறேன்.

    23-ந் தேதி மக்கள் முடிவு என்ன என்பது தெரிந்து விடும். அதன்பிறகு தேர்தல் முடிவுகள் அடிப்படையில் நாங்கள் செயல்படுவோம். புதிய அரசு அமைவதில் நீண்ட இழுபறி இருக்காது என்று நினைக்கிறேன்.

    தேர்தல் முடிவுகள் வெளிவருவதற்கு முன்பே அது பற்றி சொல்வது சரியாக இருக்காது. பிரதமர் மோடியை தேர்தலில் தோற்கடிப்பதும், ஆர்.எஸ்.எஸ்.சின் தவறான கொள்கைகளை வீழ்த்துவதும் தான் எனது இலக்காகும்.

    இந்த தேர்தலில் மோடி நிச்சயமாக தோல்வி அடைவார். அதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை. மோடியால் மீண்டும் மத்தியில் ஆட்சி அமைக்கவே முடியாது. மோடி மீது உள்ள பரவலான அதிருப்தி அவரை கண்டிப்பாக வீழ்த்தும்.

    தேர்தல் முடிவுகள் முழுமையாக வெளிவந்த பிறகுதான் புதிய ஆட்சி பற்றி தெளிவாக தெரிய வரும். எனவே அது பற்றி இப்போதே பதில் சொல்வது சரியாக இருக்காது.

    தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் வெளியாகி உள்ளன. இத்தகைய கருத்துக் கணிப்புகளில் எனக்கு ஒரு போதும் நம்பிக்கை கிடையாது.

    மக்களின் விருப்பம் என்ன என்பது 23-ந் தேதி தெரிந்து விடும். அந்த முடிவுக்கு ஏற்ப எங்களது நடவடிக்கைகள் அமையும்.

    மத்தியில் காங்கிரஸ் தலைமையில் ஆட்சி அமைந்தால் மக்களின் குறைந்தபட்ச வருவாயை உறுதி செய்வோம். அனைத்துத் துறைகளும் மேம்படும் வகையில் பொருளாதார கொள்கையை சீரமைப்போம். மோடியின் ஆணவத்தால் நமது நாட்டின் பொருளாதாரம் சிதைந்து விட்டது.

    பொருளாதார கொள்கைகளை மோடி செயல்படுத்தும் முன்பு மன்மோகன்சிங் போன்ற பொருளாதார மேதைகளை கலந்து ஆலோசிக்க வேண்டும். நாங்கள் அப்படி இருக்க மாட்டோம். எதிர்க் கட்சிகளுக்கு மதிப்பு அளிப்போம்.


    மோடி அரசு, அரசியல மைப்பு சட்டத்துக்கு எதிராக செயல்படுவதால் தான் நாங்கள் முழு மூச்சாக எதிர்க்கிறோம். மக்களின் குரலுக்கு இந்த அரசு மதிப்பு அளிப்பது இல்லை. எனவேதான் மோடிஅரசை வீழ்த்த வேண்டும் என்பதில் நாங்கள் உறுதியுடன் உள்ளோம்.

    இவ்வாறு ராகுல்காந்தி கூறியுள்ளார்.

    டெல்லியில் இன்று காங்கிரஸ் தலைவர்களுடன் மாயாவதி சந்திக்க எந்த திட்டமும் இல்லை என பகுஜன் சமாஜ் கட்சி தெரிவித்துள்ளது.
    லக்னோ:

    இந்தியாவின் 17-வது பாராளுமன்றத்துக்கு புதிய உறுப்பினர்களை தேர்வு செய்வதற்காக 7 கட்டங்களாக தேர்தல் நடந்து முடிந்துள்ளது. நேற்று நடைபெற்ற இறுதிக்கட்ட வாக்குப்பதிவுக்கு பின்னர் வெளியான கருத்துக் கணிப்பு முடிவுகள் பாஜகவுக்கு சாதகமாக இருந்தன. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி மீண்டும் ஆட்சி அமைக்கும் என கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது.

    வரும் 23ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ள நிலையில், பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி டெல்லியில் இன்று காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர் சோனியா காந்தி, காங்கிரஸ் தலைவர்  ராகுல் காந்தி ஆகியோரை சந்தித்து பேச உள்ளதாக தகவல்கள் வெளியாகின.

    ஆனால், டெல்லியில் இன்று மாயாவதி எதிர்க்கட்சி தலைவர்களை சந்திக்க மாட்டார் என பகுஜன் சமாஜ் கட்சி விளக்கம் அளித்துள்ளது. அவருக்கு டெல்லியில் இன்று எந்த நிகழ்ச்சியோ, சந்திப்புகளோ இல்லை என்றும், லக்னோவில்தான் இருப்பார் என்றும் அக்கட்சியின் மூத்த தலைவர் மிஷ்ரா கூறியுள்ளார்.



    எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் பணியில் ஆர்வம் காட்டி வரும் ஆந்திர மாநில முதல் மந்திரி சந்திரபாபு நாயுடு, புதுடெல்லியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, கம்யூனிஸ்ட் கட்சிகளின் தலைவர்கள் சுதாகர் ரெட்டி, டி ராஜா, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் மற்றும் சரத் யாதவ் ஆகியோரை சந்தித்து பேசினார். நேற்று முன்தினம் லக்னோவில் மாயாவதியை சந்தித்து பேசியது குறிப்பிடத்தக்கது.

    தேர்தல் ஆணையம் பாரபட்சமாக நடந்து வருவதாக எதிர்கட்சிகள் குற்றம்சாட்டி வந்த நிலையில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் மோடியிடம் தேர்தல் ஆணையம் சரணடைந்துவிட்டதாக குற்றம் சாட்டியுள்ளார்.
    பாராளுமன்றத்துக்கு 7 கட்டங்களாக நடத்தப்பட்ட தேர்தல் நேற்று நிறைவடைந்தது. ஓட்டு எண்ணிக்கை வருகிற மே 23-ந் தேதி நடைபெறுகிறது.

    தேர்தல் ஆணையம் பாரபட்சமாக நடந்து வருவதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வந்தன. தேர்தல் நடத்தை விதிமுறை அமலில் இருக்கும் போது பிரதமர் மோடி கேதார்நாத் சென்றதையும், அதற்கு தொலைக்காட்சி சேனல்கள் முக்கியத்துவம் அளித்ததையும் சுட்டிக்காட்டி எதிர்க்கட்சிகள் தேர்தல் ஆணையத்தை விமர்சித்துள்ளன.


    இந்த நிலையில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது,

    தேர்தல் பத்திரங்கள், மின்னணு எந்திர வாக்குப்பதிவை அமல்படுத்தியதில் இருந்து தேர்தல் தேதியை நிர்ணயித்தது, நமோ டி.வி.யை அனுமதித்தது, மோடியின் ராணுவம் என்ற பேச்சை ஏற்றுக்கொண்டது, இப்போது, கேதார்நாத்தில் நடந்த நாடகம் வரை தேர்தல் கமிஷன், மோடி மற்றும் அவரது குழு முன்பு சரணடைந்துவிட்டது, எல்லா இந்தியர்களுக்கும் தெளிவாக தெரிந்துவிட்டது.

    தேர்தல் ஆணையம், அச்சத்துடனும், மரியாதையுடனும் பார்க்கக்கூடியதாக முன்பு இருந்தது. இனிமேல் அப்படி இருக்காது. இவ்வாறு ராகுல் காந்தி கூறியுள்ளார்.

    சிஸ்டத்தை கெடுத்தவர்களோடு எந்த நிலையிலும் ரஜினிகாந்த் ஒன்று சேர்ந்து நிற்க மாட்டார் என்று தமிழருவி மணியன் கூறியுள்ளார்.

    தூத்துக்குடி:

    காந்திய மக்கள் இயக்க தலைவர் தமிழருவி மணியன் சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு விமானத்தில் வந்தார். விமான நிலையத்தில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்குவது நிச்சயம். தமிழகத்தில் தற்போது நடந்து கொண்டு இருக்கக்கூடிய அ.தி.மு.க. ஆட்சி என்று முடிவுக்கு வருகிறதோ, அதற்கு அடுத்த நாள் ரஜினிகாந்த் தனது அரசியல் கட்சியை தொடங்குவார். சட்டமன்ற தேர்தல் வரும்போது, தமிழகம் முழுவதும் அவர் மக்களை சந்தித்து வாக்குகளை கேட்டு, மக்கள் ஆதரவோடு ஆட்சி நாற்காலியில் அமருவார் என்று நம்புகிறோம்.

    என்னை பொறுத்தவரை தி.மு.க., அ.தி.மு.க.வுடன் ரஜினிகாந்த் எந்த நிலையிலும் கூட்டணி வைப்பதற்கான வாய்ப்பு கிடையாது. தி.மு.க., அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைத்துதான் அரசியல் நடத்த வேண்டும் என்ற அவசியம் இருந்தால், ரஜினிகாந்த் அரசியலுக்கு உள்ளேயே அடியெடுத்து வைக்கமாட்டார்.


    அவர் தமிழக அரசியலில் அடியெடுத்து வைப்பதற்கு மிக முக்கியமான காரணமே கடந்த 50 ஆண்டுகளாக 2 திராவிட கட்சிகளின் ஆட்சியிலும் சமூகம் பாழ்பட்டு விட்டது. அதைத்தான் அவர் சிஸ்டம் கெட்டு விட்டது என்று கூறி உள்ளார். சிஸ்டத்தை கெடுத்தவர்களோடு எந்த நிலையிலும் ரஜினிகாந்த் ஒன்று சேர்ந்து நிற்க மாட்டார். இது உறுதி.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தேர்தலுக்கு பின்னர் வெளியாகிவரும் கருத்துக் கணிப்புகளை நம்ப வேண்டாம். அது வாக்கு இயந்திரங்களை மாற்றி, தில்லுமுல்லு செய்யும் முயற்சி என மம்தா பானர்ஜி பானர்ஜி தெரிவித்துள்ளார்.
    கொல்கத்தா:

    இந்தியாவின் 17-வது பாராளுமன்றத்துக்கு புதிய உறுப்பினர்களை தேர்வு செய்வதற்காக 542 தொகுதிகளில் 7 கட்டங்களாக நடைபெற்ற வாக்குப்பதிவு இன்று மாலையுடன் நிறைவடைந்தது.

    பாராளுமன்ற தேர்தலில் இறுதிக்கட்ட வாக்குப்பதிவுக்கு பின்னர் இன்று மாலை வெளியான சில ஊடகங்களின் கருத்துக் கணிப்பு முடிவுகளின்படி பாஜக 300-க்கும் அதிகமான இடங்களில் வெற்றிபெற்று மீண்டும் ஆட்சி அமைக்கும் என தெரியவந்துள்ளது.

    இந்நிலையில், தேர்தலுக்கு பின்னர் வெளியாகிவரும் கருத்துக் கணிப்புகளை நம்ப வேண்டாம். அது வாக்கு இயந்திரங்களை மாற்றி, தில்லுமுல்லு செய்யும் முயற்சி என மேற்கு வங்காளம் மாநில முதல் மந்திரியும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவருமான மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக, இன்றிரவு தனதுடுவிட்டர் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் ‘தேர்தலுக்கு பின்னர் வெளியாகும் கருத்துக் கணிப்புகளை நான் நம்புவதில்லை. இதுபோன்ற கருத்துக் கணிப்புகள் எல்லாம் வாக்கு இயந்திரங்களை மாற்றவும் அவற்றில் தில்லுமுல்லு செய்யவும் ஆடப்படும் நாடகம்தான்.

    உறுதியோடும், தைரியமாகவும், ஒற்றுமையாகவும் எதிர்த்துப் போராடி இந்த போர்க்களத்தில் நாம் வென்றாக வேண்டும் என அனைத்து எதிர்க்கட்சி தலைவர்களையும் நான் கேட்டுக் கொள்கிறேன்’ என குறிப்பிட்டுள்ளார்.
    தமிழகத்தில் 38 பாராளுமன்றத் தொகுதிகளுக்கான தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகளை தந்தி டிவி வெளியிட்டு வருகிறது. அவ்வகையில் எந்த கட்சிக்கு வெற்றி வாய்ப்பு அதிகம்? என்பதை காணலாம்.
    தமிழகத்தில் 38 பாராளுமன்றத் தொகுதிகளுக்கான தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகளை தந்தி டிவி வெளியிட்டு வருகிறது. ஒவ்வொரு தொகுதியிலும் பல்வேறு இடங்களில் தேர்தல் அன்று வாக்களித்த மக்களை சந்தித்து, அவர்கள் யாருக்கு வாக்களித்தார்கள் என்பதை கேட்டறிந்து கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டுள்ளது. விபரம்:-



    திருவள்ளூர் தொகுதி


    திருவள்ளூர் மக்களவை தொகுதியில் அதிமுக வெற்றிப்பெற வாய்ப்பு உள்ளது என தெரிகிறது. தேர்தலுக்கு பின்னர் 39-45 சதவீதம் பேர் அதிமுக கூட்டணிக்கு வாக்களித்ததாக கூறியுள்ளனர். திமுகவிற்கு 35-41 சதவீத பேர் வாக்களித்ததாக தெரிவித்துள்ளனர்.  அமமுகவிற்கு என்று 7-10 சதவீதம் பேர் தெரிவித்துள்ளனர். மக்கள் நீதி மய்யத்திற்கு 4-7 சதவீதம் பேரும், நாம் தமிழருக்கு 3-6 சதவீதம் பேரும் வாக்களித்துள்ளதாக தெரிவித்துள்ளனர். 

    மத்திய சென்னை


    மத்திய சென்னையில் திமுக கூட்டணிக்கு வாக்களித்ததாக 38-44 சதவீத பேர் தெரிவித்துள்ளனர். அதிமுக கூட்டணிக்கு 35-41 சதவீத பேர் வாக்களித்ததாகவும், அமமுகவிற்கு 8-11 சதவீத பேர் வாக்களித்ததாகவும் தெரிவித்துள்ளனர்.  மக்கள் நீதி மய்யத்திற்கு 6-9 சதவீதம் பேரும், நாம் தமிழருக்கு 5-8 சதவீதம் பேரும் வாக்களித்துள்ளதாக தெரிவித்துள்ளனர். 

    கன்னியாகுமரி

    கன்னியாகுமரி மக்களவை தொகுதியில் அதிமுக - பா.ஜனதா கூட்டணிக்கு 40-46 சதவீதம் பேர் வாக்களித்ததாக கூறியுள்ளனர். திமுக காங்கிரஸ் கூட்டணிக்கு 39-45 சதவீத பேர் வாக்களித்ததாக தெரிவித்துள்ளனர்.  அமமுகவிற்கு என்று 5-8 சதவீதம் பேர் தெரிவித்துள்ளனர். மக்கள் நீதி மய்யத்திற்கு 4-7 சதவீதம் பேரும், நாம் தமிழருக்கு 3-6 சதவீதம் பேரும் வாக்களித்துள்ளதாக தெரிவித்துள்ளனர். 

    கிருஷ்ணகிரி

    கிருஷ்ணகிரி தொகுதியில் அதிமுக கூட்டணி முன்னிலைப் பெறுகிறது.  அதிமுக - பா.ஜனதா கூட்டணிக்கு  39- 45 சதவீதம் பேர் வாக்களித்ததாக கூறியுள்ளனர். திமுக காங்கிரஸ் கூட்டணிக்கு 36-42 சதவீத பேர் வாக்களித்ததாக தெரிவித்துள்ளனர்.  அமமுகவிற்கு என்று 4-10 சதவீதம் பேர் தெரிவித்துள்ளனர்.  

    வடசென்னை

     வடசென்னை மக்களவை தொகுதியில் திமுக வெற்றிப்பெறுவதற்கு வாய்ப்புள்ளது என கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது.

    வடசென்னை தொகுதியில் திமுக-காங்கிரஸ் கூட்டணிக்கு 41-47 சதவீத பேர் வாக்களித்ததாக தெரிவித்துள்ளனர்.  அதிமுக - பா.ஜனதா கூட்டணிக்கு 34-40 சதவீதம் பேரும், அமமுகவிற்கு என்று 6-9 சதவீதம் பேரும், மக்கள் நீதி மய்யத்திற்கு என  6-9 சதவீதம் பேரும், நாம் தமிழருக்கு 4-7 சதவீதம் பேரும் வாக்களித்துள்ளதாக தெரிவித்துள்ளனர். 

    சேலம் தொகுதி

    முதல்-அமைச்சர் பழனிச்சாமியின் சொந்த ஊரான சேலம் தொகுதியில் அதிமுக கூட்டணி வெற்றிப்பெற வாய்ப்பு உள்ளது என தெரிகிறது. சேலம் தொகுதியில் அதிமுக - பா.ஜனதா கூட்டணிக்கு வாக்களித்ததாக 41-47 சதவீத பேர் தெரிவித்துள்ளனர். திமுக-காங்கிரஸ் கூட்டணிக்கு 38-44 சதவீத பேர் வாக்களித்ததாக தெரிவித்துள்ளனர்.   அமமுகவிற்கு என்று 6-9 சதவீதம் பேரும், மக்கள் நீதி மய்யத்திற்கு என 4-7 சதவீதம் பேரும் வாக்களித்துள்ளதாக தெரிவித்துள்ளனர். 

    அரக்கோணம் 

    அரக்கோணம் தொகுதியில் திமுக- அதிமுக கூட்டணிகள் இடையே கடுமையான போட்டி இருக்கும் என தெரிகிறது. இங்கு அதிமுக - பா.ஜனதா கூட்டணிக்கு வாக்களித்ததாக 38-44 சதவீத பேர் தெரிவித்துள்ளனர். திமுக-காங்கிரஸ் கூட்டணிக்கு 37-43 சதவீத பேர் வாக்களித்ததாக தெரிவித்துள்ளனர்.   அமமுகவிற்கு என்று 7-10 சதவீதம் பேரும், மக்கள் நீதி மய்யத்திற்கு என 4-7 சதவீதம் பேரும் வாக்களித்துள்ளதாக தெரிவித்துள்ளனர். 
    தமிழகத்தில் உள்ள 38 பாராளுமன்ற தொகுதிகளில் நடைபெற்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணி 34 இடங்களில் வெற்றி பெறும் என தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு மூலம் தெரியவந்துள்ளது.
    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணியே தமிழகத்தில் ஆதிக்கம் செலுத்தும் என இந்தியா டுடே கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    தமிழகத்தில் வேலூர் தவிர்த்து 38 தொகுதிகளில் தேர்தல் நடைபெற்றது. இங்கு அதிமுக கூட்டணிக்கு 4 தொகுதிகளும், திமுக-காங்கிரஸ் கூட்டணிக்கு 34 தொகுதிகளும் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    டைம்ஸ் நவ் கருத்துக்கணிப்பில் திமுகவிற்கு 29 தொகுதிகளும், அதிமுக கூட்டணிக்கு 9 தொகுதிகளும் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
    பாராளுமன்ற தேர்தலில் இறுதிக்கட்ட வாக்குப்பதிவுக்கு பின்னர் இன்று மாலை வெளியான கருத்துக் கணிப்பு முடிவுகளின்படி பாஜக 300-க்கும் அதிகமான இடங்களில் வெற்றிபெற்று மீண்டும் ஆட்சி அமைக்கும் என தெரியவந்துள்ளது.
    புதுடெல்லி:

    இந்தியாவின் 17-வது பாராளுமன்றத்துக்கு புதிய உறுப்பினர்களை தேர்வு செய்வதற்காக (தமிழ்நாட்டின்  வேலூர் பாராளுமன்ற தொகுதியை தவிர) நாடு முழுவதும் உள்ள 542 தொகுதிகளில் 7 கட்டங்களாக நடைபெற்ற வாக்குப்பதிவு இன்று மாலையுடன் நிறைவடைந்த நிலையில் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளை பிரபல ஊடகங்கள் வெளியிட்டு வருகின்றன.

    அவ்வகையில், ரிப்பப்ளிக் டி.வி. மற்றும் ஜன்கிபாத் நடத்திய கருத்துக் கணிப்பு முடிவுகளில் பாஜக கூட்டணி  287 தொகுதிகளில் வெற்றிபெற்று மீண்டும்  ஆட்சி அமைக்கும் என தெரியவந்துள்ளது. காங்கிரஸ் கூட்டணி 128 இடங்களிலும், இதர கட்சிகள் 127 தொகுதிளையும் கைப்பற்றும் என தெரியவந்துள்ளது.

    இதேபோல், டைம்ஸ் நவ் மற்றும் சி.என்.எக்ஸ். நடத்திய கருத்துக் கணிப்பு முடிவுகளின்படி, பாஜக கூட்டணி 306 தொகுதிகளில் வெற்றிபெற்று மீண்டும் ஆட்சி அமைக்கும் என தெரியவந்துள்ளது. காங்கிரஸ் கூட்டணி 132  இடங்களிலும், இதர கட்சிகள் 104 தொகுதிளையும் கைப்பற்றும் என தெரியவந்துள்ளது.

    மேலும், நியூஸ் எக்ஸ் மற்றும் இந்தியா நியூஸ் நடத்திய கருத்துக் கணிப்பு முடிவுகளின்படி, பாஜக கூட்டணி 298 தொகுதிகளில் வெற்றிபெற்று மீண்டும்  ஆட்சி அமைக்கும் என தெரியவந்துள்ளது. காங்கிரஸ் கூட்டணி 118  இடங்களிலும், இதர கட்சிகள் 126 தொகுதிளையும் கைப்பற்றும் என தெரியவந்துள்ளது.

    தமிழகத்தில் இடைத்தேர்தல் நடைபெறும் 4 சட்டசபைத் தொகுதிகளில் வாக்குப்பதிவு நிறைவடைந்தது.
    திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, ஓட்டப்பிடாரம், சூலூர் ஆகிய 4 சட்டசபை தொகுதிகளில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்த தொகுதிகளில் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி மாலை 6 மணி வரையில் நடைபெற்றது. ஏற்கனவே அங்கு பாராளுமன்ற தேர்தல் நடைபெற்றிருந்த நிலையில் இடைத்தேர்தல் நடப்பதால், வாக்காளர்களின் நடுவிரலில் அழியாத மை வைக்கப்பட்டது.  

    அரவக்குறிச்சி தொகுதியில் 63 வேட்பாளர்கள் போட்டியில் இருப்பதால் அங்கு ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் 4 வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டிருந்தது. இடைத்தேர்தலுக்காக 4 தொகுதிகளிலும் 656 வெப் கேமராக்கள் வைக்கப்பட்டிருந்தது. 13 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவை நடத்த இந்திய தேர்தல் ஆணையம் ஏற்கனவே உத்தரவிட்டிருந்தது. மறுவாக்குப்பதிவும் இன்று நடந்தது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி மாலை 6 மணிக்கு நிறைவடைந்தது.

    5 மணி நிலவரப்படி சூலூர் - 67.18%, அரவக்குறிச்சி - 79.49%, திருப்பரங்குன்றம் - 61.99%, ஒட்டப்பிடாரம் - 66.77% வாக்குகள் பதிவாகியிருந்தது என தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
    ×