என் மலர்tooltip icon

    தேர்தல் செய்திகள்

    நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நிலையில், பாராளுமன்ற தேர்தல் முடிவு நள்ளிரவுக்கு பிறகே தெரிய வரும். சட்டமன்ற இடைத்தேர்தல் முடிவுகள் இரவு 8 மணிக்கு வெளியாகும்.
    சென்னை:

    தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 18-ந் தேதியன்று 38 பாராளுமன்ற தொகுதிகளுக்கு தேர்தல், 18 சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடந்தன. கடந்த 19-ந் தேதியன்று 4 சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தலும், 13 வாக்குச்சாவடிகளில் மறுதேர்தலும் நடந்தது.

    ஓட்டுப்பதிவு செய்யப்பட்ட எந்திரங்களும், அதனுடன் இணைக்கப்பட்டு இருந்த ஒப்புகைச் சீட்டு எந்திரங்களும் வாக்கு எண்ணிக்கை மையங்களில் உள்ள அறைகளில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.

    இந்த தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நாளை மறுதினம் (வியாழக்கிழமை) நடக்கிறது. தமிழகம் முழுவதும் 45 மையங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெறும். காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கும்.

    ஒரு மையத்துக்கு 14 மேஜை என்ற கணக்கில் ஓட்டு எண்ணிக்கை நடைபெறும். ஒவ்வொரு சுற்று வாக்கு எண்ணிக்கை முடிந்ததும் அதற்கான அறிவிப்பு உடனடியாக வெளியிடப்படும்.

    சென்னை மாவட்டத்துக்கு உட்பட்ட தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை, லயோலா கல்லூரி (மத்திய சென்னை), ராணி மேரி கல்லூரி (வட சென்னை), அண்ணா பல்கலைக்கழகம் (தென் சென்னை) ஆகிய 3 மையங்களில் நடைபெறும்.

    தமிழகம் முழுவதும் 90 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் வாக்கு எண்ணிக்கைக்கான பாதுகாப்பு பணியில் ஈடுபடுவர். சென்னை மையங்களில் மட்டும் 15 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு அளிப்பர். பாதுகாப்பு பணியில் துணை ராணுவ வீரர்களும் ஈடுபடுவார்கள்.

    வாக்குப்பதிவு எந்திரத்தில் பதிவான ஓட்டுகளை சரிபார்ப்பதற்காக இந்த முறை ஒப்புகைச் சீட்டு எந்திரங்களில் உள்ள சீட்டுகளையும் சேர்த்து எண்ணுவதற்கு சுப்ரீம் கோர்ட்டு ஆணை பிறப்பித்துள்ளது. அந்த வகையில் ஒரு சட்டமன்றத்துக்கு 5 ஒப்புகைச் சீட்டு எந்திரம் (வி.வி.பி.ஏ.டி.) என்ற வகையில் ஒரு பாராளுமன்ற தொகுதிக்கும் (6 சட்டமன்றங்களை உள்ளடக்கிய தொகுதி என்றால்) 30 வி.வி.பி.ஏ.டி. எந்திரங்களில் உள்ள சீட்டுகளையும் எண்ண வேண்டும்.



    ஒவ்வொரு வி.வி.பி.ஏ.டி. எந்திரத்துக்கும் எண் இருக்கும். குலுக்கல் முறையில் அதில் 5 எந்திரங்கள் தேர்வு செய்யப்பட்டு சீட்டுகள் எண்ணப்படும். இந்த தேர்வை வீடியோ படம் எடுப்பார்கள். இதனால் ஓட்டு எண்ணிக்கையில் காலதாமதம் ஆகலாம். வாக்குப்பதிவு எந்திரங்களில் உள்ள ஓட்டுகளை எண்ணிவிட்டு கடைசியில்தான் வி.வி.பி.ஏ.டி. எந்திரத்தில் உள்ள சீட்டுகள் எண்ணப்படும்.

    தபால் ஓட்டுகள் அதிகமாக இருக்கும் இடங்களில் கூடுதல் மேஜை போடப்பட்டு அவை எண்ணப்படும். ஓட்டு எண்ணிக்கையில் துரிதம் காட்டுவதைவிட, துல்லியமாகவும், சரியாகவும் எண்ணிக்கை அமைய வேண்டும் என்று இந்திய தேர்தல் ஆணையம் வலியுறுத்தி உள்ளது. எனவே கடந்த ஆண்டுகளில் நடந்ததுபோல, இந்த முறை விரைவாக முடிவுகளை எதிர்பார்க்க முடியாது என்றே தெரிகிறது.

    ஓட்டு எண்ணிக்கைக்கான ஒவ்வொரு மையத்திலும் கண்காணிப்பாளர், நுண் பார்வையாளர், வாக்கு எண்ணும் அலுவலர்கள் இருப்பார்கள். வேட்பாளர்களின் முகவர்களிடம் வாக்கு எண்ணும் எந்திரங்களின் எண், ஒப்புகைச் சீட்டு எந்திரங்களின் எண் ஆகியவற்றை காட்டிய பிறகே ஓட்டு எண்ணிக்கை தொடங்கும்.

    வாக்கு எண்ணிக்கையை ஒப்புகைச் சீட்டுடன் சரிபார்க்க வேண்டியதிருப்பதால், ஒவ்வொரு சுற்றின் இறுதியிலும் சற்று காலதாமதமாகவே அறிவிப்பு வெளியாகும். எனவே, தேர்தலின் உத்தேச முடிவை மதியத்துக்கு பிறகுதான் அறிய முடியும். இறுதி முடிவைப் பெறுவதற்கு இரவு ஆகலாம் என்றே தெரிகிறது.

    இதுதொடர்பாக தேர்தல் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

    பாராளுமன்ற தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை காலை 8 மணிக்கே தொடங்க இருக்கிறது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்ட பிறகு, வாக்கு எந்திரத்தில் பதிவான ஓட்டுகள் எண்ணப்படும். சட்டமன்ற இடைத்தேர்தலை பொறுத்தவரை மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் பதிவான வாக்கு எண்ணிக்கை மாலை 3 மணி முதல் 4 மணிக்குள் முடிந்துவிடும். சட்டமன்ற இடைத்தேர்தல் நடைபெற்ற 22 தொகுதிகளில் தொகுதிக்கு 5 வி.வி.பி.ஏ.டி. ஒப்புகை சீட்டு எந்திரம் வைக்கப்பட்டிருக்கிறது. அதன்பிறகு வி.வி.பி.ஏ.டி. எந்திரத்தில் (ஒப்புகை சீட்டு) உள்ள சீட்டுகளும் எண்ணி சரிபார்க்கப்படுவதால் முடிவுகள் வெளியாக காலதாமதம் ஏற்படும்.

    ஒரு ஒப்புகை சீட்டு எந்திரத்தில் உள்ள வாக்கு சீட்டுகளை எண்ண குறைந்தது 40 முதல் 50 நிமிடங்கள் வரை ஆகலாம். அதைவைத்து பார்க்கும்போது 4½ மணி முதல் 5 மணி நேரம் வரை ஆகும். எனவே, சட்டமன்ற இடைத்தேர்தல் முடிவுகள் இரவு 8 மணிக்கு பிறகே தெரிய வரும்.

    பாராளுமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை முடிவுகள் வெளியாகவும் இதேபோல் காலதாமதம் ஏற்படும். உத்தரபிரதேசம், ராஜஸ்தான் மாநிலங்களில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலின்போது தொகுதிக்கு ஒரு வி.வி.பி.ஏ.டி. ஒப்புகைச் சீட்டு எந்திரம் மட்டுமே பொருத்தப்பட்டிருந்தது. அதை எண்ணி முடிக்கவே நள்ளிரவு ஆகிவிட்டது. அதுபோன்ற நிலைதான் தமிழ்நாட்டிலும் ஏற்படும். எனவே பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் வெளியாக நள்ளிரவு வரை ஆகும்.

    வாக்கு எந்திரத்தில் பதிவான ஓட்டுகளை எண்ணும்போது தடங்கல் ஏற்பட்டால் முதலில் அதிலுள்ள பேட்டரி மாற்றப்படும். அதன்பிறகும் பிரச்சினை இருந்தால் வி.வி.பி.ஏ.டி. ஒப்புகைச் சீட்டு கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்இவ்வாறு அவர் கூறினார்.
    கருத்துக்கணிப்பு முடிவுகள் போலவே தேர்தல் முடிவுகள் அமையும் என்று அருண் ஜெட்லி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
    புதுடெல்லி:

    தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள், பா.ஜனதா கூட்டணிக்கு பெரும்பான்மை கிடைக்கும் என்று கூறியநிலையில், மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி இதுகுறித்து தனது சமூக வலைத்தள பக்கத்தில் கருத்து வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

    தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகளின் துல்லியத்தன்மை, உண்மைத்தன்மை ஆகியவை தொடர்பாக எங்களில் சிலரிடையே சச்சரவு ஏற்படலாம்.

    ஆனால், எண்ணற்ற கருத்துக்கணிப்புகளின் முடிவுகள் ஒரே மாதிரி இருக்கும்போது, தேர்தல் முடிவுகளும் அதே மாதிரிதான் இருக்கும். இந்த கருத்துக்கணிப்பு முடிவுகளில், மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களுக்கு எந்த பங்கும் இருக்காது. கருத்துக்கணிப்பு முடிவுகள் போலவே தேர்தல் முடிவுகளும் இருந்தால், இதை வைத்து எதிர்க்கட்சிகள் செய்த பிரச்சினையும் தோல்வி அடையும்.

    2014-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் முடிவுகளுடன் இந்த கருத்துக்கணிப்பு முடிவுகளை சேர்த்து பார்த்தால், இந்திய ஜனநாயகம் நன்றாக முதிர்ச்சி அடைந்திருப்பது தெளிவாகும்.

    யாருக்கு ஓட்டு போடுவது என்று முடிவு செய்வதற்கு முன்பு, தேசநலனை வாக்காளர்கள் முக்கியமாக கருதி இருக்கிறார்கள் என்று தெரிகிறது. சிந்தனை திறனுள்ள மக்கள் ஒரே மாதிரியாக வாக்களிக்கும்போது, அது அலையை உருவாக்குகிறது.

    காங்கிரஸ் கட்சிக்கு சோனியா காந்தி குடும்பம் ஒரு சுமையாக ஆகிவிட்டது. இனிமேல், அந்த குடும்பம், காங்கிரசுக்கு ஒரு சொத்தாக இருக்காது. கழுத்தை பிடித்த ‘அல்பட்ராஸ்’ பறவையாக இருக்கும். அந்த குடும்பம் இல்லாவிட்டால், கூட்டம் சேராது. அந்த குடும்பம் இருந்தால், ஓட்டு கிடைக்காது.

    பிரதமர் மோடிக்கு எதிரான தனிப்பட்ட தாக்குதல், 2014-ம் ஆண்டு தேர்தலிலும் எடுபடவில்லை. இந்த தேர்தலிலும் எடுபடவில்லை.

    தலைவர்கள் தகுதி அடிப்படையில்தான் தீர்மானிக்கப்படுகிறார்கள். சாதி அல்லது குடும்ப பின்னணி அடிப்படையில் அல்ல. பிரதமர் மோடியின் செயல்பாடு சார்ந்த விஷயங்கள், வாக்காளர்களிடம் ஆதரவை பெற்றுள்ளன. அவர்கள் எதிர்க் கட்சி கூட்டணியை நம்ப தயாராக இல்லை.

    இவ்வாறு அருண் ஜெட்லி கூறியுள்ளார்.

    பா.ஜனதாவைச் சேர்ந்த குஜராத் மாநில துணை முதல்-மந்திரி நிதின் பட்டேல் கூறியதாவது:-

    மோடியை மீண்டும் பதவியில் அமர்த்துவது என்று தேர்தல் அறிவிக்கப்பட்டவுடனே மக்கள் முடிவு செய்து விட்டார்கள். இது எல்லா கருத்துக்கணிப்புகளிலும் தெளிவாக தெரிகிறது. இருப்பினும், கருத்துக்கணிப்பில் கூறியதை விட அதிக தொகுதிகளில் பா.ஜனதா கூட்டணி வெற்றி பெறும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    தமிழகத்தில் அ.தி.மு.க. ஆட்சி இன்னும் 2 ஆண்டுகள் நீடிக்கும் என்று பாமக இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறினார்.
    தர்மபுரி:

    தர்மபுரி பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதியில் 8 வாக்குச்சாவடிகளில் நேற்று மறு ஓட்டுப்பதிவு நடைபெற்றது. அ.தி.மு.க. கூட்டணி சார்பில் தர்மபுரி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட்ட பா.ம.க. வேட்பாளர் டாக்டர்அன்புமணி ராமதாஸ் இந்த வாக்குச்சாவடிகளை நேரில் பார்வையிட்டார். இதைத்தொடர்ந்து நிருபர்களுக்கு அவர் பேட்டி அளித்தார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    தர்மபுரி பாராளுமன்ற தொகுதியில் தி.மு.க.வுக்கு தோல்வி பயம் வந்துவிட்டது. அதற்கு காரணம் காட்டவே மறு ஓட்டுப்பதிவு நடத்த வேண்டும் என்று தி.மு.க.வினர் புகார் அளித்தனர். இந்த வாக்குச்சாவடிகளில் முறைகேடு நடந்ததாக வாக்காளர்களோ, வாக்குச்சாவடி முகவர்களோ, தேர்தல் பிரிவு அதிகாரிகளோ புகார் அளிக்கவில்லை. ஆனால் இங்கு தேவையற்ற மறுஓட்டுப்பதிவு நடத்தப்படுகிறது. இந்த பகுதிகளை சேர்ந்த வாக்காளர்கள் பா.ம.க.விற்கு முழுமையாக ஓட்டளித்து இருக்கிறார்கள். அதனால் ஏற்பட்ட காழ்ப்புணர்ச்சி காரணமாக தி.மு.க.வினர் மறுஓட்டுப்பதிவு நடத்தவேண்டும் என்று வலியுறுத்தினார்கள். தர்மபுரி பாராளுமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளருக்கு அரசியல் தெரியாது. அவரை மக்கள் ஏற்கவில்லை.

    பா.ம.க., அ.தி.மு.க. கூட்டணியில் இணைந்த நாளில் இருந்து எங்களை தரக்குறைவாக மு.க.ஸ்டாலின் பேசினார். முதலில் ராகுல்காந்தி தான் அடுத்த பிரதமர் என்று கூறிய அவர், கொல்கத்தாவில் நடந்த கூட்டத்தில் பங்கேற்றபோது தேர்தல் முடிந்த பின்னர் பிரதமரை முடிவு செய்வோம் என்றார். பின்னர் மீண்டும் ராகுல்காந்தி தான் பிரதமர் என்று கூறினார்.

    இந்தநிலையில் 3-வது அணி அமைப்பது தொடர்பாக தெலுங்கானா முதல்-மந்திரி சந்திரசேகரராவ் சந்தித்தபோது அவரிடம் 1 மணிநேரம் மு.க.ஸ்டாலின் பேச்சுவார்த்தை நடத்தி உள்ளார். பா.ஜனதாவுடனும் மு.க.ஸ்டாலின் பேச்சுவார்த்தை நடத்துவதாக செய்திகள் வெளியாகி உள்ளன. தோல்வி பயம் வந்து விட்டதால் அவர் குழப்பத்தில் இருக்கிறார். தமிழக முதல்-அமைச்சராக வேண்டும் என்ற அவருடைய கனவு எப்போதும் நிறைவேறப்போவது இல்லை.

    தர்மபுரி பாராளுமன்ற தொகுதியில் பா.ம.க.வும், பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதியில் அ.தி.மு.க.வும் அமோக வெற்றி பெறும். இதேபோல் தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் நடைபெற்ற 38 தொகுதிகளிலும், சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடைபெற்ற 22 தொகுதிகளிலும் அ.தி.மு.க. கூட்டணி அமோக வெற்றி பெறும். தி.மு.க. தலைமையிலான கூட்டணி இந்த தேர்தலில் ஒரு இடத்தில் கூட வெற்றி பெற முடியாது. மத்தியில் மோடி தலைமையில் மீண்டும் பா.ஜனதா ஆட்சி அமையும். தமிழகத்தில் அ.தி.மு.க. ஆட்சி இன்னும் 2 ஆண்டுகள் நீடிக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அப்போது பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் கோவிந்தசாமி, பா.ம.க. மாநில துணை பொதுச்செயலாளர் வெங்கடேஸ்வரன், முன்னாள் எம்.எல்.ஏ.வேலுச்சாமி அ.தி.மு.க. நிர்வாகி மதிவாணன் மற்றும் பலர் உடனிருந்தனர்.
    பகுஜன் சமாஜ் கட்சி திடீரென பல்டி அடித்துள்ளதால் சோனியா -மாயாவதி சந்திப்பு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. 23-ந்தேதி சோனியா கூட்டியுள்ள கூட்டம் திட்டமிட்டப்படி நடைபெறுமா? என்பதிலும் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

    புதுடெல்லி:

    மத்தியில் காங்கிரஸ் தலைமையில் புதிய ஆட்சி அமைப்பதற்கான முயற்சிகளில் தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு தீவிரமாக ஈடுபட்டுள்ளார்.

    நேற்று முன்தினம் இது தொடர்பாக அவர் காங்கிரஸ் தலைவர் ராகுலை சந்தித்து ஆலோசனை நடத்தினார். பிறகு அவர் உத்தரபிரதேசம் சென்று பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி, சமாஜ்வாடி தலைவர் அகிலேஷ் யாதவ் ஆகியோரையும் சந்தித்து பேசினார்.

    இதைத் தொடர்ந்து மாயாவதி இன்று (திங்கட்கிழமை) சென்று காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியாவை சந்தித்து பேச முடிவு செய்திருந்தார். அரசியல் வட்டாரத்தில் இந்த சந்திப்பு மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

    இந்த நிலையில் நேற்று மாலை தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு முடிவுகள் வெளியானது. 8 கருத்து கணிப்புகளில் 7-ல் பாரதீய ஜனதாதான் மீண்டும் ஆட்சி அமைக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

    இந்த கருத்து கணிப்பு முடிவுகள் மாயாவதி மனதில் மாற்றத்தை ஏற்படுத்தி இருப்பதாக கூறப்படுகிறது. இன்று காலை அவர் டெல்லிக்கு செல்லும் முடிவை தவிர்த்தார்.

    தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு தேவைப்பட்டால் காங்கிரஸ் தலைவர்களை சந்திக்கலாம் என்று அவர் தீர்மானித்து இருப்பதாக தெரிகிறது. இதனால் சோனியா- மாயாவதி சந்திப்பு தள்ளி போய் உள்ளது.

    இது தொடர்பாக பகுஜன் சமாஜ் கட்சி மூத்த தலைவர் சத்தீஸ் சந்திரமிஸ்ரா கூறுகையில், “டெல்லியில் இன்று எங்கள் கட்சி தலைவர் மாயாவதிக்கு எந்த நிகழ்ச்சியும் இல்லை. டெல்லியில் யாரையும் சந்தித்து பேசும் திட்டமும் இல்லை. அவர் லக்னோவில்தான் இருக்கிறார்” என்றார்.

    மாயாவதி திடீரென தனது முடிவை மாற்றிக் கொண்டதால் சந்திரபாபு நாயுடு முயற்சிகளில் சற்று பின்னடைவு ஏற்பட்டுள்ளது. மாயாவதியை போனில் தொடர்பு கொண்டு பேசி வருவதாக தெரிய வருகிறது.

    பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பு இருந்தே காங்கிரஸ் கட்சியை மாயாவதி கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார். குறிப்பாக ராகுலின் செயல்பாடுகளில் அவர் கடும் அதிருப்தியில் உள்ளார். என்றாலும் உத்தர பிரதேசத்தில் அதிக தொகுதிகளை கைப்பற்றுவதன் மூலம் காங்கிரஸ் கட்சியை தனக்கு ஆதரவாக மாற்ற முடியும் என்று நினைத்தார்.

    ஆனால் கருத்து கணிப்புகளில் அவருக்கு சாதகமான வகையில் அதிக வெற்றி கிடைக்கும் என்று கூறப்படவில்லை. எனவே 23-ந்தேதி வரை காத்திருக்க அவர் தீர்மானித்து இருப்பதாக தெரிய வந்துள்ளது.

    இதற்கிடையே தேர்தல் முடிவுகள் வெளியாகும் 23-ந்தேதி மாலை எதிர்க்கட்சி தலைவர்கள் அனைவரையும் டெல்லிக்கு வருமாறு சோனியா அழைப்பு விடுத்து இருந்தார். அந்த அழைப்பை ஏற்று டெல்லி செல்ல போவதாக பல்வேறு கட்சி தலைவர்களும் அறிவித்து இருந்தனர்.


    பாரதீய ஜனதா ஆட்சி அமைவதை தடுக்க காங்கிரஸ் தலைமையில் அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றுசேர்ந்து ஓரணியாக ஜனாதிபதியை 23-ந்தேதி இரவே சந்திக்க திட்டமிட்டு இருந்தனர். ஆனால் தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு முடிவுகளால் எதிர்க்கட்சி தலைவர்கள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

    எனவே 23-ந்தேதி சோனியா கூட்டியுள்ள கூட்டம் திட்டமிட்டப்படி நடைபெறுமா? என்பதிலும் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

    இமாச்சல பிரதேசத்தில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையில் தீப்பிடித்திருக்கலாம் என்ற அச்சத்தில் அதிகாரிகள் திறந்து சோதனையிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
    சிம்லா:

    பாராளுமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிறைவடைந்து, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பான அறைகளில் வைக்கப்பட்டு சீல் வைக்கப்பட்டுள்ளது. அந்த அறைகள் சிசிடிவி கேமராக்கள் மூலம் 24 மணி நேரமும் கண்காணிக்கப்படுகின்றன. 23ம் தேதி வாக்குகள் எண்ணப்பட உள்ளன.

    இந்நிலையில், இமாச்சல பிரதேசத்தின் ரெக்காங் பியோ நகரில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாக்கப்படும் அறையில் வைக்கப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளை, தேர்தல் அதிகாரிகள் இன்று காலை ஆய்வு செய்தனர். அப்போது, அறைக்குள் புகைப்படலம் போன்று காணப்பட்டது.



    இதனால் தீப்பிடித்திருக்கலாம் என அச்சமடைந்த அதிகாரிகள் உடனடியாக தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்தனர். தீயணைப்பு படை வீரர்கள் வந்ததும், அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் அந்த அறையை தேர்தல் அதிகாரிகள் திறந்து பார்த்தனர். அப்போது அவர்கள் சந்தேகித்தபடி தீ விபத்து எதுவும் ஏற்படவில்லை.

    கேமராவில், நைட் விஷன் மோட் செட்டிங் செய்து வைத்திருந்ததால், அந்த அறையின் ஓரங்களில் படிந்துள்ள தூசிப் படலமானது புகை போன்று கேமராவில் பதிவாகி உள்ளது. இதையடுத்து கேமராவில் செட்டிங்கை மாற்றியமைத்து, அறையை மீண்டும் பூட்டி சீல் வைத்தனர்.

    அந்த அறையில், மாண்டி மக்களவைத் தொகுதிக்குட்பட்ட 126 வாக்குச்சாவடிகளில் பயன்படுத்தப்பட்ட 252 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளன.


    தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் வெளியாகி இருந்த நிலையில் மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜியை இன்று சந்திரபாபுநாயுடு சந்திக்கிறார்.

    கொல்கத்தா:

    தெலுங்கு தேசம் கட்சி தலைவரும், ஆந்திர முதல் மந்திரியுமான சந்திரபாபு நாயுடு பா.ஜனதா மீண்டும் ஆட்சி வந்துவிடாமல் தடுக்கும் வகையில் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகிறார். இதற்காக அவர் காங்கிரஸ் மற்றும் மாநில கட்சிகளை ஒரே அணியில் திரட்டும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.

    இதற்காக சந்திரபாபு நாயுடு எதிர்க்கட்சி தலைவர்களை சந்தித்து வருகிறார்.

    தேர்தல் முடிந்து ஓட்டு எண்ணிக்கை 23-ந்தேதி நடைபெற இருக்கும் நிலையில் அவர் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை டெல்லியில் 2 முறை சந்தித்து பேசினார். தேர்தலுக்கு பிந்தைய கூட்டணி பற்றி அவர் ஆலோசனை நடத்தினார். இதேபோல சரத்பவார், சரத்யாதவ், மாயாவதி, அகிலேஷ்யாதவ், சீதாராம்யெச்சூரி, கெஜ்ரிவால் உள்ளிட்டோரை சந்தித்தார்.

    மேலும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர் சோனியா காந்தியை சந்தித்தும் ஆலோசனை நடத்தினார்.


    இந்த நிலையில் தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் வெளியாகி இருந்த நிலையில் மேற்கு வங்காள முதல் மந்திரியும் திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தாபானர்ஜியை கொல்கத்தாவில் இன்று பிற்பகல் சந்திரபாபு நாயுடு சந்திக்கிறார். அங்குள்ள தலைமை செயலகத்தில் இந்த ஆலோசனை நடக்கிறது. தேர்தலுக்கு பிந்தைய கூட்டணி தொடர்பாக இருவரும் விவாதிப்பார்கள்.

    ஏற்கனவே சந்தித்த தலைவர்கள் பற்றிய விவரங்களை மம்தாவிடம் சந்திரபாபு நாயுடு எடுத்துரைப்பார் என்று தெரிகிறது.

    கருத்துக்கணிப்புகள் திமுகவுக்கு சாதகமாக வந்தாலும், பாதகமாக வந்தாலும் அதை நாங்கள் பொருட்படுத்துவது இல்லை என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறி உள்ளார்.
    சென்னை:

    தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

    கேள்வி:- பெரும்பாலான கருத்து கணிப்புகளில் தி.மு.க. முந்தி இருக்கிறதே?

    பதில்:- தி.மு.க. முந்தி இருப்பதில் உங்களுக்கு சந்தோ‌ஷமா? இல்லையா? ஊடங்களில் வரக்கூடிய கருத்துக்கணிப்புகளை பொறுத்தவரை தி.மு.க.வுக்கு சாதகமாக வந்தாலும், ஒரு வேளை பாதகமாக வந்தாலும் அதை நாங்கள் பொருட்படுத்துவது இல்லை. அதை நாங்கள் ஏற்றுக்கொள்வதும் இல்லை.

    எங்களை பொறுத்தவரையில் கலைஞர் மிகத் தெளிவாக பல நேரங்களில் குறிப்பிட்டு காட்டி இருக்கிறார்கள். இன்னும் 3 நாட்களில் மக்களுடைய கணிப்பு என்ன என்பது தெளிவாக தெரியப் போகிறது. அதைத்தான் நாங்கள் எதிர்பார்த்து காத்திருக்கிறோம்.

    கேள்வி:- மத்தியில் எந்த ஆட்சி அமைந்தாலும் அதில் அங்கம் வகிக்க தி.மு.க. தயாராக இருக்கிறதா?

    பதில்:- 23-ந்தேதி வாக்கு எண்ணிக்கை முடிந்ததற்கு பிறகு அதற்குரிய விளக்கத்தை அளிக்கிறேன்.



    கேள்வி:- சந்திரபாபு நாயுடு உங்களிடம் பேசினாரா?

    பதில்:- அவர் பல நேரங்களில் பேசி தி.மு.க.வுக்கு ஆதரவு தெரிவித்து கருத்தை சொல்லி இருக்கிறார்.

    கேள்வி:- 23-ந்தேதி டெல்லியில் நடக்கும் கூட்டத்தில் கலந்து கொள்வீர்களா?

    பதில்:- தேர்தல் முடிவு 23-ந்தேதி மாலை அல்லது இரவுக்கு பிறகுதான் தெரிய வரும். அது தெரிந்ததற்கு பிறகுதான் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்தால் பயன் உள்ளதாக இருக்கும். அதற்காகத்தான் காத்திருக்கிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கருத்து கணிப்புகள் பா.ஜனதாவின் ஏற்பாடு என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார்.

    சென்னை:

    தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

    தேர்தல் வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது வரலாற்றில் பொன் எழுத்துக்களால் கூடிய ஒரு மாற்றம் வர இருக்கிறது. அதை ஏற்றுக்கொள்ள மனம் இல்லாமல் கருத்து கணிப்பு என்று தவறான தகவலை பரப்பி இருக்கிறார்கள்.

    எனது அனுபவத்தின் அடிப்படையில் சொல்கிறேன். இந்தத் தேர்தலில் மோடி இல்லாத ஒரு அரசு தான் அமையும். தமிழ்நாட்டிலும் 37 தொகுதிகளில் தி.மு.க., காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெறும்.

    ஆனால் நேற்று வெளியான கருத்துக் கணிப்பில் ஒரு நிறுவனத்துக்கும் இன்னொரு நிறுவனத்துக்கும் இடையிலான வேறுபாடு சுமார் 100 இருக்கிறது. உண்மையான கணிப்பு என்றால் 5 தொகுதிகள்தான் வித்தியாசம் இருக்கும். நாளை மறுநாள் எதிர்க்கட்சிகள் ஒன்று கூடுவதை மனதில் கொண்டு கருத்துக்கணிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதில் நம்பகத்தன்மை இல்லை.

    பா.ஜனதா ஏற்பாடு செய்து வெளியிட்டுள்ள கருத்துக்கணிப்பாகவே தெரிகிறது. ஏற்கனவே தேர்தல் ஆணையத்தை மோடி தன் கைக்குள் போட்டு இருக்கிறார். அவருக்கு ஜன நாயகத்தின் மீது நம்பிக்கை கிடையாது.


    எனவே வாக்கு எண்ணிக்கையின் போது எந்த அத்துமீறலையும் செய்வார். அதனால் தான் முன்கூட்டியே இப்படி ஒரு கணிப்பை வெளியிட்டு இருக்கிறார்கள். இதை வன்மையாக கண்டிக்கிறோம்.

    386 தொகுதிகளில் ஒரு தொகுதிக்கு 30 பேர் வீதம் கருத்து கேட்டு இருக்கிறார்கள். இது எப்படி சரியாக இருக்கும். நான் நமது தொண்டர்களுக்கு சொல்வதெல்லாம் வாக்கு எண்ணிக்கையின் போது உஷாராக இருக்க வேண்டும் என்பதுதான்.

    தற்போது தமிழ்நாட்டில் குடிநீர் பஞ்சம் தலை விரித்து ஆடுகிறது. நான் நந்தனத்தில் குடியிருக்கிறேன் எனது வீட்டுக்கு மஞ்சள் மற்றும் ஈஸ்ட் மேன் கலரில் தண்ணீர் வருகிறது. அதில் குளித்தால் நோய்கள் வரும். ஏற்கனவே பருவமழை பொய்த்துவிட்டது.

    நீர் பற்றாக்குறை வரும் என்பது தெரிந்திருந்தும் தமிழக அரசு முன்கூட்டியே எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின் போது அஸ்லம் பாட்ஷா, ஜோதி ராஜன், மாவட்ட தலைவர்கள் ரூபி மனோகரன், சிவராஜ சேகரன், எம்.எஸ்.திரவியம் ஆகியோர் உடன் இருந்தனர்.

    ஆந்திராவில் தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு முடிவுகள் வெளியிடப்பட்டன. இதில் ஜெகன்மோகன் ரெட்டி ஆட்சியை பிடிக்க வாய்ப்பு இருப்பதாக தெரியவந்துள்ளது.

    புதுடெல்லி:

    பாராளுமன்றத் தேர்தலுடன் ஆந்திரா, ஒடிசா, அருணாசலபிரதேசம், சிக்கிம் ஆகிய 4 மாநில சட்டசபை தொகுதிகளுக்கும் சேர்த்து தேர்தல் நடத்தப்பட்டது. இந்த 4 மாநில சட்டசபை தேர்தல்களில் யாருக்கு வெற்றி கிடைக்கும் என்று தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் நடத்தப்பட்டன. நேற்று இரவு அந்த முடிவுகள் வெளியிடப்பட்டன.

    ஆந்திராவில் மொத்தம் 175 எம்.எல்.ஏ.க்களை கொண்ட சட்டசபை உள்ளது. கடந்த 2014-ம் ஆண்டு தேர்தலின்போது சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சி 102 இடங்களை கைப்பற்றி ஆட்சி அமைத்தது. ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி 67 இடங்களை கைப்பற்றியது.

    கடந்த தேர்தலில் 1.6 சதவீதம் வாக்குகள் வித்தியாசத்தில்தான் ஜெகன்மோகன் ரெட்டி ஆட்சிக்கு வரமுடியாமல் போனது. எனவே இந்த தடவை அவர் வெற்றி பெற்று ஆட்சி அமைப்பாரா? என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

    தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு ஜெகன் மோகன் ரெட்டிக்கு ஆதரவான நிலை தெரிய வந்துள்ளது. பெரும்பாலான கருத்து கணிப்புகளில் ஜெகன் மோகன் ரெட்டி ஆட்சி அமைக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டுள்ளது. சி.பி.எஸ். என்ற அமைப்பு நடத்திய கருத்து கணிப்பில் ஜெகன்மோகன் ரெட்டி கட்சிக்கு 130 முதல் 135 இடங்கள் வரை என்று கூறப்பட்டுள்ளது.

    ஐ நியூஸ் நெட்வொர்க் நடத்திய கருத்து கணிப்பில் ஜெகன்மோகனுக்கு 122 இடங்கள் வரையும், சந்திரபாபு நாயுடுவுக்கு 65 இடங்கள் வரையும் கிடைக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டுள்ளது.

    சில கருத்து கணிப்புகளில் ஆந்திராவில் ஆட்சி அமைப்பதில் இழுபறி ஏற்படும் என்று கூறப்பட்டுள்ளது. லகத்பதி ராஜாகோபால் சர்வேயில் சந்திரபாபு நாயுடுவுக்கு 110 இடங்கள் வரையும், ஜெகன்மோகன் ரெட்டிக்கு 79 இடங்கள் வரையும் கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

    அதுபோல ஆர்.ஜி. பிளாஷ் நடத்திய கருத்து கணிப்பில் சந்திரபாபு நாயுடு கட்சிக்கு 90 முதல் 110 இடங்கள் வரையும், ஜெகன்மோகன் ரெட்டி கட்சிக்கு 65 முதல் 79 இடங்கள் வரையும் கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

    இந்தியா டுடே நடத்திய கருத்து கணிப்பில் ஜெகன்மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர். காங்கிரசுக்கு 130 முதல் 135 இடங்களில் வெற்றி கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது. சந்திரபாபு நாயுடுவுக்கு 37 முதல் 40 இடங்கள் வரை கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

    பெரும்பாலான கருத்து கணிப்புகளில் சந்திரபாபு நாயுடுவுக்கு எதிரான அதிருப்தி அலை, ஊழல், ஜாதி அரசியல் போன்றவை தெலுங்கு தேசம் கட்சிக்கு வீழ்ச்சியை ஏற்படுத்தும் என்று கூறப்பட்டுள்ளது. சந்திரபாபு நாயுடு தோல்வி அடையும் பட்சத்தில் அவரது தேசிய அரசியலிலும் கடும் பின்னடைவு ஏற்படும்.

    நடிகர் பவன்கல்யாணின் ஜனசேனா கட்சி தாக்கத்தை ஏற்படுத்தும் என்று முதலில் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பில் அவரது கட்சிக்கு ஆந்திர மக்களிடையே அந்த அளவுக்கு எதிர்பார்ப்பு இல்லை என்பது தெரியவந்துள்ளது.

    ஒடிசா மாநிலத்தில் நவீன் பட்நாயக் தலைமையில் பிஜு ஜனதா தளம் ஆட்சி நடந்து வருகிறது. கடந்த 20 ஆண்டுகளாக அவர் அந்த மாநிலத்தில் முதல்-மந்திரியாக இருந்து வருகிறார். தற்போது நடந்துள்ள தேர்தலில் நவீன் பட்நாயக் 5-வது முறையாக ஆட்சி அமைத்து சாதனை படைப்பார் என்று பெரும்பாலான கருத்து கணிப்புகளில் கூறப்பட்டுள்ளது.

    ஒடிசா மாநிலத்தில் பாராளுமன்ற தேர்தலில் பாரதீய ஜனதாவுக்கு கூடுதல் இடங்கள் கிடைத்தாலும் சட்டசபை தேர்தலில் மக்கள் நவீன் பட்நாயக்கே தேர்ந்தெடுத்து இருப்பதாக கருத்து கணிப்புகள் மூலம் அறிந்து கொள்ள முடிகிறது.

    ஒடிசா மாநில சட்டசபையில் 147 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். அங்கு தனி மெஜாரிட்டியுடன் ஆட்சி அமைக்க வேண்டுமானால் 74 இடங்கள் வேண்டும்.

    அங்கு தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகளில் இந்தியா டுடே நடத்திய கருத்து கணிப்பில் நவீன் பட்நாயக்கின் பிஜு ஜனதா தளம் கட்சி 80 முதல் 100 இடங்கள் கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது. ஒடிசாவை தலைமையிடமாகக் கொண்ட கணக் நியூஸ் நடத்திய கருத்து கணிப்பில் 85 முதல் 95 இடங்கள் நவீன் பட்நாயக்குக்கு கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது.


    25 முதல் 35 இடங்களில் பாரதீய ஜனதா வெற்றி பெற்று எதிர்க்கட்சியாக இருக்கும் என்று அந்த கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    காஷ்மீரின் முன்னாள் முதல்வரும் தேசிய மாநாட்டு கட்சியின் தலைவருமான உமர் அப்துல்லா,தேர்தலுக்கான அனைத்து கருத்துக்கணிப்புகளும் தவறாக இருப்பதில்லை என கூறியுள்ளார்.
    ஸ்ரீநகர்:

    பாராளுமன்ற தேர்தல் ஏப்ரல் 11ம் தேதி தொடங்கி  நாடு முழுவதும் பல்வேறு கட்டங்களாக நடைபெற்று நேற்றுடன் நிறைவடைந்தது. 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை நாட்டின் தலையெழுத்தை தீர்மானிக்கும் இந்த தேர்தலின் முடிவுகள் குறித்த கருத்துக்கணிப்புகள் தொடர்ந்து வெளியாகி வருகின்றன.

    இதில் பாஜக அதிக இடங்கள் பெற்று மத்தியில் மீண்டும் ஆட்சி அமைக்கும் என வெளியிடப்பட்டுள்ளது.  இந்த கருத்துக்கணிப்புகள் தொடர்பாக பல்வேறு அரசியல் தலைவர்களும், முக்கிய பிரமுகர்களும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

    காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி இது குறித்து கூறுகையில்,  'தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் வெளியாகி உள்ளன. இத்தகைய கருத்துக் கணிப்புகளில் எனக்கு ஒரு போதும் நம்பிக்கை கிடையாது.


    மக்களின் விருப்பம் என்ன என்பது 23ம் தேதி தெரிந்து விடும். அந்த முடிவுக்கு ஏற்ப எங்களது நடவடிக்கைகள் அமையும்' என கூறினார்.

    இதையடுத்து காஷ்மீரின் முன்னாள் முதல்வரும், தேசிய மாநாட்டு கட்சியின் தலைவருமான உமர் அப்துல்லா கருத்துக்கணிப்புகள் குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியதாவது:

    ஒவ்வொரு முறையும் தேர்தல் முடிந்த பின்னர் வரும் கருத்துக்கணிப்புகள் அனைத்தும் தவறாக இருக்க முடியாது. சமூக வலைத்தளங்களில் இருந்தும், தொலைக்காட்சிகளில் இருந்தும் நாம் வெளிவர வேண்டும். தேர்தல் முடிவுகளுக்காக 23ம் தேதி வரை அனைவரும் காத்திருக்க தான் வேண்டும்.

    ஒரு அரசியல் கட்சி கருத்துக்கணிப்புகளில் வெற்றி பெறும் சூழலை உருவாக்கவில்லை என்றால், அக்கட்சி ஏற்கனவே தேர்தல் ஆட்டத்தில் தோற்றுவிட்டது என்று தான் அர்த்தமாகும்.     

    இவ்வாறு அவர் பதிவிட்டிருந்தார்.



     
    பாராளுமன்ற தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில் தமிழகம் முழுவதும் 43 இடங்களில் வருகிற 23-ந்தேதி ஓட்டு எண்ணிக்கை நடைபெற உள்ளது.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் கடந்த மாதம் 11-ந்தேதி தொடங்கி மே 19-ந்தேதி வரை 7 கட்டங்களாக நடந்து முடிந்து உள்ளது.

    தமிழகத்தில் வேலூர் தவிர 38 பாராளுமன்ற தொகுதிகளுக்கும் கடந்த 18-ந்தேதி தேர்தல் நடை பெற்றது. 18 தொகுதிகளுக்கான சட்டமன்ற இடைத்தேர்தலும் அதே நாளில் நடத்தப்பட்டது. அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம், சூலூர் ஆகிய 4 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நேற்று நடந்தது.

    நாட்டின் அடுத்த பிரதமர் யார் என்பதை முடிவு செய்வதற்கான ஓட்டு எண்ணிக்கை வருகிற 23-ந்தேதி நடை பெறுகிறது. தமிழகத்தில் 43 இடங்களில் வாக்குகள் எண்ணப்படுகின்றன. சென்னையில் 3 மையங்களில் வாக்கு எண்ணிக்கை நடை பெறுகிறது.

    மத்திய சென்னையில் பதிவான வாக்குகள் லயோலா கல்லூரியிலும், வட சென்னையில் பதிவான ஓட்டுகள் ராணி மேரி கல்லூரியிலும், தென் சென்னை ஓட்டுகள் கிண்டி அண்ணா பல்கலைக் கழகத்திலும் எண்ணப்படுகின்றன.

    தமிழகம் முழுவதும் ஓட்டு எண்ணிக்கைக்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. ஒரு லட்சம் போலீசார் கண்காணிப்பு பணிகளில் ஈடுபடுகிறார்கள். சென்னையில் 15 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணிகளை மேற் கொள்கிறார்கள்.

    பதட்டமான ஓட்டு எண்ணும் மையங்களில் கூடுதல் பாதுகாப்புக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    ஓட்டு எண்ணும் மையங்களில் துணை ராணுவ படையினர், மாநில போலீசார், சிறப்பு படை போலீசார் ஆகியோர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அனைத்து மையங்களிலும் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    தமிழகத்தை பொறுத்த வரையில் கடந்த 18-ந்தேதி வாக்குப்பதிவு முடிவடைந்த நாளில் இருந்தே 24 மணி நேரமும் வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டன. சுழற்சி முறையில் போலீசாரும், துணை ராணுவ படையினரும் வாக்கு எண்ணும் மையங்களில் நிறுத்தப்பட்டுள்ளனர்.

    வாக்கு எண்ணிக்கை அன்று காலை 7.30 மணிக்கு தொடங்குகிறது. முதலில் தபால் ஓட்டுகள் எண்ணப்படும். அது முடிவடைந்ததும் மின்னணு எந்திரங்களில் பதிவான ஓட்டுகளை எண்ணும் பணி காலை 8.30 மணி அளவில் தொடங்கும்.

    இதற்காக வாக்கு எண்ணும் மையங்களில் 14 மேஜைகள் வரை போடப்பட்டு இருக்கும். ஒரு கண்காணிப்பாளர், உதவியாளர், நுண் பார்வையாளர் ஆகியோரது மேற்பார்வையில் ஓட்டுகள் எண்ணப்படும்.

     


    ஒவ்வொரு வாக்கு எண்ணும் மையத்திலும் வேட்பாளர்களின் முகவர்கள் பணியில் இருப்பார்கள். வாக்கு எண்ணும் பணியில் ஈடுபட்டுள்ள ஊழியர்கள் மின்னணு எந்திரங்களை அவர்களிடம் காட்டிய பின்னரே ஓட்டு எண்ணும் பணியை தொடங்குவார்கள்.

    அடுத்த 30 நிமிடங்களிலேயே முன்னணி நிலவரங்கள் தெரிய வரும். மதியம் 1 மணி அளவில் மத்தியில் ஆட்சி அமைக்கப்போவது யார் என்பது தெரிந்து விடும். இந்த தேர்தலில் வாக்குப்பதிவின் போது யாருக்கு ஓட்டு போட்டோம் என்பதை வாக்காளர்கள் தெரிந்து கொள்ளும் வகையில் “விவிபேட்” என்கிற ஒப்புகை சீட்டு எந்திரமும் பொருத்தப்பட்டு இருந்தது.

    இந்த எந்திரத்தில் பதிவான வாக்குகளையும், மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் பதிவான ஓட்டுகளையும் 10 சதவீதம் அளவுக்கு சரி பார்த்த பின்னரே முடிவுகள் வெளியிடப்படும். இதனால் இறுதி முடிவுகள் வெளியாவதில் சற்று தாமதம் ஏற்படவும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

    இருப்பினும் 23-ந்தேதி இரவுக்குள் வெற்றி பெற்றவர்களின் பெயர்கள் தெரிய வந்து விடும் என்றே தேர்தல் அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

    நாடு முழுவதும் வாக்குப்பதிவுக்கு பின்னர் எடுக்கப்பட்ட கருத்து கணிப்புகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த கருத்து கணிப்புகள் அனைத்தும் மத்தியில் பாரதிய ஜனதா கட்சி ஆட்சி அமைக்க வாய்ப்பு இருப்பதாகவே தெரிவித்து உள்ளன.

    அதே நேரத்தில் தமிழகத்தில் தி.மு.க. கூட்டணியே அதிக இடங்களில் வெற்றி பெறும் என்று கருத்து கணிப்புகளில் கூறப்பட்டுள்ளது. இதனால் தேர்தல் முடிவு எப்படி இருக்கும்? என்கிற எதிர்பார்ப்பு இப்போதே அதிகரிக்க தொடங்கி உள்ளது.

    தமிழகத்தை பொறுத்த வரை பாராளுமன்ற தேர்தல் முடிவுகளை விட 22 சட்டசபை தொகுதிகளின் இடைத்தேர்தல் முடிவுகள் எப்படி இருக்கும் என்பதும் அனைவரது மத்தியிலும் மிகுந்த எதிர்பார்ப்பாக உள்ளது.

    ஆளும்கட்சியான அ.தி.மு.க. வெற்றி பெறுமா? இல்லை எதிர்க்கட்சியான தி.மு.க. கூடுதல் இடங்களை கைப்பற்றுமா? என்பது மிகப்பெரிய கேள்வியாக எழுந்துள்ளது.

    வாக்கு எண்ணிக்கைக்கு இன்னும் 2 நாட்களே இருக்கும் நிலையில் அரசியல் கட்சியினர் வெற்றி கொண்டாட்டத்துக்கும் இப்போதே தயாராகி வருகிறார்கள்.

    பொதுமக்கள் இடையிலும் மீண்டும் பாரதிய ஜனதா ஆட்சியே அமையுமா? அல்லது மத்தியில் மாற்றம் ஏற்படுமா? என்கிற எதிர்பார்ப்பும் அதிகரிக்க தொடங்கி இருக்கிறது.

    பாராளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் அதிமுக குறைந்த இடங்களே பிடிக்கும் என கூறுவது கருத்து திணிப்பு என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
    சேலம்:

    தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சேலம் விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, தேர்தல் கருத்துக் கணிப்புகள் மற்றும் பல்வேறு விவகாரங்கள் குறித்த கேள்விக்கு அவர் கூறியதாவது:-

    பாராளுமன்றத் தேர்தலில் தமிழகத்தைப் பொருத்தவரை அதிமுக குறைந்த இடங்களே பிடிக்கும் என்று கருத்துக் கணிப்புகள் கூறுகின்றன. இது கருத்து கணிப்பு அல்ல, கருத்து திணிப்பு. அதிமுக மாநில கட்சிதான், தேசிய கட்சி அல்ல. எனவே, தமிழகத்தை பொருத்தவரை மட்டுமே என்னால் கருத்து கணிப்பு பற்றி சொல்ல முடியும், தேசிய அளவில் சொல்ல முடியாது

    2016 தேர்தலில் நான் தோல்வி அடைவேன் என கருத்துக் கணிப்புகள் கூறின. ஆனால் நான் வெற்றி பெற்றேன். சேலத்தில் 10 இடங்களில் அதிமுக வெற்றி பெற்றது.

    எனவே, யார் வெற்றி பெறுவார்கள் என்பது 23ம் தேதி தெரியும். பாராளுமன்றத் தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலில் அதிமுக கூட்டணி அமோக வெற்றி பெறும்.



    விவசாயிகளுக்கு எதிரான எந்த திட்டத்திற்கும் தமிழக அரசு அனுமதி அளிக்காது. மக்களின் நன்மைக்காகவே புதிய சாலைகள் அமைக்கப்படுகின்றன. வாகன பெருக்கத்திற்கு ஏற்ப சாலை விரிவாக்கம் தேவைப்படுகிறது. விபத்துக்களை தவிர்க்க இன்றைய சூழ்நிலைக்கு ஏற்ப சாலைகள் போடப்படுகின்றன. வெறும் 7 சதவீத விவசாயிகள் மட்டுமே சேலம்-சென்னை 8 வழிச்சாலைக்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×