search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "opinion polls"

    கருத்துக்கணிப்புகள் திமுகவுக்கு சாதகமாக வந்தாலும், பாதகமாக வந்தாலும் அதை நாங்கள் பொருட்படுத்துவது இல்லை என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறி உள்ளார்.
    சென்னை:

    தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

    கேள்வி:- பெரும்பாலான கருத்து கணிப்புகளில் தி.மு.க. முந்தி இருக்கிறதே?

    பதில்:- தி.மு.க. முந்தி இருப்பதில் உங்களுக்கு சந்தோ‌ஷமா? இல்லையா? ஊடங்களில் வரக்கூடிய கருத்துக்கணிப்புகளை பொறுத்தவரை தி.மு.க.வுக்கு சாதகமாக வந்தாலும், ஒரு வேளை பாதகமாக வந்தாலும் அதை நாங்கள் பொருட்படுத்துவது இல்லை. அதை நாங்கள் ஏற்றுக்கொள்வதும் இல்லை.

    எங்களை பொறுத்தவரையில் கலைஞர் மிகத் தெளிவாக பல நேரங்களில் குறிப்பிட்டு காட்டி இருக்கிறார்கள். இன்னும் 3 நாட்களில் மக்களுடைய கணிப்பு என்ன என்பது தெளிவாக தெரியப் போகிறது. அதைத்தான் நாங்கள் எதிர்பார்த்து காத்திருக்கிறோம்.

    கேள்வி:- மத்தியில் எந்த ஆட்சி அமைந்தாலும் அதில் அங்கம் வகிக்க தி.மு.க. தயாராக இருக்கிறதா?

    பதில்:- 23-ந்தேதி வாக்கு எண்ணிக்கை முடிந்ததற்கு பிறகு அதற்குரிய விளக்கத்தை அளிக்கிறேன்.



    கேள்வி:- சந்திரபாபு நாயுடு உங்களிடம் பேசினாரா?

    பதில்:- அவர் பல நேரங்களில் பேசி தி.மு.க.வுக்கு ஆதரவு தெரிவித்து கருத்தை சொல்லி இருக்கிறார்.

    கேள்வி:- 23-ந்தேதி டெல்லியில் நடக்கும் கூட்டத்தில் கலந்து கொள்வீர்களா?

    பதில்:- தேர்தல் முடிவு 23-ந்தேதி மாலை அல்லது இரவுக்கு பிறகுதான் தெரிய வரும். அது தெரிந்ததற்கு பிறகுதான் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்தால் பயன் உள்ளதாக இருக்கும். அதற்காகத்தான் காத்திருக்கிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கருத்து கணிப்புகள் பா.ஜனதாவின் ஏற்பாடு என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார்.

    சென்னை:

    தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

    தேர்தல் வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது வரலாற்றில் பொன் எழுத்துக்களால் கூடிய ஒரு மாற்றம் வர இருக்கிறது. அதை ஏற்றுக்கொள்ள மனம் இல்லாமல் கருத்து கணிப்பு என்று தவறான தகவலை பரப்பி இருக்கிறார்கள்.

    எனது அனுபவத்தின் அடிப்படையில் சொல்கிறேன். இந்தத் தேர்தலில் மோடி இல்லாத ஒரு அரசு தான் அமையும். தமிழ்நாட்டிலும் 37 தொகுதிகளில் தி.மு.க., காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெறும்.

    ஆனால் நேற்று வெளியான கருத்துக் கணிப்பில் ஒரு நிறுவனத்துக்கும் இன்னொரு நிறுவனத்துக்கும் இடையிலான வேறுபாடு சுமார் 100 இருக்கிறது. உண்மையான கணிப்பு என்றால் 5 தொகுதிகள்தான் வித்தியாசம் இருக்கும். நாளை மறுநாள் எதிர்க்கட்சிகள் ஒன்று கூடுவதை மனதில் கொண்டு கருத்துக்கணிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதில் நம்பகத்தன்மை இல்லை.

    பா.ஜனதா ஏற்பாடு செய்து வெளியிட்டுள்ள கருத்துக்கணிப்பாகவே தெரிகிறது. ஏற்கனவே தேர்தல் ஆணையத்தை மோடி தன் கைக்குள் போட்டு இருக்கிறார். அவருக்கு ஜன நாயகத்தின் மீது நம்பிக்கை கிடையாது.


    எனவே வாக்கு எண்ணிக்கையின் போது எந்த அத்துமீறலையும் செய்வார். அதனால் தான் முன்கூட்டியே இப்படி ஒரு கணிப்பை வெளியிட்டு இருக்கிறார்கள். இதை வன்மையாக கண்டிக்கிறோம்.

    386 தொகுதிகளில் ஒரு தொகுதிக்கு 30 பேர் வீதம் கருத்து கேட்டு இருக்கிறார்கள். இது எப்படி சரியாக இருக்கும். நான் நமது தொண்டர்களுக்கு சொல்வதெல்லாம் வாக்கு எண்ணிக்கையின் போது உஷாராக இருக்க வேண்டும் என்பதுதான்.

    தற்போது தமிழ்நாட்டில் குடிநீர் பஞ்சம் தலை விரித்து ஆடுகிறது. நான் நந்தனத்தில் குடியிருக்கிறேன் எனது வீட்டுக்கு மஞ்சள் மற்றும் ஈஸ்ட் மேன் கலரில் தண்ணீர் வருகிறது. அதில் குளித்தால் நோய்கள் வரும். ஏற்கனவே பருவமழை பொய்த்துவிட்டது.

    நீர் பற்றாக்குறை வரும் என்பது தெரிந்திருந்தும் தமிழக அரசு முன்கூட்டியே எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின் போது அஸ்லம் பாட்ஷா, ஜோதி ராஜன், மாவட்ட தலைவர்கள் ரூபி மனோகரன், சிவராஜ சேகரன், எம்.எஸ்.திரவியம் ஆகியோர் உடன் இருந்தனர்.

    கேரளா பாராளுமன்ற தேர்தல் குறித்து வெளியான கருத்து கணிப்புகளில் உண்மை இல்லை என்று முதல்-மந்திரி பினராயி விஜயன் கூறியுள்ளார். #pinarayivijayan #congress #opinionpolls

    திருவனந்தபுரம்:

    கேரளாவில் வருகிற 23-ந்தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடக்கிறது. பாராளுமன்ற தேர்தலில் இம்முறை காங்கிரஸ், கம்யூனிஸ்டு கட்சிகளுடன் பாரதீய ஜனதாவும் 3-வது அணியாக களம் இறங்கி உள்ளது. இதனால் அங்கு மும்முனை போட்டி நிலவுகிறது.

    கேரளாவில் மொத்த முள்ள 20 தொகுதிகளில் கடந்த தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி 12 தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்தது. கம்யூனிஸ்டு கூட்டணிக்கு 8 இடங்கள் கிடைத்தது.

    இந்த தேர்தலில் புதிய திருப்பமாக காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி கேரளாவின் வயநாடு தொகுதியில் போட்டியிடுகிறார். இதனால் மாநில காங்கிரசார் பெரும் உற்சாகத்தில் உள்ளனர்.

    ராகுல்காந்தி போட்டியால் கேரளாவில் இம்முறை காங்கிரஸ் கூட்டணி அதிக இடங்களை கைப்பற்றும் என்று கூறப்பட்டது.


    காங்கிரசாரின் கருத்தை உறுதிப்படுத்துவதுபோல சமீபத்தில் அங்கு வெளியான கருத்து கணிப்புகளிலும் காங்கிரஸ் கட்சிக்கு அதிக இடங்கள் கிடைக்கும் என்று கூறப்பட்டது. பல்வேறு தனியார் நிறுவனங்கள் வெளியிட்ட கருத்து கணிப்புகளில் காங்கிரஸ் கூட்டணி கேரளாவில் 15-க்கும் அதிகமான தொகுதிகளை கைப்பற்றும் என்று கூறி இருந்தது.

    கம்யூனிஸ்டு கூட்டணிக்கு 4 இடங்களும், பாரதீய ஜனதா கட்சி 1 தொகுதியிலும் வெற்றி பெறும் என்றும் கருத்துக்கணிப்புகளில் கூறப்பட்டது.

    கேரளாவில் வெளியான கருத்துக்கணிப்புகள் குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவரும், முதல்-மந்திரியுமான பினராயி விஜயன் கூறியதாவது:-

    கேரளாவில் வெளியான கருத்துக்கணிப்புகளில் எந்த உண்மையும் இல்லை. உண்மையான நாட்டு நடப்பை கருத்துக்கணிப்பு பிரதிபலிக்கவில்லை.

    காங்கிரசும், பாரதீய ஜனதாவும் ஊடகங்கள் மீது கருத்தை திணிக்கிறார்கள். அதன் வெளிப்பாடுதான் கருத்துக்கணிப்பு முடிவுகள். அதை கம்யூனிஸ்டுகள் ஏற்க மாட்டார்கள்.

    கேரளாவில் நடைபெறும் தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கூட்டணி 20 தொகுதிகளிலும் அமோக வெற்றி பெறும்.

    இவ்வாறு அவர் கூறினார். #pinarayivijayan #congress #opinionpolls 

    ×