search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "poll strong room"

    இமாச்சல பிரதேசத்தில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையில் தீப்பிடித்திருக்கலாம் என்ற அச்சத்தில் அதிகாரிகள் திறந்து சோதனையிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
    சிம்லா:

    பாராளுமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிறைவடைந்து, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பான அறைகளில் வைக்கப்பட்டு சீல் வைக்கப்பட்டுள்ளது. அந்த அறைகள் சிசிடிவி கேமராக்கள் மூலம் 24 மணி நேரமும் கண்காணிக்கப்படுகின்றன. 23ம் தேதி வாக்குகள் எண்ணப்பட உள்ளன.

    இந்நிலையில், இமாச்சல பிரதேசத்தின் ரெக்காங் பியோ நகரில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாக்கப்படும் அறையில் வைக்கப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளை, தேர்தல் அதிகாரிகள் இன்று காலை ஆய்வு செய்தனர். அப்போது, அறைக்குள் புகைப்படலம் போன்று காணப்பட்டது.



    இதனால் தீப்பிடித்திருக்கலாம் என அச்சமடைந்த அதிகாரிகள் உடனடியாக தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்தனர். தீயணைப்பு படை வீரர்கள் வந்ததும், அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் அந்த அறையை தேர்தல் அதிகாரிகள் திறந்து பார்த்தனர். அப்போது அவர்கள் சந்தேகித்தபடி தீ விபத்து எதுவும் ஏற்படவில்லை.

    கேமராவில், நைட் விஷன் மோட் செட்டிங் செய்து வைத்திருந்ததால், அந்த அறையின் ஓரங்களில் படிந்துள்ள தூசிப் படலமானது புகை போன்று கேமராவில் பதிவாகி உள்ளது. இதையடுத்து கேமராவில் செட்டிங்கை மாற்றியமைத்து, அறையை மீண்டும் பூட்டி சீல் வைத்தனர்.

    அந்த அறையில், மாண்டி மக்களவைத் தொகுதிக்குட்பட்ட 126 வாக்குச்சாவடிகளில் பயன்படுத்தப்பட்ட 252 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளன.


    ×